Published:Updated:

மோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்!

மோடியின்  மூன்றாண்டு  ஆட்சி...சாதனைகளும்  வேதனைகளும்!
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்!

சோ.கார்த்திகேயன்

மோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்!

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
மோடியின்  மூன்றாண்டு  ஆட்சி...சாதனைகளும்  வேதனைகளும்!
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்!

பிரதமர் மோடியின் பா.ஜ.க அரசு மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்து, நான்காவது ஆண்டைத் தொடங்குகிறது. மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியை விமர்சித்து `#3FailedYears’ என்ற ஹேஷ்டாக் கடந்த சில தினங்களாக மிகவும் ட்ரெண்ட் ஆனது. மோடி எதிர்ப்பாளர்கள் ஆன்லைனில் அதிகம் உலவுவதால், மீம்ஸ் மூலம் அவரை நெட்டில் வறுத்தெடுத்ததில் ஆச்சர்யமில்லை.

மோடியின் மூன்றாண்டு ஆட்சிக் காலத்தில் நல்ல, கெட்ட விஷயங்கள் நடக்கவே செய்திருக்கின்றன. பொருளாதாரம் சுறுசுறுப்பாக நடப்பதற்கான முயற்சிகள் ஒருபக்கம், வண்டி வண்டியாக வெற்று அறிவிப்புகள் இன்னொரு பக்கம் எனக் கலவையான காலமாகவே இருந்திருக்கின்றன இந்த மூன்றாண்டுகள். மோடி அரசின் மைனஸ்களைப் பார்ப்பதற்குமுன், முதலில் ப்ளஸ்களைப் பார்த்துவிடுவோம்.

மோடியின்  மூன்றாண்டு  ஆட்சி...சாதனைகளும்  வேதனைகளும்!

ஊழல் குற்றச்சாட்டு இல்லை

கடந்த மூன்று ஆண்டுக் கால ஆட்சியில் மோடி அரசின் மீது எந்த ஓர் ஊழல் குற்றச்சாட்டும் இல்லாததே வரவேற்கத்தக்க அம்சம்தான். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் உள்பட பல ஊழல்கள் பல அமைச்சர்கள் மீது எழுந்து, அந்த ஆட்சிக்குக் களங்கம் விளைவித்த நிலையில், மோடி ஆட்சியில் எந்தவொரு அமைச்சர் மீதும் இதுவரை பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படாதது ஆச்சர்யமே. கள்ளப்பணம், கறுப்புப்பணம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஒரு சில பாஜகவினர் உள்ளானாலும், மத்திய அமைச்சர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை இல்லை. நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை வெளிப்படையாக நடத்தியதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு

அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பது கடந்த ஆட்சிக் காலத்தில் அடிக்கடி பேசப்பட்டாலும், கடந்த மூன்றாண்டு காலத்தில்தான் இது நிஜமாகி இருக்கிறது. வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதுவரை 28.52 கோடியை எட்டியுள்ளது.

நேரடி மானியம்

இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப் பட்ட விஷயம் என்றாலும், தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது மோடி காலத்தில்தான். சமையல் எரிவாயுக்கான மானியம் தொடங்கி, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் வரை பலதரப்பினருக்கும் நேரடியாகப் பணம் தருவதன் மூலம் உரியவர்களுக்குச் சேரவேண்டிய பணம் சிந்தாமல் சிதறாமல் சென்றது. சமையல் எரிவாயு மானியம் நேரடியாகச் செலுத்தப்படுவதால், அரசுக்கு மிச்சமான தொகை ரூ.22 ஆயிரம் கோடி. பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன்படி, இதுவரை 1.5 கோடி பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத் தந்துள்ளனர்.  இதனால் அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி


ஜிஎஸ்டியை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் மோடி அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வரி வருவதினால் மாநில அரசாங்கங்களின் வருமானம் குறையும் என்கிற விமர்சனம் பரவலாக இருந்தது. பல்வேறு மாநில அரசுகளுடன் தொடர்ந்து பேசி, ஜிஎஸ்டியின் மூலம் மாநில அரசுகளுக்கு எந்த பெரிய பாதிப்பும் இல்லாத அளவுக்கு இந்த வரியை நடைமுறைக்குக் கொண்டுவர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையே. மாநில அரசுகளுக்கான வரிப் பங்கீடு 32%லிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளது. 

