மதியழகன் கோவையைச் சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே புறநகர்ப் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கிவிட்டார். ஆனாலும் சமீபத்தில்தான் சொந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்தார். தனியார் வங்கியொன்றில் கேஷியராகப் பணிபுரியும் மதியழகன் புத்திசாலிதான். ஆனால், தன்னைவிட வேறு எவரும் புத்திசாலி இல்லை என்ற எண்ணம் கொண்டவர். எப்போதுமே யாருக்காவது ஒருவருக்கு, ஏதாவது ஒரு ஆலோசனையைச் சொல்லிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிஸியான பேர்வழி.
‘இதை இப்படிச் செய்யலாமா, அதை அப்படிச் செய்யலாமா’ என யாராவது ஒரு பத்தாம்பசலி, மதியழகனிடம் எப்போதும் யோசனை கேட்டுக் கொண்டே இருப்பார். கருமேகம் சூழ்வதைக் கண்டதும், ‘இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை வரும்’ என்பார். மழை வந்துவிட்டால், ‘நான் சொன்னேன்ல...’ என்பார். வராவிட்டால் ‘காத்து கலைச்சுடுச்சு...’ என்று சமாதானம் சொல்வார்.

மதியழகனுக்கு யார் அறிவுரை சொன்னாலும் சுத்தமாகப் பிடிக்காது. அதுவும் தன் மனைவி சுந்தரவள்ளி ஏதாவது யோசனை சொல்லிவிட்டால் ‘நீயெல்லாம் ஒரு ஆளுன்னு...’ என்ற தொணியில் எரிந்துவிழுவார். ஆனால், ஒரு நல்ல பழக்கத்தை மட்டும் அவர் வைத்திருந்தார். சம்பளம் வாங்கியதும் மொத்தப் பணத்தையும் தன் மனைவியிடம் தந்துவிடுவார். சுந்தரவள்ளி, அதிகம் படிக்காவிட்டாலும் சமயோசிதமாக யோசிக்கக் கூடியவர். சிக்கனமாகச் செலவு செய்துவிட்டு, மாதம் ரூ.10,000 வரை மீதப்படுத்தி சேமித்து வருகிறார். ஆரம்பத்தில் சீட்டுப்போடுவது, ஆர்டி கட்டுவது என பணத்தைச் சேமித்தார் சுந்தரவள்ளி.
என்னிடம் கடந்த 15 வருடங்களாக ஆலோசனை பெற்று வருபவர்கள் சிவராமன், வனிதா தம்பதியினர். இந்த தம்பதி, சுந்தரவள்ளியின் எதிர்வீட்டுக்கு வாடகைக்குக் குடிபோனார்கள். வனிதாவுடன் நெருங்கிப் பழகிய சுந்தரவள்ளி, அவர் ஆலோசனைப்படி மாதம் ரூ.5,000 வரை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். கடந்த ஐந்து வருடங்களாக இப்படி முதலீடு செய்து வருகிறார். தன் இரண்டு பெண் குழந்தைகளின் மேற்படிப்புக்காகவும், திருமணத்துக்காகவும் இந்த முதலீடு உதவும் என்று நினைத்து, அதை இதை தொடர்ந்து செய்துவந்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சமயம், பல்லடத்துக்கு அருகில், அருமையான மனை ஒன்று விலைக்கு வருகிறது என மதியழகனின் நண்பர் ஒருவர் சொல்ல, மதியழகனுக்கும் வாங்கும் ஆசை வந்தது. ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஒரு கிரவுண்ட் மனையை ஆளுக்குப் பாதியாக வாங்கி னார்கள். தன் மனைவியை நிர்பந்தித்து, அவர் முதலீடு செய்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் போட்டுத்தான் அந்த மனையை வாங்கினார்.
சுந்தரவள்ளி எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் மதியழகன் அதைக் கேட்கவில்லை. ‘குழந்தைகளின் மேற்படிப்புக்குத்தான் இன்னும் மூன்று வருடங்கள் இருக்கிறதே; அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று மனைவிக்கு சமாதானம் சொல்லித்தான் மனையை வாங்கிப் போட்டார். அவர் மனை வாங்கிப்போட்ட இரண்டு வருடங்களில், அவர் மனைக்கு அருகில் கெமிக்கல் ஃபேக்டரி ஒன்றைத் தொடங்கினார்கள். இதனால் அந்தப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு மனை விலை மிகவும் குறைந்தது.
பொறியியல் கல்லூரியில் மகளைச் சேர்க்க வேண்டிய சமயம் வந்தது. கையில் பணம் இல்லை. மனையை உடனே விற்க முடியவில்லை. கேட்ட சிலரோ, வாங்கிய விலைக்கே கேட்டார்கள். சுந்தரவள்ளி இதைச் சுட்டிக்காட்டிப் பேச, வீட்டில் சண்டை முற்றிப்போனது. தன் எதிர்வீட்டுத் தோழியிடம் இதனைப் பகிர்ந்துகொள்ளவே, அவர் மதியழகனையும் சுந்தரவள்ளியையும் என்னிடம் அழைத்துக்கொண்டு வந்தார்.

“பிள்ளைகளுக்காகவும், எங்களோட கடைசி காலத்துக் காகவும் நாலு காசு சேர்த்து வைக்கணும்னு ஒரு நாளும் இவரு யோசனை பண்ணினதே கிடையாது. குடியிருக்கச் சொந்தமா வீடு இருக்கு. பல்லடத்துல மனை நமக்கு அவசியம் இல்லை. குழந்தைகளுக்குப் பணம் தேவைப்படும்னு படிச்சுப் படிச்சு சொல்லியும் என் பேச்சைக் கேட்காம இப்படிப் பண்ணிட்டாரு. இப்போ பணச் சிக்கல் வந்த நேரத்துல அதைச் சொன்னா கோபப்படுறாரு...” என சுந்தரவள்ளி கண்ணீர் மல்கச் சொன்னார். மதியழகன் அமைதியாக இருந்ததிலிருந்தே, அவர் தன் தவறை உணர்ந்து விட்டார் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
‘பணத்தை வெவ்வேறு முதலீடுகளில் பிரித்து முதலீடு செய்தால் பெரிதாகச் சிக்கல் வராது’ என்ற அஸெட் அலோகேஷன் சூத்திரத்தை மதியழகன் உள்பட நம்மில் பலரும் புரிந்துகொள்வதே இல்லை. அவசரப் பணத் தேவையை, ரியல் எஸ்டேட் முதலீடு பூர்த்தி செய்யாது என்பதை மதியழகனுக்குச் சுட்டிக்காட்டினேன். நன்றாக வளர்ச்சியில் இருந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைத் தொடர்ந்து செய்திருந்தால், தற்போது எவ்வளவு கிடைத்திருக்கும் என்பதைக் கணக்குப் போட்டுக் காண்பித்தேன். “14% வருமானம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக கிடைத்த ரூ.4.3 லட்சம் தொகையுடன், 10% வட்டியில் ரூ.8.2 லட்சம் கடன் வாங்கித்தான் பல்லடம் மனையை வாங்கி இருக்கிறீர்கள். மாதம் ரூ10,800 இஎம்ஐ செலுத்தி வருகிறீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடர்ந்து செய்திருந்தால், தற்போது ரூ.6.4 லட்சம் வரை கிடைத்திருக்கும். நீங்கள் இதுவரை செலுத்திவந்துள்ள இஎம்ஐ தொகை, இப்போது மனையின் விற்பனை மதிப்பு என எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப்பார்த்தால், 1%கூட லாபம் இல்லை. எனவே, பல்லடம் மனையை விற்றுவிடுங்கள்” என்றேன்.
செயல்படுத்துவதற்குக் கொஞ்சம் கடினமான முடிவுதான். என்றாலும், சில மாதங்கள் கழித்து தன் மனைவியுடன் என்னைப் பார்க்கவந்த மதியழகன், ‘‘மனையை விற்றுக் கடனை அடைத்து விட்டேன்; மகளைக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். இனி நான் என்ன செய்ய வேண்டும்..?” என்றார்.
‘‘நீங்கள் இஎம்ஐ செலுத்தி வந்த 10,800 ரூபாயை மகள்களின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்யுங்கள்” என்றேன்.
அப்போது மதியழகனின் முகத்தில் திருப்தியும், நம்பிக்கையும் தெரிவதை என்னால் உணர முடிந்தது.