Published:Updated:

உங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்!
உங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்!

நாணயம் லைப்ரரி!

பிரீமியம் ஸ்டோரி
உங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்!

புத்தகத்தின் பெயர் : இன்னோவேஷன் இஸ் எவ்ரிபடிஸ் பிசினஸ் (Innovation is Everybody’s Business)

உங்கள் வேலையைக் காப்பாற்றும் இன்னோவேஷன்!ஆசிரியர்: ராபர்ட் பி டக்கர் (Robert B.Tucker)       

Publisher: Wiley

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களைத் (நிறுவனத்தை அல்ல, தனிநபராகிய உங்களை) தவிர்க்க முடியாதவராக மாற்றிக் கொள்வது எப்படி என்பதற்கான கேள்விக்கு, ராபர்ட் பி டக்கர் எழுதிய ‘இன்னோவேஷன் இஸ் எவ்ரிபடிஸ் பிசினஸ்’ என்னும் புத்தகம் தெளிவான பதிலைச் சொல்கிறது.

மிகக் கடுமையான பொருளாதார மந்தநிலை, கொத்துக் கொத்தாக வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை, வெளியே கொடுத்து வேலையைச் செய்து வாங்கிக்கொள்வோம் (அவுட்-சோர்சிங்) என்கிற நிறுவனங்களின் மனநிலை என இதுபோன்ற சூழலில், நிறைய புத்தகங்கள், ‘உங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்வது எப்படி, என்கிற அறிவுரையுடன் வெளிவருகின்றன. அவை சொல்லும் வழிமுறைகள் என்னென்ன? 

‘‘கஷ்டப்பட்டு உழையுங்கள்; பாஸைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்; நிர்வாகிகளின் கண்ணில் படும்படியான செயல்களைச் செய்யுங்கள்... என்பன போன்ற அரதப்பழசான அறிவுரைகளைத்தானே?  ஆனால், இந்த அறிவுரை எல்லாம் செல்லாது என்பதே என்  வாதம். அலுவலகத்தில் புதிய தொழில்நுட்ப குறுக்கீடுகளிலிருந்து (Disruption) என்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், என் மதிப்பை அதிகரித்துக் கொள்ளவும் நான் என்ன செய்யவேண்டும் என்பதே ஒவ்வொருவரின் கேள்வி. அதுகுறித்து சீரிய சிந்தனையைச் செய்ததால் வந்ததே இந்தப் புத்தகம் என்கிறார்’’ ஆசிரியர்.

பின்வரும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். உங்கள் நிறுவனம் இதுவரை வரலாற்றிலேயே கண்டிராத போட்டியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறதா, பணியாளர்கள் அனைவரையும் இருக்கிற கொஞ்சநஞ்ச வசதிகளை வைத்துக்கொண்டு எக்கச் சக்கமான உற்பத்தித்திறனைக் காட்டச்சொல்கிறதா, உங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிகக் குறைவாகவும், உங்கள் நிறுவனத்தின் மீது அவநம்பிக்கைக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கின்றனரா?

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும்  உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் இதனாலேயே உங்கள் அறிவும் திறமையும், உங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளப் போதிய அளவில் இல்லை என்றே அர்த்தம். உங்கள் அறிவும் திறமையும் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சரி, உங்களுடைய சரியான மதிப்பை வெளிக்காட்ட, இதுபோன்ற கடும் போட்டியான சூழல் நிச்சயம் உதவாது.

ஒரு வேலையை, ஒரு  குறிப்பிட்ட நடை முறைக்குள்  கொண்டுவந்துவிட்டால் அதாவது, இதை இதைத்தான் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு சொல்ல முடிந்தால் அல்லது ஒரு வேலையை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொண்டுபோய் செய்யலாம் என்கிற நிலை உருவானால், அந்த வேலையை வேறு இடத்துக்குக் கொண்டுபோய் செய்கிற அளவுக்குக் (portable) குணாதிசயம் கொண்டதாக அந்த வேலை மாறிவிடுகிறது. பிறகென்ன, அந்த வேலைகளை நிறுவனங்கள் ‘அவுட்சோர்சிங்’ செய்ய ஆரம்பித்து விடுகின்றன. 

இதுபோக, ஒரு நிறுவனத்தில் என்னென்ன வேலைகள் நிரந்தரமாக உள்ளன என்று பார்த்தால், தூரத்திலிருந்து செய்யமுடியாத மற்றும் தினப்படி வேலைகள் அல்லாத வேலைகளே இருக்கும். இந்தவிதமான வேலைகளே தற்போதைக்கு  நிரந்தரமான வேலை களாக இருக்கின்றன. ஆனால், இந்த விதமான வேலைகள்  ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்த எண்ணிக்கையிலேயே,  இருக்கின்றன. எனவே, நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணிப் பாதுகாப்பு  என்பதைத்தக்க வைத்துக் கொள்ள, நம்மிடம் இருக்கும் திறனானது வேறு யாரிடமும் எளிதில் கிடைக்காத ஒன்றாக இருக்க வேண்டும். அந்தத் திறனைக் குறித்தே இந்தப் புத்தகம் எடுத்துச் சொல்கிறது.

‘ஐ-ஸ்கில்’ (Innovation Skill) என்பதே இந்தப் புத்தகம் குறிப்பிடும் திறனாகும். பொதுவாக,  இன்னோவேஷன் (இனி இதைப் புத்தாக்கம் என்று குறிப்பிடுவோம்) என்றால், ஏதாவது ஒரு பொருளை அல்லது சேவையைக் கண்டுபிடிப்பது என்றே நாம் நினைக்கிறோம். அதையும் தாண்டி, ஒரு விஷயத்துக்கு மதிப்புக் கூட்டுவது எப்படி என்று கண்டறிவதும் புத்தாக்கம்தான். உதாரணமாக, உங்கள் வேலைக்கும் உங்களுக்கும் மதிப்பை எப்படிக் கூட்டுவது என்று தொடர்ந்து ஆராய்ந்து அதற்கான விஷயங்களைச் செய்வதும் புத்தாக்கம் தான் என்கிறார் ஆசிரியர். அன்றாட வேலையை எல்லாம் முடித்தபின்னர் உட்கார்ந்து யோசித்து கண்டுபிடிப்பது மட்டுமே புத்தாக்கமாகாது. பார்க்கும் பணியில், செய்யும் சேவையில் புதுமைகளைப் புகுத்துமாறு சிந்தித்துச் செயலாற்றுவதும் புத்தாக்கம்தான்.  

புத்தாக்கம் குறித்த விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் இரண்டு பகுதிகளாக உள்ளன. முதல் பகுதி, உங்கள் மனநிலை புத்தாக்கத்துக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. இரண்டாவது பகுதி, பார்க்கும் வேலையில் புத்தாக்கங்களைச்  செய்யவும், அப்படிச் செய்வதன் மூலம் தவிர்க்க முடியாத ஒரு நபராக பணியிடத்தில் திகழ்வது எப்படி என்பதைப் பற்றியும் சொல்கிறது.

பணியில் புத்தாக்கத்தை நடைமுறைப்படுத்த, முதலில் பழக்கமில்லாத விஷயங்களை செய்துபார்க்கும் மனநிலை வேண்டும். அதெப்படி,  எனக்கென்று பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சட்ட திட்டங்கள் வேறு இருக்கிறதே என்கிறீர்களா?

கொஞ்சம் உங்கள் உயரதிகாரிகளைப் பாருங்கள். புத்தாக்கங்களை அவ்வப்போது நிச்சயமாக செய்யவே பிரியப்படுவார்கள். சட்டதிட்டங்கள் இருந்தாலுமே, இதை இப்படிக் கொஞ்சம் மாற்றிச் செய்யலாமே என்று நீங்கள் சொன்னால், அவர்கள் காது கொடுத்துக் கேட்கத்தான் செய்வார்கள். ஏனென்றல் அவர்கள் இருக்கும் பதவியில் அவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பதே இந்தப் புத்தாக்கம்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். 

ஆனால் நீங்களோ, கொஞ்சம் பதமாக யோசித்து மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டியிருக்கும். அந்தத் திறன் உங்களிடம் இருந்தால், நீங்கள் பளிச்சிடுவீர்கள். இல்லை என்றால், உங்கள் வேலை எப்போது வேண்டு மானாலும் போகலாம் என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

ஏற்கெனவே சொன்னதைப்போல், புத்தாக்கம் என்பது நம்முடைய வேலையை எல்லாம் முடித்தபின்னர் சிந்தித்துச் செய்யவேண்டிய ஒரு விஷயமில்லை. எப்படி நம் வேலையைச் செய்கிறோம் என்பதில் இருக்கிறது அது. எந்த நிறுவனத்திலும், நிறுவனத்தின் எந்தப் பிரிவிலும், எந்த வேலையிலும் புத்தாக்கம் என்பது சாத்தியமே.

இதை நடைமுறைக்குக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? முதலில், நிறுவனத்தில் நாம் எங்கேயிருக்கிறோம், எங்கே செல்ல நினைக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.  பின்னர் நிறுவனத்தின் வியாபாரத்தின் மறுபக்கத்தை (நிறுவனத்தின் வெளியே) உணர்ந்துகொள்ள வேண்டும். மூன்றாவதாக, நிறுவனத்தின் கலாசாரத்தை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நான்காவதாக, இந்த மூன்றையும் இணைத்து புத்தாக்கங்களை வடிவமைக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

புத்தாக்கத்துக்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியவும் வழிகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம். முதலில் நாம் ஒரு தினசரி செயல்பாட்டிலிருந்து வெளியேறப் பழகிக் கொள்ளவேண்டும். நாம் பார்க்கும் வேலையை ஒரு புதிய கோணத்தில் ஆராயப் பழகவேண்டும். இரண்டாவதாக, சின்னச் சின்ன விஷயங்களையும் தீர ஆராயவேண்டும். மூன்றாவதாக, இந்த வேலையை இன்னமும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற ஒலியை மனதுக்குள் தொடர்ந்து ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இந்த வகை செயல்களை தொடர்ந்து செய்யும்போது, திடீர் விபத்துகளாக (சந்தோஷ விபத்துகள்) நமக்கு பல விஷயங்கள் பொறி தட்டும். இந்தச் சூழ்நிலையில், ஒரு வாடிக்கையாளரின் கோணத்தில் நாம் சிந்திக்க ஆரம்பித்தால், அவருடைய தீர்க்கப்படாத பல பிரச்னைகள் நம் கண்முன்னே வந்து நிழலாட ஆரம்பிக்கும். ‘அட, இந்தப் பிரச்னைகள் ஏன் தீர்க்கப்படவில்லை’ என்று சிந்தித்தால், எந்த வகையிலும் மதிப்புக் கூட்டாத, ஆனால் தேவையற்ற இடைஞ்சல்களைத் தருகிற நடவடிக்கைகள் நம் கண்ணில் படும். அவற்றை மாற்றியமைத்தால், சுலபத்தில் புத்தாக்கமானது நம் பணியில் குடிகொள்ளும்.

‘‘எனக்கெல்லாம் புத்தாக்கம் பற்றி யோசிக்க நேரமேயில்லை. நீங்க சொல்கிற மாதிரி என்னிடம் எந்தவொரு கிரியேட்டிவ்வான ஐடியாவும் இல்லை. அப்படி யோசிப்பது  இந்தத்  தொழிலுக்கும் சரிப்பட்டு வராது. புத்தாக்கம் என்கிற பெயரில் நான் சொல்கிற ஐடியா வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் என்னைத் தூக்கியடித்துவிடுவார்கள்’’   என நிறுவனத்தின் உள்ளே பல எச்சரிக்கை குரல்கள்  தொடர்ந்து வரவே செய்யும். இவற்றைப் ஒதுக்கி வைத்துவிட்டு யோசித்து, செயல்பட்டால் மட்டுமே பணிப் பாதுகாப்பு சாத்தியம்’’ என்கிறார் ஆசிரியர்.

சரி, இந்தப் புத்தகம் முழுக்கப் படித்தாகிவிட்டது. இனி உங்கள் சாய்ஸ்தான். செய்யும் பணியை ஏற்கெனவே செய்வதுபோல் தொடர்ந்து செய்யப் போகிறீர்களா அல்லது புதிதாக ஏதாவது உருவாக்கப் போகிறீர்களா?

புத்தாக்கத்தைக் கொண்டு வரவில்லை எனில்,  என்னவாகும்? தொடர்ந்து செய்வதையே செய்தால் நிச்சயம் வேலை போகும். புத்தாக்கம் செய்தாலோ, பணிப் பாதுகாப்புக்கு வாய்ப்பிருக்கிறது.  ‘எனவே,  வாருங்கள். நாம் அனைவரும் செய்யும் பணியில் புத்தாக் கத்தைக் கொண்டு வருவோம்’ என்று சொல்லும் இந்தப் புத்தகத்தை, பணியில் இருக்கும் அனைவரும் ஒரு முறை அவசியம்  படிக்கலாம்.

 - நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு