நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!

மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!
பிரீமியம் ஸ்டோரி
News
மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!

எம்.புண்ணியமூர்த்தி

மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!

கோயமுத்தூரில் ஜவுளித் தொழிலுக்கு அடுத்தபடியாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த  ஃபவுண்டரி தொழில் (இரும்பு வார்ப்பு), இப்போது பாதாளத்துக்குத் தள்ளப்பட்டு வருகிறது. மூலப்பொருள்களின் சீரற்ற விலை உயர்வால் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறு, குறு ஃபவுண்டரி் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிலை நேரடியாகச் சார்ந்துள்ள இரண்டு லட்சம் பேரின் எதிர்காலம் இப்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. 

ஃபவுண்டரி தொழிலுக்கு ஆதாரமான மூலப்பொருள்களான பிக் அயன் (வார்ப்பு இரும்பு), கோக் (நிலக்கரி) ஆகியவற்றின் விலை சீரற்ற முறையில் உயர்ந்து வருவதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் ஃபவுண்டரி தொழிலதிபர்கள். இதற்காக கடந்த 4-ம் தேதி அன்று கோயமுத்தூர் முழுக்க உள்ள ஃபவுண்டரி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் செய்தன. இந்த வேலைநிறுத்தம் குறித்துக் கோயமுத்தூர் சிறு, குறு ஃபவுண்டரி அதிபர்கள் சங்கத் தலைவர் சிவசண்முகத்திடம் கேட்டோம்.

மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!

“கோயமுத்தூரைப் பொறுத்தவரை, டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரிக்கு அடுத்ததாக மிகப் பெரிய தொழில் எது என்று கேட்டால், அது வார்ப்படத் தொழில்தான். வார்ப்படத் தொழிலை எல்லாத் தொழில்களுக்கும் தாய்த்தொழில்னு சொல்வார்கள். ஏனெனில், இதைச் சார்ந்துதான் எல்லா தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.

கோயமுத்தூரில் 500-க்கும் மேற்பட்ட ஃபவுண்டரி தொழிற் சாலைகள் இயங்கிவருகின்றன. இத்தனை தொழிற்சாலை களையும் அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் இப்போது நிர்கதியில் இருக்கிறார்கள். காரணம், ஃபவுண்டரி தொழிலுக்கான மூலப் பொருள்களான பிக் அயனும், கோக்கும் சீரற்ற முறையில் விலை ஏற்றப்படுவதுதான்.

மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!

ஃபவுண்டரி தொழிலுக்கான கோக்கை ஆஸ்திரேலியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும்தான் இறக்குமதி செய்கிறார்கள். அங்குள்ள நிலக்கரி தான் ஃபவுண்டரி தொழிலுக்கேற்றதாக இருக்கும். இங்குள்ள நிலக்கரியைப் பயன்படுத்தினால், இரும்பை உருக்குவதில் இரட்டிப்பு வேலை வாங்கும். அந்த நாட்டு அரசு நிலக்கரி எடுப்பதற்குக் கடந்த ஆண்டு முதல் கடுமையானக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆகையால் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், அதன் விலையும் சரமாரியாக ஏறியுள்ளன. போன வருஷத்துக்கும் இந்த வருஷத்துக்கு மான  மூலப்பொருள்களின் விலையில் கோக் மட்டும் 54 சதவிகிதமும், பிக் அயன் 28 சதவிகிதமும், ஸ்க்ராப் (பழைய இரும்பு) 18 சதவிகிதமும் ஏறியிருக்கிறது. இந்த விலையானது சீராக ஏறியிருந்தால்கூடச் சமாளித்து விடலாம். இந்த மாதம் 10 ரூபாய் உயர்ந்தால், அடுத்த மாதம் 5 ரூபாய் குறையும். இந்த விலை உயர்வை எங்கள் வாடிக்கையாளர்களிடம் சொல்லிப் புரியவைக்க முடியவில்லை.

மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!

சமீப காலமாக, எங்கள் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. நிலக்கரி விநியோகமானது பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து தனியார் நிறுவனத்துக்கு எப்போது போனதோ, அன்றிருந்தே இந்த விலை உயர்வுப் பிரச்னையால் நாங்கள் அவதிப்படுகிறோம். நிலக்கரி மூலம் வார்படத் தொழிலைச் செய்யாமல், மின்சாரத்தைப் பயன்படுத்தி வார்படத் தொழிலைச் செய்யும் ஹைடெக் நிறுவனங்கள் இந்தச் சிக்கலிலிருந்து ஓரளவுக்குத் தப்பிப் பிழைத்தன. ஆனால், 90 சதவிகிதத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் நிலக்கரியை நம்பியே இயங்குகின்றன. ஃபவுண்டரி தொழிலுக்கான மூலப்பொருள்களின் விலையுயர்வை மத்திய அரசும், மாநில அரசும் சீராக்க வேண்டும். இல்லை யெனில், சிறு குறு வார்ப்புத் தொழிலை எல்லாம் வெகு சீக்கிரத்தில் அழிந்து விடும்’’ என்றார் வேதனையோடு.

அடுத்ததாக, ஃபவுண்டரி தொழிற்சாலை நடத்திவரும் ராஜேந்திரனிடம் பேசினோம். “நான் 40 வருஷமாக இந்தத் தொழிலை நடத்திக்கிட்டு வர்றேன். நான்கு பேர் சேர்ந்து ஆளுக்கு ரூ.5,000 போட்டு, வெறும் ரூ.20,000 முதலீட்டில் அந்தக் காலத்தில் இந்தத் தொழிலைத் தொடங்கினோம். ஆனால், இப்போது கோடி ரூபாய் போட்டாலும், இந்தத் தொழிலை ஆரம்பிக்க முடியாது என்கிற நிலை வந்துவிட்டது. முன்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருந்த இந்தத் தொழில், இப்போது கேள்விக் குறியாகிவிட்டது. ஒரு தொழில் கண்முன்னே அழிவதை அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல், அதற்கு  உயிர்கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மூலப்பொருள் விலை உயர்வு... பாதாளத்துக்குத் தள்ளப்படும் ஃபவுண்டரி தொழில்!

வாசுமதி காஸ்ட்டிங்ஸின் உரிமையாளர் தனபால், “இன்று ரூ. 10 லட்சம் முதல் போட்டு இந்தத் தொழிலை ஆரம்பித்தாலும், உங்களால் திரும்ப அந்த 10 லட்ச ரூபாயை முழுசா பார்க்க  முடியாது. ரொட்டேஷன்லதான் வந்துக்கிட்டு இருக்கும். முன்பு, இந்தத் தொழிலில் 20 சதவிகிதம் லாபம் கிடைத்தது. இப்போது 5 சதவிகிதத்துக்கும் குறைவான லாபமே கிடைக்கிறது. எங்களின் இந்தக் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளாமல் வங்கிகளும் கடனைக் கட்டச் சொல்லி, நெருக்கு கின்றன. கடன் கட்டுவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதுடன், மூலப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தினால்தான் இந்தத் தொழிலைக் காப்பாற்ற முடியும். சாகப்போகும் தொழிலின் உயிரை நாங்கள் கையில் பிடித்துக் காப்பாற்றி வருகிறோம்.  அரசாங்கம்தான் அதை நிரந்தரமாகக் குணப்படுத்த வேண்டும்’’ என்றார்.
ஃபவுண்டரி தொழில் சார்ந்தவர்களின் கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் காதுகளுக்கு எட்டுமா? 

படங்கள்: தி.விஜய்