ஏற்றுமதி பிசினஸ் என்பது அரசு மற்றும் தனியார் துறைகள் பலவற்றின் உதவியும் ஆதரவும் பெற்று செய்யக்கூடிய பிசினஸ். ஏனெனில் ஏற்றுமதி பிசினஸ், முழுக்க முழுக்க அரசின் அனுமதியுடன்தான் செய்தாக வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறி நம்மால் எதையும் செய்யமுடியாது.
மேலும், ஒரு பிசினஸில் எல்லா விஷயங்களும் நமக்குத் தெரிந்திருக்காது, எல்லாவற்றையுமே நாமே செய்து விடவும் முடியாது. அதற்கு உதவி செய்யும் வகையிலான சில தனியார் துறைகள் இங்கே உள்ளன. எனவே, வெற்றிகரமான ஏற்றுமதி பிசினஸுக்கு உதவக்கூடிய அரசு மற்றும் தனியார் துறைகள் என்னென்ன, அவற்றின் பங்களிப்பு என்னென்ன, நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஏற்றுமதியாளர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
ஏற்றுமதித் தொழிலில் பங்கு வகிக்கும் அரசுத் துறைகள்: 1. அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம் (Directorate General of Foreign Trade), 2. வணிகவரித் துறை (Commercial Tax Department), 3. மத்திய கலால் மற்றும் சுங்க இயக்குநரகம் (Central Board of Excise and Customs), 4. இந்திய ஏற்றுமதி ஆய்வு ஆணையம் (Export Inspection Council of India), 5. ரிசர்வ் வங்கி, 6. ஏற்றுமதிக் கடன் உத்தரவாத நிறுவனம் (Export Credit Guarantee Corporation), 7. ஏற்றுமதி ஊக்குவிப்பு சபை (Export Promotion Organization), 8. வருமானவரித் துறை (Income Tax Department)மேற்சொன்ன எட்டு துறைகளும் ஏற்றுமதி பிசினஸில் முக்கியப் பங்கு வகிக்கும் அரசுத் துறைகளாகும். இவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

1. அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம்
முன்பே சொன்னதுபோல, ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் அதிகாரம் இந்த அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகத்துக்குத் தான் உண்டு. மேலும், சர்வதேச அளவிலான வர்த்தகங்களையும், முதலீடுகளையும் நிர்வகிக்கும் பங்கு இதற்கு உள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிசினஸை ஊக்குவிப்ப தற்கான திட்டங்களையும் இது வகுக்கிறது.
ஏற்றுமதியாளர்களுக்கு அரசு வழங்கும் MEIS என்ற திட்டத்தை இந்த இயக்குநரகம்தான் செயல்படுத்துகிறது. அது மட்டுமின்றி, வங்கிகளிடமிருந்து பெறப்படும் பிஆர்சி (BRC-Bank Realisation Certificate) என்ற முக்கிய ஆவணமும் இதன் மூலம்தான் ஏற்றுமதி யாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் 37 பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. இதனால் நாட்டின் எந்தப் பகுதியிலிருக்கும் ஏற்றுமதியாள ருக்கும் உதவும் வகையில் செயல்பட முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. வணிகவரித் துறை
நாம் வணிகம் செய்ய முக்கியமாகத் தேவைப்படும் டின், சிஎஸ்டி ஆகிய இரண்டையும் வழங்குவது இந்தத் துறை. நாம் எந்தப் பொருள் விற்பனை செய்தாலும், அதற்குச் செலுத்த வேண்டிய விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி ஆகியவற்றை இந்தத் துறையிடம்தான் செலுத்த வேண்டும்.
3. மத்திய கலால் மற்றும் சுங்க இயக்குநரகம்
நாம் என்ன பொருளை ஏற்றுமதி செய்யலாம், செய்யக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் துறை இது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொழிலில் இருக்கும் அனைத்து நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை இந்தத் துறை கண்காணிக்கிறது. பொருளை உற்பத்தி செய்ய விதிக்கப்படும் கலால் வரியையும், சேவை வரியையும் இந்தத் துறைதான் முடிவு செய்கிறது.
மேலும், போதைப் பொருள் (Narcotic) தொடர்பான விதிமுறைகளையும் இந்தத் துறை கண்காணிக்கிறது. இந்தத் துறையின் அனுமதி இல்லாமல் நாம் எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ முடியாது.
4. இந்திய ஏற்றுமதி ஆய்வு ஆணையம்
ஏற்றுமதியில் சில பொருள்களுக்கு அல்லது சில நாடுகளுக்கு சுகாதாரச் சான்றிதழ் (Health Certificate) அவசியமாக இருக்கிறது. உதாரணமாக, வளைகுடா நாடுகளுக்கு அனுப்புகிற பொருள்களுக்கு இந்தச் சான்றிதழ் மிகவும் அவசியம். இந்தச் சான்றிதழை வழங்குகிறது இந்திய ஏற்றுமதி ஆய்வு ஆணையம்.
5. ரிசர்வ் வங்கி
அந்நிய வர்த்தகத்தில் நடைபெறும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்கானப் பணம் அனுப்புதல் அல்லது பெறுதல் போன்ற செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி கண்காணித்துக்கொண்டே இருக்கும்.
எனவே, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி ஏதேனும் பரிவர்த்தனை நடந்தால் சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு. எனவே, பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. இதுபற்றி பிற்பாடு விரிவாகப் பார்ப்போம்.

6. ஏற்றுமதிக் கடன் உத்தரவாத நிறுவனம்
ஏற்றுமதித் தொழிலில், ஓர் ஏற்றுமதியாளர் மிக முக்கியமாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய ஒரு துறை இது. இதன் தாரக மந்திரமே, “ஏற்றுமதியில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்; நாங்கள் பிரச்னை களின்போது உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்” என்பதுதான். அதாவது, ஏற்றுமதியில் நம்முடைய பொருளுக்கும், பணத்துக்குமான பாதுகாப்பில் இந்தத் துறை நமக்கு உதவுகிறது. மிக முக்கியமான இந்தத் துறை பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
7. ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகள்
ஏற்றுமதித் தொழில் என்பது மிகப் பெரியது. உலகம் முழுவதும் உங்களுக்குப் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி ஏற்றுமதியை வெற்றிகரமாக செய்வதற்கு இந்தத் துறையின் ஆதரவு அவசியம். தன்னந்தனியாகவே முயற்சித்து நாம் நம்முடைய இறக்குமதி யாளரைப் பிடித்து, பொருள்களை அனுப்பி தொழில் செய்ய முடியும். ஆனால், அது ஒரு வரம்புக்குள் தான் இருக்கும். அதையும் தாண்டி நம் தொழிலை விரிவுபடுத்த வேண்டுமெனில், ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்புகளின் ஆதரவு ஏற்றுமதியாளர்களுக்குக் கட்டாயம் தேவை.
ஏற்றுமதிக்கு உதவுகிற அமைப்புகள் மொத்தம் 37 உள்ளன. இவற்றில் அபெடா (APEDA), எம்பெடா (MPEDA) என்ற இரண்டு ஆணையமும், 28 புரமோஷன் கவுன்சில்களும், ஏழு இயக்குநரகங் களும் உள்ளன. ஏற்றுமதியாளர்கள்தான் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கேற்ப, அதற்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பில் தங்களை உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
காய்கறிகள், பழங்கள் பூக்கள் மற்றும் இறைச்சி போன்ற அக்ரோ பொருள்களின் ஏற்றுமதிக்கு ‘அபெடா’வில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மீன் போன்ற கடல் சார்ந்த பொருள்களுக்கு ‘எம்பெடா’வில் பதிவுசெய்ய வேண்டும். டீ, தேங்காய் நார், நறுமணப் பொருள்கள் போன்றவற்றுக்கு அந்தந்த இயக்குநரகத்தில் பதிவுசெய்ய வேண்டும். இவை அல்லாத பிற பொருள்களுக்கு, அந்தந்த புரமோஷன் கவுன்சில்களில் உறுப்பினராகலாம். ஆணையம் மற்றும் இயக்குநரகத்தில் சேராத பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்பவர்கள், ஃபியோ (FIEO) அமைப்பில் உறுப்பினரானாலே போதுமானது.
இந்த அமைப்புகள் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்துவருகிறது. வர்த்தகக் கண்காட்சிகளை நடத்துவது, தங்களது உறுப்பினர்களை அழைத்துச்செல்வது, வழி நடத்துவது போன்ற பல சேவைகளைச் செய்கின்றன. இவற்றைப் பற்றியும் பிற்பாடு பார்ப்போம்.
8. வருமானவரித் துறை
நாம் ஈட்டும் வருமானத்துக்கான வரியை நிர்ணயிப்பது, வரி வரம்பு மற்றும் வரி விலக்கு போன்றவற்றை இந்தத் துறை தீர்மானிக்கிறது. ஏற்றுமதித் தொழில் செய்பவர்கள், தங்களுடைய வருமானத்தை எப்படித் தாக்கல் செய்வது என்பது போன்ற நடைமுறைகளை இந்தத் துறையிடமிருந்து தெரிந்துகொள்வது அவசியம்.
இந்த எட்டு அரசுத் துறைகள் குறித்தும் ஏற்றுமதியாளர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. ஆனால், மிக முக்கியமாக வணிகவரித் துறை மற்றும், இசிஜிசி துறைகளைக் கட்டாயம் ஏற்றுமதியாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஏற்றுமதியில் பங்குபெறும் தனியார் துறைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
(ஜெயிப்போம்)
உச்சத்தைத் தொட்டது ஏற்றுமதி!
இந்திய ஏற்றுமதி, மார்ச் மாதத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து இறக்கத்தையே சந்தித்துவந்த ஏற்றுமதி, 2017-ல் சற்று ஏற்றமடைய தொடங்கி இருக்கிறது. 2016 மார்ச் மாதத்தில் இருந்த ஏற்றுமதியைக் காட்டிலும், கடந்த 2017 மார்ச் மாதத்தில் இந்திய ஏற்றுமதி 27.6% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மேலும், மார்ச் மாதத்தில் ஏற்றுமதியின் வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாகவும் பதிவாகி இருக்கிறது. இதனால் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.