Published:Updated:

கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!

கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!

நாணயம் லைப்ரரி!

கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!

நாணயம் லைப்ரரி!

Published:Updated:
கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!
கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!
கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!

புத்தகத்தின் பெயர் : ஆஸ்க் மோர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசிரியர் : ப்ராங்க் சென்சோ (Frank Senso)

பதிப்பாளர் : AMACOM

ங்களுக்கு பதில்கள் வேண்டுமென்றால், கேள்விகளைக் கேட்டேயாக வேண்டும். சொல்வதற்கு இது சுலபமாக இருந்தாலும் நிஜத்தில் கேள்விகளைக் கேட்கமுடிகிறதா என்ன? இல்லவே இல்லை. நல்ல சிந்தனை சக்தியும், திறமையும், பயிற்சியும் ஒருசில நேரங்களில் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே சரியான கேள்வியை, சரியான நேரத்தில், சரியான நபரிடம் கேட்டு, அதற்குரிய பதிலையும் பெற்று, பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கேள்விகள், பல கதவுகளைத் திறக்கும். கேள்விகள் தீர்வுகளை வெளிக் கொணரும். கேள்விகள் மாறுதல் என்னும் தீப்பொறியை நமக்குள் உருவாக்கும். இப்படிப்பட்ட கேள்விகளை அதிகமாகக் கேட்பதன் அவசியத்தை வலியுறுத்தும் புத்தகம்தான் ப்ராங்க் சென்சோ எழுதிய ‘ஆஸ்க் மோர்’ என்னும் புத்தகம். ப்ராங்க் சென்சோ, சிஎன்என் நிறுவனத்தின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கான நிருபர். நிகழ்ச்சிகளை நடத்துபவர் (Anchor) மற்றும் வாஷிங்டன் பீரோவின் தலைவர்.

சரியான சமயத்தில், சரியான முறையில் கேட்கப்படும் சில கேள்விகள்தான் மனிதனின் குறுகியகால மற்றும் நீண்டகாலச் சாதனைகளுக்கு வழிவகுக்கின்றன. ஒரு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கிறீர்கள். அவர்கள் பல கேள்விகளைக் கேட்க, நீங்கள் சளைக்காமல் பதில் சொல்கிறீர்கள். இறுதியாக, ‘உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்’ என்கிறார்கள் உங்களை நேர்காணல் செய்தவர்கள்.  நீங்கள் நன்கு யோசித்து, உங்கள் நுண்ணறிவை அவர்களுக்கு எடுத்துச்சொல்கிற மாதிரி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். அதுவரை நீங்கள் சரியாகச் சொன்ன பல பதில்களைவிடவும் அந்தக் கேள்வியே உங்களைப் பற்றிய  மதிப்பை உயர்த்துவதாக இருக்கும், இல்லையா?

நம்முடைய கேள்விகளே நாம் யார் என்பதையும், நாம் செல்லும் பாதை எது என்பதையும், எப்படி நாம் விஷயங்களை கிரகித்துக் கொள்கிறோம் என்பதையும் பிரதிபலிப்பதாக இருப்பதாலேயே இந்த நிலைமை என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக செயல்படும்போது, கேள்விகளின் அவசியத்தை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். உதாரணமாக, பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரெனக்  காணவில்லை என்ற செய்தி காதுக்கு வருகிறது.

தொலைக்காட்சியில் செய்தியைச் சொல்லவேண்டும்.  என்ன சொல்வது?  என்ன தெரியுமோ, அதை சொல்வது.  என்ன தெரியும்? எங்கேயிருந்து நமக்கு செய்தி வந்தது, எப்போது வந்தது என்பதைப் பார்த்து, உடனடியாக நிருபர்களைக் களத்தில் இறக்குகிறோம். விமான ஆணையகம், உளவு நிறுவனமான எஃப்பிஐ என எல்லா இடங்களிலும் விசாரிக்கிறோம். பல இடங்களில் கேட்கிறோம். வேறு யாருக்காவது இன்னமும் அதிகமாக தகவல் தெரிந்திருக்கிறதா என்று கேட்கிறோம். அரசாங்கம் அதை உறுதிசெய்து, பிரஸ் மீட் வைத்து சொல்வதற்கு முன்னால் மக்களுக்கு செய்தி சொல்லவேண்டும்.

ஆனால், தப்பாகச் சொல்லிவிட்டால் தவறான தகவல்களைப் பரப்பியது போலாகிவிடும், அப்பாவிகளைப் பயமுறுத்திவிடுவோம்.

ஏன் இந்த நிலை? தொலைக்காட்சி நடத்துபவர்கள் என்கிற முறையில் நிறைய விஷயங்கள் உடனுக்குடன் எங்களுக்குத் தெரிகிறது. அப்போது என்னென்ன கேள்விகளைக் கேட்பது சாத்தியம். எந்த ஏர்லைன்ஸ், ப்ளைட் நம்பர் என்ன, எத்தனை பேர் அதில் பயணம் செய்தார்கள், எங்கே, எப்போது காணாமல் போனது? இவைதான் முதல் நிலை கேள்விகள்.

அடுத்தபடியாக,  இயந்திரக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா, விபத்து நடந்ததை  யாராவது பார்த்தார்களா? யாராவது சந்தேகப்படும்படி இருக்கிறாரா?  இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரியாதவரை செய்தியைச் சொல்ல முடியாது இல்லையா?

கேள்வி கேளுங்கள்... உலகை வெல்லுங்கள்!

ஏன் இவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது எனில்,  பெரும்பாலான விமானங்கள் சரியாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இன்றைக்கு எல்லா விமானங்களும் சரியாக போய் சேர்ந்தன என்று நாம் செய்தி சொல்வதில்லை. பிரச்னையானால் மட்டுமே சொல்கிறோம். அதனாலேயே பிரச்னை பற்றிய முழுப் புரிதலுக்கு கேள்விகள் கேட்கிறோம்.

பிரச்னைகளைக் கண்டறிவதற்கான கேள்விகளைக் கேட்பது ஒரு கலை. ஏன் தெரியுமா? பிரச்னைகளைப் பற்றிய கேள்விகள் கேட்கப்படும்போது பல கெட்ட விஷயங்கள் வெளிவரும்.  இந்த உலகத்தில் கெட்ட செய்தியைச் சொல்லவும், கேட்கவும் பலரும்  விரும்புவதேயில்லை.

அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்ற முதலீட்டாளரான ஸ்டீவ் மில்லர், ஒரு நிறுவனத்தில் என்ன சரியில்லை என்பதை மட்டுமே கேட்பார். அதற்கான விளக்கங்களைக் கேட்பாரே தவிர, சாக்குப் போக்குகளை அல்ல. அவருடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்றால், வேகமான கேள்விகள், வேகமான பதில்கள் மற்றும் தீர்மானமான வலிக்கும் தன்மையுள்ள நடவடிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கித்தான். மில்லர் சில வாரங்கள், இதுபோன்ற நிறுவனங்களின் நிர்வாகங்களிடம் பேசுவார். அப்போது என்ன தப்பாகிப்போனது என்பதைச் சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார்.

எந்த நடவடிக்கை செயல்படாமல் போனது என்றும் அவர் கேட்பார். கொஞ்சம் சரித்திரத்தை கேட்பார். எப்போது பிரச்னை ஆரம்பித்தது என்று கேட்பார். இதிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன என்பார். எப்படி இதைச் சரிசெய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றும் கேட்பார்.

உதாரணத்துக்கு, டெல்பி கார்ப்பரேஷன் என்னும் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தில் சிக்கித் தவித்தது.  ஏறக்குறைய திவால் என்கிற நிலையில் இந்த கம்பெனிக்குள் நுழைந்த மில்லர், டெல்பியின் எந்த நடவடிக்கை இந்த நிலைக்குத் தள்ளியது, பிசினஸ் ப்ளான் என்று ஒன்றை வைத்திருக்கிறார்களா, அதற்கு என்ன ஆச்சு என்ற கேள்விகளை மட்டுமே கேட்டார்.

இந்த நிறுவனம் குறித்து அவருடைய புத்தகத்தில் கூறும்போது, டெல்பி, ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் நோயாளியைப்போல் காத்துக் கொண்டிருந்தது. பிரச்னையே, அந்த நிறுவனம் வெவ்வேறு துறைகளில் கால்பதித்ததுதான். நான் உள்ளே நுழைந்த ஐந்து மாதங்களில் முதலில் செய்த காரியம், அந்த நிறுவனம் வைத்திருந்த 29 தொழிற்சாலைகளில் 21  தொழிற்சாலைகளை மூடியதே. இதனால் பத்தில் நான்கு பேர் வேலை இழந்தனர்.  தொழிலாளர் யூனியன்கள், மில்லரை  வேலைக்கு ஆகாத ஆள் என்று ஏசிக்கொண்டு இருந்தன. மில்லர் தன்னுடைய ஸ்டைலில் கெட்ட செய்திகளையே முதலில் கேட்டறிந்தார்.  பிரச்னையின் உக்கிரத்தை உணர்ந்தார். டெல்பியின் பிரச்னை, அந்த நிறுவனத்தைத் தாண்டி ஜெனரல் மோட்டாரையும் பாதித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தார். அவருக்கு எக்கச்சக்க அவப்பெயரையும், தொழிலாளர்களுக்கு எக்கச்சக்க நஷ்டத்தையும் கொண்டுவந்த போதிலும்  டெல்பி மறுபடியும் லாபத்தில் இயங்க ஆரம்பித்தது.

‘‘ஒரு கடினமான பிரச்னையைத் தீர்க்கவேண்டும் என்றால், பிரச்னை என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதன்பிறகு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, பிரச்னையை எதிர்கொள்ள பயந்து கண்ணை மூடிக்கொண்டால் எப்படி அதனைத் தீர்க்க முடியும்?’’ என்று கேட்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்கள் பலவற்றையும் லாபத்துக்குக் கொண்டுவருவது என்றால் சும்மாவா என்ன? நிறுவனங்களைப் பொறுத்தவரை, அந்த நிறுவனத்தின் தலைமை, தான் விரும்பாத விஷயத்தைக் கேட்பதற்கு மறுக்கிறபோதும் அல்லது தவறான தகவல்களை நம்பும்போதும் மட்டுமே கெட்ட விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

நிலைமையைக் கண்டறிவதற்கான கேள்விகள்,  பச்சதாபக் கேள்விகள், இணைக்கும் கேள்விகள், மோதல்களை கொண்டுவரும் கேள்விகள், படைப்பாற்றலைத் தூண்டும் கேள்விகள், எதற்காக இந்தப் பணியைச் செய்கிறோம் என்பதற்கான கேள்விகள், அறிவியல் ரீதியான கேள்விகள், நேர்காணலுக்கான கேள்விகள், கருத்துக்கேட்பதற்கான கேள்விகள், மரபுகளை தெரிந்து கொள்வதற்கான கேள்விகள் என 11 அத்தியாயங்களில் பல்வேறு விதமான கேள்விகளை வகைப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.

கேள்வியின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிப்பது நல்லது.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)