Published:Updated:

ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!

ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!

சித்தார்த்தன் சுந்தரம்

ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!

சித்தார்த்தன் சுந்தரம்

Published:Updated:
ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!

‘ஒழிந்தான் ஓர் எதிரி’ என்று மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறது ஃப்ளிப்கார்ட். உள்ளூர் ஆன்லைன் கம்பெனியான ஸ்நாப்டீல் நிறுவனம், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் கூடியவிரைவில் இணையப்போகிறது. இந்த இணைப்பு நடந்து விட்டால், இனி இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனங்களாக இந்திய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமெரிக்காவின் அமேசான் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கும்.

கடந்த பல ஆண்டுகளாகவே இ-காமர்ஸ் வர்த்தகத்தில் இந்தியாவின் ‘போஸ்டர் பாய்’-ஆக இருந்து வருகிறது ஃப்ளிப்கார்ட். இந்த நிறுவனத்தின் மதிப்பீடு, 2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் 15.2 பில்லியன் டாலராக இருந்தது. 2016-ம் ஆண்டில், சில முதலீட்டு நிறுவனங்களால் இதன் மதிப்பீடு 5.6 பில்லியன் டாலர் என்கிற அளவுக்குக் குறைக்கப் பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!

ஆனாலும், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை விட்டால் வேறு ஆள் இல்லை என்கிற நிலை. எனவேதானோ என்னவோ, சில தினங்களுக்கு முன்பு சீனாவைச் சேர்ந்த டென்சென்ட் (Tencent) 700 மில்லியன் டாலரும்,  அமெரிக்காவை மையமாகக்கொண்டு இந்தியாவிலும் இயங்கிவரும் இபே (eBay)  500 மில்லியன் டாலரும்,  கணினி உலகின் பிதாமகன் மைக்ரோசாஃப்ட் 200 மில்லியன் டாலரும் என கிட்டத்தட்ட 1.4 பில்லியன் டாலர் (ரூ.9,000 கோடி) அளவுக்குப் புதிதாக முதலீடு செய்திருக் கின்றன. இதன் மூலம் ஃப்ளிப்கார்ட்டின் மதிப்பீடு சுமார் 11.6 பில்லியன் டாலரை எட்டியிருக்கிறது.

ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!



2007-ம் ஆண்டு சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோரால் ரூ.6 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனம், கடந்த  பத்தாண்டுகளில் 4.8 பில்லியன் டாலர் அளவுக்கான முதலீட்டை பல முதலீட்டு நிறுவனங்களிட மிருந்தும், துணிகர முதலீட்டாளர்களிடமிருந்தும் (Venture Capitalists) திரட்டியிருக்கிறது. 

இப்போது ஃப்ளிப் கார்ட்டில் சுமார் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள அமெரிக்க ஆன்லைன் நிறுவனமான இபே-தான் வாடிக்கை      யாளர்கள் பொருள்களை விற்க, வாங்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை முதன்முதலில் கொண்டு வந்தது. ஆனால், இந்தப் பயன்பாட்டில் முன்னோடியான அந்த நிறுவனமே அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல், பின்தங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. இப்போது ஃப்ளிப்கார்ட்டில் செய்துள்ள முதலீட்டின் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஃப்ளிப்கார்ட்டின் பங்குகள் கிடைக்கும். அதோடு தனது இந்தியச் செயல்பாட்டு உரிமையையும் ஃப்ளிப்கார்ட்டுக்குத் தந்திருக்கிறது. இந்த ‘ஸ்ட்ராடஜிக்’ ஏற்பாட்டின் மூலம் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்கள், இபே வழியாக இந்தியாவுக்கு அப்பாலுள்ள வாடிக்கை யாளர்களுக்கும் தங்கள் பொருள்களை விற்கமுடியும்.

ஃப்ளிப்கார்ட்டில் 200 மில்லியன் டாலரை இப்போது மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்திருப்பதை, தனது அஷ்யூர் (Azure) என்கிற முகில் தளத்தை (Cloud Platform) பரவலாக்குவதற்கான ஒரு முதலீடாக அது கருதுகிறது.

ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!

சீனாவைச் சேர்ந்த டென்சென்ட் நிறுவனம், ‘மெசஞ்சர் சேவை’யான விசாட்-ஐ (We Chat) வெற்றிகரமாக நடத்தி வருகிறது. ஃப்ளிப்கார்ட்டில் முதலீடு செய்திருப்பதின் மூலம் இந்த நிறுவனம், இந்தியாவில் மின் வணிகத்திலும், ஆன்லைன் பணப் பரிமாற்றத்திலும் இருக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுபோல, இந்த முதலீட்டின் மூலம் டென்சென்ட் நிறுவனமானது, தனக்கு சமூக ஊடகத் துறையில் இருக்கும் பலத்தை ஃப்ளிப்கார்ட் இயங்கிவரும் மின் வணிகத்துறைக்கு எடுத்துச் செல்வதுடன் இரண்டுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி விற்பனையை அதிகரிக்க உதவக்கூடும்.

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் போன்பே (PhonePe), ஜபோங் (Jabong), எஃப்எக்ஸ் மார்ட் (FX Mart), ஆடிகியூட்டி (Adiquity), ஆப்பிடெரேட் (Appiterate), மேப்மைஇண்டியா (MapMyIndia – இதில் ஃப்ளிப்கார்ட்டுக்கு குறைந்த அளவில் பங்கு உண்டு), மிந்த்ரா (Myntra), லெட்ஸ்பை (Letsbuy), வீரீட் (WeRead) போன்ற தொடக்கநிலை வணிகத் துறை நிறுவனங்களைக் கையகப்படுத்தியதுபோல, இப்போது ஸ்நாப்டீலையும் கையகப்படுத்தப் போகிறது. 

சமீபத்திய முதலீடு குறித்து ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் சிஇஓ பின்னி பன்சால், “எங்கள் விற்பனையை இந்தியாவுக்கு அப்பால் கொண்டு செல்ல இபே-யும், பேமென்ட் வணிகத்தின் வளர்ச்சிக்கு டென்சென்ட்டும் உதவும்” என்கிறார். மேலும் அவர், “தற்சமயம் கிடைத்திருக்கும் முதலீட்டை எங்களின் பிரைவேட் லேபிள் வணிகத்தின் பரவலாக்கத்துக்கும், முக்கிய பொருள் பிரிவுகளான ஃபர்னிச்சர், பலசரக்கு ஆகியவற்றை ரீலான்ச் செய்யவும், ‘போன்பே’ என்கிற பேமென்ட் வணிகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துவதாக இருக்கிறோம்” என்றும் சொல்லியிருக்கிறார்.

ஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஸ்நாப்டீலுடன் இணையும்பட்சத்தில், அதில் அதிகமாக முதலீடு செய்திருக்கும் ஜப்பானின் சாஃப்ட்பேங்கும் நேரடியாக இல்லாவிட்டாலும் ஃப்ளிப்கார்ட்டின் முதலீட்டாளராக மாறும். அப்படியொரு நிலை ஏற்படும்பட்சத்தில், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட், அமேசான் (ஏற்கெனவே இந்தியாவில் 5 பில்லியன் டாலர் வரைக்கும் முதலீடு செய்யவிருப்பதாக இதன் நிறுவனர் ஜெஃப் பெஜாஸ் சொல்லி இருப்பதை இந்தத் தருணத்தில் நினைவுகொள்வது அவசியம்), அலிபாபா (தற்சமயம் நேரடியாக இல்லாவிட்டாலும் பேடிஎம் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பதன் மூலம் அலிபாபா இந்தியாவின் கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டது) போன்ற மும்மூர்த்திகளின் ராஜ்யமாக இந்தியாவின் இ-காமர்ஸ் வணிகம் மாறும்.

இந்த மாற்றம் அதிரடியான பல விளைவுகளை இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் உருவாக்கும். இந்திய ஆன்லைன் சந்தையில் தங்களின் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், மக்கள்  மனதில் தொடர்ந்து இருக்கவும் பல அதிரடிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளக்கூடும். பொருள்களின் விலையைப் போட்டி போட்டுக் கொண்டு குறைக்கலாம். அதன் மூலம் இந்திய ஆன்லைன் வர்த்தகம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லலாம். அப்போது என்னென்ன விஷயங்கள் நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போமே!

அலிபாபாவை விஞ்சிய டென்சென்ட்!

டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், 1998-ம் ஆண்டு சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். இது சமூக ஊடகம், இன்ஸ்டென்ட் மெசேஜிங், வெப் போர்ட்டல், பொதுஜன ஊடகம், ஆன்ட்டி வைரஸ் மென்பொருள், ஆன்லைன் கேம்ஸ் என பல துறைகளிலும் கால்பதித்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஆண்டு வருமானமான 152 பில்லியன் டாலர், அலிபாபா(101 பில்லியன் டாலர்), அமேசான் (136 பில்லியன் டாலர்) ஆகிய நிறுவனங்களின் வருமானத்தைவிட அதிகம். இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் மார்ட்டின் லாவ் (Martin Lau). இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 32,000. இது அமேசானில் வேலை பார்க்கும் பணியாளர்களைவிட (3,41,000) 10 மடங்கு குறைவானதாகும்.