நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்!

தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்!

சிஐஐ தமிழ்நாடு கவுன்சில் தலைவர் புருஷோத்தமன் ரவிச்சந்திரன் சிறப்புப் பேட்டிபா.பிரவீன் குமார்

சிஐஐ தமிழ்நாடு கவுன்சில் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் புருஷோத்தமன் ரவிச்சந்திரன்.  கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் தொழில் துறையில் பின்தங்கிவருகிறது என்கிற குற்றச்சாட்டு நிலவும் சூழலில், தொழிலகக் கூட்டமைப்பின்  தலைவராகியிருக்கிறார் புருஷோத்தமன் ரவிச்சந்திரன். தமிழகத்தில் தொழில் துறையின்   வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்.

தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்!

தமிழகத்தில் சிஐஐ செயல்பாடு எப்படி இருக்கிறது?

“தமிழக சிஐஐ மிகவும் வலிமையாக இருக்கிறது. சிஐஐ தமிழ்நாடு கிளையில் 1,600 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் ஒன்பது நகரங்களில்  எங்கள் அமைப்பு பரவலாக இருக்கிறது. தமிழகத்தில் சிஐஐ உறுப்பினர்களில் 70% பேர் எம்எஸ்எம்இ-யைச் சேர்ந்தவர்கள்தான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு கிளஸ்டராக இருக்கிறது. இவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி,  வளர்த்தெடுப்பதை எங்களின் இந்த ஆண்டு இலக்காகத் தேர்வு செய்திருக்கிறோம்.”

தமிழகத்தில் தொழில் துறை முன்னேற்றம் தடைப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

“தமிழகத்தில் 15 ஆண்டுகளாக இரட்டை  இலக்க ஜிடிபி வளர்ச்சி இருந்தது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வளர்ச்சி கொஞ்சம்  குறைந்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியக் காரணம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாநிலங்களுக்கு இடையே போட்டி அதிகரித்து விட்டது; தொழிலுக்கான முதலீடு குறைந்திருக்கிறது; புதிய திட்டங்கள் வருவதும் குறைந்திருக்கிறது. தொழில் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் என வரிசைப் படுத்தி, ரேங்க் கொடுக்க ஆரம்பித்தபின், ஒவ்வொரு மாநிலமும் விழித்துக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

நமது மாநில ஜிடிபி 9% வளர்ச்சி அடைந்தாலும்,  தொழில் வளர்ச்சியில் இப்போதும் நாம் இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறோம். தமிழ்நாடு மிகவும் வலிமையான தொழில் மாநிலம். தமிழ்நாட்டில் நிறையத் தொழிற்சாலைகள் நன்கு வளர்ச்சி கண்டுள்ளன. அதேபோல், தமிழகத்தின்  அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் நன்றாக உள்ளன. இன்னும் நம்மால் நன்றாகச் செய்ய முடியும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.”

பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் தொழில் போட்டியை எதிர்கொள்ள, தமிழகம் செய்யவேண்டியது என்ன?

“மாநிலங்களுக்குள் மட்டும் தொழில் போட்டி உருவாகவில்லை. உலக அளவில் தொழில் போட்டிகள் உருவாகி இருக்கின்றன. பல்வேறு தொழில் துறையில் திறன் (ஸ்கில்) குறித்த தேவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்போது இண்டஸ்ட்ரி 4.0 என்று சொல்கிறார்கள். அதாவது, டிஜிட்டல், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டிங் தொழில் நுட்பத்தை ஒன்றிணைத்து புதிய பாய்ச்சலுக்குத் தயாராகும்போது, அதற்கேற்ப தகுதியான, திறன் வாய்ந்த பணியாளர்கள் இல்லாமல் போய்விடு கின்றனர். இதை    எதிர்கொள்ள, தற்போதைய வேலைச் சூழலுக்கேற்ப தொழில் திறனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுவரை, நமக்குத் தெரிந்த தொழிலில், உலகத் தரத்துக்கு ஏற்றத் திறன் இருந்ததால் நாம் தப்பித்துவிட்டோம். இனி நாம் ஜெயிக்க வேண்டும் என்றால், தொழில் திறமையை மேம்படுத்த வேண்டியது அவசியம். முன்பு தொழில் துறையில் ஒரு பொருளைத் தயாரிக்க வேண்டுமெனில்,  அளவெடுத்து, வார்ப்புச்  செய்து, கடைசியில்தான் பொருளைத் தயாரிப்பார்கள். இது மிகப்பெரிய பிராசஸாக  இருந்தது. ஆனால், இன்றைக்கு 3டி பிரின்டிங் வந்துவிட்டது. என்ன வேண்டும் என்று கம்ப்யூட்டரிடம் சொல்லிவிட்டால், அதுவே அந்தப் பொருளைத் தயார் செய்து கையில் கொடுத்துவிடும். இதுபோன்ற புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் திறனை நாம் மேம்படுத்த வேண்டும்.”

