நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 23

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 23
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 23

சின்ன ஆசை... பெரிய நஷ்டம்!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered Investment Advisor, INA200000878

குருநாதனுக்கு  சென்னையில் அரசு வேலை.  சேலத்தைச் சேர்ந்த கோமதியைத் திருமணம் செய்தபோது குருவுக்கு வயது 30. கோமதியின் மீது அளவுக்கு மீறிய அன்பு வைத்திருந்தார் குரு. கோமதி அதிர்ந்து பேசாதவர். வீட்டைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டார். மூன்று வருடங்கள் மகிழ்ச்சியாகத்தான் ஓடியது.

குருவுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால், கோமதியைத் திருமணம் செய்து மூன்று வருடங்கள் முடிந்தும் குழந்தை பிறக்கவில்லை.

பரிசோதனை செய்த மருத்துவர்களும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றுதான் சொன்னார்கள். குழந்தை இல்லாத வருத்தம் குருவுக்கு ஆழமாக இருந்தது. இதனாலேயே கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சச்சரவுகள் வர ஆரம்பித்தன. இந்தச் சூழ்நிலையில்தான், பாத்ரூமில் வழுக்கி விழுந்து கோமதிக்குக் காலில் பலமாக அடிபட்டது. குருவினால் அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலையில், உதவிக்காகக் கோமதியின் தங்கை மாலதி சேலத்திலிருந்து சென்னை வந்தார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 23

நடக்க முடியாமலிருந்த அக்காவை மாலதிதான்  முழுமையாகக் கவனித்துக் கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் குரு, தன் மனவருத்தத்தை மாலதியிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறார். அக்காவின் கணவர் மீது மாலதிக்கு ஏற்பட்ட பரிதாப உணர்வு, சில நாள்களிலேயே விருப்பமாக மாறியது. மனைவி உடல்நலமின்றி இருந்த நிலையில், குருவுக்கும் மாலதி மீது ஈர்ப்பு வந்தது.

கோமதி இரண்டு மாதங்களில் ஓரளவு நடக்க ஆரம்பித்தார். “இனி நான் பார்த்துக்கொள்கிறேன், நீ ஊருக்குப் போ” எனச் சொல்லி தங்கையைச் சேலத்துக்கு அனுப்ப முயற்சி செய்தும்கூட, மாலதி ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஊருக்குக் கிளம்பாமல் தவிர்த்து வந்தார்.
ஆனால், மாலதியால் வெகு நாள்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலிருந்து கோமதியின் பெற்றோர், மாலதியை அனுப்பும்படிக் கேட்டதும் மாலதி ஊருக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று.

தங்கையை ரயில் ஏற்றிவிட்டு வருமாறு கணவனிடம் சொன்னார் கோமதி. ரயில் ஏற்றிவிடப் போன குரு திரும்பி வரவேயில்லை. அடுத்த நாள் காலையில் ஊருக்குச் சென்று சேர்ந்திருக்க வேண்டிய மாலதியும், வீட்டுக்கு வரவில்லை எனக் கோமதியின் அப்பா தகவல் தந்ததும் கோமதிக்குச் சந்தேகம் பற்றிக்கொண்டது.

சந்தேகப்பட்டது மாதிரியே இரண்டு நாள் கழித்து மாலதியும், குருவும் மாலையும் கழுத்துமாக வந்துநின்றார்கள். கோமதி கோபத்தில் கத்தினாள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றபோது கோமதியின் பெற்றோர் தடுத்து விட்டனர். குரு அரசு வேலை பார்ப்பதால், வேலைக்குச் சிக்கல் வந்துவிடக் கூடும்; அதோடு இரண்டு மகள்களின் வாழ்க்கையும் பாழாகிவிடும் என அவர்கள் பயந்தார்கள். பேசி சமாதானம் செய்துவைத்தார்கள்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 23ஆனால், விதி வேறுவிதமாகச் செயல்பட்டது. நான்கு வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த கோமதிக்குக் குழந்தை பிறந்தது. மாலதிக்குக் குழந்தை வாய்க்கவில்லை.

திடீரெனச் சகோதரிகளுக்குள் மீண்டும் மோதல் வந்துவிடவே, இருவரையும் தனித்தனியாக வீடு பார்த்துக் குடிவைத்தார் குருநாதன். இதனால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போனது. குருவால் சமாளிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வெளி நாட்டுக்குப் போய்விட்டார் குரு. இரண்டு மனைவிகளுக்கும் தனித்தனியாக சிங்கிள் பெட்ரூம் வீடு வாங்கிக் கொடுத்தார்.

