Published:Updated:

நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!

நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!
பிரீமியம் ஸ்டோரி
நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

Published:Updated:
நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!
பிரீமியம் ஸ்டோரி
நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!

முன்னூறு ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் இன்று மிகப் பெரிய கோடீஸ்வரராக வளர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனத்துக்குச் சொந்தக்காரராகவும் ஆகியிருக்கிறார். அவர்தான் நரேஷ் கோயல். அவர் கடந்துவந்த பாதை சவால்கள் நிறைந்தது.

நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!

குடும்பத்தில் வறுமை, தெருவிளக்கில் படிப்பு

பஞ்சாப் மாநிலம், சங்ரூர் என்ற நகரில் நகை வியாபாரம் செய்துவந்த குடும்பத்தில் பிறந்தவர் நரேஷ். நகை வியாபாரம் என்றாலும் எல்லோரும் ஒன்றுபோலவே பணம் பார்த்துவிட முடியாதல்லவா? குடும்ப பிசினஸ் டல்லடித்தது. நரேஷுக்கு அப்போது 12 வயது. குடும்பத்தில் பெரும் பண நெருக்கடி. பிசினஸ் திவாலாகி, அவர்களுக்கிருந்த அனைத்துச் சொத்துகளையும் ஏலத்தில்விட்டு கடன்களை அடைத்தனர். கடைசியில் சாப்பிடவும் உணவில்லாமல், தங்கவும் இடமில்லாமல் வறுமை வாட்டி எடுத்தது. படிக்கப் பணமில்லாமல் நடுத் தெருவில் நிற்கவேண்டிய நிலை உருவானது நரேஷுக்கு. இந்தக் கொடுமை போதாதென்று  தந்தையையும் பறிகொடுத்தார். பின்னர் தன் மாமாவின் வீட்டில் வளர்ந்து வந்தார். 

மாமாவின் வீட்டில் மின்சாரம் இல்லாததால், தெருவிளக்கின் கீழ் உட்கார்ந்துதான் படிப்பார். பள்ளிக்குப் போவதற்கு சைக்கிள் வாங்கக் காசில்லாததால், மைல் கணக்கில் நடந்துதான் பள்ளிக்கூடத்துக்குப் போனார். அவருக்கான படிப்புச் செலவுக்கு அவரே ஏதோ ஒரு வேலையைச் செய்து தேவையான பணத்தைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. கஷ்டப்பட்டாவது  சார்ட்டட் அக்கவுன்டன்ட் படிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், பணவசதி இல்லாததால், அவரால் பி.காம் மட்டுமே படிக்க முடிந்தது.

 ரூ.300 சம்பளமும், அனுபவமும் தந்த வேலை

1967-ல் பட்டப்படிப்பை முடித்தபிறகு மாமாவின் டிராவல் ஏஜென்சி ஒன்றில், காசாளராக வேலைக்குச் சேர்ந்தார். மாதம் ரூ.300 சம்பளம். அவருடைய அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் அவருக்கு ஈராக் ஏர்வேஸில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையைப் பெற்றுத் தந்தது.

காலம் முழுக்க வேலையைச் செய்பவர்கள் மத்தியில் நரேஷ் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தார். சம்பளத்துக்கு வேலை செய்வதற்கும், பிசினஸ் செய்து பலமடங்கு லாபம் பார்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் இந்தப் பொருளாதார உலகில் வெற்றியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. அந்த இடை வெளியை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர் நரேஷ் கோயல்.

ஈராக் ஏர்வேஸ் வேலைக்குப் பிறகு 1971-லிருந்து 1974 வரை அலியா, ராயல் ஜோர்டானியன் ஏர்லைன்ஸில் மண்டல மேலாளராக இருந்தார். அந்த நாட்களில் அவர் பல நாடுகளுக்கும் பயணித்து, விமானச் சேவை குறித்தத் தொழிலைப்  பற்றி நன்கு தெரிந்துகொண்டார். மத்திய கிழக்கு ஏர்லைன்ஸின் இந்திய அலுவலகத்திலும் வேலை பார்த்தார். கட்டணம் நிர்ணயித்தல், முன்பதிவு மற்றும் விற்பனை போன்றவற்றில் அனுபவத்தை வளர்த்துக்கொண்டார். அவர் பெற்ற அனுபவம் அவருக்கு பிசினஸ் தொடங்கும் தைரியத்தைக் கொடுத்தது. 

 அம்மாவிடம் வாங்கிய கடன்

1974-ல், தனது அம்மாவிடமிருந்து கொஞ்சம் பணத்தைக் கடனாக வாங்கி, ‘ஜெட் ஏர்’ என்ற ட்ராவல் ஏஜென்சியைத் தொடங்கினார். ஏர் பிரான்ஸ், ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் மற்றும் காத்தே பசிபிக் போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் வேலையைச் செய்துகொடுத்தது ஜெட் ஏர்.

1991-க்குப் பிறகு இந்தியாவில் ஏவியேஷன் துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. அந்த வாய்ப்பை நரேஷ் தவறவிடவில்லை. அவருடைய ஏஜென்சி, ஜெட் ஏர்வேஸ் என்ற ஏர்லைன் நிறுவனமாகத் தன்னை மாற்றிக்கொண்டது. ஜெட் ஏர்வேஸ் தனது முதல் பயணத்தை, 1993-ம் ஆண்டு மே 5-ல் தொடங்கியது. நான்கு விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துதான் இந்த பிசினஸைத் தொடங்கினார்.

ஆரம்பக் கட்டத்தில் சில ஆண்டுகள் மிகக் கடினமாகவே இருந்தன. நரேஷ் உட்பட எல்லோருமே அடிமட்டத்துக்கு இறங்கி வேலை பார்க்கவேண்டிய நிலைதான் இருந்தது. ஆனால், முதல் வருடமே ஜெட் ஏர்வேஸ் 7.3 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்தது. பின்னர் படிப்படியாக வாய்ப்புகளைக் கண்டுபிடித்து ஜெட் ஏர்வேஸின் வளர்ச்சியை அதிகப்படுத்தினார். அவருடைய நிறுவனத்தில் மத்திய கிழக்கு மற்றும் குவைத், வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்தன. 

வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங் களுடனான பார்ட்னர்ஷிப் தானாக நடந்ததல்ல. இந்தியாவிலிருந்து அந்த நாடுகளில் வேலை செய்ய பெரும்பாலானோர் சென்றிருப்பதால், அவற்றை இணைப்பதன் மூலம் கணிசமாக பிசினஸை வளர்க்க முடியும் என்று நினைத்தார் நரேஷ். நினைத்ததைச் செய்துபார்க்கவும் துணிந்தார்.

மேலும், அந்த சமயம் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் சென்றுகொண்டிருந்த காலம். ஜெட் ஏர்வேஸ் மூலம் சிறு நகரங்களையும் இணைக்கத் திட்டமிட்டார் நரேஷ். சிறிய நகரங்களை இணைப்பது, விமானச் சேவைப் பட்டியலை பிரச்னைகள் இல்லாமல் தொகுப்பது மற்றும் விமானச் சேவையின் புரமோஷன் ஆகியவற்றையும் பக்காவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தினார். 

நரேஷ் கோயல்... சவால்களை வென்றவர்!

சஹாராவும், எடியாத்தும்

2004 இறுதியில், இந்தியாவிலிருந்து செல்லும் சர்வதேச விமானப் போக்குவரத்து வழிகள் தாராளமயமாக்கப்பட்ட பிறகுதான் ஜெட் ஏர்வேஸ், தனது சர்வதேச விமான சேவையைத் தொடங்கியது. மும்பை முதல் லண்டன் வரை தனது முதல் சர்வதேச விமானச் சேவையை இயக்கியது. விரைவிலேயே பொதுப் பங்கும் வெளியிட்டது. அது ஜெட் ஏர்வேஸின் வளர்ச்சியில் மகத்தான மைல்கல்லாக மாறியது. பொதுப்பங்கு வெளியீடு மூலம் திரட்டிய நிதியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, நிறுவனத்தை வளர்த்தார். 

2007-ல் ஏர் சஹாராவை ரூ.2,225 கோடிக்கு வாங்கினார். அதனை ஜெட் லைட் என்ற பெயரில் புத்துயிர்ப்புடன் மீண்டும் அறிமுகப்படுத்தினார். 2010-ல் ஜெட் ஏர்வேஸ் 22.6 சதவிகித சந்தை மதிப்புடன், இந்தியாவின் மிகப் பெரிய ஏர்லைன் என்ற பெருமையை அடைந்தது. பின்னர் மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மூலம், 2013-ல் எடியாத் ஏர்வேஸ் உடன் பார்ட்னராகி, தனது பிசினஸை மேலும் விரிவுபடுத்தியது. ஜெட் ஏர்வேஸின் 24 சதவிகிதப் பங்குகள் எடியாத் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன.

அப்போது ஜெட் ஏர்வேஸுக்குத் தேவையாக இருந்த நிதி, இந்த டீலிங் மூலம் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஜெட் ஏர்வேஸின் மதிப்பு, எடியாத் நிறுவனத்தின் விமானச் சேவை நிபுணத்துவத்தினால் மிகவும் உயர்ந்தது.

மேலும், செயல்பாட்டு ஒருங்கிணைப்புகள், செலவுக் குறைப்பு நடவடிக்கைகள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றை மேலும் முழுத்திறனுடன் செயல்படுத்த, இந்த இணைப்பு பெருமளவில் உதவியாக இருந்தது. 2013-ல் 55 விமானங்களுடன், 10 மில்லியன் மக்களுக்குச் சேவை வழங்கியது. இதன்மூலம் இந்தியாவின் நடுத்தர மக்களின் விமானச் சேவை நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் மாறியது.

 சவால்களும், சாதனையும்

ஜெட் ஏர்வேஸின் வளர்ச்சிப் பயணம் அப்படி ஒன்றும் ரோஜாக்கள் நிரம்பிய பாதையாக இருந்து விடவில்லை. பல சவால்களை, சிக்கல்களைக் கடந்துதான் இந்த உயரத்தை அடைந்தது. 2006-ல் ஜெட் ஏர்வேஸின் சந்தை மதிப்பு 46 சதவிகிதமாக இருந்தது. அதற்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தனியார் விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருந்ததும், வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்ததும்தான் காரணம்.

ஆனால், அதன்பிறகு அதன் சந்தை மதிப்புக் குறைய ஆரம்பித்தது. ஜெட் ஏர்வேஸுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்கள் மெள்ள சந்தையைப் பிடிக்க ஆரம்பித்தன. ஜெட் ஏர்வேஸுக்குப் போட்டி அதிகமானது.  2014-க்குப் பிறகு ஜெட் ஏர்வேஸ் மிகவும் பாதிக்கப்பட்டது. 2013-14-ல் ரூ.3,667 கோடி நிகர நஷ்டம் அடைந்தது. மேலும், அவர்களுடைய குறைந்த கட்டணம் மற்றும் முழுச் சேவை விமானம் என்ற பிசினஸ் மாடலில் வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்தனர். கட்டணத்தில் ஒரு தெளிவு இல்லாமல் இருந்தது.

மேலும், இருக்கைகள் ஒரே மாதிரியானவையாக இல்லாமல் அவற்றிலேயே 8-16 பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் இருந்தன. அதை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எந்த விமானத்தை எதற்காகப் பயன்படுத்துவது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது.

இவற்றையெல்லாம் சரிசெய்யவே, இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்தப் பிரச்னைகளை யெல்லாம் சரிசெய்த பின்னரே லாபம் ஈட்டும் நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் மாறியது. 2015-ல் ரூ.221.70 கோடி நிகர லாபம் அடைந்தது. எனவே, பிசினஸ் வாரியாக, விமானங்களைத் தரம் பிரித்தார் நரேஷ். ஜெட் லைட் மற்றும் ஜெட் கனெக்ட் ஆகிய இரண்டு பட்ஜெட் விமானத்தையும் இணைத்து, கட்டணத்தைக் குறைத்தார்.

முழுச் சேவை விமானங்கள் பெரு நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டது. உள்நாட்டு விமானச் சேவைகளில் 12 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும் 156 எகானமி கிளாஸ் இருக்கைகளும் இருக்கும்வகையில் உருவாக்கப்பட்டது. அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்கு ஜெட் பிரிவிலேஜ் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் நரேஷ்.

பயணிகள் விமானச் சேவையில், 21 சதவிகித சந்தை பங்களிப்புடன் இரண்டாவது முன்னணி விமானச் சேவை நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் இருக்கிறது.

ஜீரோவிலிருந்து ஆரம்பித்து இன்று ஹீரோவாக இருப்பவர்களில் மிகச் சிறந்த முன்னுதாரணம்  நரேஷ் கோயல்.

சக்சஸ் மந்திரம்!

தற்போது 300 விமானங்கள், 17 நாடுகளுக்கு விமானச் சேவை என்பது ஆச்சர்யமான விஷயம். உள் நாட்டு மற்றும் சர்வதேச அளவில் தினமும் 68 இடங் களுக்கு விமானச் சேவையை இயக்கி வருகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். 2016-ல் இந்த நிறுவனம் அடைந்த லாபம், ஏர்லைன் பிசினஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக அடைந்த அதிக லாபம் ஆகும்.  “சந்தையின் எந்த மாற்றத்துக்கும் நான் தயார், என் வழியில் நான் பார்க்கும் வாய்ப்புகளை அள்ளி எடுத்துக் கொண்டு முன்னேறி போய்க்கொண்டே இருப்பேன்” என்பதே நரேஷ் கோயலின் சக்சஸ் மந்திரம்.