Published:Updated:

புதுமையான தொழில்கள்... சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

புதுமையான தொழில்கள்...  சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
புதுமையான தொழில்கள்... சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

கு.ஆனந்தராஜ்

புதுமையான தொழில்கள்... சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

கு.ஆனந்தராஜ்

Published:Updated:
புதுமையான தொழில்கள்...  சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
புதுமையான தொழில்கள்... சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

முதலீடுகளில் மட்டுமல்ல, பிசினஸ் செய்வதிலும் ஆண்களுக்குச் சவால்விடும் வகையில், பெண்கள்  தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள். அதிலும், புதுமையான தொழில்களைக் கையில் எடுத்து, சிறப்பாக வளர்ச்சி அடைந்து வரும் பெண் சுயதொழில் முனைவோர்களின் சாதனைப் பயணங்கள் இங்கே...

புதுமையான தொழில்கள்...  சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

ராஜ மகேஷ்வரி, புதுக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்  

மெட்டல் ஃபேப்ரிகேஷன்

‘‘எம்.காம்., எம்.பில் படிச்சிட்டு கல்லூரி விரிவுரையாளராவும், கூட்டுறவு வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராவும் பணியாற்றினேன். தனித்துவமா ஒரு தொழில் செய்யணும்னு முடிவெடுத்து, எம்.எஸ்.எம்.இ ஆலோசனைப்படி, 10 வருஷத்துக்கு முன்னாடி மெட்டல் ஃபேப்ரிகேஷன் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.

தஞ்சாவூர்,  திருச்சி மாவட்டங்கள்ல மெக்கானிக்கல் தொழில் நிறுவனங்கள் நிறைய இருப்பதால், ஃபேப்ரிகேஷன் தொழில்ல நல்ல வளர்ச்சி இருக்கும்னு கணிச்சு, களத்தில் இறங்கினேன். ஆரம்பத்துல சில வருஷங்கள் தொழிலாளர்களோட நானும் சேர்ந்து தயாரிப்பு மற்றும் நிர்வாகம் ஆகிய ரெண்டையும் பார்த்துக்கிட்டேன். அஞ்சு லட்சம் ரூபாயைக் கடன் வாங்கி, அஞ்சு வருஷத்துல அந்தக் கடனைக் கட்டி முடிச்சுட்டு, அடுத்தடுத்து மறுபடியும் கடன் பெற்று நிறைய இயந்திரங்களைப் புதுசா வாங்கி, தொழிலை விரிவுபடுத்தினேன். இப்போ எங்கிட்ட 15 ஊழியர்கள் இருக்காங்க.

திருச்சி பி.ஹெச்.எல் நிறுவனத்திலிருந்து மூலப்பொருள்களை வாங்கி, 16 வகையான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்றோம். இதுக்காக வெல்டிங், மோல்டிங், கட்டிங், கிரைண்டிங், ஷேப்பிங், டிரில்லிங்னு பல மெஷின்களில் வேலைகள் செய்றோம். இப்போ வருஷத்துக்கு ரூ.40 - 50 லட்சம் டேர்ன் ஓவர் கிடைக்குற அளவுக்கு தொழில் வளர்ந்திருக்கு. 

நிர்வாகத்திறனும், தைரியமும், முடிவுல பின்வாங்காத குணமும், கூடவே மெட்டல் ஃபேப்ரிகேஷனைப் பத்தின தொழில் அறிவும் உள்ள பெண்களுக்கு இந்தத் தொழில் மிகவும் பொருத்தமா இருக்கும். எம்.எஸ்.எம்.இ, மகளிர் தொழில்முனைவோர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் மூலமா தொழில் பயிற்சியும், வங்கியில லோன் வசதியும் பெறலாம்!”

