Published:Updated:

கமாடிட்டி பிசினஸின் கிங் குமார் மங்கலம் பிர்லா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 கமாடிட்டி பிசினஸின் கிங் குமார் மங்கலம் பிர்லா
கமாடிட்டி பிசினஸின் கிங் குமார் மங்கலம் பிர்லா

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

ளம் வயதிலேயே மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் குமார் மங்கலம் பிர்லா, குடும்ப பிசினஸுக்குள் நுழைந்தார். தனது 28-வது வயதில், பெரிய அளவில் பிசினஸ் குறித்த அனுபவங்கள் ஏதும் இல்லாமல் பிசினஸில் காலடி வைத்தவர், அடுத்த 20 வருடங்களில் பிர்லாவின் சந்தை மதிப்பு, வருவாய், மற்றும் லாபம் என அனைத்திலும் சாதனை படைப்பார் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த அதிசயம் நிகழ்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.  

 கமாடிட்டி பிசினஸின் கிங் குமார் மங்கலம் பிர்லா

தந்தையை எதிர்க்கும் தைரியமில்லை

குமார் மங்கலம் கொல்கத்தாவில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர். பிறக்கும்போதே பிசினஸ் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், குடும்ப பிசினஸில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படிப்பையும் முடித்தார். மேலும், சார்ட்டட் அக்கவுன்டன்ட் பட்டமும் முடித்திருக்கிறார்.

அவரது அப்பா, ஆதித்யா பிர்லாவின் வற்புறுத்தலால் அவர் சிஏ படித்தார். மற்றபடி அதைப் படிப்பதில் அவருக்குத் துளியும்  விருப்பமில்லை. ஆனாலும் தந்தையை எதிர்த்துப் பேசுவதற்கு அவருக்கு விருப்பமில்லை என்பதால், அவர் சொன்னபடி சிஏ படித்து முடித்தார். 

நான்கு ஆண்டுகள் சார்ட்டட் அக்கவுன்டன்ட் படிப்பைப் படித்து முடித்து, டாப் வெற்றியாளர் களில் ஒருவராகவும் தேர்ச்சி பெற்றார். ஆனால், அவரது வாழ்க்கையில் அந்த நான்கு ஆண்டுகளில் அவர் பட்ட வலியும், சந்தித்த சவால்களும்தான் அவருக்கு மறக்க முடியாதவையாக மாறின. அந்த நான்கு வருடங்களில் அவர் கற்ற வாழ்க்கைப் பாடங்கள்தான் பின்நாள்களில் பெரும்பாலான நெருக்கடி நேரங்களில் அவருக்கு உதவியாக இருந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார். அதற்காக தன் தந்தைக்கு நன்றி சொல்ல முடியவில்லை என்கிற வருத்தம், குமார் மங்கலம் பிர்லாவுக்கு இப்போதும் உண்டு.

28 வயதில் நிறுவனத் தலைவர்

ஆதித்யா பிர்லா இறந்தபோது குமார் மங்கலம் பிர்லாவுக்கு வயது 28. ஆதித்யா பிர்லாவுக்கு ஒரு மகன், ஒரு மகள். படித்து முடித்து ‘அப்பாடா’ என ஹாயாக இருந்தவருக்கு, திடீரென அவர் தந்தை  இறந்ததால் வேறு வழியில்லாமல் பிசினஸுக்குத் தலைமை ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மிகுந்த பயத்துடன்தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அவர். அதற்குக் காரணமும் இருந்தது. அவர் தலைமையேற்றப்போது பிர்லா நிறுவனத்தில்  வேலை பார்த்தவர்களின் சராசரி வயது 54. ஆனால், 28 வயதான இவருக்கும், முந்தைய தலைமுறையினரான ஊழியர்களுக்கும் இடையே இருந்த தலைமுறை இடைவெளி என்பது பிசினஸில் மிகப் பெரிய சவால். மேலும், புதிதாக ஒன்றைத் தொடங்கி அதனை வளர்த்தெடுப்பதை விட, ஏற்கெனவே இருக்கும் ஒரு பிசினஸை எடுத்து, அதில் மாற்றங்களைச் செய்து வளர்ப்பது என்பதும் கடினமான சவால்தான்.

குடும்ப பிசினஸை விட்டுவிட்டு தன்னிடம் இருக்கும் திறமையை வைத்து வேறு எதாவது செய்யலாம் என்றால்கூட அவருக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் படித்தப் படிப்புகள் கற்றுக்கொடுத்தவைதான். அவருக்கு வேறு வழியே இல்லை. எனவே, மொத்தக் கவலையையும், தயக்கத்தையும் மனதுக் குள் வைத்துக்கொண்டு துணிந்து பிசினஸில் இறங்கினார். எப்படி இது சாத்தியமானது?

சிற்றரசு சாம்ராஜ்யமானது

குமார் மங்கலம் செய்த மாற்றங்களாலும், அவர் எடுத்த முயற்சிகளாலும் சிற்றரசு போல இருந்த ஆதித்யா பிர்லா குழுமம், மிகப் பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்தது. அப்பா விட்டுச் செல்லும்போது இரண்டு பில்லியன் டாலராக இருந்த பிர்லா குழுமத் தொழில் மதிப்பை, இன்று 41 பில்லியன் டாலராக வளர்த்தெடுத்திருக்கிறார். கடந்த 22 ஆண்டுகளில் 20 மடங்கு வளர்ச்சி இது.

பிர்லா குழுமத்தைத் தொடங்கிய குமார் மங்கலத்தின் தந்தை ஆதித்யா பிர்லா, அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் மட்டுமே தொழில் செய்து வந்தார். ஆனால், குமார் மங்கலம் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு இந்நிறுவனம் உலகின் ஆறு கண்டங்களில் 36 நாடுகளில் பிசினஸ் செய்கிறது. நிறுவனத்தின் 50 சதவிகித வருவாய், இந்தியாவுக்கு வெளியில் இருந்துதான் வருகிறது. அவர் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து இதுவரை சர்வதேச மற்றும் இந்திய அளவில் மொத்தம் 36 நிறுவனங்களை பிர்லா குழுமத்துடன் இணைத்துள்ளார்.  பன்னாட்டு நிறுவனங்களிலேயே அதிக நிறுவனங்களை இணைத்த பெருமை, பிர்லா நிறுவனத்துக்கே சேரும்.

அலுமினியம், காப்பர், சிமென்ட், டெக்ஸ்டைல்ஸ், பிளாக் கார்பன், இன்சுலேட்டர், இயற்கை வளங்கள், ஆற்றல், விவசாயம், டெலிகாம், ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ரீடெய்ல் மற்றும் வர்த்தகம் என அனைத்திலும் இறங்கிக் கலக்கினார். ஒவ்வொரு பிசினஸிலும் சந்தையில் தவிர்க்க முடியாத ஒரு நிறுவனமாக பிர்லா குழும நிறுவனங்களும் அவற்றின் தயாரிப்புகளும் இருக்கின்றன. நல்ல சந்தை வாய்ப்புகள் கொண்ட நிறுவனங்களை இணைப்பதும், கூடுதல் கவனமும் சுதந்திரமான நிர்வாகமும் தேவைப்படும் நிறுவனங்களைப் பிரிப்பதும் அவரது பிசினஸ் உத்திகளில் ஒன்றாக இருந்ததே இதற்குக் காரணம். இத்தனை வெற்றிகள் கண்டிருந்தாலும், அவருக்கும் தோல்விகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றையெல்லாம் தோல்விகளாகப் பார்க்காமல் சவால்களாகவே பார்த்தார்.

சந்தித்த சவால்கள்


ஹிண்டால்கோ நிறுவனத்துக்கான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதித்யா பிர்லா நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை செய்தது. டெலிகாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்லப்பட்டு, உச்ச நீதிமன்றத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டு, ஐடியா செல்லுலாரின் மூன்று லைசென்ஸ்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், அடுத்தடுத்த அலைக்கற்றை ஏலங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வெற்றி அடைந்தார் குமார் மங்கலம் பிர்லா. வங்கி தொடங்குவதற்காக விண்ணப்பித் தவருக்கு இன்னும் அதற்கான அனுமதி தரப்படவில்லை. ஆனாலும், ‘பேமெண்ட் பேங்க்’ என்னும் வங்கியைத் தொடங்கு வதற்கான முயற்சிகளை விடாமல் செய்து வருகிறார்.
   
2001ல் எல் அண்ட் டி நிறுவனத்தின் 10.5 சதவிகிதப் பங்குகளை பிர்லா குழுமம் வாங்கியது. அம்பானி குழுமம் இந்தப் பங்குகளை வாங்குவதற்கு பெரும் முயற்சி செய்து, ஊழியர்கள் மற்றும் நிறுவனப் பங்குதாரர்களின் எதிர்ப்பினால் இறுதியில் தோற்றுப்போனது. மேலும், எல் அண்ட் டி-யின் சிமென்ட் பிசினஸைப் பிடிப்பதிலும் குமார் மங்கலம் உறுதியாக இருந்தார். இதனை எதிர்த்து எல் அண்ட் டி-யின் சிஇஓ ஏ.எம்.நாயக், எவ்வளவோ உறுதியாக இருந்தும் அவரால் அதனைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. 2003ல் எல் அண்ட் டி-யின் சிமென்ட் பிசினஸ், பிர்லா கைக்கு வந்தது. பதிலுக்கு பிர்லா குழுமத்தின் பங்குகளை எல் அண்ட் டிக்கு விற்றார். 

 கமாடிட்டி பிசினஸின் கிங் குமார் மங்கலம் பிர்லா

நோவேலிஸ் (Novelis) நிறுவனத்தை வாங்கிய சமயத்தில்தான் 2008-ல் லேமன் பிரதர்ஸ் திவால் நெருக்கடி ஏற்பட்டு, உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. நோவேலிஸ் நிறுவனத்தினால் பெருத்த நஷ்டத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. பெரும்பாலானோர், அதன் பிசினஸ் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது சந்தேகம்தான் என்றனர். ஆனால்,  அடுத்த சில வருடங்களிலேயே நோவேலிஸ் மீண்டு வந்தது.

டாடா, பிர்லா மோதல்

குமார் மங்கலம் பிர்லா சந்தித்த இன்னொரு பெரிய மோதல் எனில், டாடா, பிர்லா மோதல்தான். டாடா மற்றும் ஏடி அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து தொலைபேசி சேவை வழங்கும் பிசினஸில் இறங்கியது பிர்லா நிறுவனம். பின்னர் ரத்தன் டாடா தனியாக டாடா டெலிசர்வீசஸ் என்ற பிசினஸ் தொடங்கியதால், இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. ஜாயின்ட் வென்சர் அக்ரிமென்டில் இருக்கும் டாடா, தனியாக பிசினஸ் செய்வது கூட்டு பிசினஸைப் பாதிக்கிறது என்று  அரசுக்குப் புகார் கடிதம் எழுதினார் குமார். அதேசமயம், ஏடி அண்ட் டி-யும் பங்குகளை டாடா-பிர்லாவுக்கு விற்றுவிட்டு வெளியேறியது.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, 2006-ல் டாடா நிறுவனம் பிர்லா நிறுவனத்துடனான தனது பங்குகளை முழுமையாக பிர்லாவிடம் விற்றுவிட்டு வெளியேறியது. குமார் மங்கலம் பிர்லாவும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து  விலகினார். இந்தப் பிரச்னை ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தது. இன்று டாடா டெலிசர்வீசஸ்  நிறுவனம், வருமானம் ஈட்ட திணறுகிறது. ஆனால், ஐடியா செல்லுலார் ரூ.58,700 கோடி சந்தை மதிப்புடன், இந்தியாவின் டாப் 3 டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வெற்றித் தத்துவம்

பிசினஸில் அவருடைய வெற்றித் தத்துவம் இதுதான். ‘வருமானம் ஈட்டக்கூடிய தொழிலைச் செய், ஈட்டிய வருமானத்தைச் சமூகத்துக்கு உதவக்கூடிய தளங்களில் மீண்டும் முதலீடு செய்’ என்பதுதான். அதில் முக்கியமானது, கல்வியும், மருத்துவமும். கல்வியிலும் மருத்துவத்திலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளார் குமார். இதன் மூலம் கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். எதிர்கால வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகளைக் கண்டுபிடிப்பதற்காகவே மும்பையில் ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை நடத்தி வருகிறார்.

இன்று இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய பிசினஸ் குழுமமாக ஆதித்யா பிர்லா குழுமம் இருக்கிறது. 42 நாடுகளைச் சேர்ந்த 1.2 லட்சம் பேர் இதில் பணிபுரிகிறார்கள். ஆனால், இந்த உச்சத்தையும் உடைத்து வளரும் முனைப்போடு செயல்படும் குமார் மங்கலம் பிர்லா, தொழில்முனை வோர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த உதாரணம்.

வெற்றி மந்திரம்

“தொடர் முயற்சி இருந்தால் யாராலும் எதையும் சாதிக்க முடியும். வாழ்க்கை ஒரு சீட்டாட்டம் மாதிரி. ஆட்டத்தில் நம் கைக்கு எந்த சீட்டும் வரலாம்; அதை வைத்துக்கொண்டுதான் நாம் வாழ்க்கையோடு விளையாடியாக வேண்டும். எதற்காகவும் வருந்துவதில் பயனே இல்லை.

ஆரோக்கியமான முயற்சிகளும் உழைப்பும் நல்ல பயண அனுபவத்தை, வாழ்க்கையில் நிச்சயமாகப் பெற்றுத்தரும். வெற்றி, தோல்விகள் அந்தப் பயணத்தில் நாம் பெறும் அனுபவங்கள் மட்டுமே. அவை அடிக்கடி வந்து போகக்கூடியவையே தவிர, நிலையானவை அல்ல” என்கிறார் குமார் மங்கலம் பிர்லா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு