Published:Updated:

அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா?
அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா?

ஜெ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

ரே நாடு, ஒரே அடையாளம், ஒரே வரி என்று நாடு முழுவதும் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் ஒரு பொதுவான அடையாளமாக ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இது வெறும் அடையாளமாக மட்டும் இல்லாமல், மதிய உணவுக்கு, தேர்வு எழுத, ஓட்டுநர் உரிமத்துக்கு என்று ஆரம்பித்து, நின்றால் ஆதார், உட்கார்ந்தால் ஆதார் என்று அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாகிவிடும் போலிருக்கிறது. ஏற்கெனவே ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியே அடையாள அட்டைகள் இருக்கும் நிலையில், எதற்காக இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த ஆதார் எண்ணை அனைத்து அரசுத் திட்டங்களுடனும் இணைக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது பொதுமக்களைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது. உச்சநீதிமன்றமும் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது. ஆனால், மத்திய அரசாங்கமோ எதற்கும்  அசைந்து கொடுத்த மாதிரி தெரியவில்லை. ஆதார் கார்டும், ஆதார் இணைப்பும் அவசியமா, இதனால் என்ன சாதக, பாதகங்கள் ஏற்படும் என்பது பற்றி பேராசிரியர் வெங்கடபதியிடம் பேசினோம்.

‘‘ஆதார் கார்டை தற்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். நம்மைவிட மிக உயரத்தில் இருக்கும் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டும்தான், இதுபோன்ற நாடு முழுவதும் ஆக்சஸ் செய்யக்கூடிய ஓர் அடையாள எண் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் இப்போதுதான் வந்திருக்கிறது. அந்த வகையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறோம். இதுவரை அரசின் எத்தனையோ திட்டங்கள் அதன் முழு இலக்கை சென்றடையாமலேயே இருந்திருக் கலாம். அதற்குக் காரணம், நிர்வாக அளவிலும், மக்களிடத்திலும் சரியான வழிகாட்டுதலும், செயல்படுத்தலும் இல்லாததுதானே தவிர, திட்டங்களில் உள்ள பிரச்னை அல்ல. அதைச் செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளிலிருந்து உள்ளூர் அளவிலான நிர்வாகிகள் வரை பொறுப்புடன் செயல்பட்டால், எந்தத் திட்டத்தையும் வெற்றிகரமாக்க முடியும். எந்தத் திட்டமும் சரியில்லை, இந்த ஆதார் கார்டு வந்து மட்டும் என்ன ஆகப் போகிறது என்று சொல்லிவிட முடியாது.

அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா?

டிஜிட்டல்மயம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனியாக விவரங்களைச் சேகரிப்பது சவாலான விஷயமாக இருக்கும். அனைத்து விவரங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும்போது, அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவது எளிதாகவும், விரைவாகவும் இருக்கும்.

எனவே, ஆதார் கார்டைக் கட்டாயமாக்குவது என்பது பலரால் விமர்சிக்கப்பட்டாலும், அது காலத்தின் கட்டாயம். ஆதார் எண்ணை அரசின் பிற திட்டங்களோடு இணைக்கும்போது, அரசால் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் உங்களுடைய ஆதார் எண்ணை வைத்து, உங்களை அடையாளம் காண முடியும். மேலும், பல்வேறு முறைகேடுகள் நடக்கும் இடங்களில் அந்தந்த இடத்துக்கேற்ப ஆவணங்களை மாற்றிமாற்றித் தருவது நடந்து வருகிறது.

தோனியின் விவரங்கள் வெளியிடப்பட்டதை வைத்து, ஆதாரில் உள்ள தகவல்களின் பாதுகாப்புக் குறித்து கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள் சிலர். விவரங்களைக் கையாளக்கூடிய பொறுப்பில் உள்ள யாரோ ஒருவர் தோனியின் விவரங்களை வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதை வைத்துக்கொண்டு எல்லோருடைய விவரமும் திருடு போய்விடும் என்று கற்பனை செய்வதும், அதனால் இதனை எதிர்ப்பதும் சரியல்ல. மேலும், இந்தத் திட்டம் மட்டுமல்ல, எந்தவொரு திட்டமும் முழுமையான இலக்கை அடைய நிர்வாகமும் சரியாக இருக்க வேண்டும். மக்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறினார்.

ஆதார் எண்ணை அரசு நலத் திட்டங்களுடன் இணைப்பது எதற்காக, இதனால் மக்களுக்கு நன்மை இருக்கிறதா என்று பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம்.

அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா?

‘‘இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்குப்  பொதுவான அடையாளம் இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், ஏற்கெனவே பாஸ்போர்ட்,  பான் கார்டு போன்றவை இந்திய அளவிலான பொது அடையாளங்களாக இருக்கின்றன. இப்போது ஆதார் கார்டு என்ற ஒன்றை, தனியாக இவ்வளவு பெரும் செலவில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. சரி, போகட்டும். எல்லோருக்கும் பொதுவாக ஆதார் எண் என்ற அடையாளம் இருப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசு நலத்திட்டங்களுடன் இணைப்பதைக் கட்டாயமாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 

அரசு நலத்திட்டங்கள் அனைத்துடனும் இணைப்பதுடன், மானியங்களையும், உதவித் தொகைகளையும் வங்கிக் கணக்கில் செலுத்தப் போவதாகச் சொல்கிறார்கள். மானியம் வங்கிக் கணக்குக்கு வந்ததா, இல்லையா என்று பார்த்து வங்கிக்குச் சென்று எடுத்து வந்து தங்கள் செலவுகளைப் பார்க்கும் நிலை ஏழைகளுக்குச் சரி வருமா?

திட்டங்கள் என்பது அவர்களுடைய ஏழ்மை நிலையைக் குறைப்பதற்காகத்தான். அதற்கு எப்போதும் கொடுக்கவேண்டிய சலுகைகளை நேரடியாகப் பெறும் வகையில் கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் ‘நேஷனல் ஃபுட் செக்யூரிட்டி’ மாடலை அமர்தியா சென் உள்பட பலர் பாராட்டி முன்னுதாரணமாகச் சொல்லியிருப்பதற்குக் காரணம், அந்தத் திட்டம் நேரடியாகப் பயனாளரைச் சென்று சேர்ந்ததால் தான். அதன் ‘யுனிவர்சல் பிடிஎஸ் சிஸ்டம்’தான் அதற்குக் காரணம். இந்த சிஸ்டத்தில் பணம் இருப் பவர்கள் யாரும் ரேஷன் கடைக்குச் சென்று பொருள் வாங்கிப் பயன்படுத்து வதில்லை. மாறாக, அவர் களேகூட அவர்களிடம் வேலை செய்பவர்களிடம் கொடுத்துதான் வாங்கிக் கொள்ள சொல்கிறார்கள். இந்த செல்ஃப் செலக் ஷன் முறையினால்தான் அது வெற்றிகரமாக இருக்கிறது. இந்த முறையை எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என அனைத்து முதலமைச்சர்களும் போட்டிபோட்டு வளர்த் தெடுத்திருக்கிறார்கள்.

இப்போது மானியத்தைப் பணமாகக் கையில் தருகிறேன் என்றால், இந்த சிஸ்டம் தடுமாற ஆரம்பித்துவிடும். ஆதார் கார்டை இணைப்பதும், மானியம் மற்றும் உதவித்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டமும் முற்றிலும் ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும். எல்பிஜி-யில் நடந்ததுபோல, முதலில் மானியத்தை சரண்டர் செய்யச் சொல்வார்கள். பின்னர், மானியத்தைப் பெறுவோர் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது என்று சொல்லி முற்றிலுமாக மானியங்களை ரத்து செய்யும் அபாயமும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

அனைத்துக்கும் ஆதார்.... சாதகமா, பாதகமா?

இதுபோன்ற அரசு நலத்திட்டங்களையும், மானியத்தையும் நம்பி இருக்கும் மக்களின் பொருளாதாரம் நசுக்கப்படும். அரசுகள், மக்களின் நலனுக்கான அரசுகளாக இருக்க வேண்டுமே தவிர தன்னுடைய நலனுக்கான அரசாக இருக்கக் கூடாது. எனவே, ஆதார் கார்டு ஓர் அடையாளமாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதனை நலத்திட்டங்களுடன் இணைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்று முடித்தார்.

மேலும், ஆதார் கார்டு குறித்து மணிலைஃப் (Moneylife)ஆசிரியர் சுசேதா தலாலிடம் கேட்டோம். “என்னைப் பொறுத்தவரை, ஆதார் கார்டு அவசியமற்றது. ஆதார் கார்டைக் கட்டாயமாக்குவ தனாலும், திட்டங்களுடன் இணைப்பதாலும் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொல்லும் நூற்றுக்கும் மேலான கட்டுரைகளை மணிலைஃப் இதழில் எழுதியிருக்கிறோம்.

ஆதார் கார்டு இன்னும் முழுமையாக மக்களைச் சென்று சேரவில்லை. அதற்குள் அவசர அவசரமாக பல அறிவிப்புகளை அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆதார் இல்லாததால் மதிய உணவு மறுக்கப்பட்டிருக்கிறது. பல நேரங்களில் ஆதார் எண்ணுடன் நம்முடைய பயோமெட்ரிக்ஸ் ஒத்துப்போவதில்லை என்று குற்றச்சாட்டுகள் பரவலாக இருக்கின்றன. சொல்லப் போனால், இப்போது சாதாரண மக்கள் பெறும் சலுகைகளும் இனி அவர்களுடைய விருப்பத்தின் பேரிலேயே பறிக்கப்படலாம்” என்று கூறினார்.    

ஆதார் கார்டைப் பொறுத்தவரை, பெரும்பாலும் அதனை ஓர் அடையாளமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். ஆனால், அதனை அனைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் நடைமுறைகளிலும் இணைக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும்போது சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் அரசுதான் தீர்வுகாண வேண்டும். தற்போதைய நிலையில், மக்கள் எவ்வழி அரசன் அவ்வழி என்பதல்ல, அரசு எவ்வழி மக்கள் அவ்வழி என்பதே. எனவே, ஆதார் என்பது அனைவருக்குமே அவசியம் என்பதை நாம் உணரவேண்டும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு