பரத், கனடாவில் எம்பிஏ படித்துவிட்டு, சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். மாதம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம்.
பரத்தின் அப்பா ராகவன், மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார். “நானே நிறைய சம்பாதிக்கிறேன்; எனவே, என் மனைவியாக வரப் போகிறவள் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டால் போதும்; வேலைக்கெல்லாம் போக வேண்டாம்” என்று பரத் சொல்லிவிட்டார்.
நந்தினியும் எம்பிஏ படித்தவர்தான். படித்துவிட்டு, நல்ல வேலைக்காகக் காத்திருந்தார். பரத்துக்காக நந்தினியைப் பெண் கேட்டுப் போனார்கள். திருமணத்துக்குப்பின் வேலைக்குப் போகக் கூடாது என்கிற தன் கண்டிஷனைச் சொன்னார் பரத். நந்தினியும் அதற்கு ஒப்புக் கொள்ள, திருமணம் சிறப்பாக முடிந்தது. வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்தது. பிரணவ் பிறந்தான். மகன் பிறந்த பூரிப்பில் இருந்த பரத்துக்கு எதிர்பாராத சிக்கல் வந்துசேர்ந்தது.

புனேவில் புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் கிளைக்குப் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுடன் பரத் மாற்றம் செய்யப்பட்டார். கணவனைப் பிரிய மனமில்லாத நந்தினி தானும் புனேவுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார்.
“குழந்தை சிறியவனாக இருப்பதால், தனியாகப் பார்த்துக்கொள்வது கஷ்டமாக இருக்கும்; சில மாதங்கள் கழித்தபிறகு புனேவுக்கு வரலாம். இப்போதைக்கு உன் அம்மா வீட்டில் சென்று இருந்துகொள்” என நந்தினிக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, பரத் புனேவுக்குப் புறப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்துவிட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் பரத். இப்படியே ஒரு வருடம் ஓடியது. தீபாவளிக்காக சென்னைக்கு வந்த பரத், நந்தினியை பீச்சுக்கு அழைத்துச் சென்றார். நந்தினி மகிழ்ச்சியாக கணவனுடன் பீச்சுக்குச் சென்றார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீச் மணலில் அமர்ந்துகொண்டு கடலை வெறிக்கப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் பரத். கணவனின் யோசனையைக் கவனித்த நந்தினி துருவித் துருவி கேட்டார். “நான் ஒன்றை விரும்பிக் கேட்டால், நீ தருவாயா...” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் பரத்.
‘‘உங்களுக்காகவே வாழும் நான் நீங்கள் எதைக் கேட்டாலும் தருவேன்” என்றார் நந்தினி. அதற்குப் பிறகு பரத் சொன்ன விஷயத்தைக் கேட்டதும், நந்தினியின் தலையில் இடிவிழுந்த மாதிரி இருந்தது. நந்தினியின் இடத்தில் எந்தப் பெண் இருந்திருந்தாலும், அவளுக்கும் அந்த நிலையே ஏற்பட்டிருக்கும். காரணம், நந்தினியிடம் பரத் கேட்டது விவாகரத்துக்கான ஒப்புதலை!
புனேவில் தன்னுடன் வேலை பார்த்து வரும் பூஜாவைத் தான் விரும்புவதாகவும், பூஜாவுடன் ‘லிவிங் டு கெதர்’ ஆக வாழ்ந்து வருவதாகவும் பரத் சொன்னதைக் கேட்டு, நந்தினியால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
திருமணத்துக்குப் பின் பரத்தைப் பிடித்துப் போனதால், வேலைக்கே போகாமல், பரத் மட்டுமே உலகம் என வாழ்ந்துகொண்டிருந்த நந்தினியால் கணவனின் சொற்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடைந்து அழுதார்.
நந்தினியைச் சமாதானப்படுத்திய பரத், “உன்னுடைய சம்மதத்துக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கேன். நீ டைவர்ஸ் கொடுத்துட்டால், நான் பூஜாவைக் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றார்.
ஆனால், பிடிவாதமாக மறுத்தார் நந்தினி. வேறு வழிதெரியாத பரத், நந்தினியின் பெற்றோரைச் சந்தித்து விஷயத்தைப் போட்டு உடைத்தார். அதிர்ந்துபோன அவர்கள், பரத்தின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினார்கள். பரத்தின் பெற்றோருக்கும் பேரதிர்ச்சி. பரத் இதுபற்றி அவர்களிடம் எதுவும் பேசியிருக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து பரத்திடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பரத், தன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை.

வேறு வழியில்லாமல் நந்தினி விவாகரத்துக்கான ஒப்புதலைத் தந்தார். விவாகரத்து விஷயத்தில் பரத் பிராக்டிகலாக முடிவெடுத்ததைப் போலவே, தன் குழந்தை விஷயத்திலும் பிராக்டிகலாக ஒரு முடிவை எடுத்தார்.
“கைக்குழந்தையோடு விட்டுட்டுப் போறதுக்கு மனது வரவில்லை. குழந்தையின் எதிர்காலத்துக்காக ஒரு கோடி ரூபாய் பணம் தருகிறேன்” என்று சொல்லவே, நந்தினி அதை மறுக்கவில்லை.
இந்தத் தருணத்தில்தான் நந்தினியின் அப்பா சுந்தர், தன் மகளுடன் வந்து என்னைச் சந்தித்தார். நந்தினியின் வாழ்நாள் முழுவதுக்கும் இந்த ஒரு கோடி ரூபாய் போதுமானதாக இருக்குமா... இனி என்ன செய்வது எனக் கவலைப்பட்டார்.
ஒரு கோடி ரூபாயை ஃபிக்ஸட் டெபாசிட், பாண்ட், மியூச்சுவல் ஃபண்ட் எனப் பிரித்து முதலீடு செய்யச் சொல்லிவிட்டு, நந்தினியை வேலைக்கு முயற்சி செய்யச் சொன்னேன்.
சில மாதங்களில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார் நந்தினி. அடுத்த சில மாதங்களிலேயே நந்தினிக்குச் சம்பளம் இரட்டிப்பானது. தன் அப்பாவை அழைத்துக் கொண்டு வந்தார் நந்தினி.
“என்னால் நிறையச் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. மாதம் ரூ.10 ஆயிரம் வரை சேமிக்க முடியும்” என்றார். உடனே ஏற்கெனவே செய்துள்ள ஒரு கோடி ரூபாய் முதலீட்டை மாற்றி அமைத்தேன். கடன் பத்திரங் களில் முதலீடு செய்துவைத்துள்ள ரூ.50 லட்சத்தை மூன்று பேலன்ஸ்டு ஃபண்டுகளில் மாற்றித் தந்தேன். மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்ஐபி முதலீட்டையும் ஆரம்பித்துக் கொடுத்தேன்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் நந்தினியின் அப்பா மட்டும் என்னைச் சந்திக்க வந்தார். உறவுக்கார பையன் ஒருவன் விவாகரத்தாகி இருப்பதாகவும், அந்தப் பையனுக்கு நந்தினியை இரண்டாவது திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் சொன்னார். நான் நந்தினியிடம் இதுப்பற்றி பேசினேன். அவரோ, இன்னொரு திருமணத்துக்குத் தயாராக இல்லை என்பதை என்னிடம் தீர்மானமாகச் சொன்னார்.
நந்தினியின் முடிவினைக் கேட்டு, அவரது அப்பா சுந்தர் வருத்தப்படத்தான் செய்தார். “நந்தினிக்காக நான் ஒரு வீடு வாங்கினேன். அதை அவளுக்குத் திருமணமானதுமே தர நினைத்தேன். ஏதோ காரணத்தினால், அது தவறிவிட்டது. இப்போது தரலாமா?” என்று கேட்டார்.
“தாராளமாகச் செய்யுங்கள். நந்தினிக்கு இந்த வாழ்க்கை மீதிருக்கும் நம்பிக்கையை அது இன்னும் அதிகப்படுத்துவதாகவே இருக்கும்” என்று சொல்லி அனுப்பினேன்.
பரத், நந்தினி விஷயத்தில் நிதி சார்ந்த தவறுகள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை. நந்தினிக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கிடைத்ததும் அதனைத் தவறான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாமல், எதிர்காலத் தேவைக்கு பாதுகாப்பான வழிகளில் அவர் முதலீடு செய்ய நினைத்ததே, இனி நடக்கும் தவறுகளைத் தடுத்து நிறுத்துவதாக இருந்தது எனலாம்.