Published:Updated:

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0

ஜெ.சரவணன்

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0

ஜெ.சரவணன்

Published:Updated:
மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0

பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடிகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. 2014 பொதுத் தேர்தலில் இருந்தே கறுப்புப் பணம், கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதப் பணம் ஆகியவற்றை ஒழிப்பேன் என்று தீவிரமாகப் பேசி வந்தார் பிரதமர் மோடி.

‘‘இரண்டு வருடம் ஆச்சு... சொன்னது என்ன ஆச்சு’ என்று ஓட்டுப்போட்ட மக்களும், மோடி அரசின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்துவரும் அரசியல் விமர்சகர்களும் பரவலாகப் பேச ஆரம்பித்த சமயத்தில்தான், ஒரே நாளில் ஒட்டுமொத்த நாட்டையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டார்.

2016 நவம்பர் 8-ம் தேதி, ஏற்கெனவே இருந்த 500, 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்கிற திடீர் அறிவிப்பின் மூலம் பணக்காரர், ஏழை என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் வங்கிகளுக்கு ஓட வைத்தார். தங்களிடம் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கியில் செலுத்திவிட்டு, 50 நாட்கள் மக்கள் பணத்தட்டுப்பாட்டால் பட்டபாடு சொல்லிமாளாது.

ஆனாலும், மக்கள் பட்ட கஷ்டத்துக்கான பலன் இப்போது மெள்ள மெள்ளக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. இதுநாள் வரை ரொக்கமாக பணப் பரிமாற்றம் செய்து வந்தவர்கள் எல்லாம் இப்போது வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டுவரை  லட்சக் கணக்கில் ரொக்கப் பணம் வாங்கிய இன்ஜினீயரிங் கல்லூரிகள், இப்போது வங்கியில் பணம்கட்டச் சொல்லி இருப்பது பெரிய முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை நாளும் கணக்குவழக்கு இல்லாமல் வட்டி வாங்கி, அரசாங்கத்துக்கு எந்த வரியையும் கட்டாமல் ஏமாற்றி வந்தவர்கள், இப்போது அந்த வட்டித் தொழிலையே செய்ய முடியாமல் வேறு தொழிலுக்கு மாறிவருவது நல்ல விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் ஓரளவுக்கு நிறைவேறிய நிலையில், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ‘க்ளீன் மணி 2.0’ என்கிற இந்த அதிரடி ஆக்‌ஷன் மூலம், கடந்த காலத்தில் அரசுக்கு உரிய வரியைக் கட்டாமல் ஏமாற்றிவந்த பலருடைய வீட்டுக்கும் இனி வருமான வரித் துறையை அனுப்பி, குடையவிருக்கிறார் பிரதமர் மோடி. 

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0

க்ளீன் மணி 2.0

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, புழக்கத்திலிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன. டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அதுவரை சொல்லப்படவில்லை. காரணம், புழக்கத்தில் உள்ள பணத்தில் கறுப்புப் பணம், கள்ளப் பணம் போன்றவை வங்கிக்கு வராது என்று மத்திய அரசு எதிர்பார்த்தது.

ஆனால், அரசாங்கம் எதிர்பார்த்த மாதிரி நடக்கவில்லை. புழக்கத்திலிருந்து 99 சதவிகித 500, 1,000 ரூபாய் நோட்டுகளும் டெபாசிட் செய்யப்பட்டன. இதில் எது கறுப்புப் பணம், எது கள்ளப் பணம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கவேண்டிய கட்டாயம் மத்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. கறுப்புப் பணம், கள்ளப் பணம் ஆகியவற்றில் இருந்து ‘நியாயமான முறையில் சேர்க்கப்பட்ட’ சுத்தமான  பணம்  (க்ளீன் மணி) எது என்பதைக் கண்டறிய வேண்டிய நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது மோடி அரசு.

 ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை

‘க்ளீன் மணி’ என்கிற இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் தங்களுடைய பணத்துக்கான ஆதாரங்களைத் தானாக முன்வந்து சமர்ப்பிக்க 2017 மார்ச் 31 வரை கெடு விதிக்கப்பட்டது.அரசாங்கம் அளித்த இந்த வாய்ப்பினைத்  தட்டிக் கழித்தவர்களைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களைத் தண்டனைகளுக்குள்ளாக்கவும் தற்போது ‘க்ளீன் மணி 2.0’-வை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை டெபாசிட் செய்தவர்களிடம், ‘அந்தப் பணம் உங்களுக்கு எப்படி வந்தது, அதற்கான வரியைக் கட்டிவிட்டீர்களா’ என  விளக்கம் கேட்டு வருமான வரித் துறை  நோட்டீஸ் அனுப்பவிருக்கிறது.

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0


 முக்கிய அம்சங்கள்

‘ஆபரேஷன் க்ளீன் மணி 2.0’-ன் முக்கிய நோக்கம் என்ன என்று ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டோம். இதில் உள்ள சில அம்சங்களைப் பட்டியலிட்டார் அவர்.

“ ‘ஆபரேஷன் க்ளீன் மணி’யின் முதல்கட்ட நடவடிக்கையில், நோட்டீஸ் அனுப்பப்பட்ட 18 லட்சம் பேரில் 9.5 லட்சம் பேர் மட்டுமே பதிலளித்துள்ளனர். இப்போது ஆபரேஷன் க்ளீன் மணி 2.0-ஐ வருமான வரித்துறை முன்னெடுத்துள்ளது.

ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ள தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்குகளின் விவரங்கள் வங்கி களிடமிருந்து பெறப்பட்டு, டேட்டா அனாலிடிக்ஸ் குழு மூலம் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளன.

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் உள்ளவர் களும் இந்த ஆப்ரேஷனில் சிக்குவார்கள். டெபாசிட் தொகைக்கான விளக்கங்கள், அதற்கான ஆதாரங்களைச் சோதித்து சரிபார்த்த பின்னரே ஏற்றுக்கொள்ளப்படும்.

பண மதிப்பு நீக்க சமயத்தில் அதிக அளவில் பரிவர்த்தனை செய்த தனிநபர்களின் பரிவர்த்தனை விவரங்கள், கடந்த காலப் பரிவர்த்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும். அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

வருமான வரித் துறை அனுப்பும் நோட்டீஸ் களுக்கான பதில்களை ஆன்லைனில் தெரிவித்தால் போதுமானது. வருமானவரித் துறை அலுவலகங்களுக்குப் போகத் தேவையில்லை. நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காதவர்கள் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். வரி ஏய்ப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும். ரூ.25 லட்சத்துக்குக் கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கு அபராதமும், 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படும். ரூ.25 லட்சத்துக்கு மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கு  அபராதமும், 6 மாதம் முதல் 7 வருடம் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படும். இதுவரை செயல்படாமலிருந்த பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், கறுப்புப் பணத்தை சொத்துகளாக மாற்றி வைத்திருப்பவர்களும் இனி தப்ப முடியாது. 

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0செயல்படாமல் இருந்த கணக்குகள், முடக்கப்பட்ட கணக்குகள் போன்றவை பண மதிப்பு நீக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்தக் கணக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்” என்றார்.

மத்திய அரசின் இந்த ‘க்ளீன் மணி 2.0’ நடவடிக்கையின் நோக்கம் சரிதானா என  ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம். 

 வரி ஏய்ப்பாளர்களுக்கு முதல் அடி

“அரசு எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதனால் இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என்று விமர்சிக்கப்பட்டது. தற்போது இந்த ‘க்ளீன் மணி  2.0’ நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

இந்த நடவடிக்கையில் இதுவரை ரூ.5 லட்சம் கோடி வரையிலான தொகை, சந்தேகத்துக்குரிய டெபாசிட்டாகக் கண்டுபிடிக்கப்பட்டு, டெபாசிட் செய்த நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவிருக்கிறது வருமான வரித் துறை.

இதுவரை வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணம் சேர்த்து வந்தவர்களின் ஆட்டத்துக்கு இது முதல் அடியாக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்றத்துக்கு அழைத்து, மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காண்பது  என்பது உடனடியாக நடக்கக்கூடியதல்ல.

குறைந்தபட்சம் அதற்கு இரண்டு ஆண்டுகளாவது ஆகும்; அதிகபட்சம் 20 ஆண்டுகளும் ஆகலாம்.
தீர்வுகள் உடனடியாக கிடைக்கவில்லை என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை  விமர்சிப்பது சரியல்ல. இதுவரை கேட்க ஆளில்லாமல் ஆடியவர்களைக் கேள்வி கேட்க ஒரு கறார் நடவடிக்கை செயல்படுத்தப்படுவதே பெரிய வெற்றிதான்” என்றார். 

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0

 பயம் தேவையில்லை

அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாதாரண மக்கள் பாதிப்படைவார்களா என்பது குறித்து ஆடிட்டர் வைத்தீஸ்வரனிடம் கேட்டோம்.  “க்ளீன் மணி 2.0 என்பது தற்போது செய்தி அளவில்தான் இருக்கிறது. வருமான வரித் துறை தரப்பிலிருந்து இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

ஆனால், க்ளீன் மணியின் முதல்கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக நடந்திருக்கிறது. 18 லட்சம் பேர், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருப்பதாகக் கண்டறியப்பட்டி ருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி.

இப்போது இந்த ‘க்ளீன் மணி 2.0’ மூலம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்களையும் கணக்கெடுத்தால், இன்னும் அதிக அளவிலான மக்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பக்கூடும். வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வருவதை நினைத்துப் பதறாமல், அதற்கான விளக்கம் அளித்து ஒத்துழைப்புத் தருவது நாட்டு மக்களின் கடமை.

இந்த நடவடிக்கையைப் பொறுத்தவரை, வருமான வரித் துறை எழுப்பும் கேள்வி முக்கியமானவை. ஒருவர், பல லட்சம் ரூபாய் அளவுக்கு ரொக்கமாகப் பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய தேவை என்ன  என்பதுதான் முக்கியமான கேள்வி. அப்படி உண்மையாகவே தேவை இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆதாரமும் கட்டாயமாக மக்களிடம் இருக்கும். திருமணத்துக்கு வைத்திருந்த பணம், கடனாக வாங்கிய பணம் எனப் பல காரணங்கள் சொன்னாலும், அதற்கான ஆதாரங்கள் மக்களிடம் கண்டிப்பாக இருக்கவே செய்யும். கடன் வாங்கியதற்கான சான்று, பணத்தை எடுத்ததற்கான ஆதாரம் உள்ளிட்ட விவரங்கள் நிச்சயமாக இருக்கும்.  அப்படி முறையான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில், அந்த ஆதாரங்களை வருமான வரித் துறையிடம் காட்டினால் போதும். எனவே, வருமான வரித் துறையின் எந்தவொரு நோட்டீஸுக்கும் யாரும் பயப்படத் தேவையில்லை” என்றார்.

ஆக மொத்தத்தில், இந்தக் ‘க்ளீன் மணி 2.0’ நடவடிக்கை வரி ஏய்ப்பாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமே இல்லை.  அதேநேரத்தில் அதை முழுமையாகச் செயல்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பும், அதிகாரிகள் எண்ணிக்கையும் துரிதமான செயல்பாடுகளும் மிகவும் அவசியம் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், வழக்கம்போல இந்த நடவடிக்கையும் வெறும்  பிரசாரத்துக்கு மட்டுமே பயன்படுமேயொழிய, பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது.

இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை! 

மோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0


ஜோதி சிவஞானம்,
பொருளாதாரப் பேராசிரியர்


 “அரசு எடுக்கும் எந்தப் பொருளாதார நடவடிக்கையும் அதன் சரியான நோக்கத்தைச் சென்றடைவதே இல்லை. ‘நவம்பர் 8-ம் தேதி எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கறுப்புப் பணம், கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதப் பணம் போன்றவை ஒழிக்கப்படும்’ என்றார் மோடி. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் கோடி வரை கறுப்புப் பணம் வங்கிக்கு வராது என்று அரசு சொன்னது. ஆனால், மொத்தப் பணமும் வங்கிக்கு வந்துவிட்டது. டிசம்பர் 10 தேதிக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் 80 சதவிகிதப் பணம் வங்கியில் டெபாசிட் ஆகிவிட்டது என்றது. அடுத்த 20 நாள்களில் மீதமுள்ள பணமும் வந்துவிடும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், பொருளாதார விவகாரத் துறையின் செயலாளர் சக்திகந்த தாஸ், ரிசர்வ் வங்கி வெளியிட்ட விவரம் தவறானது என்று சொன்னார். அதற்குப் பிறகு ரிசர்வ் வங்கியோ,  நிதி அமைச்சகமோ பண மதிப்பு நீக்க நடவடிக்கையால்  டெபாசிட் ஆன தொகை எவ்வளவு என்று உறுதியாகச் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, எவ்வளவு பணம் பழைய 500, 1,000-க்குப் பதிலாக, புதிதாகக் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் சொல்லப்பட வில்லை. சொன்ன காரணங்கள் எதுவும் நடக்காததால், டிஜிட்டல், பணமில்லாதப் பொருளாதாரம் என வேறு விஷயங்களைப் பேசி, மக்களின் கவனத்தைத் திசை திரும்ப ஆரம்பித்தது மத்திய அரசாங்கம். 

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின்  சில்லறை பணத் தட்டுப்பாடு இன்னும் முழுமையாகத் தீரவில்லை. பணத் தட்டுப்பாட்டால் முறைப்படுத்தப்படாத துறை முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாக ஐஎம்எஃப், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சொல்லி இருக்கிறது. ஆனால் அரசு, வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்றே சொல்லி வருகிறது. இது பச்சை பொய் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கிறது எனில்,  கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி என்பது 15% இருந்தாக வேண்டும் என்பது விதி. ஆனால், இப்போது கார்ப்பரேட்களின் வருமான வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல், முதலீட்டின் அளவு 10 ஆண்டுகளுக்கு முன் ஜிடிபி-யில் 34 சதவிகிதமாக இருந்தது. 2008-க்குப் பிறகு இது குறைய ஆரம்பித்து, தற்போது அது 29 சதவிகிதத்துக்கும் கீழ்  வந்துவிட்டது.  முதலீடு வளரவே இல்லை. பிறகு எப்படி வளர்ச்சி மட்டும் இருக்கும் என்பது தெரியவில்லை.

கறுப்புப் பணத்தில் 95% சொத்துகளாகத்தான் இருக்கிறது. இது அரசுக்கு நன்றாகவே தெரியும். அதில் 72% வெளிநாட்டிலும், 28% உள்நாட்டிலும் இருக்கின்றன. இந்தப் பணத்தைக் கொன்டுவராமல், வேறு ஏதேதோ செய்வது வெறும் கண் துடைப்புதான்.

அரசாங்கம் இப்போது எடுத்திருக்கும் இந்த ‘க்ளீன் மணி 2.0’-வும் அப்படிப்பட்ட ஒரு கண் துடைப்பு நடவடிக்கைதான். இப்போதிருக்கும் வருமான வரித் துறையின் கட்டமைப்பு, அதிகாரிகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு இந்த நடவடிக்கையை எடுப்பது என்பது முடியாத காரியம்.’’