Published:Updated:

அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!

அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!

நாணயம் லைப்ரரி!சித்தார்த்தன் சுந்தரம்

அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!

நாணயம் லைப்ரரி!சித்தார்த்தன் சுந்தரம்

Published:Updated:
அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!
அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!

புத்தகத்தின் பெயர்    : தி அன்யூஸ்வல் பில்லியனர்ஸ் (The Unusual Billionaires)

ஆசிரியர்        : செளரப் முகர்ஜி

பதிப்பாளர்        : பெங்குவின்

ந்தப் புத்தகத்தின் பெயரைப் பார்த்தால், வெற்றிபெற்ற தனிப்பட்ட பில்லியனர்களைப் பற்றியது போலத் தோன்றலாம். ஆனால், இது வெற்றிபெற்ற எட்டு நிறுவனங்களின் வளர்ச்சி பற்றிய புத்தகம். எட்டு நிறுவனங்களில், ஐடிசி தவிர்த்து ஏழு நிறுவனங்களின் தோற்றம், அதன் நிறுவனர்கள், அதனுடைய விற்பனைப் பொருள்கள், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் உத்திகள் போன்றவை குறித்து மிக விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து எழுதியிருப்பதை நிச்சயம் பாராட்டலாம்.  

ஏசியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், மாரிக்கோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (Page Industries), ஆஸ்ட்ரால் ப்ளாய் (Astral Ploy) போன்ற இந்த ஏழு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் நிச்சயம் நல்ல லாபம் கண்டிருப்பார்கள். ஐடிசி நிறுவனமும் இந்த பில்லியனர் குழுமத்தில் ஒன்றுதான் என்றாலும் இந்த நிறுவனம் குறித்த விரிவான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் தரப்படவில்லை. அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லையோ என்னவோ! 

இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி பெறுவதற்கான காரணங்களை ஜான் கே (John Kay) என்கிற பொருளாதார நிபுணர் வகுத்த `IBAS’ (Innovation, Brand, Architecture, Strategy) சட்டகத்தின் (framework) அடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் செளரப் முகர்ஜி. இந்த  அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானது என்னவெனில், தங்கள் தொழில் சம்பந்தப்படாத பொருள்கள் அல்லது சேவைகளுக்குத் தங்களது தொழிலை விரிவுபடுத்தாததே. நுகர்வோர்களோடு இணக்கமாக இருப்பதும், விநியோகஸ்தர்களுடன் சுமுகமாக இருப்பதும் இந்த நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியை நல்ல வலுவாக வைத்திருக்க உதவுகின்றன.

இந்தப் புத்தகத்தில் ஆய்வு செய்யப்பட்டு இருக்கும் சில நிறுவனங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இனி...

   ஏசியன் பெயின்ட்ஸ்
(Asian Paints)


உலகப் போரின்போது பெயின்ட் இறக்குமதிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த 26 வயது நிரம்பிய தொழில்முனைவோர் சம்பக்லால் சோக்ஸி, தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து 1942-ம் ஆண்டு ஆரம்பித்த நிறுவனம்தான் ஏசியன் பெயின்ட்ஸ். 1967-ம் ஆண்டு, இந்தியாவில் பெயின்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில்  இது பெரிய நிறுவனமானது. இன்றைக்கும் இந்த நிறுவனத்தில் இந்தக் குடும்பத்தினரின் பங்கு சுமார் 52% ஆகும்.
 
வாய்ப்புகளைக் கண்டறிவதில் சோக்ஸி ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். தமிழகத்தில் பொங்கலின் போதும், மஹாராஷ்ட்ராவில் போலா விழாவின் போதும், மாடுகளை மக்கள் வணங்குவதையும், அதன் கொம்புகளுக்கு பெயின்ட் அடிப்பதையும் பார்த்த அவர், மிகவும் பளிச்சென்ற வண்ணங்களில் 50, 100 மிலி அளவுக்கு சிறிய பேக்குகளை அறிமுகம் செய்தார். அதோடு, வீடுகளுக்கு வெளியில் கீழே பட்டையாக சிவப்பு, மஞ்சளில் பெயின்ட் அடிப்பது மங்களகரமான ஒன்றாகக் கருதப்படுவதை அறிந்து, அதிலும் அதிரடியாகச் செயல்பட்டுச் சந்தையைக் கைப்பற்றினார்.

அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!மற்ற நிறுவனங்கள் எல்லாம் நகரம் சார்ந்த சந்தைகள், இண்டஸ்ட்ரியல் பெயின்ட் ஆகியவற்றில் கவனம் செலுத்திவந்தபோது இந்த  நிறுவனம் நுகர்வோர் சந்தையிலும், சிறு நகர, கிராமப்புறச் சந்தைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து வெற்றி பெற்றது.

1991-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் ரூ.1 முதலீடு செய்திருந்தால், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதன் மதிப்பு ரூ.299ஆக அதிகரித்திருக்கும். கூட்டு வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால், இதன் ஆண்டு ஆதாயம் (Compounded Annual Return) சுமார் 25%.

ஜாக்கி (Jockey)

அடுத்து, உள்ளாடைகளின் நாயகன் `ஜாக்கி’  (Jockey). இந்த பிராண்டுக்கு கிட்டத்தட்ட 130 வருட பாரம்பர்யம் இருக்கிறது. 1874-ம் ஆண்டு, அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரத்தில் இருக்கும் செயின்ட் ஜோசப் என்கிற சிறிய ஊரில், ஜாக்கி என்கிற பெயரில் சாமுவேல் கூப்பர் என்பவர் ஷாக்ஸ் மற்றும் உள்ளாடைகளைத் தயாரித்து வந்தார். 1930-களில், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த வெரோமால் லீலாராம் என்கிற சிந்தி சமூகத்தைச்  சேர்ந்த தொழிலதிபர், தனது லீலாரம் அண்ட் கம்பெனி மூலமாக மற்ற நாடுகளிலிருந்து உள்ளாடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தார். அவருடைய கண்ணில் `ஜாக்கி’ படவே, அதையும் வாங்கி விற்க ஆரம்பித்தார். 1990-களில் ஜாக்கி இன்டர்நேஷனல் நிறுவனம், வெரோமாலின் மகனான ஜெனோமாலுக்கு இந்தியாவில் ஜாக்கியை விற்பனை செய்யும் உரிமத்தை வழங்கியது. அவர் ஆரம்பித்த பேஜ் இண்டஸ்ட்ரீஸ், இன்றைக்கு உலக அளவில் ஜாக்கியின் மிகப் பெரிய உரிமதாரர் நிறுவனமாக வளர்ச்சி அடைந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின்  வெற்றிக்குக் காரணம் என்ன?

1.ஜெனோமால் குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்து வருகின் றனர். ஆனாலும், இந்தத் தொழில் சாராத வேறெந்தத் தொழிலிலும் அவர்கள் ஈடுபடவில்லை.

2. எந்தவொரு நேரத்திலும் ஜாக்கி பிராண்ட் விற்கும் கடையின் ஷெல்ஃப்களில் குறைந்தபட்சம் 110  எஸ்.கே.யு-க்கள் (Stock Keeping Unit) இருக்குமாறு பார்த்துக்கொள்வதும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பொருள்களின் இருப்பைப் புதுப்பிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

3. தரமான பொருள்கள், நுகர்வோரின் விசுவாசம், பொருள்களில் தொடர்ந்து புதுமை போன்றவற்றில் இந்த நிறுவனம் சமரசம் செய்துகொள்வதே இல்லை.

4. தள்ளுபடியில் ஜாக்கி பிராண்டு உள்ளாடைகள் விற்கப்படுவதில்லை. அதிகபட்ச விலைக்குக் (MRP) குறைவாக எந்தவொரு ஜாக்கி ரீடெயிலரும் விற்பதில்லை. அதைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக அணி செயல்பட்டுவருகிறது. பிரபலமற்ற, சரியாக விற்காத உள்ளாடைகள் மட்டும் வருடத்துக்கு இரண்டு முறை, சுமார் 40% தள்ளுபடியில் விற்கப்படும்.

அசாதாரண வெற்றிக்கான மந்திரங்கள்!மாரிக்கோ (Marico)

அடுத்து பாராசூட், சஃபோலா தயாரிப்பாளரான மாரிக்கோ நிறுவனம், ஹிந்துஸ்தான் யுனிலீவருக்கே சவால்விட்டு இறுதியில், அதன் பிராண்டான `நிகார்’–ஐ வாங்கி வெற்றி பெற்றது.

1948-ம் ஆண்டு ‘பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். வல்லப்தாஸ் வாசன்ஜி என்கிற மாரிவாலாவின் நான்கு மகன்கள் சேர்ந்து ஆரம்பித்த தொழிற்சாலை இது. நாளடைவில் வாசன்ஜியின் பேரன்களில் ஒருவரான ஹர்ஷ் மாரிவாலா, 1971-ம் ஆண்டு தொழிற்சாலையில் சேர்ந்தார். சேர்ந்தவுடன் அவர் செய்த முதல் காரியம், 15 லிட்டர் டின்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த எண்ணையை 100 மி.லி பேக் வடிவத்துக்கு மாற்றி, பி2பி (B2B) மாடலிலிருந்து பி2சி (B2C) மாடலுக்கு மாற்றினார்.

இந்தியாவில் தேங்காய் எண்ணையை தென் இந்தியாவில் சமையலுக்கும், மேற்கு இந்தியாவில் தலைக்குத் தேய்க்கவும் பயன் படுத்தினார்கள். இரு வேறு பயன்பாட்டுக்கு உதவுகிற மாதிரி, தலைக்குத் தேய்க்கும் எண்ணெயை பாராசூட் என்கிற பெயரில் அறிமுகம் செய்தார். 

அடுத்து, டின்னுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கை அறிமுகப்படுத்தினார். அதி லும் செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில். பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய் இருப்பதால், கடையில் திரியும் எலிகள் கடித்துவிடும் எனக் கடைக்காரர்கள் பயந்தனர். இதற்காக ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எலிப்பொறியில் எலியோடு சேர்த்து ஒரு சில நாள்கள் வைத்திருந்தனர். எலிக்கு உருண்டை வடிவ பாட்டிலைப் பற்றிக்கொண்டு கடிப்பதற்கு ஒரு `க்ரிப்’ கிடைக்கவில்லை. எனவே, பாட்டிலுக்குச் சேதமெதுவும் ஏற்படவில்லை.

இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணங்கள். 1) தொடர்ந்து பிராண்ட் லீடர்ஷிப்பை தக்கவைத்துக் கொண்டது, 2)வெற்றி பெற்ற பிராண்டுகளை விரிவாக்கம் செய்தது, 3)குறைந்த மார்ஜின் பிராண்டுகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றது. 

இப்படி இந்தப் புத்தகத்தில் ஏழு நிறுவனங்களின் வெற்றி மந்திரங்கள் பற்றியும், பங்குச் சந்தையில் இந்த நிறுவனங்கள் அடைந்த வளர்ச்சிப் பற்றியும் அற்புதமாக எடுத்துச்சொல்லி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் செளரப் முகர்ஜி.  

சிறந்த மனிதர்களைப் பற்றிய வரலாறைப் படிப்பது போன்ற சுவாரஸ்யம், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றி படிக்கும்போதும் ஏற்படுகிறது.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

படம்: ஆ.முத்துக்குமார்

ஆர்பிஐ கவர்னரின் சம்பளம் உயர்வு!

ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேலின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுவரை அவருடைய அடிப்படைச் சம்பளம் ரூ.90,000-ஆகவும் அவர் வாங்கிய மொத்தச் சம்பளம் ரூ.2,09,500 ஆகவும் இருந்தது. இப்போது பட்டேலின் அடிப்படைச் சம்பளம் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி கவர்னர் தன் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளம் ரூ.3.70 லட்சமாக இருக்கும். கவர்னரின் சம்பளம் மட்டுமல்ல, ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் பிற உயரதிகாரிகளின் அடிப்படைச் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.