Published:Updated:

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!
பிரீமியம் ஸ்டோரி
நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

மினிமம் பேலன்ஸ்... பரிவர்த்தனைக் கட்டணம்...சோ.கார்த்திகேயன்

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

மினிமம் பேலன்ஸ்... பரிவர்த்தனைக் கட்டணம்...சோ.கார்த்திகேயன்

Published:Updated:
நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!
பிரீமியம் ஸ்டோரி
நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

ரண்டு செய்திகளால் இந்தியா முழுக்க உள்ள நடுத்தர வர்க்கமே நடுங்கிப் போயிருக்கிறது.

செய்தி 1:  வங்கிக் கிளைகளில் ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் நேரடியாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்ச கட்டணம் விதிக்கப்படும். அதாவது, ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. நான்கு பரிவர்த்தனை முடிந்தபின் பணம் டெபாசிட் செய்தாலோ, எடுத்தாலோ குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணம் அல்லது ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

செய்தி 2:  வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும். தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.

பெருநகரங்களில் இருப்பவர்களுக்குக் குறைந்தபட்ச தொகை ரூ.5,000. நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு ரூ.3,000, புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2,000, கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு ரூ.1,000 என இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவறினால் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராதம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் அபராதத் தொகை வசூலிக்கப் படும். உதாரணமாக, 50 முதல் 75% வரை குறைவாக இருந்தால், அவர்களிடம் ரூ.75 ரூபாய் மற்றும் சேவை வரி, 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாய் உடன் சேவை வரி சேர்த்து வசூலிக்கப்படும்.

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

சப்பைக் கட்டும் நொண்டிச் சாக்குகள்

முதலில் பிரச்னைக்கு சப்பைக் கட்டும் விதமாக புதிய தலைமுறை தனியார் வங்கிகள் சொல்லும் நொண்டிச் சாக்கு, ‘நாங்கள் தரமான சேவையை அளித்து வருகிறோம். அதற்கு கொஞ்சம் கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் தந்தால் தவறில்லையே’ என்பதுதான். இந்த பிரச்னை தொடர்பாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி தன் பக்கத்தில் உள்ள நியாயத்தை மறைக்காமல் முன்வைத்தார்.

தரமான சேவைக்குக் கொஞ்சம் கூடுதல் கட்டணம் என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், வங்கிகளில் கடன் வாங்கும் அப்பாவி மக்கள், தவணை தவறாமல் கட்டும்போது அவர்களுக்கான வட்டியைக் கொஞ்சம்கூட இந்த வங்கிகள் குறைப்பதில்லை. நேர்மையாக நடந்துகொள்கிற வர்களை எந்த வகையிலும் ஊக்குவிக்காமல், தரமான சேவை என்கிற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைப்பது மட்டும் எந்த வகையில் நியாயம்? வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணத்துக்கு வெறும் 4% வட்டி மட்டுமே தரும் இந்த வங்கிகள், அந்தப் பணத்தை பிறருக்குக் கடன் தந்து 12 சதவிகிதத்துக்கு மேல்  லாபம் சம்பாதிக்கின்றன. எனவே, எங்களுக்கு 8% வட்டி தாருங்கள் என்று வாடிக்கையாளர்கள் கேட்டால் தருமா?  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!



இரண்டாவது பிரச்னைக்கு சப்பைக்கட்டுக் கட்ட எஸ்பிஐ வங்கியும் ஒரு நொண்டிச் சாக்கினைத் தேடிப் பிடித்து சொல்லியிருக்கிறது. ‘நம் நாட்டில் ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் ஜீரோ பேலன்ஸ்லேயே இருக்கும் இந்தக் கணக்குகளைப் பராமரிக்க நிறைய செலவாகிறது. இந்தச் செலவினை சமாளிக்கத்தான் குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தி இருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது.

ஏழை எளியவர்கள் முதல் எல்லோருக்கும் வங்கிக் கணக்கு வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியினால் அறிவிக்கப்பட்ட திட்டம் ஜன்தன் கணக்குகள். இந்தத் தரப்பு மக்களால் வங்கிக் கணக்கில் சில நூறு ரூபாய்களைகூட வைத்திருக்க முடியாது என்கிற காரணத்துக்காகத்தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஏதும் வைத்திருக்கத் தேவையில்லாத இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசாங்கம். இந்தக் கணக்குகளைப் பராமரிக்க வங்கிகளுக்கு குறிப்பிட்ட அளவு பணம் செலவாகிறது என்கிறபட்சத்தில், அதற்கான நிதியை நிதி அமைச்சத்திடம் கேட்பதுதான் சரியானதாக இருக்குமேயொழிய, வங்கியில் வாடிக்கையாளராக இருக்கும் பிறரிடம் அந்தத் தொகையை வசூலிப்பது எப்படிச் சரியாகும்?

தவிர, சில மாதங்களுக்குமுன், பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டபின் கிட்டத்தட்ட 72,000 கோடி ரூபாயை ஜன்தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தனர் மக்கள். இந்தப் பணம் அவர்களுடைய பணம்தானா என்பதெல்லாம் இருக்கட்டும். இந்தப் பணத்தை சுலபத்தில் திரும்ப எடுக்க முடியாதபடிக்கு பல நிபந்தனைகளை விதித்தது மத்திய அரசாங்கம். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் இந்தக் கணக்கிலேயே கிடந்தன. இதற்கு வெறும் 4% வட்டி மட்டுமே தந்து நல்ல லாபம் பார்த்த வங்கிகள், இப்போது பராமரிக்கப் பணம் வேண்டும் என்று கேட்டால் எப்படி?

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!



மக்களைத் திசை திருப்ப...

தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் இந்த அறிவிப்புகளில் இப்படி சில குளறுபடிகள் இருக்க, இந்த அறிவிப்புகளினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்துப் பார்ப்போம். 

‘‘மக்களைத் திசை திருப்ப இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு’’ என்று பேச ஆரம்பித்தார் பொருளாதார நிபுணர் கே.ஜோதி சிவஞானம். “இது எல்லாமே பண மதிப்பு நீக்கத்தில் இருந்துதான் தொடங்குகிறது. கடந்த நவம்பர் 8-ம் தேதி, பிரதமர் மோடி பேசும்போது, கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றார். ரூ.4 லட்சம் கோடி வரை கறுப்புப் பணம் இருப்பதாகவும், இது வங்கிகளுக்கு வராது என்றும் சொன்னார். ஆனால், எதிர்பார்த்ததைவிட அதிக பணம் வங்கிகளில் குவிந்தது. 30 நாள்கள் கழித்து, பணமதிப்பு நீக்கம் தோல்வி அடைந்தபிறகு டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனை எனப் பேச ஆரம்பித்து விட்டார். 

இந்தியாவில் கறுப்புப் பணம் ரொக்கமாகவே இல்லை. வெளிநாடுகளில் 95% சொத்துகளாகவே இருக்கின்றன. இதுவரை நடந்த வருமான வரித் துறை ரெய்டில் 3% முதல் 7% வரைதான் ரொக்கமாகப் பிடிபட்டுள்ளது. மீதி சொத்துகளாகவே உள்ளன. பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்பதை திசை திருப்புவதற்காக அரசாங்கம் சொல்லியே இதுபோன்ற நடவடிக்கைகளை வங்கிகள் அறிவிக்கின்றன. பொதுமக்களை ஏமாற்றத்தான் இதுபோன்ற நடவடிக்கை’’ என்றார்.

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!



அதிகாரிகளுக்கே தெரியவில்லை

‘‘இத்தனை முக்கியமான அறிவிப்பு வங்கி அதிகாரிகளுக்கே தெரியவில்லை’’ என்றபடி பேசத் தொடங்கினார் ஆடிட்டர் சதீஷ்குமார். “இந்த அறிவிப்புகள் மீடியாக்களில் மட்டுமே வந்துள்ளது. வங்கிகளுக்கு எந்த நோட்டிஃபிகேஷனும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஒரே மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சில வங்கிகளில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எதற்காகப் பிடித்துள்ளனர், எப்படிப் பிடித்தம் செய்கின்றனர் என்பது வங்கி அதிகாரிகளுக்குக்கூடத் தெரியவில்லை.

வாடிக்கையாளரைச் சமாளிக்க முடியாமல் வங்கி மேலாளர்கள் தடுமாறி வருகின்றனர். எஸ்பிஐ அதிகாரிகளேகூட, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5,000 முதல் ரூ.1,000 வரை என நிர்ணயிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இது அரசாங்கத்தின் முடிவா இல்லை, வங்கியின் முடிவா என்பது தெரியவில்லை. பலபேருக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. பணமில்லாப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்காகவும், பணப் பரிவர்த்தனையைக் கட்டுப்படுத்துவதற் காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இது சிறு வியாபாரிகளுக்கு மட்டுமில்லை, நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக அரசா, இல்லை அரசுக்காக மக்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை...” என்றார் அவர்.

வங்கிகள் நோக்கம் லாபம் மட்டுமே!

வங்கிகளின் இந்த நடவடிக்கையை வங்கி ஊழியர் சங்கங்களே கடுமையாக எதிர்க்கின்றன. ‘‘வங்கிகளின் நோக்கம், லாபம், லாபம் மட்டுமே...’’ என்று பொரும ஆரம்பித்த எஸ்பிஐ வங்கிச் சங்கங்களின் தலைவர் தாமஸ் பிராங்கோவிடம் பேசினோம். “வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது சாதாரண மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். இப்போது இந்த நோக்கத்தையே மாற்றி, லாபத்தை மட்டுமே முக்கிய குறிக்கோளாக எண்ணி வங்கிகள் செயல்படுகின்றன. ஆனால், வங்கிகளின் லாபம் குறைந்துகொண்டே வருகிறது. அதனால், எங்கெல்லாம் பணம் பிடுங்க முடியுமோ, அங்ககெல்லாம் பணம் வசூலிக்கவே முயற்சி செய்கின்றனர். வங்கிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசாங்கம் தயாராக இல்லை. வாராக் கடன் அதிகரித்துக் கொண்டே போகிறது. வாராக் கடனை வசூலிக்க என்ன செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தில் நிதித்துறைக்கான நிலைக்குழு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்றுகூட இதுவரை அமல்படுத்தப்படவில்லை. வாராக் கடனில் 70% கார்ப்பரேட் மற்றும் பெரும் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கிறது. இதுவரை இவர்கள் மேல் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இவர்கள் பெயரைக்கூட வெளியிட மறுக்கின்றனர்.

இந்தியாவில் சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 92% மக்களின் மாத வருமானம் ரூ.10,000-க்குக் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள், வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை எப்படிப் பராமரிப்பார்கள்? மொத்தத்தில், இது மிகத் தவறான முடிவு. மீண்டும் மறு பரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!



நடவடிக்கை சரியானதே!

“வங்கிகளின் நடவடிக்கை மிகச் சரியானதே’’ என்று பேசத் தொடங்கினார் `கோயம்புத்தூர் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் தலைவர் டி.பாலசுந்தரம். 

“வங்கிகளின் நடவடிக்கை மிகச் சரியானதுதான். ஏனெனில் சில பேர் ஒரு சில வசதிகளை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். சில பேர் அந்த வசதிகளைக் கொஞ்சமாக பயன் படுத்துகின்றனர். இதனால் வங்கிகளுக்கு கடும் பணிச்சுமை மற்றும் செலவுகள் ஏற்படுகின்றன. இவையனைத்தும் `எல்லோருக்கும் சமம்’ என்று வரும்போது வங்கிச் சேவையை அதிகமாகப் பயன்படுத்து பவர்களுக்கு சகாயமாக அது மாறிவிடுகிறது. அப்படிப் பயன் பெறுவது பெரும்பாலும் வணிகர்கள்தான். குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்த்தப் பட்டதைப் பொறுத்தவரை, தனியார் வங்கி, பொதுத் துறை வங்கி எனப் பிரித்துப் பார்க்கக் கூடாது. ஏனெனில் வங்கி களுக்கிடையே போட்டி நிலவுகிறது. வங்கி களெல்லாம் வணிகமயமாகியுள்ளன” என்றார்.

வருமானம் குறைந்து வருகிறது! 

‘‘வங்கித் துறையில் இருக்கும் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு இருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் வங்கிகளின் இந்த நடவடிக்கையை நாம் பார்க்கவேண்டும்’’ என்றார் வங்கித் துறை நிபுணரான கார்த்திக் சீனிவாசன்.

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!



“வங்கிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்கின்றன. அதேநேரம், வங்கிகள் உண்மையில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. பணமதிப்பு நீக்கத்தையடுத்து வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் குவிந்துள்ளது. ஆனால், அவர்களால் கடன் வழங்க முடியவில்லை. கடந்த சில மாதங்களில் வங்கிகளின் வருமானம் குறைந்துள்ளது. வங்கிகளின் சொத்து குறித்த தரம், வாராக் கடன், மூலதனம் என பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அடுத்த ஒரு வருடம், வங்கிகளுக்கு நிச்சயம் சவாலான காலம்தான். வங்கிகளின் வருமானம் `நெகட்டிவ்’ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் வங்கித் துறையில் எந்தத் தாக்கமும் இருக்காது. ஆனால், பணப் பரிவர்த்தனையை அரசாங்கம் விரும்பவில்லை. வங்கிகளின் இந்த நடவடிக்கைகளால் பணப் பரிவர்த்தனை குறையும்; வங்கிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறையும்; செயல்பாட்டு லாபம் குறையும்’’ என்றார் அவர்.

மக்களைப் பாதிக்கக்கூடாது!

நான்கு முறைக்கு மேலான பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் என்கிற நடை முறையை புதிய தலைமுறை தனியார் வங்கிகள் மட்டுமே தற்போது கொண்டுவந்துள்ளன. பொதுத் துறை வங்கிகள் இந்த நடைமுறையைக் கொண்டு வராதவரை நாம் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்து எஸ்பிஐ வங்கி மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தொகை 5,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக குறைக்கப்படலாம். அல்லது பழையபடியே ரூ.1,000 என்கிற அளவில்கூட வைக்கப்படலாம். பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ எடுக்கும் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் நடுத்தர மக்களும் சாதாரண மக்களும் பாதிக்கப்படாத வகையில் இருப்பது அவசியம்!

எப்படி சமாளிப்பது?

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!


வங்கிகளின் இந்த நடவடிக்கைகளை எப்படி சமாளிக்கலாம் என்று சில யோசனைகளைச் சொன்னார் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி.

* குடும்பச் செலவுகளை பட்ஜெட் போடுங்கள். பணமாகக் கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள் என்கிற இடத்தில் மட்டும் பணம் கொடுங்கள். மற்றபடி, டெபிட் கார்டு மூலம்  பணப் பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் அதனை மட்டுமே பயன்படுத்துங்கள். இதற்காக வாங்கப்படும் சிறு சர்வீஸ் சார்ஜினை நினைத்து, டெபிட் கார்டைப் பயன்படுத்தத் தயங்காதீர்கள்.

* வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் என்பது சராசரிக் கணக்கீட்டின்படியே அபராதம் விதிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, 1-ம் தேதி ரூ.20,000 சம்பளம் கிரெடிட் ஆகிறது என்றால், ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு அந்தப் பணத்தை அப்படியே வைத்திருந்தால், சராசரியை எட்டிவிடலாம். 

* வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் ரூ.5,000 என நிர்ணயித்திருப்பதை ஒரு எமர்ஜென்சி ஃபண்டாக கருதி பயன்படுத்துவது நல்லது. நம் வீட்டில் பீரோவில் பணம் இருப்பதைவிட, வங்கியில் நம் சேமிப்புக் கணக்கில் இருப்பதே நல்லது. எனவே, வங்கியில் எப்போதும் குறிப்பிட்ட அளவு பணம் இருக்கிற மாதிரிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

‘‘வங்கிகளின் வருமானத்துக்கு வழிவகுக்கும்!’’

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!


ஏ.கே.பிரபாகர், தலைவர், ஈக்விட்டி ரிசர்ச் ஐடிபிஐ கேப்பிட்டல்.

“இந்த நடவடிக்கையால் வங்கிப் பங்குகளில் தாக்கம் இருக்கும். ஆனால், விலையேற்றம் பெரிய அளவில் இருக்காது. பணப் பரிவர்த்தனைக்கு சர்வீஸ் சார்ஜ் மற்றும் மினிமம் பேலன்ஸ் அறிவிப்பு எல்லாம் வங்கிகளின் வருமானத்துக்கு வழிவகுத்துள்ளது. ஆனால், மினிமம் பேலன்ஸ் நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் எங்கு குறைவான கட்டணத்தில் அதிக சேவை கிடைக்கிறதோ, அங்கு மாறுவதற்கு வாய்ப்பு அதிகம். இது வங்கிகளில் நெருக்கடியையே ஏற்படுத்தும்.

வங்கிப் பங்குகளில் குறுகிய காலத்தில் யெஸ் பேங்க், எஸ்பிஐ, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி மிகச் சிறப்பாகச் செயல்படும். இந்த வங்கிப் பங்குகளை வாங்கலாம்.” 

மக்கள் கருத்து

மக்களின் பணத்தை சுரண்டும் மறைமுக வழி!

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

தமிழரசன், காசாளர்.

‘‘பரிவர்த்தனைக்குக் கட்டணம் விதிப்பதன் மூலம் அரசு, மின்னணு பணப் பரிமாற்றத்தை நோக்கி மக்கள் செல்லவேண்டும் என்று நினைக்கிறது. ஆனால், அதற்கான கட்டமைப்பு வசதிகள் எதையும் செய்து தரவில்லை. அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்று சொல்லி, இப்போது குறைந்தபட்ச தொகையை உயர்த்தி இருப்பது அபத்தமான செயல். இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் கஷ்டப்படுவார்கள்.’’

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

புவனேஷ்வரி, உதவிப் பேராசிரியர்

‘‘பெருநகரங்களில் சம்பளத்தை மட்டுமே நம்பி, சம்பளத்துக்காக மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்தச் செய்தி பெரிய அதிர்ச்சி. வங்கிகளைச் சார்ந்தே அனைத்துப் பரிவர்த்தனைகளும் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டு, இப்போது அதற்கெதிராக பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.’’ 

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

த.யுவராஜா, வழக்கறிஞர்.

‘‘முதலில் அனைவரையும் வங்கிக் கணக்குத் தொடங்கவைத்தார்கள். பிறகு, பணம் எடுக்க அளவு நிர்ணயித்தார்கள். இப்போது குறைந்தபட்சத் தொகை வங்கிக் கணக்கில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இனி மக்கள் சேமிக்கிற பணத்துக்கு வட்டியே இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.  மக்களின் பணத்தை அரசாங்கம் சுரண்டுவதற்கு மறைமுக வழிதான் இந்தத் திட்டம். இதனால் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்.’’

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

ஆ.அருண்குமார், தனியார் கம்பெனி ஊழியர்

‘‘என மாதச் சம்பளமே 10,000 ரூபாய்தான். அந்தச் சம்பளத்துலதான் என் வீட்டு வாடகை, குழந்தையோட படிப்புச் செலவு, அதோடு இதரச் செலவுகளையும் நான் பார்க்கணும். அப்படி இருக்குறப்ப, என்னால எப்படி ரூ.5,000 மெயின்டெயின் பண்ண முடியும்? நான் மொதல்ல அக்கவுன்ட்டை குளோஸ் பண்ணப்போறேன்.’’

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

அனு ஜான், குடும்பத் தலைவி

‘‘என்னோட வீட்டுக்காரர் சம்பளத்துல குடும்பச் செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை பேங்க்ல சேமிச்சு வைப்பேன். இப்ப ரூ.5,000 மினிமம் பேலன்ஸ்ன்னா, என்னை மாதிரி குடும்பத் தலைவிகள் மெயின்டெயின் பண்றது கஷ்டம். நடுத்தர மக்களை யோசிக்காமலே எல்லா முடிவுகளையும் எடுக்குறாங்க.’’

நடுத்தர மக்களை வதைக்கும் வங்கிகள்!

ந.துர்கா தேவி, தனியார் நிறுவன ஊழியர்

‘‘எனக்கு மொத்தம் ஐந்து அக்கவுன்ட் இருக்கு. எல்லாத்துலேயும் மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் பண்ணனும்னா கஷ்டம்தான். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவங்க திடீர்னு மருத்துவ செலவுக்குக்கூட பணம் எடுப்பாங்க. அதுக்கெல்லாம் அபராதம் விதிச்சா ரொம்பக் கஷ்டம். இந்தக் காலத்துல கேஸ் மானியம், மாதச் சம்பளம் எல்லாமே பேங்க அக்கவுன்ட்லதான் போடுறாங்க. அதனால அரசாங்கம், நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்காத மாதிரி இந்தத் திட்டத்தை மாத்தணும்.’’

 - செ.ஜெ.பச்சமுத்து, அ.பா.சரவணக்குமார், வித்யா காயத்ரி.