அவ்வப்போது விடுமுறையில் சென்னைக்கு குருநாதன் வந்துபோவார். அவர் வந்தாலே மகன் விஷ்ணு, உடனே தாத்தா வீட்டுக்குச் சென்றுவிடு வான். அப்பாவைச் சுத்தமாக அவனுக்குப் பிடிக்காமல் போனது. மகன் எங்கே தன்னை முழுவதுமாக வெறுத்துவிடுவானோ என்று கவலைப்பட்ட குரு, சென்னைக்கே வந்துவிடலாம் என யோசித்தார்.

ஆனால், இங்கே குருவுக்குச் சரியான வேலை அமையவில்லை. கையில் இருக்கும் பணத்தை வைத்து இரண்டு குடும்பங்களையும் சமாளித்து வந்தார். வேலை கிடைக்காத விரக்தியில் குடிக்கவும் ஆரம்பித்தார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 23

இந்த நிலையில்தான், அவர் என்னைத் தேடி வந்தார். நான் குருநாதன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். இரண்டாவது திருமணம் செய்தது தவறுதான் என்றாலும், அது அவரது தனிப்பட்ட விஷயம் என்பதால், அதுபற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. மற்றபடி இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு சிங்கிள் பெட்ரூம் வீடுகளை வாங்கித் தந்து கடன் சுமையை ஏற்றிக் கொண்டது தவறு. வேலை கிடைக்கவில்லை என்பதற்காக மது குடிக்க ஆரம்பித்தது மாபெரும் தவறு. இரண்டு திருமணம் செய்தபிறகு இருவரையும் இங்கே விட்டுவிட்டு, வெளிநாடு சென்றதும் தவறுதான். அப்படியே வெளிநாட்டுக்குப் போய்விட்ட நிலையில், அங்கே என்ன சிக்கல் இருந்தாலும் சமாளித்து வேலையைத் தொடர்ந் திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. சென்னைக்குத் திரும்ப வந்தபின்பும், கிடைத்த வேலைக்குப் போகாமல், தனக்கேற்ற வேலை கிடைக்கும் எனக் காத்திருந்ததும் தவறு என்று சொல்லிப் புரிய வைத்தேன்.

குருவின் இரண்டு மனைவிகளையும் சமாதானம் செய்து, ஒரே வீட்டில் வசிக்கச் செய்தால்தான் செலவு கட்டுக்குள் வரும் எனக் குருவுக்கு வரவு செலவுக் கணக்குகளைப் பட்டியல் போட்டு விளக்கினேன். ஒரு வீட்டை விற்றுவிட்டு உங்கள் ஓய்வுக்காலத்துக்கும், மகனின் படிப்புக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனச் சொன்னேன். 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டை விற்று, மூலதன ஆதாய வரி செலுத்திய பிறகு, மகன் படிப்புக்கு மல்டி கேப், லார்ஜ் கேப் ஃபண்டுகளில்  ரூ.10 லட்சமும், குருவின் ஓய்வுக்காலத்துக்கு பேலன்ஸ்டு, லார்ஜ் கேப், மிட் கேப் ஃபண்டுகளில் ரூ.20 லட்சமும் ஒதுக்கச் சொன்னேன். சிங்கிள் பெட்ரூம் வீடு போதுமானதாக இருக்காது எனில், அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, டபுள் பெட்ரூம் வீடாகப் பார்த்துக் குடிபோகுமாறும் ஆலோசனை சொன்னேன். நல்ல சூழ்நிலை அமைந்தாலே, எல்லாமே நல்லதாக நடக்கும் என அவருக்குப் புரிய வைத்தேன்.

இப்போது ஒரு வேலையில் சேர்ந்துவிட்டார் குருநாதன். சம்பளத்தில் அனைத்துச் செலவுகளும் போக மாதம் ரூ.15,000 மீதம் உள்ளதாகச் சொன்னார். அவரது பெயரிலும், அவரது இரண்டு மனைவிகள் பெயரிலும் ஆளுக்கு 5,000 ரூபாயாகப் பிரித்து முதலீடு செய்யச் சொன்னேன். இன்னும் கூடுதல் சம்பளத்தில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் குருநாதன். அப்படி அமைந்தால் முதலீட்டுத் தொகையையும் அதிகரிக்க முடியும்.

நாம் செய்யப் போகும் காரியம் எதுவாக இருந்தாலும், ஒருமுறைக்கு இரண்டு முறை அதிலுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்  விஷயங்களைப் பட்டியல் போட்டுப் பார்த்துச் செய்தால், குருநாதன் போல யாரும் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருக்காது  என்பது நிஜம்.