உங்கள் பதவிக் காலத்தில் கவனம் செலுத்த உள்ள விஷயங்கள் என்ன?


“சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் சில பிரச்னைகள் இருக்கின்றன. இதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகிறோம். தொழில் துறை முன்னேற்றத்துக்கு விமான நிலையம், துறைமுகம் போன்றவை மிகவும் ஆற்றல்மிக்கதாக இருக்க வேண்டியது அவசியம். அடிப்படைக் கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்த, மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுத்துவருகிறோம். நெடுஞ்சாலைகள், பாலங்கள் எனப் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள்,  நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக தடைப்பட்டு இருக்கின்றன. இதைக் கண்டறிந்து தீர்க்க, கவனம் செலுத்தி வருகிறோம். இதுமாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தினால் தான் நம்மால் தொழில் துறையில் போட்டி போட முடியும்.

அடுத்தது, தொழில் துறையினரின் மிக முக்கியப் பிரச்னையாக நீர் இருக்கிறது. இதில், நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த, மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த விழிப்புஉணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், மழைநீர் சேகரிப்பு, ஏரிகள் புனரமைப்பு உள்ளிட்டவற்றையும் செய்ய இருக்கிறோம். கிளஸ்டர் டெவலப்மென்ட் என்று ஆரம்பித்திருக்கிறோம். திருப்பூர் கார்மென்ட் பிசினஸ் ரூ.35,000 கோடியாக இருக்கிறது. அதை 2020-ல் ஒரு லட்சம் கோடியாகக் கொண்டுசெல்ல திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்குச் சிஐஐ எல்லாவித உதவிகளையும் ஆதரவையும் அளித்துவருகிறது.

அதேபோல், தமிழக அரசின் விஷன் 2023 ஆவணத்தில், தமிழகத்தை அறிவுசார் மையமாக மாற்ற ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு, ஸ்டார்ட் அப் பாலிசியை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இனி தமிழ்நாட்டிலோ, வேறு எந்த ஓர் இடத்திலோ அரசு, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவது பெரிய அளவில் இருக்கப்போவதில்லை. சிறிய அளவிலான தொழில்முனைவோர் தொடங்கும் தொழில்கள் மூலம்தான் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது. இந்த நோக்கத்தில்  ஸ்டார்ட் அப் பாலிசிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் நிறையப் பொறியாளர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால், வேறு மாநிலங் களுக்குச் செல்கின்றனர். இதனால், மற்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைகின்றன. இதைத் தவிர்க்கவும், தமிழகத்தில் தேவையான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் கவனம் செலுத்த இருக்கிறோம்.

ஒரகடத்தில் ஏரோ பார்க் ஆரம்பிக்க, விஷன் 2023 ஆவணத்தில் திட்டம் உள்ளது. இதனால், இங்கே விமானப் பழுது மற்றும் பராமரிப்பு மையத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இந்தியாவில் ஒரு விமானம் பழுதானால், சிங்கப்பூர்தான் செல்ல வேண்டும். சென்னையில் விமானப் பழுதுபார்க்கும் மையம் வந்தால், சென்னை இன்னும் அதிக முக்கியத்துவம் பெறும். இதற்கேற்ப, நம்முடைய பொறியியல் கல்லூரிகளில் திறன்வாய்ந்த மாணவர்களை உருவாக்கவும் முயற்சி செய்கிறோம்.

மதுரை - தூத்துக்குடி - திருநெல்வேலி காரிடர் அமைக்க, விஷன் 2023-ல் திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி அமைந்தால் நிறையத் தொழிற்சாலைகள் அங்கு அமையும். இதற்காகத் தமிழக அரசுடன் சிஐஐ இணைந்து பணியாற்றும் வகையில் வொர்க்கிங் குரூப் அமைக்கக் கேட்டிருக்கிறோம். தூத்துக்குடியில் நாப்தா கிராக்கர் கொண்டுவந்தால், அங்கிருந்து கன்னியாகுமரி வரை மருந்து தயாரிக்கும் பார்மா கம்பெனிகள் வந்துவிடும். பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். இதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம்.

விவசாயத் துறையிலும் கவனம் செலுத்த இருக்கிறோம். சர்வதேச  அளவில் கொண்டுபோய்ச் சேர்க்க, ஜூலையில் வாழைத் திருவிழாவை நடத்த இருக்கிறோம். வாழையைச் சர்வதேசத் தரத்தில் ஏற்றுமதி செய்ய, எங்கள் முயற்சியால் பேக் ஹவுஸ் அமைக்கப்பட உள்ளது. இதற்கு நபார்டு வங்கி ரூ.400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. வாழை, தென்னை, சிறுதானிய விவசாயத்துக்கு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

இப்படி மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து தமிழகத்தின் விவசாயம் மற்றும் தொழில் துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்கான பல திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறோம்.”

சிஐஐ-யின் முயற்சியால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல முன்னேற்றம் அடைவது நிச்சயம்!   
                            
படம்: க.பாலாஜி