Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16

அகலக்கால் வைப்பது ஆபத்து!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16

அகலக்கால் வைப்பது ஆபத்து!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16

நாம் செய்துவரும் ஏதாவது ஒரு விஷயம் நன்றாக இருந்துவிட்டால் போதும், நமக்கு இன்னும் ஆசை வந்துவிடுகிறது. இன்னும் நிறையச் செய்ய வேண்டும், நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து, அகலக்கால் வைத்துவிட்டு, பிற்பாடு அவதிப்படுகிறோம்.

டாக்டர் திவாகரும் அப்படித்தான். பல் மருத்துவம் படித்து முடித்துவிட்டு, பெரிய மருத்துவமனையில் இரண்டு வருடப் பயிற்சி அனுபவம் பெற்று, சென்னை அடையாறில் சொந்தமாக மருத்துவமனையை ஆரம்பித்தார். திவாகரின் கடின உழைப்பும், தொழில் நேர்த்தியும் பெரிய வெற்றியைக் கொடுத்தது. மாநகரில் நன்றாக பிசினஸ் நடக்கும் பல் மருத்துவமனைகளில்  ஒன்றாக திவாகரின் மருத்துவமனை ஜொலிக்க ஆரம்பித்தது.

தொழில் சூடுபிடித்த நேரத்தில்தான் திவாகருக்கு ஜனனியுடன் திருமணம் நடந்து முடிந்தது. ஜனனி எம்பிஏ படித்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். திருமணத்துக்குப் பிறகு திவாகர் விரும்பியபடி, வேலையை விட்டுவிட்டு வீட்டுப் பொறுப்பை கவனித்துக்கொண்டார் ஜனனி.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16

ஏற்கெனவே தன் மருத்துவமனை பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த மகிழ்ச்சியில் இருந்த திவாகருக்கு திருமணம் ஆனவுடன் புதிய உற்சாகமும் சேர்ந்துகொள்ள, இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டிலும், வெளியிலும் கலந்துபேசினார். புதிய மருத்துவமனைகளைத் திறக்கலாம் என சில நண்பர்கள் சொல்லவே, அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் திவாகர். வேறு சிலர், ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனையை வேண்டுமானால் விரிவுப்படுத்தலாம். புதிய மருத்துவமனைகளைத் தொடங்கினால் அதைக் கவனித்து நடத்த சிரமமாக இருக்கும் என்றார்கள். ஆனால், அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு தாம்பரம், அண்ணா நகர் போன்ற இடங்களில் புதிய மருத்துவமனைகளைத் திறந்தார். அதற்காக நிறையக் கடன் வாங்கினார். புதிய மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்களைப் பணிக்கு அமர்த்தினார்.

அடையாறு மருத்துவமனை அளவுக்கு வருமானம் வராவிட்டாலும்கூட, புதியதாகத் தொடங்கிய இரண்டு மருத்துவமனைகளிலும் ஓரளவுக்கு வருமானம் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. தாம்பரம் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டு பெண் மருத்துவர்களும் ஒரே நேரத்தில் வேலையை விட்டுச் சென்றுவிட்டார்கள். உடனடியாக வேறு மருத்துவர்களைப் பணிக்கு அமர்த்த முடியவில்லை.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16



வேறுவழியில்லாமல் அடையாறு மருத்துவமனையைக் கவனித்துவிட்டு, தாம்பரத்துக்கும் சென்றுவர ஆரம்பித் தார் திவாகர். ஆனால், சரியான நேரத்துக்கு மருத்துவர் இல்லாததால், தாம்பரம் மருத்துவமனை டல்லடிக்க ஆரம்பித்தது. இந்தச் சிக்கலில் சுமாராகப் போய்க் கொண்டிருந்த அண்ணா நகர் மருத்துவமனையையும் கவனிக்க முடியாமல் தடுமாறினார் திவாகர். கடன் தொல்லை அதிகமாக ஆரம்பித்தது.

இதற்கு மேலும் தாம்பரம் மருத்துவமனையை  சமாளிக்க முடியாத நிலையில் அதை மூடிவிட்டார் திவாகர். இடம் சும்மாதானே இருக்கிறது; ஏதாவது செய்யலாமே என திவாகர் தன் மனைவி ஜனனியிடம் கேட்டார். ஜனனிக்கு, முதலீட்டு ஆலோசகராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனவே, தாம்பரம் மருத்துவமனையைக் கொஞ்சம் மாற்றம் செய்து, முதலீட்டு ஆலோசனை தரும் அலுவலகமாக மாற்றினார்கள். ஜனனி, தனக்கு உதவியாக சில பணியாளர்களையும் நியமித்துக்கொண்டார்.

அனுபவம் இல்லாத துறையில் இறங்கியதால், ஜனனியால் பெரிய அளவில் நிறுவனத்தை நடத்த முடியவில்லை. செலவுகள்தான் அதிகரித்ததே தவிர, வருமானம் இல்லை. இந்த நிலையில், திவாகர் - ஜனனி தம்பதிக்குக் குழந்தை இல்லாத தால், உறவினர் ஒருவரின் பெண் குழந்தை ஒன்றினைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள். குழந்தையின் எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும் என்ற கவலை திவாகருக்கும், ஜனனிக்கும் இருந்தது. அப்போதுதான் அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். மருத்துவமனைக் கிளைகள் ஆரம்பிக்க வாங்கிய கடன் சுமையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்பது அவர்களின் முதல் கோரிக்கையாக இருந்தது.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 16

முதலில் திவாகர் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டினேன். ஆள் பலம் இல்லாத நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு கிளைகளைத் தொடங்கியது தவறு. தாம்பரம் கிளையில் மருத்துவர்கள், பணியிலிருந்து விலகியபிறகு, உடனடியாக தீவிர முயற்சி எடுத்து வேறு மருத்துவர்களை நியமித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இரண்டு மருத்துவமனைகளையும் அவரே  கவனித்துக்கொள்ள நினைத்தது இன்னொரு தவறு. மருத்துவமனையை மூடிவிட்டபிறகு, அனுபவமே இல்லாத ஒரு துறையில் தன் மனைவியை ஈடுபடுத்தியது மூன்றாவது தவறு என அவர் செய்த தவறுகளை எல்லாம் நாசுக்காக சுட்டிக் காட்டினேன். ‘அடடா,   இப்படி எல்லாம் செய்திருக்கக்கூடாதே!’ என்று சட்டெனப் புரிந்துகொண்டார்கள் திவாகரும் ஜனனியும்.

முதலில், அடையாறு மருத்துவமனை மூலம் வரும் வருமானத்தின் ஒருபகுதியை ஒதுக்கி, தாம்பரம் மருத்துவமனையால் ஏற்பட்ட கடனை அடைத்துவிடச் சொன்னேன். அடுத்ததாக, அண்ணாநகர் மருத்துவமனைக்கான கடன் ரூ.30 லட்சத்தை அடைத்தாக வேண்டும். அந்த மருத்துவமனையின் வருமானம் முழுவதையும் கடனை அடைக்கப் பயன்படுத்துமாறு சொன்னேன்.  வருமானத்தை அதிகப் படுத்தக்கூடிய வழிகளையும் சொன்னேன். கடனை அடைக்கும் பொறுப்பை, அண்ணாநகர் மருத்துவனையைக் கவனித்துக்கொள்பவர்களிடம் ஒப்படைக்குமாறு சொன்னேன்.

குழந்தையைப் பார்த்துக்கொண்டது போக மீதமுள்ள நேரங்களில் மருத்துவமனை நிர்வாகச் செயல்பாடுகளில் ஜனனியை ஈடுபடச் சொன்னேன். நிர்வாக அனுபவங்களை பெற்றுக் கொள்வது எதிர்காலத்துக்குக் கைகொடுக்கும் என நம்பிக்கையூட்டினேன்.

அடுத்த இரண்டே ஆண்டுகளில் மொத்தக் கடனையும் கட்டி முடித்துவிட்டு, எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்ய ஆரம்பித்தார் திவாகர். அடுத்த மூன்று வருடங்களில் திவாகரும், ஜனனியும் என்னைச் சந்தித்தபோது, ரூ.18 லட்சம் வரை சேர்த்து விட்டதாகப் பெருமையுடன் தெரிவித்தார்கள்.

அகலக்கால் வைப்பது எப்போதுமே ஆபத்தையே தரும் என்பதை அனைவருமே புரிந்து செயல்பட்டால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஆசைப்படுவது அடுத்த கட்டத்துக்கான வளர்ச்சிக்கு வித்திடும் என்பது நிஜம்தான். ஆனால், சரியான திட்டமிடல் இல்லாமல், நம் செயல்திட்டங்களின் நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து பார்க்காமல், அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்வது பெருநஷ்டத்தையே தரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism