Published:Updated:

பண மதிப்பிழப்பு... வங்கிகளுக்கு லாபமா, நஷ்டமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பண மதிப்பிழப்பு... வங்கிகளுக்கு லாபமா, நஷ்டமா?
பண மதிப்பிழப்பு... வங்கிகளுக்கு லாபமா, நஷ்டமா?

பா.பிரவீன்குமார்

பிரீமியம் ஸ்டோரி

ண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு, நான்கு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், இப்போதுதான் நிலைமை சீரடைந்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள், மக்கள் மத்தியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துள்ளன. 

பண மதிப்பிழப்பு... வங்கிகளுக்கு லாபமா, நஷ்டமா?

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், தொடக்கத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது வங்கிகள்தான். வங்கி ஊழியர்கள் மூன்று மாதங்கள் ஓய்வின்றி உழைத்ததன் காரணமாக, வங்கிகள் இப்போது லாபம் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. என்றாலும் வங்கிகளின் வாராக் கடன் (என்.பி.ஏ.)சமீபத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து, சிட்டி யூனியன் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி என்.காமகோடி நமக்கு  சிறப்புப் பேட்டி அளித்தார்.

வங்கிகளுக்கு என்.பி.ஏ அதிகரிக்கக் காரணம் என்ன?

‘‘1999-2000-ம் ஆண்டுகளில் இந்தியாவில், வங்கித் துறையில் பல முன்னேற்றங்கள் வர ஆரம்பித்தன. புதிய தலைமுறை வங்கிகளெல்லாம் பெரிய அளவில் வங்கிச் சேவையில் நுழைந்தன. வங்கி விதி முறைகளிலும், என்.பி.ஏ தொடர்பான விதிமுறைகளிலும் மாறுதல்கள் வர ஆரம்பித்தன. அப்போது இந்திய வங்கித் துறையில், வாராக் கடன் கிட்டத்தட்ட 15% வரை இருந்தது. 2001-2002-ல் பொருளாதாரத்தில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. 2002-03-ல் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப ஆரம்பித்தது. பணவீக்கமும் குறைய ஆரம்பித்தது. வங்கிகள் வட்டியை நிர்ணயிக்கும் அளவீட்டில் மாறுதல் வந்தது.

பொதுவாக, வங்கிக்கு வரும் டெபாசிட் முழுவதையும் வங்கி வைத்துக்கொள்ள முடியாது. அதில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அரசு வைப்பு நிதியில் பாண்டாக வைக்க வேண்டும். இப்படி வங்கிகள் வைத்த பாண்டின் மதிப்பு அதிகரிக்கவே, அவற்றை விற்று வங்கிகள் தங்கள் வாராக் கடன் இழப்பை ஈடு செய்தன. இதன் காரணமாக 14% என்ற அளவில் இருந்த என்.பி.ஏ, 2-3 சதவிகிதமாகக் குறைந்தது. இதனால், 2008 வரையிலான கால கட்டத்தை வங்கிகளின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

இந்தக் காலகட்டத்தில் வங்கிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில், அதாவது சாலை வசதி, மின் உற்பத்தி போன்ற துறைகளில் அதிக முதலீடு செய்தன. இதில் நல்ல வருவாயும் கிடைத்தது.  2008-ல் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இதன் பாதிப்பு அப்போது பெரிதாக தெரியவில்லை. 2013-14-ல்தான் தெரிய ஆரம்பித்தன. பணவீக்கமும், பாண்டு யீல்டும் (Yield) அதிகரித்தது. இன்றைக்கு வாராக் கடன் பிரச்னையில், கிங்ஃபிஷர் நிறுவனத்தைப் பற்றி மட்டும் பேசுகிறோம். உண்மையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், ஸ்டீல் எனப் பரவலாக எல்லாத் துறைகளிலும் தேக்கநிலை ஏற்பட்டு, வங்கியின் என்.பி.ஏ 12-14% வரை அதிகரித்துவிட்டது.’’

அப்படி என்றால், என்.பி.ஏ பிரச்னையினால் எல்லா வங்கிகளும் பாதிப்படைந்திருக்கிறதா?


‘‘உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ய, வங்கிகள் இணைந்து ஓர் அமைப்பை உருவாக்கின. எங்களைப் போன்ற சிறிய வங்கிகள், இந்த முதலீடு  ஏற்றம் தராது என்று கருதியதால், ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்தோம். பொருளாதார மந்தநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக, அந்த வங்கிகள் செய்த முதலீடுகளில் வளர்ச்சி இல்லை. இதனால் வங்கிகளின் வாராக் கடன் 12-14 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. இந்த முதலீடுகளிலிருந்து விலகியிருந்த எங்களுக்கு      என்.பி.ஏ மூன்று சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கிறது.’’

இருப்பினும் உங்களுக்கும் என்.பி.ஏ சற்று அதிகரித்திருக்கிறதே?

‘‘எங்களுடைய கடந்த 10 - 15 ஆண்டு கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2013 வரை நாங்கள் கொடுத்த கடன் தொகையில், 1 முதல் 1.25 சதவிகிதம் வரையிலேயே வாராக் கடன் ஏற்பட்டிருக்கும்.  கடன் கொடுத்தவர்களிடமிருந்து செக்யூரிட்டி வாங்கி இருந்ததால், 70 - 75 சதவிகிதக் கடன் பணத்தை அந்த ஆண்டுக் குள்ளாகவே நாங்கள் திரும்ப வாங்கிவிட்டோம். அதாவது, 100 ரூபாய் கடன் கொடுத்திருந் தால், அதில் 1.25 ரூபாய் வாராக் கடன் ஏற்பட்டது. அதிலும் 75 காசு முதல் ஒரு ரூபாய் வரை ரெக்கவரி செய்துவிட்டதால், இழப்பு என்பது 0.25 முதல் 0.50 காசு என்ற அளவிலேயே இருந்தது. பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக இப்போது அது கொஞ்சம்  அதிகரித்திருக்கிறது.  பழையபடி, 1.25 என்ற நிலையை அடைய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகும்.

ரெக்கவரி விகிதம் குறைந்ததும், தற்போது நிலவும் சூழலும்தான் இதற்குக் காரணம். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, விலை குறைந்துவிட்டது. மார்க்கெட் ரேட்டில் மாறுதல் ஏற்பட்டு, ரெக்கவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பணமாக மாற்றுவதில் தான் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ரெக்கவரி சற்று அதிகமாக இருந்ததுபோல இருந்தது. பொருளாதார நிலை எப்போது சீரடையும் என்று தெரியாமல் பயணித்துக் கொண்டிருந்தபோது, நம்பிக்கை ஒளிபோலச் சில அறிகுறிகள் எங்களுக்குத் தென்பட்டன.  இரண்டாவது காலாண்டில் வங்கியின் ரெக்கவரி விகிதம் அதிகரித்தது. அடுத்த காலாண்டில் இன்னும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று நம்பியிருந்தபோது, பண மதிப்பு இழப்பு அறிவிப்பு வெளியானது. இதனால் என்.பி.ஏ சற்று அதிகரித்துள்ளது.’’

பண மதிப்பிழப்பு... வங்கிகளுக்கு லாபமா, நஷ்டமா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் சந்தித்த பிரச்னைகள் என்னென்ன?

‘‘இன்றைக்கு இன்டர்நெட், மொபைல் பேங்கிங் என்று வந்தபிறகு, வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருவது குறைந்துள்ளது. எங்கள் வங்கியைப் பொறுத்தவரை, கோர் பேங்கிங் என்பது 83-85% வரை வந்துவிட்டது. இனி வங்கிக்குள் வேலை செய்வது முடிந்துவிட்டது. எனவே, இனி மார்க்கெட்டிங்கில்தான் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும் போதுதான் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வந்தது.

இந்த அறிவிப்பு வந்தபின் 45 நாள்களுக்கு வங்கித் துறை பெரிய அளவில் பாதிப்பு களைச் சந்தித்தது. சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பணத்தைக்கூட வாடிக்கை யாளர்களுக்கு வழங்க முடியாத அளவுக்கு, ரூபாய் நோட்டுப் பற்றாக்குறை ஏற்பட்டது. வங்கியில் டெபாசிட்டாகும் பழைய நோட்டுகளையெல்லாம், கணக்குப் பார்த்து அரசு கருவூலத்தில் சேர்ப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் எங்கள் வங்கி இந்தப் பிரச்னையைச் சிறப்பான முறையில், சமூக அக்கறையுடன் கையாண்டு, வாடிக்கையாளர்களிடம் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த 2-3 மாதங்களாக வங்கியின் ஒட்டுமொத்த நேரத்தையும் பண மதிப்பு இழப்பு அறிவிப்புக்குப் பிறகான செயல்பாட்டுக்கு மட்டுமே செலவிட வேண்டியதாகிவிட்டது. இதனால், வங்கியால் வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதேபோல், டெபாசிட்டாகும் பழைய நோட்டுகளை, நாங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு சி.ஆர்.ஆர் என்ற ரிசர்வ் ஃபண்டில் வைக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வந்தது. இப்படி வைக்கப்படும் பணத்துக்கு வட்டி கிடையாது. ஆனால், டெபாசிட் செய்தவருக்கு நாங்கள் வட்டி செலுத்த வேண்டும். இந்த மாதிரியான பிரச்னைகளினால் வங்கிகளுக்கு இது சோதனையான காலகட்டம்தான்.’’

மதிப்பிழந்த பணத்தை வைத்து சிலர் அதிக அளவில் கடனை அடைத்ததாகச் சொல்லப்படுகிறதே!


‘‘பழைய நோட்டுகளை வைத்துக் கடன் அடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தது உண்மைதான். அவை குறிப்பிட்ட இடங்களில்தான் நடந்தன. ஆனால், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ‘அட்வான்ஸ்டு குரோத்’ என்ற வளர்ச்சி நிலை மாறி, வங்கிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதுதான் உண்மையே. எங்கள் வங்கியைப் பொறுத்தவரை, செப்டம்பர் வரையிலான காலாண்டு லாபமாக இருந்தது. என்.பி.ஏ ரெக்கவரியும் நன்றாகவே இருந்தது. பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு, என்.பி.ஏ ரெக்கவரியில் கவனம் செலுத்த முடிய வில்லை. இதனால் ரெக்கவரி விகிதம் குறைந்தது.’’

பண மதிப்பு நீக்கத்தினால் வங்கிகளுக்குப் பாதிப்பு என்று கருதலாமா?


‘‘இந்த நடவடிக்கையால் நாட்டுக்கு நல்லது என்று கருத வேண்டும். வரி கட்டாமல் பணத்தைப் பதுக்கி வைக்கும் மனநிலை மாறி, தானாக முன்வந்து வரி கட்ட வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்திருக்கின்றனர் பெருவாரியான மக்கள். இதனால் டிசம்பர் மாதத்தில் வரி வருவாய் அதிகரித்திருக்கிறது.’’

இந்த நிதியாண்டு, வங்கிகளுக்கு எப்படி இருக்கிறது?


‘‘முடிந்த நிதி ஆண்டில் வங்கிகளின் செயல்பாட்டை ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே கணக்கிடுகிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, மூன்று மாதங்களை அரசுக்காக ஒதுக்கித் தந்துவிட்டோம்.  இந்த மூன்று மாதங்களில் நாங்கள் இழந்ததை, வரும் ஆண்டுகளில் நிச்சயம் பெற்றுவிடுவோம் என்று முழுமையாக நம்புகிறோம்.’’

படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு