ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. ஏற்றுமதி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமானது. ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடாத பல நாடுகள் ஏழை நாடுகளாகவே இருக்கின்றன.
ஏற்றுமதித் தொழிலின் மூலம்தான் நம்முடைய அந்நியச் செலாவணியின் இருப்பையும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் நன்கு நிர்வாகம் செய்ய முடியும்.
நம்நாடு ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்றாலும் இந்த வளர்ச்சியானது நிச்சயம் போதாது. நம்முடைய ஏற்றுமதித் தொழிலின் மதிப்பு, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் செல்லவேண்டிய தூரம் என்பது மிக அதிகம்.
இதற்காகத்தான் மத்திய அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற, சுதந்திரமான வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் கொள்கைகளை கொண்டுள்ளதோடு, அந்நிய வர்த்தகக் கொள்கையின் (Foreign Trade Policy) கீழ் ஏற்றுமதியாளர்களுக்குப் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள் ஐந்து உள்ளன.
1. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கான திட்டம் (MEIS-Merchandise Exports from India Scheme),
2. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சேவைகளுக்கான திட்டம் (SEIS-Service Exports from India Scheme),
3. வரியைத் திரும்பப்பெறும் திட்டம் (Duty Draw Back),

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

4. இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருள்களுக்கான வரி விலக்குத் திட்டம்,
5. வரியைச் சமனாக்கும் திட்டம் (Interest Equalisation Scheme).
இந்த ஐந்து திட்டங்கள் பற்றிச் சுருக்கமாக இனி பார்ப்போம்.
1. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கான திட்டம் (MEIS - Merchandise Exports From India Scheme)
மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் (Foreign Trade Policy) கீழ் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி யாளர்களுக்கு ஏற்றுமதி செய்யும் எஃப்ஓபி மதிப்பில் (FoB Value) 2% முதல் 5% வரை ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இது பொருளுக்கேற்பவும், அனுப்பப்படும் நாடுகளுக்கு ஏற்பவும் மாறும்.
2. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சேவைகளுக்கான திட்டம் (SEIS - Service Exports from India Scheme)
பொருள்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சேவைகளுக்கும் ஊக்கத்தொகைக்கான திட்டங்கள் உள்ளன. புதிய அந்நிய வர்த்தகக் கொள்கையின்கீழ் வகுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சேவைகளை ஏற்றுமதி செய்யும் நபருக்கு மொத்த ஏற்றுமதி மதிப்பில் 3% முதல் 5% வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்தச் சதவிகிதம் சேவைகளுக்கு ஏற்ப மாறுபடும். பெரும்பாலான சேவைகளுக்கு 5% வழங்கப்படுகிறது.
3. வரியைத் திரும்பப்பெறும் திட்டம் (Duty Drawback)
ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக வாங்கும் மூலப்பொருள்கள், இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் போன்றவற்றுக்காக வழங்கும் கலால் மற்றும் சுங்க வரிகளைத் திரும்பப் பெற்றுக்கொள் ளலாம்.
மேலும், ஏற்றுமதித் தொழிலில் பயன்படுத்தப்படும் பேக்கிங் மெட்டிரியல்களுக்குக் கூட வரியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, வேளாண் பொருள்கள். வேளாண் பொருள்களுக்கு நேரடியாக எந்த வரியும் இல்லாததால், அவற்றை பேக்கிங் செய்ய உதவும் பேக்கிங் மெட்டீரியல் களுக்கான கலால் வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள லாம்.
4. மூலப்பொருள்கள் மற்றும் இயந்திரங்களுக்கான வரி விலக்குத் திட்டம்
டூட்டி எக்சம்ப்ஷன் என்டைட்டில்மெண்ட் திட்டம் மூலம் ஏற்றுமதித் தொழிலுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மற்றும் இயந்திரங்களை எந்தவிதமானச் சுங்க வரியும் இல்லாமல் இறக்குமதி செய்யலாம். இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருள்களும் இயந்திரங்களும் ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
இவற்றில் எக்ஸ்போர்ட் புரமோஷன் கேப்பிட்டல் கூட்ஸ் ஸ்கீம் (இபிசிஜி-Export Promotion Capital goods scheme) மற்றும் அட்வான்ஸ் ஆத்தரைசேஷன் திட்டம் (Advance Authorization Scheme) என இரண்டு வகைகள் உள்ளன.
