Published:Updated:

ராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்!

ராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்!
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

ராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

Published:Updated:
ராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்!
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்!

காத்மா காந்திக்கு மிக நெருக்கமானவரின் பேரன், பிசினஸ் மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் கால்பதித்த குடும்பத்தின் வாரிசு என பல அடையாளங்கள் இருந்தாலும், பல்சர் மற்றும் எம்-80 மூலம் வாகன ஓட்டிகளின் மனம் கவர்ந்த பஜாஜ் குழுமத்தின் தலைவர் என்பதுதான் இவரது உண்மையான அடையாளம். இருசக்கர வாகனங்களின் பிரிவில் முன்னணி நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ வளர்ந்ததற்கும், பஜாஜ் குழுமம் பல்வேறு பிசினஸ்களில் கால்பதித்து இந்தியாவின் டாப் 10 முன்னணிக் குழும நிறுவனமாக உயர்ந்ததற்கும் அவர் ஒருவர் மட்டுமே காரணம். அவர்தான் ராகுல் பஜாஜ்.

அவரது காலச் சக்கரம் பல சோதனையான காலகட்டங்களைச் சந்தித்திருக்கிறது என்பதால், அவருடைய வளர்ச்சிப் பயணம் பிசினஸ் செய்ய விரும்பும் அனைவருக்குமே ஒரு சுவாரஸ்யமான பாடமாக இருக்கும்.

ராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்!

ரத்தத்தில் ஊறிய பிசினஸ்

ராகுல் பஜாஜின் தாத்தா ஜாம்னலால்ஜி பஜாஜ்.  பஜாஜ் நிறுவனத்தின் விதையைப் போட்டவர் இவர்தான். ராஜஸ்தான் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த அவர், ஆரம்பத்தில் வெளிநாடுகளிலிருந்து இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் பிசினஸை செய்துவந்தார்.

அப்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டங்கள் தீவிரமாக இருந்த காலகட்டம். ராகுல் பஜாஜின் தாத்தா, மகாத்மா காந்திக்கு மகன் போலவே இருந்தவர். அரசியலிலும் பிசினஸிலும் கவனம் செலுத்தி வந்தார். அவரது மகன், அதாவது ராகுல் பஜாஜின் தந்தை கமல்நாயன் பஜாஜ் மக்களவை உறுப்பினராக இருந்தார். 1946-ல் பிசினஸ் காரணங்களுக்காக, தாங்கள் வசித்து வந்த ஊரான வார்தாவிலிருந்து மும்பைக்கு மாறினார்கள்.

பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்த ராகுல் பஜாஜுக்கு ஆரம்பத்திலிருந்தே பொருளா தாரத்தையும் பிசினஸையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதன்படியே டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டமும், ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் பிசினஸ் மேலாண்மைப் பட்டமும் படித்துத் தேர்ச்சி பெற்றார். அத்துடன்,  மும்பைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் பஜாஜ் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலைசெய்து, அதன் விற்பனை உள்ளிட்ட அனைத்து விஷயங் களையும் கற்றுக்கொண்டார்.

 வர்த்தகத்திலிருந்து உற்பத்திக்கு

1965-ல் ராகுல் பஜாஜின் கையில் பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. படித்துமுடித்து, பிசினஸ் அனுபவமும் இருந்த அவருடைய துடிப்புக்கு, பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு நன்றாகவே தீனி போட்டது. வாகனங்களை வாங்கி விற்கும் வர்த்தகம் செய்துகொண்டிருந்த பஜாஜ் நிறுவனத்துக்குச் சொந்தமாக வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான உரிமம் கிடைத்தபிறகும் கூட அந்த நிறுவனம், அதற்குத் தயாராகாமல் இருந்தது.

ஆனால், ராகுல் பஜாஜிடம் பொறுப்புவந்த பிறகு அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார். அதுநாள் வரை வாகனங்களை வாங்கி விற்றுக்கொண்டிருந்த நிறுவனம், சொந்தமாக வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 1965-ல் பஜாஜ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3 கோடியாக இருந்தது. ஆனால், இன்று பஜாஜ் ஆட்டோ பிரிவின் மொத்த வருவாய்      ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல். ராகுல் பஜாஜ் முழுக்க முழுக்க இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

சில வெளிநாட்டு நிறுவனங் களுடன் கைகோத்து வித்தியாசமான சில முயற்சி களை, வாகன உற்பத்தியில் செய்தார் ராகுல் பஜாஜ். இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்திசெய்து விற்பனை செய்துவந்த ராகுல், பலவிதங்களில் சந்தையைப் பிடிக்க தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். ‘பியாஜியோ’ எனும் இத்தாலி நிறுவனத்துடன் சேர்ந்து ‘வெஸ்பா’ என்ற ஸ்கூட்டரைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது பஜாஜ். இந்த ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதனுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகு தனியாகவே வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்.

1972-ம் ஆண்டில் ‘பஜாஜ் சேட்டக்’ என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தினார். 1976-ம் ஆண்டில் ‘பஜாஜ் சூப்பர்’ என்ற மேலும் ஒரு புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. 1970-80 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தது. பெட்ரோலியப் பொருள்களின் தட்டுப்பாடு  அதிகமானதால், கார் வைத்திருந்தவர்களும் இருசக்கர வாகனங்களுக்கு மாற வேண்டிய நிர்பந்தம் உருவானது. இதனால் பஜாஜ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டது. 1980-களில் பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை எட்டு மடங்காக உயர்ந்தது. ராகுல் பஜாஜ் நாளடைவில் புதிய புதிய வடிவங்களிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் ஸ்கூட்டர்களைத் தயார் செய்தார். முன்பு முன்பக்கம் இன்ஜின் இருப்பது போன்று தயார் செய்யப்பட்டதை மாற்றி, பின்பக்க இன்ஜின் இருக்கும் ஸ்கூட்டர்களைத் தயார் செய்தார்.

 சந்தித்த சவால்களும், எதிர்கொண்ட துணிச்சலும்

இப்படி நன்றாகப் போய்க்கொண்டிருந்த பஜாஜின் தொழில், 1990-களில் தாராளமயமாக்கலின் வடிவில் அடிவாங்க ஆரம்பித்தது. ஏனெனில், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடுசெய்து வாகனங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தன. ஹீரோ-ஹோண்டா இணைந்து இந்தியாவில் மோட்டார் பைக் தயார் செய்து விற்பனை செய்தன. நாளடைவில் மக்கள், ஸ்கூட்டரிலிருந்து பைக்கு களுக்கு மாறினர். இதனால் பஜாஜ் சற்று ஆட்டம் கண்டது. அதற்கு முன்னரே ‘பியாஜியோ’  நிறுவனத்தினால் ஒருமுறை பஜாஜ் பிசினஸ் பாதிக்கப்பட்டது. ‘பியாஜியோ’  நிறுவனத்துட னான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபிறகு, பியாஜியோ, எல்எம்எல் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்கூட்டர் தயாரித்து விற்பனைச் செய்து பஜாஜுக்குப் போட்டியைக் கொடுத்தது. இதனால் பஜாஜ் ஸ்கூட்டர் விற்பனை குறைய ஆரம்பித்தது. ஆனாலும் பஜாஜ் நிறுவனம் அசராமல் தன்னை தானே புதுப்பித்துக்கொள்ள தயாரானது. அப்போது அதற்கிருந்த ஒரே பலம், இந்தியா முழுவதும் இருந்த டீலர் நெட்வொர்க்.

எனவே, காலத்துக்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டால், எளிதில் மீண்டு வந்துவிட முடியும் என்று நம்பிய ராகுல் பஜாஜ், ஜப்பானைச் சேர்ந்த கவாஸகி நிறுவனத்துடன் சேர்ந்து பைக் செய்யத் தொடங்கினார். ‘கேபி 100’, ‘கேபி 4 எஸ் சாம்பியன்’ போன்ற பைக்குகளைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தார். பஜாஜ் எம்-50 ஸ்கூட்டரை மெருகேற்றி, பஜாஜ் எம்-80 ஆக வெளியிட்டார். விற்பனை மீண்டும் சூடு பிடித்தது. உள்நாட்டு விற்பனையில் மட்டுமல்லாமல், ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற்றார்.  ஏற்றுமதியில் எல்லோரும் கவனம் செலுத்தும் மேற்கத்திய நாடுகளைத் தவிர்த்து, இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்து வெற்றிபெற்றார்.

 இளைஞர்கள் கொண்டாடிய பஜாஜ்

பிசினஸில் வளர்ச்சி என்பது நிரந்தரமல்ல. ஒவ்வொரு நாளும் வளர்ச்சியின் அடுத்தகட்ட நொடிகளைக் கடந்தால்தான் வெற்றியின் அகராதியில் நீங்காத இடம் நமக்குக் கிடைக்கும். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்ட ராகுல் பஜாஜ், ‘டோக்கியோ ஆர் அண்டு டி’ என்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து  ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பை நிறுவினார். ஆராய்ச்சிக் கூடத்தின் பலனாக ‘பஜாஜ் கிளாஸிக்’ ஸ்கூட்டர், ‘சூப்பர் எக்ஸ்எல்’ ஸ்கூட்டர், ‘கேபி 100’ பைக், ‘ரேவ்’ என்ற ஸ்டெப் த்ரூ பைக், ‘கேபி பாக்ஸர்’ பைக் ஆகியவற்றையும் உற்பத்தி செய்து, விற்பனைக்கு வெளியிட்டார். அதுமட்டு மல்லாமல் டீசல் ஆட்டோவையும் அறிமுகம் செய்தார்.

1998-ல் தனது மூன்றாவது தொழிற்சாலையை, நவீன தொழில்நுட்பத்துடன் புனேயில் தொடங்கினார். பஜாஜ் காலிபர், ப்ரவ்லர், ஸ்பிரிட் ஸ்கூட்டரெட், லெஜன்ட் எனும் நான்கு ஸ்ட்ரோக் ஸ்கூட்டர்களைத் தயார் செய்து விற்பனைக்கு வெளியிட்டார். ஸ்கூட்டர்களை வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஆராய்ச்சிக்கூடத்தில் பஜாஜ் நிறுவனத்தின் அடுத்தகட்ட அத்தியாயத்துக்கான விதை அமைதியாகத் தயாரானது. பைக் விற்பனையில் அதன் ஒரே போட்டியாளராக இருந்த ஹீரோ ஹோண்டாவை பஜாஜ், தனது ஒரே படைப்பின் மூலம் சிதறடித்தது. 2001-ல் பஜாஜ் ஆராய்ச்சிக்கூடத்தின் செல்லப் பிள்ளையாக வெளிவந்த பஜாஜ் பல்சர் 150 சிசி மற்றும் 180 சிசி பைக்குகள் இளைஞர்களின் மனதைக் கவர்ந்தன. அதன்பிறகு, பைக் என்றால் பல்சர் தான் என்ற நிலைக்கு ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களும் நினைக்கும் வண்ணம் பல்சர் பைக்குக்கு வரவேற்பு இருந்தது.

 தந்தையின் அறிவுரை

அவருடைய தந்தை சொல்வாராம். “உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதோ, அதை செய். ஆனால், நீ செய்ய வேண்டுமென்று நினைத்ததை மற்ற எவரையும்விட சிறப்பாக செய். அதாவது, ப்ளேபாயாக வேண்டுமென்று நினைத்தாலும் சரி, பிரின்ஸ் அலிகான் மாதிரி பிளேபாயாக இருக்க வேண்டும்” என்பாராம்.  ஆனால், ராகுல் பஜாஜ் ப்ளேபாயாக ஆகவில்லை. மாறாக, பல ப்ளேபாய்களை உருவாக்கினார். பஜாஜ் நிறுவன வாகனங்கள் பல ப்ளேபாய்கள் உருவாகக் காரணமாக இருந்தன. அடுத்தடுத்து பல பைக் மாடல்களை அறிமுகம்செய்து பைக் விற்பனையிலும் முன்னணி நிறுவனமாக மாறிய பஜாஜ், அதன்பிறகு ஸ்கூட்டர் தயாரிப்பதை நிறுத்திவிட்டது.

ஆனால், வீட்டு உபயோகப் பொருள்கள், மின் விளக்குகள், இரும்பு மற்றும் எஃகு, இன்ஷூரன்ஸ், டிராவல் மற்றும் ஃபைனான்ஸ் ஆகிய துறைகளிலும் பிசினஸைத் தொடங்கி அசத்தினார் ராகுல் பஜாஜ். பஜாஜ் நிறுவனத்தை பஜாஜ் குழுமமாக வளர்த்தெடுத்தார். பஜாஜ் ஆட்டோமொபைல் தவிர, பிற பிசினஸ்களிலும் கணிசமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது பஜாஜ் நிறுவனம். அவரது வாரிசுகள், இன்று அந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று கொண்டு  இருக்கின்றனர்.

ஏழு டாக்டர் பட்டம்!

ராகுல் பஜாஜ், இந்தியத் தொழில்துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். அதற்கு பல்வேறு விருதுகள் சர்வதேச அளவில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு, பத்ம பூஷண் விருது வழங்கியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய இவருக்கு, ரூர்கி ஐஐடி உள்பட ஏழு பல்கலைக் கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. மேலும், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம், வாகன உற்பத்தி மற்றும் துணை நிறுவனங்கள் மேம்பாட்டு அமைப்பு என பல்வேறு தொழில்துறை அமைப்புகளின் தலைவர் பொறுப்பிலும் இருந்திருக்கிறார்.