Published:Updated:

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் பண ஜாதகம்!

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்  பண ஜாதகம்!
பிரீமியம் ஸ்டோரி
உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் பண ஜாதகம்!

வளம் தரும் 12 முதலீட்டுக் கட்டங்கள்சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் பண ஜாதகம்!

வளம் தரும் 12 முதலீட்டுக் கட்டங்கள்சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

Published:Updated:
உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்  பண ஜாதகம்!
பிரீமியம் ஸ்டோரி
உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் பண ஜாதகம்!

ராசிபலன்படி இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை காலண்டரையோ அல்லது டிவியை-யோ பார்த்துத் தெரிந்துகொள்கிறோம்.  ‘புதிதாகத் தொழில் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். ஜாதகத்தில் அதற்கான அமைப்பு எப்படி இருக்கிறது?’ என பல பிசினஸ்மேன்கள் ஜோதிடரைப் பார்த்து கேட்ட பிறகே காரியத்தில் இறங்குகிறார்கள். ‘அடுத்து நம்ம கட்சி ஆட்சிக்கு வருமா?’ என ஜாதகக் கட்டங்களை அலசாத அரசியல் பிரமுகர்களை நம் நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.  

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்  பண ஜாதகம்!


மனித வாழ்க்கையில் தொழில், கல்வி, திருமணம், பொருளாதாரம், படிப்பு, வீடு, இன்பம், துன்பம், குடும்பம் என ஒருவரது எதிர்காலச் செயல்பாடுகளைக் கணிக்க 12 ராசிகள் உண்டு. இந்த 12 கட்டங்களை அலசித் தீர்வுகளைச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள்.      
                                                            
இந்த 12 ராசிக் கட்டங்கள்  நமது எதிர்காலத்தைக் கணிக்க அவசியம் என்கிறமாதிரி, நம் பொருளாதார எதிர்காலத்தை மிகச் சரியாக அமைத்துக்கொள்ள 12 விஷயங்கள் கட்டாயம் தேவை. இந்த 12 விஷயங்களையும் பக்காவாக அமைத்துக்கொண்டவர்களின் பொருளாதார எதிர்காலம் வளமாகவே இருக்கும். 

இங்கே சொல்லப்பட்டிருக்கும்  12 விஷயங்களின் அடிப்படையில் அமைந்த பண ஜாதகமானது முழுக்க முழுக்க நம் கையில்தான் இருக்கிறது.  நம் எதிர்கால பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்க உதவும் அந்த 12 விஷயங்கள் இனி...

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்  பண ஜாதகம்!

1. வரவு

நாம் ஈட்டும் வருமானமே நமக்கு வரும் வரவு. இத்தகைய வருமானம் ஐந்து வழிகளில் வருகிறது. சம்பளம் (உதாரணம், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்), தொழில் சார்ந்த படிப்பு மூலம் ஈட்டும் வருமானம் (உதாரணம்,  மருத்துவர், வக்கீல், பொறியாளர்), தொழில் மூலம் ஈட்டும் வருமானம் (உதாரணம்,  மேஸ்திரி),  முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் (உதாரணம், வங்கி வட்டி), சொத்து மூலமான வருமானம் (உதாரணம், வீட்டு வாடகை). வரவு விஷயத்தில் நாம் உன்னிப்பாக இருந்தால், பணத் தட்டுப்பாடு என்கிற பிரச்னை நமக்கு எப்போதும் இருக்காது.

2. செலவு

செலவு என்பது நமது தனிப்பட்ட தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் தரும்  விலையாகும். நாம் செய்யும் எல்லாச் செலவுகளுக்கும் பலன் உண்டு.  எதிர்காலத் தேவைக்காக செய்யும் முதலீடும் (வங்கிச் சேமிப்பு, அஞ்சலகச் சேமிப்பு, மனை முதலீடு, தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்கு) செலவுக் கணக்கில்தான் வரும். மேலும், உணவு, உடை, காப்பீடு, படிப்புக்கான தொகையும் செலவின் கீழ்தான் வரும். செலவு விஷயத்தில் கருத்தாக இருந்தால், பணம் எப்போதும் நம்மிடம் இருக்கும். விரும்பியதை வாங்க நினைத்து செலவு செய்தால், நாளைக்கு அவசியமான பொருளை வாங்கக்கூட கடன் கேட்கும் நிலை வரும்.

3. குடும்பச் செலவு

தன்னையே நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் மற்றும் உறவினருக்கும் செய்யும் செலவை குடும்பச் செலவு என்று குறிப்பிடலாம்.  குடும்பச் செலவில் குறை இருக்கக்கூடாது. ஆனால், நம் வரவுக்கு மேலும் அது இருக்கக்கூடாது.

4. எதிர்பாராத நிகழ்வுக்குத் தேவைப்படும் தொகை

எதிர்பாராத நிகழ்வு யாருக்கு எப்போது வரும் என்று தெரியாது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது அவசியம். இது வங்கியில் எஃப்.டி அல்லது ஆர்.டி-யில் பணமாக இருக்கலாம். தங்கமாகவும் வாங்கி வைக்கலாம். நாம் எடுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவைகளும்  இந்த வகையின்கீழ்தான் வரும்.  மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், நமக்கு ஏற்படும் திடீர் உடல்நலக் குறைவி லிருந்து நம்மைக் காக்கும். திடீர் நிகழ்வுகளுக்குத் தேவையான பணம் இல்லாவிட்டால், பெருந்துன்பம் வந்துசேரும்.

5. கல்விச் செலவு

கல்விச் செலவு, மழலைக் கல்வி முதல் முதுநிலைப் பட்டப் படிப்பு வரை வருடம்தோறும் நிகழக்கூடிய செலவாகும். நவீன காலக் குழந்தைகளின் கனவுகள் இன்றைக்குச் சமூக முன்னேற்றத்தின் அடிப்படையில் இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல அத்தகையக் கனவுகளைச் செயலாக்க எவ்வளவு தொகை ஆகும் என்பதை ஆரம்பத்திலேயே கணக்கிட்டு, அதற்கேற்ப முன்கூட்டியே முதலீடு செய்வது நல்லது. 

6. பிள்ளைகளின் திருமணத்துக்குத் திட்டமிடுவது


பெரும்பாலான பெற்றோரிடம் கல்வித் திட்டம் உள்ளது. ஆனால், திருமணத்துக்கென்று எந்தத் திட்டமும் இருப்பதில்லை. இதனை, பிள்ளைகளின் மழலைப் பருவத்திலிருந்து ஆரம்பிப்பது மிக மிக உத்தமம். அப்படி செய்யும்போது சுமை தெரியாது.

7. சொந்த வீடு

சொந்த வீடு - நம் வாழ்கையில் இன்றியமையாதது;  தவிர்க்க முடியாததும்கூட. இத்தகைய கனவு இல்லத்தை நனவாக்க நாம் வீட்டைக் கட்டப் போகிறோமா அல்லது கட்டிய வீட்டை வாங்கப் போகிறோமா என்பது முக்கியமான விஷயம். இதில் எதுவாக இருந்தாலும், எப்போது நிறைவேற்றுவது என்பது முக்கியம். உடன் நிறைவேற்ற வீட்டுக் கடன் பெறுவது நல்லது. 

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்  பண ஜாதகம்!

8. வாகன வசதி

இருசக்கர மோட்டார் வாகனமாகட்டும், சொகுசு காராக இருக்கட்டும், பலரும் கடன் பெற்றுதான் வாகனங்களை வாங்குகிறார்கள். இப்படி வாகனம் வாங்குவது வேலைக்கு அல்லது செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கடன் மூலம் வாகனங்களை வாங்க வேண்டும். வாரம் அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வார இறுதியில் வாகனத்தைப் பயன்படுத்துபவர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்வது லாபகரமாக இருக்கும்.

9. சுற்றுலாவுக்குத் திட்டமிடுதல்

இன்றைய நவீன வாழ்க்கையில் மன அமைதிக்காக குடும்பத்தோடு சுற்றுலா செல்வது புத்துணர்வைத் தருவதாக இருக்கும். தெய்வீகச் சுற்றுலா, வெளியுலகை ரசிக்கும் சுற்றுலா, இயற்கையை ரசிக்கும் சுற்றுலா எனப் பல சுற்றுலாக்கள் இருக்கின்றன. இந்தச் செலவுக்குத் தேவையான தொகையை முறையாக முதலீட்டின் மூலம் திரட்டலாம். நிச்சயமாக, கடன் பெற்று சுற்றுலா செல்லத் தேவையில்லை.

10. நிம்மதியான ஓய்வுக் காலம்


பணி ஓய்வுக் காலமானது அரசு மற்றும் தனியார் துறையில் 58, 60 வயது என உள்ளது. இந்த வயதில் நிம்மதியாக இருக்க இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம்பிப்பது நல்லது. அப்படி ஆரம்பிக்காவிட்டால், அதற்கான விளைவை ஓய்வுக் காலத்தில் அனுபவிக்க வேண்டியிருக்கும். 

11. செல்வத்தைக் குடும்பத்தினருக்குப் பகிர்ந்தளிப்பது

நாம் உழைத்துச் சேர்க்கும் சொத்தை (மனை, வீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடுகள்) போன்றவை நமக்குப் பிறகு யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை நலமாக இருக்கும்போதே முறையாகத் திட்டமிட வேண்டும். நாமினேசன், பவர் ஆஃப் அட்டார்னி, உயில் போன்ற வழிகளில் இதனை நிறைவேற்றலாம்.

12. நிதிச் சுதந்திரம்

எல்லோருக்கும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதுவும் பண விஷயத்தில் அதிக சுதந்திரம் வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். இந்த பணச் சுதந்திரத்தைப் பெற, குறிப்பிட்ட தொகையை இளம் வயது முதலே முதலீடு செய்துவருவது அவசியம்.

ஜாதகத்தினால் ஏற்படும் பாதகப் பலனிலிருந்து தப்பிக்க பரிகாரத்தின் மூலம் நம்மை நாமே தற்காத்துக் கொள்வது போல, ஒருவர் தன் வருமானத்துக்கேற்ப  வாழ்க்கையின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிற மாதிரி முதலீடுகளை அமைத்துக்கொண்டால், பிரச்னைகளிலிருந்து நிச்சயம் தப்பிக்கலாம்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்களுக்கான பரிகாரத்தை ஜோதிடரிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொள்கிற மாதிரி, நம் பொருளாதாரத்தைக் குறைவில்லாமல் நிறைவேற்றிக் கொள்வதற்கு,
நிதி ஆலோசகரின் ஆலோசனை கட்டாயம் தேவை.