இபிசிஜி திட்டத்தின் கீழ் ஓர் ஏற்றுமதியாளர் தான் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் உற்பத்தி மற்றும் பேக்கிங் போன்ற செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தும் இயந்திரங்களை இறக்குமதி செய்யும்போது எந்தவிதமானச் சுங்க வரியும் இல்லாமல் இறக்குமதி செய்துகொள்ளலாம். ஆனால், இதில் சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டு செய்வது அவசியம்.
மேலும், ஏற்றுமதி செய்வதற்காக வாங்கப்படும் மூலப்பொருள்களுக்கான திட்டம், அட்வான்ஸ் ஆத்தரைசேஷன் ஸ்கீம் என்பதாகும். இதன் மூலம் மூலப்பொருள்களை எந்தச் சுங்க வரியும் இல்லாமல் இறக்குமதி செய்யலாம்.
அதாவது, மூலப்பொருள் ஒன்றை வாங்கி அதை வைத்து, தயார் செய்யப்படும் பொருள்களை ஏற்றுமதி செய்தால், அந்த மூலப்பொருள்களுக்கு எந்தச் சுங்க வரியும் விதிக்கப்படாது.
5. வரியைச் சமனாக்கும் திட்டம் (Interest Equalisation Scheme)
ரிசர்வ் வங்கி இந்தத் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் மூலம் ஓர் ஏற்றுமதியாளர் தான் வாங்கும் கடன்களுக்கான வட்டியில் 3% விலக்கு வழங்கப்படுகிறது.
அரசின் இந்த ஐந்து ஊக்குவிப்புத் திட்டங்களும் ஓர் ஏற்றுமதியாளருக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், தொழில் செய்வது எளிதான காரியம் அல்ல. எந்தத் தொழிலாக இருந்தாலும் பல்வேறு சவால்களையும் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. நிதி சார்ந்து ஒரு தொழில் வலுவாக இருந்தால்தான், எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில், நிதி சார்ந்து ஒரு தொழில் வலுவாக இருப்பதற்கே முட்டிமோத வேண்டியிருக்கிறது. அதிலும் ஏற்றுமதித் தொழிலில் இந்தப் பிரச்னை குறித்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
ஏனெனில் ஏற்றுமதியாளர் என்பவர் தான் தயாரித்த பொருளைக் கடல் கடந்து அனுப்புகிறார். அனுப்பிய பொருளுக்கான பணம் கைக்கு வந்தபிறகுதான் நிச்சயம்.
பொருளுக்கான பணம் ஒருவேளை வராவிட்டால், தொடர்ந்து தொழில் செய்ய முடியுமா என்பது கேள்வியே. எனவேதான், ஏற்றுமதித் தொழிலைச் செய்யப் பலரும் தயங்குகிறார்கள்.
இப்படிப் பயப்படுபவர்களுக்குப் பாதுகாப்பாக ஏற்றுமதி செய்வது பற்றியும், அரசு தரும் ஊக்குவிப்புத் திட்டங்கள் பற்றியும் தெரிவதில்லை. இவற்றைப் பற்றி விரிவாகப் புரிந்துகொண்டால் ஏற்றுமதித் தொழிலில் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!
ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சி தந்த ‘ரூபாய்’!
ஏற்றுமதித் தொழில் செய்பவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து இருந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு அது மகிழ்ச்சி தரும் செய்தி.
ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கான பணம் அந்நியச் செலாவணிகளில்தான் பெறப்படும் என்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்திருக்கும்போது ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும்.
அதேபோல் இறக்குமதி செய்யும்போதும் நமக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றபோது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.
ஆனால், அதன் பிறகு சற்று குறைய ஆரம்பித்தது. தற்போது மீண்டும் மதிப்பு அதிகமாகியுள்ளது. இந்த வருடம் இதுவரை 5.5 சதவிகிதம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இதனால் இந்திய ஏற்றுமதிக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது.