Published:Updated:

‘ஸ்டார்ட்அப்’ வெற்றி ரகசியங்கள்!

‘ஸ்டார்ட்அப்’  வெற்றி ரகசியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
‘ஸ்டார்ட்அப்’ வெற்றி ரகசியங்கள்!

பா.பிரவீன் குமார்

‘ஸ்டார்ட்அப்’ வெற்றி ரகசியங்கள்!

பா.பிரவீன் குமார்

Published:Updated:
‘ஸ்டார்ட்அப்’  வெற்றி ரகசியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
‘ஸ்டார்ட்அப்’ வெற்றி ரகசியங்கள்!

து ஸ்டார்ட்அப்-களுக்கான காலம். இளைஞர்கள் பலர் தொழில் முனைவோர்களாக விஸ்வரூபம் எடுத்துவருகின்றனர். புத்தும்புது ஐடியா, அதை நடைமுறைப்படுத்தத் தொழில்நுட்பம் தெரிந்தால்போதும்; யார் வேண்டுமானாலும் தொழில்முனைவோராக முடியும்.

இன்றைக்கு ஃப்ளிப்கார்ட்டைத் தெரியாத வர்களே இருக்க முடியாது. ஐ.ஐ.டி-யில் படித்த சச்சின் மற்றும் பின்னி பன்சால், அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் செயல்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சி இன்றைக்கு ஆன்லைன் ஷாப்பிங்கில் அவர்களை மிகப்பெரிய ஜாம்பவானாக மாற்றியிருக்கிறது.

இன்றைக்குப் பலரும் மிகவும் வித்தியாசமான, ஆனால் உபயோகமான ஐடியாக்களுடன் வருகின்றனர். பலர், தங்களுக்குத் தெரிந்ததை வைத்து பிசினஸ் மாடலை உருவாக்குகின்றனர். இருப்பினும், அதை முன்னெடுத்துச் செல்வதும், பெரிய அளவில் மக்களைச் சென்றடைவதும் எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர். இவர் களுக்கு உதவும் வகையில், சி.ஐ.ஐ தமிழ்நாடு கிளையானது, ‘ஸ்டார்ட்அப் பிரீனர்-2017’ என்ற கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் தொழிலதிபர்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வருபவர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 

‘ஸ்டார்ட்அப்’  வெற்றி ரகசியங்கள்!

ஸ்டார்ட்அப் வேர் ஹவுஸ்

இந்தக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்துப் பேசினார் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார். “கோயம்புத்தூரிலும், சென்னையில் இருப்பது போன்ற தொழில் தொடங்குவோர் மையம் (Startup Ware House) ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இது, தொழில் தொடங்குவோருக்கு மிகுந்த உதவியாக இருக்கும். தொழில் துவங்குவதற்குத் தேவையான அனுமதிகளையும், ஒப்புதல்களையும் ஒற்றைச் சாளர முறைப்படி (Single Window System), இணையதளம் மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இந்த அனுமதிகளை விரைவில் வழங்க தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

இந்தக் கருத்தரங்கில் அடுத்துப் பேசினார் சி.ஐ.ஐ தமிழ்நாடு முன்னாள் தலைவரும் டி.வி.எஸ் கேப்பிட்டல் ஃபண்ட்ஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோபால் ஸ்ரீனிவாசன். “ஸ்டார்ட்அப் கொள்கையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் உள்ளதுபோல, இங்கும் ஸ்டார்ட்அப் கொள்கைகள் இருந்தால், அதன் மூலம் அதிக அளவில் ஸ்டார்ட் அப்கள் உருவாக வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

 திறமையானவர்களுக்கு முதலீட்டு உதவி

தமிழக சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் ஷர்மா, “ஸ்டார்ட்அப்பில், தமிழ்நாடு அநேகமாக ஐந்தாவது இடத்தில் இருக்கலாம். தொடர்ந்து உழைத்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் குறைந்தது இரண்டாவது இடத்தை தமிழகம் பெற முடியும். இதற்காக ஒரு மையத்தை (Entrepreneurship Development and Innovation Institute) ஏற்படுத்தியிருக்கிறோம். இந்தக் கல்வி நிறுவனம் மூலமாக, கல்லூரி மாணவர் களைச் சந்தித்து, முதல் தலைமுறை தொழில் முனைவோரைக் கண்டறிந்து வருகிறோம்.திறமையானவர் களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தொழில் முதலீடு தருகிறோம். இதில் உற்பத்தித் துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்படி தமிழக அரசு பல்வேறு விஷயங்களைச் செய்துவருகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை அடையாளம்காணும் வகையில், ‘சோர்ஸிங் ஃபேர்’ என்ற கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடத்த உள்ளோம். இதில், வெளிநாடு மற்றும் உள்நாடுகளைச் சேர்ந்த தகுந்த நிறுவனங்கள் பங்கேற்கும். இதனால் இங்குள்ள ஸ்டார்ட்அப் தொழில் முனைவர்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் செலவு குறையும். இந்தக் கண்காட்சி, கருத்தரங்குக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 கோடி செலவு செய்யப்படவுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்யத் தமிழக அரசு சார்பில், 500 கோடி ரூபாய் நிதியம் ஒன்றை அமைக்க விரும்புகிறோம். இதை அரசாங்கம் மட்டுமே நடத்த முடியாது. அரசு மற்றும் தனியார் கூட்டுறவில் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும். தொழில்முனைவோர், இதற்கான நல்ல திட்டத்தைத் தயார்செய்து அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கம் முதலில் ரூ.50 கோடி, ரூ.100 கோடி என்று படிப்படியாக 500 கோடி ரூபாயை இந்த நிதியத்துக்கு அளிக்கும்” என்றார்.

 முதலீடு செய்யத் தயார்

இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் தலைவர் பத்மஜா ரூபரல் பேசும்போது, “இன்றைக்கு சில ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்கள் சரியான முதலீடு கிடைக்கவில்லை என்று சொல்கின்றனர். ஆனால், உண்மை அது இல்லை. முதலீட்டாளர்கள் நல்ல பிசினஸைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். நல்ல புராடக்ட் கிடைத்தால், புரமோட்டர்களைத் தேடி, முதலீட்டாளர்கள் படையெடுப்பார்கள். முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், வித்தியாசமான ஐடியாக்கள்தான். ஏஞ்சல்ஸ் மற்றும் வென்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள்  ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, குறைந்த விலையில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, நிறுவனத்தை நன்கு வளர்த்தெடுப்பதன் மூலம் பெரிய லாபத்தை எடுக்கின்ற னர். இந்த லாபத்தை அடைய புதுமையான, மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களைச் சென்று சேரக்கூடிய ஐடியாக்களை அவர்கள் தேடுகின்ற னர். வங்கிகள் உங்கள் கடந்த காலங்களைப் பார்த்து கடன் அளிக்கின்றன. ஆனால், நாங்கள் உங்கள் எதிர்காலத்தின் மீது பணத்தைக் கட்டுகிறோம்” என்றார்.

 இயந்திரம் மூலம் தோசை

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓசூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், “இன்றைக்குப் பெரும்பாலும் ஐ.டி துறையில்தான் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. ஏன் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதில்லை?” என்று கேட்டார். இதற்குப் பதில் அளித்த பத்மஜா, “ஐ.டி துறையில் மட்டும்தான் முதலீடு செய்யப்படுகிறது என்றில்லை. எங்கெல்லாம் வித்தியாசமான, புதுமையான, வெற்றி பெறக்கூடிய ஐடியாக்கள், அதைச் செயல்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் இருக்கிறதோ, அவற்றிலெல்லாம் கட்டாயம் முதலீடு செய்யப்படுகிறது. பெங்களூரில் இருந்து வந்த உற்பத்தித் துறையைச் சேர்ந்த இளைஞர் எங்களை அணுகினார். இயந்திரம் மூலம் காப்பி, டீ தயார் செய்யப்படுகிற மாதிரி, ஆட்டோமேஷன் தோசை மெஷின் செய்யலாம் என்று சொன்னார்.

மாவை அதுவே ஊற்றி, பரப்பி, எண்ணெய் வார்த்து, மேலே மசாலா அல்லது பொடி தூவ வேண்டும் என்றால் அதையும் செய்து, மடித்து எடுத்துத் தரும் இயந்திரம் அது. எனக்கு அவர் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. உடனே ஓ.கே சொன்னேன். இப்படி கவர்ந்திழுக்கும் ஐடியாக்கள் இருந்தால் முதலீட்டாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்” என்றார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோஷ் பேசும்போது, “தற்போதைய காலகட்டத்தை ‘பிளாட்டினம் ஏஜ்’ என்பார்கள். அரசு கொள்கை, ஆதரவு, உலக அளவிலான சூழல் என அனைத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கேற்றதாக இருக்கின்றன. ஹார்டுவேர் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இளைஞர்கள் இந்தத் துறையில் அதிக கவனம் செலுத்தலாம்” என்றார்.

மணிபால் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த நந்தகிஷோர் தோம்னி, “இன்றைக்கு நோயாளி டிஸ்சார்ஜ் ஆக வேண்டுமெனில்,  குறைந்தது எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. இந்த நேரத்தைக் குறைக்க முயற்சி செய்துவருகிறோம். இதேபோல, தொலைதூர மருத்துவம், நோயாளிகள் மருத்துவ தகவல் பகிர்வு என மருத்துவத் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

நேட்டிவ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க் தலைவரும், நேட்டிவ்லீட்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர்களுள் ஒருவருமான நாகராஜா பிரகாசம் பேசும்போது, “நாம் யார் என்று அறிந்தால்தான், நாம் என்ன செய்ய வேண்டும், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பது தெரியும். இன்றைக்குத் தண்ணீர், மின்சாரம் என்று நம்மைச் சுற்றிப் பல பிரச்னைகள் பெரிதாக உள்ளன. இவற்றை எல்லாம் கவனிக்காமல், அமெரிக்கா என்ன செய்கிறது, சீனாவில் என்ன நடக்கிறது என்று பார்த்து காப்பி அடிப்பது இங்கே நடக்கிறது. இதற்குப் பதிலாக நம்முடைய எரிசக்தியை, நீர்நிலைகளை, போக்குவரத்தைச் சீரமைக்கும் புதிய திட்டங்களைக் கொண்டு வரலாம். வெறுமனே, அமெரிக்கா, சீனாவின் மாடலை காப்பியடித்து, அவற்றை இங்கே நடைமுறைப் படுத்துவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கில், ஸ்டார்ட் அப்களுக்கு உதவும் வகையில் இன்னும் பல விஷயங்கள் பேசப்பட்டன. புது ஐடியாக்களுடன் புறப்பட்டு வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க தயாராகவே இருக்கிறது பிசினஸ் உலகம் என்பது கருத்தரங்கில் பேசிய அனைவரின் பேச்சிலும் பளிச்சிட்டதை  உணர முடிந்தது.

படங்கள்: தே.அசோக்குமார்

தொழிலில் சாதிக்க ‘வாவ் விளைவு’ அவசியம்!

இந்தக் கருத்தரங்கில் பேசிய ‘ரீடிஃபைன் இமேஜ்’ ஏக்தா சுரானாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.  “என் மகன் சிறுவன்தான். அவன் தன் நண்பர்களுடன் இணைந்து லெமன் ஜூஸ் விற்பனை செய்யப்போவதாகவும், அதற்குப் பணம் வேண்டும் என்றும் கேட்டான். ‘‘ஏன் லெமன் ஜூஸ் விற்பனையைத் தேர்வு செய்தாய்’’ என்று கேட்டேன். அதற்கு அவன், ‘‘நம் தெருவில், உணவு விற்பனை செய்யும் கடைகள் பல உள்ளன. ஆனால், குளிர்பானம் விற்பனை செய்யும் கடை எதுவும் இல்லை’’ என்றான். அவன் ஐடியா என்னை ‘வாவ்’ சொல்ல வைத்தது. பணத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறாய் என்று கேட்டன். பலூன், சில்வர் பாத்திரம் என்று பெரிய பட்டியலை வாசித்தான். அவை ஒவ்வொன்றுக்கும் அவன் காரணமும் வைத்திருந்தான். அவன் சொன்ன பதில் ஒவ்வொன்றுக்கும் ‘வாவ்’ சொல்லும் வகைகள்தான். இதுபோலத்தான், எந்த ஒரு தொழிலைத் தொடங்குவதாக இருந்தாலும், அதன் வடிவமைப்பு, பிசினஸ் மாடல், டெக்னாலஜி என்று ஒவ்வொன்றும் ‘வாவ்’ சொல்ல வைக்கவேண்டும்’’ என்றார்.