Published:Updated:

பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!

பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!

எச்சரிக்கை ரிப்போர்ட்பா.பிரவீன் குமார்

பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!

எச்சரிக்கை ரிப்போர்ட்பா.பிரவீன் குமார்

Published:Updated:
பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!

டுமையான டிராஃபிக்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருப்போம். ஏதோ ஒரு தெரியாத நம்பரில் இருந்து போன் ஒன்று வரும்.

யார்... என்ன என்று அவசரமாக எடுத்துப் பேசினால், “வீஆர் காலிங் ஃப்ரம் ....... பேங்க். உங்க பேங்க் கிரெடிட் கார்டை பேஸ் பண்ணி புது கார்டு ஆஃபர் பண்றோம். இதனால உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்னு எடுத்துச் சொல்லலாமா?’’ என்று பவ்யமாகக் கேட்பார்கள். நாம் “வேண்டாம்” என்று சொல்லி இணைப்பைத் துண்டிப்போம். அத்துடன் அந்த போன் காலையும் மறந்துவிடுவோம்.

நாம் கிரெடிட் கார்டு வைத்திருப்பது போனில் பேசிய அந்த நபருக்கு எப்படித் தெரிந்தது, ஒரு கார்டை அடிப்படையாகக் கொண்டு இன்னொரு கிரெடிட் கார்டை எப்படித் தருகிறார்கள் என்றெல்லாம் நாம் யோசித்திருக் கிறோமா? நம் பெயர், மொபைல் நம்பர், இ-மெயில் அட்ரஸ், அக்கவுன்ட் டீடெய்ல்ஸ், கிரெடிட் கார்டு டீடெய்ல்ஸ் எல்லாம் ஒரு சாக்லெட் விற்கும் விலையைவிடக் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!

இன்றைக்கு கிரெடிட் கார்டு, ரியல் எஸ்டேட், ஹாலிடே டூர் பேக்கேஜ் எனப் பல துறையினருக்கு  வாடிக்கை யாளர்களைக் கவர டெலிமார்க்கெட்டிங் பயன்படுகிறது. இதற்காக அவர்கள் விலை கொடுத்து நம்பர்கள் அடங்கிய டேட்டாபேஸை வாங்குகின்றனர். இந்த நம்பர்களை விற்பனை செய்வதற்காகவே, புதிதாக சில கறுப்பு ஆடுகள் உருவாகி இருக்கிறார்கள். அவர்களுக்குப் பெயர்தான் டேட்டா புரோக்கர்கள். 

இப்படியெல்லாம்கூட வியாபாரம் செய்வார்களா என்கிற சந்தேகத்துடன் ஒரு டேட்டா புரோக்கிங் நிறுவனத்தை நாம் அணுகினோம்.

“எங்களுக்கு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கை யாளர்களின் நம்பர் வேண்டும்” என்று கேட்டோம். அவரோ, “ஒரு நம்பர் ஒரு ரூபாய். உங்களுக்கு எத்தனை நம்பர் வேண்டும்?” என்று கேட்டார் கேஷுவலாக.

“எங்களுக்கு பிரீமியம் கார்டு வைத்திருக்கிறவங்க நம்பர் தேவைப்படுது. அதனால, நீங்க எந்த மாதிரி டேட்டாபேஸ் கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிக்க லாமா, சாம்பிள் தர முடியுமா?” என்றோம்.

அதை ஏற்றுக்கொண்ட அவர், “என்னுடைய இ-மெயில் அட்ரஸை உங்களுக்கு மெசேஜ் பண்றேன். அதுல, என்ன மாதிரி டேட்டா வேணும்னு மெயில் பண்ணுங்க. சாம்பிள் டேட்டாபேஸுக்கு 2,000 ரூபாய் ஆகும். உங்க மெயிலுக்கே, என் பேங்க் டீடெய்ல் அனுப்புறேன். 2,000 ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்துட்டு, அதற்கான ரெஃபரன்ஸ் நம்பரை மெயில் செய்யுங்க. உங்க இ-மெயிலுக்கு டேட்டாபேஸ் வந்திடும். இதில், பெயர், நம்பர், என்ன வங்கி கார்டு பயன் படுத்துகிறார். டெபிட் கார்டா, கிரெடிட் கார்டா, பிளாட்டினம், கோல்ட், பிரீமியம் வகை கார்டா என்ற தகவல் இருக்கும். நாங்க கொடுக்கிற டேட்டாபேஸ்ல உங்களுக்குத் திருப்தியா இருந்தா, திரும்ப எவ்வளவு டேட்டாபேஸ் வேணும்னு எனக்கு மெயில் போடுங்க. நீங்க கேக்குற மாதிரி டேட்டாபேஸை அனுப்பி வைக்கிறேன். ஏன்னா, எங்ககிட்ட லட்சக்கணக்கான டேட்டாபேஸ் இருக்கு’’என்றார்.

‘‘இந்த டேட்டாபேஸ் உங்களுக்கு எப்படிக் கிடைக்கிறது; ஒருவருடைய சம்மதம் இல்லாமல் அவரைப் பற்றிய விவரங்கள் விற்பனை செய்யப்படுவது கிரிமினல் குற்றமாகாதா? நாளைக்குப் பிரச்னை ஏதும் வராதே?” என்று கேட்டோம்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்பாத அந்த புரோக்கர், “விருப்பம் இருந்தால் மெயில் செய்யுங்கள்” என்று போனை கட் செய்தார். டேட்டாக்களை பல்வேறு இடங்களில் இருந்து திருடி விற்பவர்கள், தங்கள் தொழில் தொடர்பான எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. எனவே, மேற்கண்ட கேள்விகளைக் கேட்பவர்களிடம் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.

இன்னொரு டேட்டாபேஸ் விற்பனையாளரிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத அவர் சொன்னது. “நம்பர்ஸ் கிடைப்பது எல்லாம் ரொம்ப ஈஸியான விஷயம். டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்கள், ஹாஸ்பிட்டல், வங்கி, லோன் ஏஜென்ட்ஸ், கார் டீலர்ஸ் எனப் பல இடங்களி லிருந்து சேகரிக்கிறோம். ஏன், ஷாப்பிங் மாலில் ‘கார்டு ஆஃபர் செய்கிறோம், பம்பர் பிரைஸ்’ என்றவுடன் ஃபார்மில் விவரங்கள் நிரப்பித் தருகிறீர்கள் இல்லையா... அவர்களிடம் இருந்து வாங்குகிறோம்’’ என்றார் சிறிய புன்முறுவலுடன். மேலும் தொடர்ந்தார்.

‘‘மொபைல் ரீசார்ஜ் செய்யக் கடைக்குப் போகிறோம். அங்கு ‘நம்பர் எழுதுங்க’ என்று ஒரு நோட்டை நீட்டுவார்கள் இல்லையா... அந்த நோட்டை அப்படியே வாங்கி வந்துவிடுவோம். அதில் இருந்து கேட்டகிரி செய்து நம்பர்ஸை பிரித்தெடுக்கிறோம். டேட்டா ரீசார்ஜ் செய்தவர்கள், 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தவர்கள் என்று பிரித்து, ஃபைல் பண்ணுவோம். ஆன்லைனில் எவ்வளவோ விண்ணப்பங்களை நிரப்புகிறோம். பர்சனல் லோன், கிரெடிட் கார்டு, லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க வேண்டும் என்றால் அல்லது விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நம்முடைய மொபைல் நம்பர் உள்ளிட்ட அடிப்படை விவரங்களைத் தந்தால் தான் உள்ளேயே நுழைய முடியும். இந்த இணையங்களை நடத்துபவர்கள் நேரடியாகவே எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

சிலர், இந்த இணையங்களை ஹேக் செய்தும் தகவலைத் திருடுவது நடக்கிறது. வங்கிகள் மற்றும் பல நிறுவனங்களிடமிருந்து நாங்கள் டேட்டா பேஸை வாங்குறோம். எனவே, இந்த டேட்டாக்களை பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் வராது” என்று உறுதி தந்தார்.

சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம், தனி மனிதர்கள் குறித்த டேட்டாக்கள் திருடப்படுவது பற்றிக் கேட்டோம்.

“உலக அளவில், இப்படித் தனிநபர் பற்றிய விவரங்களைத் திரட்டி விற்பனை செய்வது மிகப் பெரிய பிசினஸாக நடந்துவருகிறது.  அமெரிக்கா வில்கூட இது சட்டப்படிக் குற்றமில்லை என்றாலும், மறைமுகமாகவே இந்த பிசினஸ் நடக்கிறது. உலக அளவில், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையாக இது இருக்கிறது. ஆனால், இந்தியாவில் தனிநபர் விவரங்கள் விற்பனை என்பது ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மொபைல் போனிலேயே ட்ரூகாலர் தொடங்கிப் பல்வேறு ஆப்களுக்கு நம்முடைய தகவலைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கிறோம். ஒரு போன் நம்பரைத் தட்டினாலே, பெரும்பாலும் அவர் பெயர் தொடங்கி, மின்னஞ்சல் வரை பல விவரங்களை ட்ரூகாலர் தந்துவிடுகிறது. நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களும் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. அதில் இருந்தும்கூடத் தகவலை எளிதாகப் பெற முடிகிறது.

ஒரு இணையதளத்துக்குள் நுழைந்தால், கூகுள் விளம்பரம் பார்ப்போம். அதில், நாம் சமீபத்தில் பார்த்த, தேடிய விஷயம் விளம்பரமாக இருக்கும். நிறுவனங்கள், நாம் எதிலிருந்து பார்க்கிறோம், என்ன பார்க்கிறோம், எவ்வளவு நேரம் பார்க்கிறோம் என்று எல்லா வற்றையும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. இதை ‘டேட்டா மைனிங்’ என்று சொல்வோம்.

டிஜிட்டல் உலகில், நம்மைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதைத் தடுக்க ட்ராய் (TRAI) போன்ற அமைப்புக்கள்தான் உறுதியான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். நமக்கே தெரியாமல் நம்முடைய தகவல்களை யார் யாரோ திருடி பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். இப்படித் திரட்டப்படும் தகவலைக் கொண்டு சமூகவிரோத செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வங்கியிலிருந்து பேசுவதாகச் சொல்லி கிரெடிட், டெபிட் கார்டின் சிசிவி, ஒன் டைம் பாஸ்வோர்ட், பின்நம்பர் போன்றவற்றைக் கேட்டு, பணத்தை எடுக்கும் சம்பங்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

நம்முடைய மொபைல், இணையப் பயன்பாட்டை வைத்தே இந்தத் தகவல் திரட்டுதல் நடந்துகொண்டு இருக்கிறது. நாம் இணையத்தைப் பயன்படுத்தும்போது, இணையம் வழியாகப் பணப் பரிமாற்றம் செய்யும்போது நமக்கே தெரியாமல் நம்மைப் பற்றிய விவரங்களையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோன்ற தகவல் திருட்டைத் தவிர்க்க, அரசு நடவடிக்கை எடுப்பதன் மூலமே, டிஜிட்டல் இந்தியா சாமானியனுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.  

பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சமீபத்தில் மெக்டோனல்ட் உணவு நிறுவனத்தின் இந்திய மொபைல் ஆப்-லிருந்து  22 லட்சம் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதில், வாடிக்கையாளர் பெயர், முகவரி, போன் நம்பர், இ-மெயில் முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

பொதுவாக, ஆப்-களில் ஆன்லைன் ஷாப்பிங், சினிமா டிக்கெட், உணவு உள்ளிட்டவற்றை வாங்கும்போது, நம் விவரங்கள் சேமிக்கப்படு கின்றன. இந்த ஆப்-கள் எவ்வளவு தூரம்  பாதுகாப்பானவை என்பது நமக்குத் தெரியாது. இதனால் நம்மைப் பற்றிய தகவல்கள் திருடப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் நம்மால் தடுக்க முடியாது.

ஆனால், நம் டெபிட், கிரெடிட் கார்டில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. நம்முடைய பாஸ்வோர்டு, ஒன் டைம் பாஸ்வோர்டு இல்லாமல் நம் பணத்தை எடுக்கமுடியாது. “வங்கியிலிருந்து பேசுகிறோம். உங்களுக்குப் புதிய கார்டு அளிக்கிறோம். உங்கள் சி.சி.வி எண், பாஸ்வேர்டைச் சொல்லுங்கள் என்று யார் கேட்டாலும் உஷாராக மறுத்துவிட வேண்டும். அதிலும், சிலர் புத்திசாலித்தனமாக, ‘எங்களிடம் பாஸ்வேர்டு, ஒன் டைம் பாஸ் வோர்டு சொல்ல வேண்டாம். ஐ.வி.ஆர் எனப்படும் கம்ப்யூட்டரில் நேரடியாகப் பதிவுசெய்யும் முறையில் சொன்னால் போதும்’ என்பார்கள். அந்த கம்ப்யூட்டர் ஐ.வி.ஆர் என்பதும் அவர்களுடையதுதான். அதிலிருந்து சுலபமாகப் பாஸ்வேர்டை எடுத்து, நம் அக்கவுன்டிலிருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள். எனவே, விழிப்புடன் இருப்பதன் மூலமே, பிரச்னைகள் ஏற்படுவதிலிருந்து தப்ப முடியும். 

பறிபோகும் பணம்... தொல்லை தரும் அழைப்புகள்... - உங்களை சிக்கவைக்கும் டேட்டா திருடர்கள்!

டேட்டா வாங்குபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவரும் ஒரு நிறுவனத்தின் மேனேஜருடன் பேசினோம். “தமிழகத்தின் பல பகுதிகளில் நாங்கள் பிசினஸ் செய்றோம். எங்களுடைய புராஜெக்ட்டு களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல விளம்பரங்கள் செய்வதுடன், டெலிமார்க்கெட்டிங்கும் செய்றோம். இதற்கு தேவையான நம்பர்களை நாங்க பணம் கொடுத்து வாங்குறோம். 25 ஆயிரத்துக்கும் கீழ் டேட்டாபேஸ் வாங்கினா, ஒரு நம்பருக்கு ஒரு ரூபாய்தான். நாங்க 50 ஆயிரம் டேட்டாபேஸ் வாங்குறதால, எங்களுக்கு ஒரு நம்பருக்கு 50 பைசாதான் ஆகும்.

இப்படி 11 லட்சம் சென்னைவாசிகளோட நம்பர் எங்ககிட்ட இருக்கு. இது இல்லாம, மதுரை, சேலம், கோயம்புத்தூர்னு பல லட்சம் பேரோட நம்பர் வைச்சிருக்கோம். நாங்க டேட்டாபேஸ் வாங்கும்போது, பெயர், மொபைல் நம்பர், லேண்ட்லைன் நம்பர், வேலைக்குச் செல்பவரா அல்லது பிசினஸ் செய்பவரா, ஆண்டு வருமானம் என்ன, என்ன கார்டு வைத்திருக்கிறார், எத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறார், கார்டு லிமிட் என்னன்னு நிறைய கேட்டகிரில இன்ஃபர்மேஷன் இருக்கும். இதிலிருந்து எங்களுக்குத் தேவையான கஸ்டமர்களைப் பிரித்தெடுத்துப் பேசுவோம். 100 பேருக்கு போன் செஞ்சா, 90 பேர் சரியாப் பேச மாட்டாங்க. 10 பேர் பேசுறதே பெரிசு. அவங்ககிட்ட எங்க புராஜெக்ட் பத்தி பேசி, வாங்க வைப்போம்.

 இந்த நம்பர் எல்லாம் சர்வீஸ் புரவைடர்களுக்கு  எப்படிக் கிடைக்கும்னு நாங்க கேக்குறதில்லை.  இந்த நம்பர்களை நாங்கள் வேறு யாருக்கும் ஷேர் செய்வதும் இல்லை. இப்படி நம்பர் கிடைக்கிறது எங்க பிசினஸுக்கு ரொம்ப  உதவியா இருக்கு’’ என்றார் அவர்.

நெட்பேங்கிங் உஷார்... வாசகர் சொல்லும் வழி!

‘நெட்பேங்கிங் கொள்ளை... உஷாரா இருங்கய்யா (ஆன்லைனில் படிக்க: http://bit.ly/2n8qH5n)’ என்ற கட்டுரைக்கு வாசகர் வி.கிருஷ்ணன் அளித்த கமென்ட்.

 ‘‘நெட்பேங்கிங்கில் கொஞ்சம் அசந்தால் அத்தனை பணத்தையும் அபகரித்துவிடுவார்கள். உஷாரா இருக்க வேண்டும். எப்படி உஷாராக இருப்பது என்று கேட்கிறீர்களா? நான் கடைப்பிடிக்கும் முறையைச் சொல்கிறேன். 

எனது மாத பென்ஷன் ரூ.24,000.  என் செலவுக்கு ரூ.12,000 முதலில் எடுப்பேன். 15 தேதிகளில் ரூ.5,000 - ரூ.8,000 வரை எடுப்பேன்.

 எல்லா மாதங்களிலும் நான் செய்துள்ள, டெபாசிட் 29 - 30 தேதிகளில் முதிர்வடையும். அன்றையத் தேதியில் புதுப்பிக்கும் அசலைத் தேவைக்கேற்ப மாற்றி, மறுபடியும் அடுத்த மாதம் 29 - 30 தேதிகளில் முதிர்வடையுமாறு புதிய டெபாசிட் போடுவேன். எந்த சமயத்திலும் என் சேமிப்புக் கணக்கில் ரூ.10 - 15 ஆயிரத்துக்கு மேல் இருக்காது. மற்ற பணம் வங்கியில் வைப்புத் தொகையாக இருக்கும். அதற்கு வங்கிகள் பொறுப்பு. திருடனுக்குப் பயப்படவே வேண்டாம்.’’