புதுமையான தொழில்கள்...  சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

சந்தோஷ் குமாரி, சென்னை

ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்

‘‘எம்.எஸ்சி., எம்.பில் படிச்சிருக்கேன். திருமணத்துக்கு அப்புறம், தொழில் தொடங்கி பலருக்கும் வேலை கொடுக்க நினைச்சேன். அப்போதான், பெரிய நிறுவனங்களில், அவர்களின் சர்வீஸ்களுக்குத் தேவைப்படும் பராமரிப்பு வேலைகளைச் செய்துதரும் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். இதுல கட்டடம், உள்கட்டமைப்பு, ஒளி அமைப்பு, போக்குவரத்து, ஐ.டி சர்வீஸ்,  உபகரணங்கள்னு எல்லாம் அடங்கும்.

2014-ல் ‘சர்வ்கனெக்ட்’ங்கிற பெயர்ல என் நிறுவனத்தைத் தொடங்கினேன். நிறுவனங் களில் கேன்டீன், கார்டன், க்ளீனிங், இன்டீரியர்னு ஒவ்வொரு பராமரிப்புக்கும் தனித்தனி ஆட்களை வேலைக்கு நிறுவும் போது வேலையாட்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஒரு சிக்கலை சரிசெய்ய அதிக நேரமும், பொருள்செலவும் ஏற்படும். ஆனா, அந்தப் பொறுப்பு மொத்தத்தையும் எங்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது, அதை நிறுவனத்துக்கு லாபகரமான வகையில், குறைந்த நேரத்தில் முடிச்சுக் கொடுப்போம். விப்ரோ நிறுவனம், சி.எஸ்.சி நிறுவனம் உள்பட எங்களுக்கு பல வாடிக்கையாளர்கள் இருக்காங்க.

எங்க நிறுவனத்தின் செயல்பாட்டைப் பாராட்டி, 2015-ல் மகிளா வங்கி, 23 லட்சம் ரூபாய் லோன் கொடுத்தது. அதைக்கொண்டு அடுத்த புராஜெக்டா,  மன்னார்குடி நகராட்சி தொடங்கிய ‘அம்மா வாட்டர் ஏடிஎம்’ திட்டத்தைச் செய்துகொடுத்து பராமரித்து வர்றோம். நிர்வாகத் திறமை, தகவல் தொடர்பு மற்றும் சிஸ்டம் வொர்க் தெரிஞ்ச பெண்கள் இந்தத் தொழிலைத் தொடங்கி, சில வருஷத்துலயே வங்கி லோனும் வாங்கி வெற்றிகரமாகச் செய்ய முடியும்!”

புதுமையான தொழில்கள்...  சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

அனு, ஈரோடு

போட்டோகிராபி

‘‘நான் பத்தாவது ஃபெயிலானப்போ, ‘உனக்குப் பிடிச்ச போட்டோகிராபி துறையில் உன்னால சாதிக்க முடியும்’னு எங்க மாமா எனக்கு ஊக்கம் கொடுத்து, டி40 கேமராவும் வாங்கிக் கொடுத்தார். தொழில்ரீதியா போட்டோ எடுக்கக் கத்துக்கிட்டு, நிறைய வெளி நிகழ்ச்சிகள்ல போட்டோ எடுத்துக் கொடுத்துச் சம்பாதிச்சு, ஒரு வருஷத்துலயே, கேமரா வாங்கச் செலவான பணத்தை மாமாவுக்குத் திருப்பிக் கொடுத்துட்டேன்.

இரவு, பகல் பார்க்காம தனியாளா உள்ளூர், வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு போட்டோ எடுத்தேன். ஆரம்பத்துல ரூ.300 சம்பளத்துல சாதாராண லேபரா ஆரம்பிச்ச என்னோட போட்டோகிராபி பயணத்துல, இப்போ மாசம் 50 ஆயிரத்துக்கும் மேல சம்பாதிக்கிறேன். நாலு பேருக்கு வேலை கொடுத்துட்டு இருக்கேன். சமீபத்துலதான் மூன்று லட்சம் கடன் வாங்கி, புது வீடியோ கேமரா வாங்கினேன். இப்போ பெரிய  நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பா போட்டோ, வீடியோ எடுத்துக்கொடுக்கிறேன்.

