Published:Updated:

சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!

சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!
பிரீமியம் ஸ்டோரி
சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!

பிசினஸ் செய்ய விரும்புபவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும், தங்களுக்கான சரியான பிசினஸை எப்படித் தேர்வு செய்ய வேண்டும், அதைப் பதிவு செய்து எப்படி, சட்ட ரீதியான சிக்கல்கள் எதுவும் இல்லாமல் தொழிலை எப்படி சுமுகமாக நடத்திச் செல்வது, முக்கியமாக பிசினஸை வெற்றிகரமாக நடத்தத் தேவையான மேலாண்மை விஷயங்கள் என்னென்ன என்றெல்லாம் கடந்த இதழ்களில், ஒவ்வொன்றாக விரிவாகப் பார்த்து வந்திருக்கிறோம்.

இனி, உங்களுடைய பிசினஸை கடல் கடந்து கொண்டு செல்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். இதுவரை உள்நாட்டில் தொழில் செய்வதற்கான விஷயங்களைச் சொல்லி வந்தேன். இனி வெளிநாடுகளில் எப்படித் தொழில் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.

ஏற்றுமதி/இறக்குமதி மூலம் ஒருவர் தன்னுடைய பிசினஸை பல கண்டங்களிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த முடியும். இந்தியாவிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் 200-க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதி/இறக்குமதி செயல் முறைகளைக் கற்றுக்கொண்டால், உள்ளூர் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்ய முடியும்.

சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!

   உலகம் மிகப் பெரிது

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பொருள் தேவைப்படும். ஆனால், அந்தப் பொருள் உற்பத்தி ஆவதற்கான வளமோ, தொழில்நுட்பமோ இல்லாமல் இருக்கலாம். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பிற நாடுகளிலிருந்து அவர்கள் இறக்குமதி செய்வதைத் தவிர, வேறு வழியில்லை. அதேபோல, குறைந்த அளவே உற்பத்தியாகும் ஒரு பொருளை அதிகமானோர் பயன்படுத்தும்போதும், அந்தப் பொருளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். இந்த வித்தியாசத்தை சமன் செய்வதுதான் ஏற்றுமதி/இறக்குமதி. இதன் மூலம் பற்றாக்குறையாக இருக்கும் நாட்டின் தேவை பூர்த்தி செய்யப்படும். உற்பத்தி செய்யும் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.

  சீனாவைப் பார்த்துக் கற்றுக்கொள்வோம்


உலகிலேயே சீனாதான் ஏற்றுமதியில் முன்னணி நாடாக விளங்குகிறது. அதன் பொருளாதாரத்தில் பெரும்பாலான சதவிகிதம் ஏற்றுமதிச் சந்தையிலிருந்துதான் கிடைக்கிறது. அங்கு குடிசைத் தொழில்கள் அதிகம். படிக்கும்போதே தொழில்கள் செய்யக் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால், சீனாவுக்கு நிகரான மக்கள் தொகையும், வளங்களும் கொண்ட நம் நாட்டின் ஏற்றுமதி சந்தை மதிப்பு அதனுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. இந்திய அரசும் ஏற்றுமதித் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் கணிசமாக நம் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.

ஏற்றுமதிக்கென பல்வேறு அமைப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்து வருகிறது நம் நாடு. பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்துள்ளது. மேலும், ஏற்றுமதி செய்பவர்களின் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கவும் இசிஜிசி (ECGC) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வரிச் சலுகைகள், ஊக்கத் தொகைகள், கடன்கள் மற்றும் மானியங்களும் தரப்படு கின்றன. இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு, பிசினஸ் செய்பவர்கள் எளிதில் சர்வதேச சந்தையில் பிசினஸ் செய்ய முடியும்.

தற்போது சர்வதேச சந்தை யில் இந்தியாவின் ஏற்றுமதி சந்தை மதிப்பு 1.7%. ஆனால், இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே, பிசினஸ் செய்பவர்கள் ஏற்றுமதி சந்தையைப் பிடிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!


 ஏற்றுமதி தொழில் செய்வது எப்படி?

ஏற்றுமதி/இறக்குமதி தொழிலை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கும்முன், அதற்குமுன் இந்தத் தொழிலின் அடிப்படை விஷயங்களைப் பார்த்து விடலாம்.

ஒரு நாட்டின் தேவை என்ன, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருள்/தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறதா, அதை அங்குள்ளவர்களிடம் எப்படி விற்பனை செய்வது?- இந்த மூன்று கேள்விகள்தான் ஏற்றுமதி/இறக்குமதி தொழிலின் முக்கியமான அடிப்படையைப் புரிந்துகொள்ள உதவும். இதற்கான விடைகளைக் கண்டுபிடித்துவிட்டால் போதும், ஏற்றுமதி/இறக்குமதி தொழிலுக்கு நீங்கள் தயாராகிவிடலாம்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், பூக்கள், கைவினைப் பொருள்கள் என அனைத்தையும் ஏற்றுமதி செய்யலாம். பெரும்பாலும், உணவுசார் பொருள்கள்தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளையும் ஏற்றுமதி செய்யலாம்.

இந்தியர்கள் உலகம் முழுக்க பரவி இருப்பதால், இந்தியப் பாரம்பர்ய பொருள்கள் இன்னும் வெளிநாடுகளில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஊறுகாய் முதல் அப்பளம், வடகம், ஊதுபத்தி வரை அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம், நீங்கள் நினைத்த எல்லா பொருள்களையும் ஏற்றுமதி செய்துவிட முடியாது. ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அரசு அனுமதிக்கும் பொருள்களை மட்டுமே ஏற்றுமதி செய்யலாம். தடை செய்துள்ள பொருள்களை ஏற்றுமதி செய்தால், பெரும் பிரச்னைக்குள் சிக்க வேண்டி வரும்.

இந்தத் தொழிலில் நீங்கள் இறங்கும்முன், நீங்கள் என்ன வகையான ஏற்றுமதியாளர் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, 1. பிறரிடமிருந்து பொருள்களை வாங்கி ஏற்றுமதி செய்பவரா, 2. பொருள்களை நீங்களே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவரா, 3. பிறரிடமிருந்து வாங்கிய பொருள்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்பவரா, 4. சேவை ஏற்றுமதியாளரா? இதில் நீங்கள் எந்த வகை ஏற்றுமதியாளர் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், ஏற்றுமதியைப் பொறுத்தவரை மிக முக்கியமானது தரம். உள்ளூரில் செய்யும் பிசினஸ் போல ஏற்றுமதி சந்தையைச் சாதாரணமாக நினைக்கக்கூடாது. தரம்தான் உங்களுடைய பிசினஸை மேலும் மேலும் உயர்த்தும். உங்களுடைய பொருளுக்கான தரத்தில் நீங்கள் கவனம் செலுத்தாவிட்டால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடும்; பெயரும் கெட்டுவிடும். 

சர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி? - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்!

சர்வதேச சந்தையில் ஜெயிக்க ஐந்து முக்கிய படிநிலைகள்

1. ஏற்றுமதி தொழிலை எப்படித் தொடங்குவது?

ஏற்றுமதி தொழில் தொடங்குவதன் செயல்முறைகள், அரசு மற்றும் சட்டரீதியான விதிமுறைகள், அவற்றுக்கு எப்படி நம்மைத் தயார் செய்துகொள்வது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

2. ஏற்றுமதி செய்வதற்குமுன் திட்டமிடுதல்

ஏற்றுமதி தொழிலில் உள்ள நுணுக்கங்கள், தோல்வியடையாமல் ஜெயிப்பதற்கான திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமைகள், பொருளையும் நாட்டையும் தேர்வு செய்யும் உத்திகள் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.

3. முதலீடும், விலை நிர்ணயமும்


எந்தப் பொருளுக்கு எவ்வளவு முதலீடு, தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வழிகள், அரசு தரப்பில் கடன் வசதிகள், மானியங்கள் சலுகைகள்,  பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்யும் வழிகள், எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம் என்பன போன்றவற்றைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

4. செயல்முறைகளும் டாக்குமென்டேஷனும்

தேவையான ஆவணங்கள் என்னென்ன, அதற்கான நடைமுறைகள் என்னென்ன, ஆவணங்களைத் தயார் செய்வது எப்படி  என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

5. பேக்-ஆபிஸ் அல்லது அக்கவுன்டிங்


பிசினஸ் செயல்பாடுகளை நிர்வகிப்பது, ஆர்டர்களைக் கையாள்வது, கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது ஆகியவற்றையும் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாகச் செய்ய, இந்த ஐந்து படிநிலைகளும் அவசியம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் அடுத்தடுத்து வரும் இதழ்களில் விரிவாகப் பார்ப்போம்.

நீங்கள் ஏற்றுமதி செய்யும்முன்,  ஐஇ கோட் (IE Code) என்று சொல்லப்படும் ஏற்றுமதி/ இறக்குமதி செய்வதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதை டிஜிஎஃப்டி (DGFT) எனப்படும் அரசு அமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

நிறுவனமாகப் பதிவு செய்துகொண்ட பிறகுதான் ஏற்றுமதி/இறக்குமதி செய்வதற்கான உரிமத்தைப் பெற முடியும். ஏற்கெனவே உள்ளூரில் பிசினஸ் செய்பவராக இருந்தால், உங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே உரிமம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நேரடியாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறீர்கள் என்றால், ஒரு நிறுவனத்தைப் பதிவுசெய்து அதன் பெயரில் ‘ஐஇ கோட்’ வாங்கிக்கொள்ளலாம்.

டிஜிஎஃப்டி அமைப்பின் அறிக்கையின்படி, பல லட்சம் பேர் ஐஇ கோட்களை வாங்கியிருக்கிறார் கள். ஆனால் அவர்களில் சில ஆயிரம் பேர்தான் ஏற்றுமதி தொழிலைச் செய்துவருகிறார்கள். மற்றவர்கள் ‘ஐஇ கோட்’ வாங்கியதோடு சரி, அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா? கவலை வேண்டாம். உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் இனிவரும் பகுதிகளில் தீர்வுகள் காத்திருக்கின்றன; தொடர்ந்து படியுங்கள். 
        
 (ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism