Published:Updated:

அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!

அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!
பிரீமியம் ஸ்டோரி
அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!

உழைப்பால் உயர்ந்த கதைசி.சிங்கராஜ்

அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!

உழைப்பால் உயர்ந்த கதைசி.சிங்கராஜ்

Published:Updated:
அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!
பிரீமியம் ஸ்டோரி
அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!

ணக்காரர்கள்தான் சொந்தமாகத் தொழில் தொடங்கி ஜெயிக்க முடியும் என்றில்லை. தொடர் உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தொழிலில் ஜெயிக்க முடியும் என்பதற்கு நல்லதொரு உதாரணமாக இருக்கிறார் கோவில்பட்டியில் ‘ஓட்டல் ஆனந்தபவன்’ வைத்திருக்கும் கோ.இசக்கிமாரி. சாதாரணத் தொழிலாளியாக இருந்த அவர், இன்று ஹோட்டல் நடத்தும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? அவர் வளர்ந்த கதையை அவரே சொல்கிறார்...

“எனக்கு சொந்த ஊர் பாளையங்கோட்டை. என் வீட்டில் நான்தான் மூத்த பையன். அம்மா, பீடி சுற்றும் தொழிலாளி; அப்பா, ஹோட்டல் தொழிலாளி.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பள்ளி முடிந்தபின் மாலை வேளையில் முறுக்கு வாங்கி விற்கச் சென்றுவிடுவேன். பத்து ரூபாய் சம்பாதிக்க 200 முறுக்கு விற்க வேண்டும். எனவே, இரவு ஒன்பது மணியானலும் 200 முறுக்கு விற்றபின்பே வீடு திரும்புவேன். விடுமுறை நாட்களில் 500-700 முறுக்குகள் வரை விற்பேன்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்க உதவியாக இருந்த முறுக்குத் தொழிலும் நலிந்தது. காப்பித் தூள் கம்பெனியில் பாக்கெட் போடும் பணியில் சேர்ந்தேன். அங்கு ஒரு நாளைக்கு 18 - 20 ரூபாய் வரை கிடைத்ததது. அதில் பஸ் காசு போக மீதியை வீட்டுக்குத் தந்துவிடுவேன்.  வார விடுமுறை நாட்களில் டீ கடையில் வேலை பார்ப்பேன்.

அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!

என் தந்தை கோமதிநாயகம் 25 ஆயிரம் ரூபாயை யாரிடமோ கடன் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வீட்டை விட்டுப் போய்விட்டார். எனவே, குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் நானே ஏற்று நடத்த வேண்டியதாயிற்று.

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு வேனில் சென்று எழுதவேண்டிய கட்டாயம். அதற்கு 300 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், கையில் பணம் இல்லை. எனவே, என் அம்மா தாலிக் கயிற்றில் இருந்த தங்கத்தை விற்றுதான் பரீட்சை எழுதினேன்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் பாஸ் செய்தபின், ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஆபீஸ் பாய் வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் ரூ.450 ஊதியம்.  பின்பு திருநெல்வேலியில் ஜவுளிக் கடை ஒன்றில் சுத்தம் செய்யும் வேலை. அங்கு சம்பளம் ரூ.600.

பின்பு, மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி ஒன்றில் வேலை. அதன்பின், மேற்படிப்புப் பயில உதவியாக இருக்கும் என்று கருதி கிளீனராக பணியில் சேர்ந்தேன். கிளார்க், ஸ்டோர் கீப்பர் மற்றும் அக்கவுன்ட் அசிஸ்டென்ட் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றேன். அதே கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே பி.காம் மற்றும் எம்பிஏ படிப்பைத் தொலைதூரக் கல்வி மூலம் படித்தேன்.

அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!

என் தங்கைக்குத் திருமணம் முடிக்க வேண்டிய தருணம் வந்தது. ஆனால், கையில் பணம் இல்லை. பலரிடமிருந்து உதவி பெற்று பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்து நல்லபடியாக திருமணம் செய்துவைத்தோம்.

மெத்தை உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்த அதேவேளையில், எலெக்ட்ரிகல் நிறுவனமொன்றில் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணி வரை பகுதி நேரப் பணியில் சேர்ந்தேன். பெரிய ஹோட்டல் ஒன்றில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவிக்கு என்னை அழைப்பார் என் நண்பர் சிவலிங்கம். நான் இரவு பத்து மணிக்கு மேல் சென்று கணக்குகளை எழுதிக் கொடுப்பேன். அதேபோல், இன்னொரு நிறுவனத்திலும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் வேலையைச் செய்து தருவேன். இதன் மூலம் எனக்கு 4,000 ரூபாய் வரை கிடைத்தது.

அன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி!

அரிதாக கிடைத்த ஓய்வு நேரத்திலும், மெத்தை கம்பெனியிலிருந்து கிடைக்கும் கழிவுகளைக் கேட்டு வாங்கி, தலையணை செய்து விற்பனை செய்தேன். இதில் மாதம் ரூ.3,000 வரை வருமானம் கிடைத்தது. இப்படி இரவுபகலாக வேலை பார்த்து அப்பா வாங்கிய கடன், தங்கை திருமணத்துக்காக வாங்கிய கடன் என அனைத்தையும் அடைத்தேன். பிறகு, நெல்லையில் பெரிய ஹோட்டல் ஒன்றில் சீஃப் அக்கவுன்டன்ட் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றிய நான்கு வருடங்களில் ஹோட்டல் தொழில் சம்பந்தமான பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டேன்.

இப்படியே இருந்தால் வாழ்க்கையில் வளர முடியாது. இந்த வயதில் முன்னேறிச் சென்றால்தான் உண்டு என நினைத்து, அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாக ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால், முதலீடு செய்வதற்குக் கையில் பணம் இல்லை. வங்கியிலும் கடன்தர மறுத்துவிட்டார்கள். எனவே அம்மா, மனைவி, தங்கை, தம்பி மனைவி என அனைவரின் நகைகளையும் அடகு வைத்துதான் ஆறு மாதங்களுக்கு முன் கோவில்பட்டியில் ஹோட்டல் தொடங்கினேன். என் நண்பர் ராகவன் ஓட்டல் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார். ஆறே மாதங்களில் இரண்டு கிளைகளைத் தொடங்கி இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் வெளிநாடுகளிலும் கிளைகளைத் தொடங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைத்து வருகிறோம்” என்றார்.

விடா முயற்சியும் உழைப்பும் இருந்துவிட்டால், வெற்றி தேடிவரும் என்பதற்கு இசக்கிமாரி இன்னொரு உதாரணம்.

படங்கள் :  வெ.வித்யா காயத்ரி