பிறந்த நாள் தொடங்கி, பலர் கூட்டமா கூடுற எந்தவொரு நிகழ்ச்சினாலும் அங்க போட்டோகிராபர் தேவைப்படுவார். இப்போ பல பெண்கள் ஆண்ட்ராய்டு போன்லயே அருமையா போட்டோ எடுக்குறாங்க. அதையே கொஞ்சம் டெக்னிக்கலா, புரொஃபஷனல் கேமராவைப் பயன்படுத்தி எடுத்தா, நீங்களும் போட்டோகிராபர்தான். கூடவே கம்ப்யூட்டர் அறிவு, போட்டோ ஷாப், எடிட்டிங், அனிமேஷன் சாஃப்ட்வேர் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா, ஒரு ஸ்டுடியோ ஆரம்பிச்சிடலாம். இந்தத் தொழில்ல முக்கியமான விஷயம், சரியான நேரத்துக்கு ஆல்பம், வீடியோ சிடி-யை டெலிவரி செய்யணும். கஸ்டமர் சந்தோஷப்படுற மாதிரி தரமாகவும், நம்ம குடும்பத்து நபரோட நிகழ்ச்சி மாதிரி நினைச்சும் வேலை செய்து தரணும். அப்போ நம்மளைத் தேடி கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க!”

புதுமையான தொழில்கள்...  சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

இந்திராணி, திருச்சி

ஆட்டோ ஓட்டுநர்

‘‘குடும்ப வறுமை காரணமா ஏதாச்சும் சுயதொழில் செஞ்சு முன்னேறலாம்னு நினைச்சப்போ, வெறும் ஒன்பதாவது படிச்ச நம்மால் என்ன செய்யமுடியும்னு நினைச்சேன். 2010-ல் திருச்சி மகளிர் தொழில்முனைவோர் சங்கம் நடத்தின சுயதொழில் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். வாடகை கார் தொழிலிலும் பெண்களால சாதிக்க முடியும்னு சொல்லி, சென்னையில ஓட்டுநர் பயிற்சியும், கால் டாக்ஸி தொழில் பயிற்சியும் கொடுத்தாங்க.

பயிற்சியை முடிச்சிட்டு, வங்கிகளில் கால் டாக்ஸி வாங்கக் கடன் கேட்டுப் போனா, ‘உங்கள நம்பி லோன் தரமுடியாது’ன்னு சொல்லிட்டாங்க. ஒரு வங்கியில, ‘மெக்கானிக் வேலையும் கத்துக்கிட்டு வாங்க; லோன் தர்றோம்’னு சொல்லிவிட, என்கூட வந்த மற்ற ஒன்பது பெண்களும் கடன் வாங்குற முயற்சியில இருந்து பின்வாங்கிட்டாங்க. நான் விடாம மெக்கானிக் வேலையைக் கத்துக்கிட்டு, 2011-ல் கடன் வாங்கி, திருச்சி மாவட்டத்துல முதல் பெண் கால் டாக்ஸி டிரைவர் ஆனேன். அதில் லாபம் பார்க்க முடியாததால டாக்ஸியை வித்துட்டு, ஆட்டோ வாங்கி ஓட்டினேன். மூன்று வருஷத்துக்குள்ளாகவே கடனை அடைச்சுட்டு ஆட்டோவை சொந்தமாக்கிட்டேன்.

மாற்றுத்திறனாளியான என் கணவருக்கும் கடன் வாங்கி ஒரு ஆட்டோ வாங்கிக் கொடுத்தேன். இப்போ நானும் கணவரும் ஆட்டோ ஓட்டி குடும்பத்தைப் பார்த்துக்குறோம்.  கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சுகிட்டும் இருக்கோம். கூடிய சீக்கிரமே இன்னும் சில ஆட்டோக்களை வாங்கி மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்புக் கொடுக்க ஆசை. பெண் ஆட்டோ டிரைவர் என்பதால், நம்பிக்கையோட நிறையப் பெண்கள் ரெகுலர் கஸ்டமராகவும், பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடவும் அழைக்கிறாங்க. இதனாலேயே பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு நிறைய தேவை இருக்கு. பொறுமையும், தைரியமும் இருந்தா, இந்த தொழில்ல சாதிக்கலாம்!”

புதுமையான தொழில்கள்...  சவால்களைத் தாண்டி சாதித்த பாசிட்டிவ் பெண்கள்!

லலிதா,சென்னை

ஹெர்பல் அழகுசாதனப் பொருள் தயாரிப்பு 

‘‘படிச்சது பி.காம். ஆனாலும், என்னோட தேவைக்கும், பொழுதுபோக்குக்கும் தேடித் தேடி ஸ்கின் கேர் மற்றும் ஹேர்கேர் அழகுசாதனப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பிச்சேன். இப்போ அதுவே தொழில் ஆகிடுச்சு. 12 வருஷத்துக்கு முன்பு, எனக்கான தேவை போக தோழிகளுக்கும் என் தயாரிப்புப் பொருள்களைக் கொடுத்தேன். ‘அவங்க இதைத் தொழிலா செய்யலாமே’ன்னு சொன்னாங்க. அப்போ ஹெர்பல் அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்பு ரொம்பவே புதுமையா பார்க்கப்பட்டுச்சு.

சுயதொழில்ல ஈடுபடலாம் என முடிவு செஞ்சு, சென்னை டான்சியா சென்டரில் பயிற்சி எடுத்தேன். இது தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகிட்டேன். தொடர்ந்து நிறைய இயற்கை விவசாயிகளையும், மருத்துவர் களையும் சந்திச்சு ஆலோசனை பெற்றேன். ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில், வீட்டில் இருந்தபடியே தொடங்கினேன்.

பிசினஸில் வரும் லாபத்தையும் தொடர்ந்து முதலீடு செய்து, கெமிக்கல் இல்லாத புதுப்புது ஆயில், பவுடர் வடிவ ஹெர்பல் பொருள்களைத் தயாரிச்சேன். 2010-ல் எம்.எஸ்.எம்.இ-ல் பதிவு செஞ்சு, அதிக ஈடுபாட்டுடன் பிசினஸை முன்னெடுத்தேன். நானே நேரடியா இயற்கை விவசாயிகளிடம் மூலப் பொருள்களை வாங்கி, அவுட்சோர்ஸ் ஆட்கள் மூலமா அழகு சாதனப் பொருள்களைத் தயார் செய்றேன்.

என்னோட பிசினஸுக்கு சோஷியல் மீடியா பெரிய அளவுல உதவியா இருக்கு. இப்போது மார்க்கெட்டில் நிறைய அழகுசாதனப் பொருள்கள் கெமிக்கல் கலந்து விற்கப்படுவதால், மக்கள் ஹெர்பல் பொருள்களை நோக்கித்தான் அதிகம் வர்றாங்க. கஸ்டமர்களுக்கு ஒருமுறை நம்ம பொருள்கள் பிடிச்சிட்டா, நிரந்தர கஸ்டமர் ஆகிடுவாங்க. தரமாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்ய வேண்டியது அவசியம்.

பயிற்சி வகுப்புகள், அழகுசாதனப் பொருள்கள் கண்காட்சிகளில் கலந்துக்கிட்டு, இந்தத் தொழிலுக்கான அடிப்படை விஷயங்களைக் கத்துகிட்டு, காலமாற்றத்துக்கு ஏற்ப அழகு சார்ந்த புதுப்புது விஷயங்களை அப்டேட் செய்துகிட்டா போதும். 5 - 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே இந்தத் தொழிலைத் தொடங்கலாம். நம்மோட தரம், திறமையைப் பொறுத்து பெரிய அளவில் பிசினஸை வளர்க்கலாம்!”

பாசிட்டிவ் சிந்தனையுடன் தொழில் செய்து முன்னேறி வரும் இந்த புதுமைப் பெண்களை மற்ற பெண்களும் பின்பற்றலாமே!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், கே.குணசீலன், த.ஸ்ரீநிவாசன்,  அ.சரண் குமார், அ.அருணசுபா