Published:Updated:

திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!
பிரீமியம் ஸ்டோரி
திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!
பிரீமியம் ஸ்டோரி
திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!
திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர், பெரிய படிப்புகள் எதுவும் படிக்காதவர் திலிப் சங்வி. ஆனாலும், சம்பந்தமே இல்லாத துறையில் நுழைந்து, தான் பெற்ற அனுபவத்தாலும் சுய திறமையாலும், கடும் உழைப்பாலும் மிகப் பெரிய அளவில் உயர்ந்தவர்.

எவ்வளவோ பெரிய பார்மா நிறுவனங் களெல்லாம் இந்தியாவில் பிசினஸ் செய்துவந்த சமயத்தில், சிறிய அளவில் தொடங்கி இன்று உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பார்மா நிறுவனமாக சன் பார்மாவை உயர்த்தியவர் இவர். திலிப் சங்வியின் இந்தப் பயணம், வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு டானிக் போல இருக்கும். 

 சேல்ஸ்மேன் டு பிசினஸ்மேன்

திலிப் சங்வி, குஜராத்தில் உள்ள அம்ரெலி என்ற சிறிய நகரத்தில் ஷாந்திலால் சங்வி மற்றும் குமுத் சங்வி தம்பதியருக்கு மகனாக, 1955 அக்டோபரில் பிறந்தார். ஜே.ஜே.அஜ்மெரா உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளநிலைப் பட்டப்படிப்பைப் படித்தார். 

படித்து முடித்ததும் தனது தந்தை செய்துவந்த  ஜெனரிக் மருந்துகள் விநியோகம் செய்யும் தொழிலில் உதவியாக இருந்து வந்தார். வணிகவியல் படித்து முடித்த அவருக்கு மேலே படிக்கவேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும் என்பது போன்ற சாதாரண மக்களுக்கு இருக்கக்கூடிய எந்த எண்ணமும் இல்லை.

தந்தைக்கு உதவியாக வேலை செய்யத் தொடங்கிய முதல் வருடத்திலேயே சங்விக்கு வெற்றி கிடைத்தது. ரூ.7 லட்சத்துக்கு பிசினஸ் நடந்தது. தந்தைக்கு உதவியாகக் கொல்கத்தாவில் மருந்துகளை விநியோகம் செய்துகொண்டிருந்த அவருக்கு, திடீரென்று ஒரு நாள் இப்படியொரு எண்ணம் தோன்றியது. ‘பிறர் தயாரித்த மருந்துகளை விற்கத் தெரிந்த நமக்கு, நாமே அந்த மருந்துகளைத் தயார் செய்துவிற்றால் எப்படி இருக்கும்?’ என்று யோசித்தார். இந்த யோசனையில் விழுந்த விதை தான் சன் பார்மா. விரைவிலேயே சொந்தமாக தொழிற்சாலையை அமைக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

1982-83-ல் கடனாக வாங்கிய ரூ.10,000 முதலீட்டில், பிரதீப் கோஷ் என்பவருடன் கூட்டுச் சேர்ந்து வாபியில் தொடங்கப்பட்டதுதான் சன் பார்மா நிறுவனம். அப்போது மனநலம் தொடர்பான மருந்துகளை வெறும் ஐந்து பேருடன் சேர்ந்து  உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் அளவில் தொடங்கப்பட்டது.

 வெற்றி தந்த துணிச்சலும் உழைப்பும்


சன் பார்மாவின் இத்தகைய அசுர வளர்ச்சிக்குக் காரணம், திலிப் சங்வியின் துணிச்சலான முடிவுகள்தான். சன் பார்மா ஆரம்பிக்கப்பட்டு, தொழில் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. அவர்கள் தயார் செய்த மருந்துகளை சில மல்டி நேஷனல் பார்மா நிறுவனங்களே விற்பனை செய்துவந்தன. டாக்டர்கள், இவர்களின் மருந்துகளைப் பெரிய அளவில் பரிந்துரைக்க வில்லை. என்றாலும், அவர்களுடைய மருந்துகள் நன்றாகவே விற்பனை ஆயின. பார்மா துறையில் சன் பார்மாவின் இருப்பைச் சொல்ல, இந்த மருந்துகளே அப்போது போதுமானதாக இருந்தது.

ஆனாலும், இன்னும் வளரவேண்டும் என்று நினைத்தார் திலிப். 1997-ல், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கராக்கோ பார்மா என்ற அமெரிக்க பார்மா கம்பெனியை முதன் முதலாக வாங்கினார். அதன் மூலம் சன் பார்மா அமெரிக்கச் சந்தையில் காலடி எடுத்து வைக்க முடியும் என்று கணக்குப் போட்டார். அந்த நம்பிக்கையில், நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து   அந்த நிறுவனத்தை வாங்கினார். அந்தத் துணிச்சலான முடிவும், எடுத்த முடிவை சரியான முடிவாக மாற்ற அவர் மேற் கொண்ட முயற்சிகளும், கடின உழைப்பும் அவருக்கு லாபத்தை ஈட்டித் தந்தன.

திலிப் சங்வி... பார்மா துறையின் சக்கரவர்த்தி!

  காரணங்களைக் கண்டுபிடி, தீர்வுகள் கிடைக்கும்

1990-ல் சன் பார்மா, சந்தையில் தனது முத்திரையை வலுவாகப் பதித்தது. 1993-ல் கிடைத்த மொத்த லாபம் ரூ.4 கோடியையும் அப்படியே முதலீடுசெய்து, மருந்து ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார் திலிப். அடுத்த வருடமே பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் சந்தையில் பட்டியலிட்டார்.

மார்க்கெட்டிங் செய்துவந்த இரண்டு பேர் ஒன்றுசேர்ந்து தொடங்கிய சன் பார்மா நிறுவனம் அடைந்த இந்த வளர்ச்சியை, பிற பார்மா நிறுவனங்கள் பார்த்து ஆச்சர்யப்பட்டன. சன் பார்மாவின் அபார வளர்ச்சிக்கு, உலகமெங்கும் கிடைத்த நிறுவனங்களை எல்லாம் திலிப் சங்வி வாங்கிப் போட்டதுதான் காரணம். கராக்கோ பார்மா, டாரோ பார்மா உள்பட இதுவரை சன் பார்மா 16 நிறுவனங்களை வாங்கியிருக்கிறது. அவற்றில் ரான்பாக்ஸி நிறுவனத்தை, அதன் அதிகபட்ச பங்குதாரராக இருந்த ஜப்பானின் தாய்ச்சி சாங்க்யோதிஸ் நிறுவனத்திடமிருந்து, 2014-ல் வாங்க முடிவு செய்தார். அப்போது ரான்பாக்ஸி நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்ததோடு, அதற்கு 800 மில்லியன் டாலர் கடனும் இருந்தது. ஆனாலும், ரான்பாக்ஸி நிறுவனத்தை 4 பில்லியன் டாலருக்கு வாங்கினார். ரான்பாக்ஸி, உலகின் பல்வேறு மூலைகளிலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்துவந்த மிகப் பெரிய நெட்வொர்க் கொண்ட நிறுவனம். ரான்பாக்ஸி, மட்டுமல்ல, அவர் வாங்கிய பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தவைதான்.

தற்போதைய சூழலில் மட்டும் அல்ல, இனிவரும் காலத்திலும் அழியாத துறைகளின் பட்டியலில் கட்டாயமாக இருக்கும் ஒன்று என்றால் அது  பார்மா துறையாகவே இருக்கும். அப்படி இருக்க, அந்தத் துறையில் நஷ்டமடைகிறோம் என்றால், அதற்கு நிச்சயம் நாம்தான் காரணமாக இருக்க முடியும் என்பதில் தீர்க்கமான கருத்து திலிப் சங்விக்கு உண்டு. அந்த நம்பிக்கையில், நஷ்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று நிறுவனங்களை துணிந்து வாங்குவார். நஷ்டத்துக்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அவற்றை சரி செய்வதற்கானத் திட்டங்களை வகுப்பார். அவர் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இன்று லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களாக மாறி இருப்பதற்கு முக்கிய காரணம், திலிப் சங்வியின் சரியான நிர்வாகமே.
 
ரான்பாக்ஸி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சன் பார்மா, இந்தியாவின் மிகப் பெரிய பார்மா நிறுவனமாகவும், உலகின் ஐந்தாவது பெரிய பார்மா நிறுவனமாகவும் மாறியிருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த நோவார்டிஸ் நிறுவனத்திடமிருந்து,  மிட்சுபிஷிதானே பார்மா நிறுவனம் வாங்கி விநியோகம் செய்துவந்த 14 மருந்துகளை சமீபத்தில், சன்பார்மா வாங்கி யிருக்கிறது. அவற்றில் க்லிவிக் என்ற லுக்கிமியா மருந்து, அமெரிக்காவில் அமோகமாக விற்பனை யானதன் மூலம் அதன் லாபம் அதிகரித்தது. டாரோ பார்மா நிறுவனத்தை வாங்கியதன் மூலம், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சன் பார்மாவின் பிசினஸை விரிவுபடுத்த முடிந்தது. இப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்தது சன் பார்மா.

 புரியாத ரகசியம்

மருந்து உற்பத்தித் துறையில் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் பிசினஸ் செய்ய முடியாமல், நிலையான வளர்ச்சியை அடைய முடியாமல் திணறிவருகின்றன. ஆனால், அதே பிசினஸை வெற்றிகரமாக நடத்த திலிப் சங்வியால் எப்படி முடிந்தது என்பது இன்றும் பலருக்கும் புரியாத ரகசியம். 1987-ல் தேசிய அளவில், பார்மா நிறுவனங்களில் 108-வது இடத்தில் இருந்த சன் பார்மாவை, இப்போது ஆறாவது இடத்துக்குக்  கொண்டு வந்திருக்கிறார் திலிப் சங்வி. பார்மா துறையில் வெற்றி என்பதற்கான வரையறையையே முற்றிலுமாக மாற்றி எழுதி இருக்கிறார் இவர்.

இந்திய பார்மா துறையில் அவருடைய மகத்தான பணிக்கு, பல அங்கீகாரங்கள்  கிடைத்துள்ளன. 2016-ல் இந்திய அரசு, பத்மஸ்ரீ விருதினை அவருக்கு வழங்கி கெளரவித்தது. சுயமாக முன்னேறிய பில்லியனர்களில் ஆசியாவிலேயே முதன்மையானவராக திலிப் சங்வி இருக்கிறார். அப்போது ரூ.50-60 கோடி என்று இருந்த மொத்த வருமானம், இன்று ரூ.15 ஆயிரம் கோடியைத் தாண்டி வளர்ந்துள்ளது. சன் பார்மா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.62 லட்சம் கோடிக்கு மேல். இன்று அவருடைய சொத்து மதிப்பு சுமார் 13.7 பில்லியன் அமெரிக்க டாலர். 2015-ல், இந்தியாவின் முதல் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் திலிப் சங்வி.

வெற்றியை அடைவதற்கு எந்த குறுக்குவழியும் இல்லை என்பதுதான் திலிப் சங்வி சொல்லும்  மிக முக்கியமான வெற்றிச் சூத்திரம். முழுக் கவனம் செலுத்தி, செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே அவர் பிறருக்குச் சொல்லும் அறிவுரையும் கூட. திலிப் சொல்கிறபடி நடந்தால், பிசினஸில் நிச்சயம் வெற்றிதான்!

எல்ஐசியின் பிரீமியம் ரூ.1.45 லட்சம் கோடி!

எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் 1.45 லட்சம் கோடி ரூபாய் பிரீமியமாக வசூலித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனம் வசூலித்த பிரிமீயம் 1.29 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் எல்ஐசி நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.21.65 லட்சம் கோடியிலிருந்து ரூ.24.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எல்ஐசி-யின் புதிய பிசினஸ், கிட்டத்தட்ட 40% வளர்ச்சி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.