முத்ரா தொழில் கடன்

`கடன் என்பது பெருமுதலாளிகளுக்கு மட்டும்தான்’ என்கிற நிலை மாறி, சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோருக்கும் முத்ரா திட்டத்தின் மூலம் தொழில் கடன் வழங்கப்பட்டது   2016-17-ல் ரூ.1.22 லட்சம் கோடி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1.80 லட்சம் கோடி கடன் தர, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது பெரிய விஷயமே. 

குறைந்த விலையில் இன்ஷூரன்ஸ், ஓய்வூதியம்


வெறும் 12 ரூபாயில் இன்ஷூரன்ஸும் சில நூறு ரூபாயில் ஓய்வூதியத் திட்டமும் கொண்டு வந்ததன் மூலம் பல லட்சம் பேர் பயனடைந்திருக்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக மின்சாரத்தையே பார்க்காத பல கிராமங்கள் மின்சார வசதி பெற்றிருப்பதும், மின் உற்பத்தியில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டிருப்பதும் கடந்த மூன்றாண்டுக் காலத்தில்தான்.

உச்சத்தில் பங்குச் சந்தை


பங்குச் சந்தையானது கடந்த மூன்றாண்டுகளாக குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்து, இப்போது உச்ச நிலையில் இருக்கிறது. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய நேரடி முதலீடும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவுக்குள் வந்துள்ளது.

குறைந்த கறுப்புப் பணப் புழக்கம்

500 மற்றும் 1,000 ரூபாய் பணமதிப்பு நீக்கத்தின் மூலம் கறுப்புப் பணம் புழங்குவது மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதனால் சில மாதங்கள் மக்கள் பெரிய அளவில் கஷ்டப் பட்டாலும், அதற்கான விளைவுகள் இனிவரும் காலத்தில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும்.
அந்நிய முதலீடு, 2013-14 -ல்  36.05 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2016-17 60.08 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்றாண்டு காலத்தில் இப்படி பல பாசிட்டிவான விஷயங்கள் நடந்திருந்தாலும், நெகட்டிவான சிலவும் இருக்கவே செய்கின்றன. அவற்றை இனி பார்ப்போம்.

பேச்சிலும் பேப்பரிலும்தான்

தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் ஓய்வூதிய யோஜனா, சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, ஸ்கூல் நர்சரி யோஜனா, சுரக்‌ஷா பீமா யோஜனா, கிருஷி சிச்சாயின் யோஜனா, கவுசல் விகாஸ் யோஜனா, பிரதம மந்திரி முத்ரா யோஜனா, சுகன்யா சம்ரிதி யோஜனா, டிஜிலாக்கர் திட்டம், எல்.பி.ஜி மானியத் திட்டம், சாகர் மாலா, ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் உள்பட பல திட்டங்கள் மோடி அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தத் திட்டங்கள் தடபுலாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், இவற்றில் எத்தனை முழுவேகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டன என்கிற கேள்விக்கு மெளனமே பதில். டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா உள்பட சில திட்டங்கள் பேச்சிலேயே இருக்கின்றன.

விழிபிதுங்கி நிற்கும் மக்கள்


கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்கிற பெயரில் இந்த அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், மூத்த குடிமக்கள், சிறு வணிகர்கள், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஆனால் பெரும் பணக்காரர்கள், செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உயராத வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் என எட்டுத் துறைகளில் கடந்த 2009-ம் ஆண்டில் பத்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் 2015-ம் ஆண்டில், 1.55 லட்சமாகவும், 2016-ம் ஆண்டில் 2.31 லட்சமாகவும் வேலைவாய்ப்புகள் குறைந்துபோனதாகத் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. `மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தாலே, வேலைவாய்ப்புகள் பெருமளவில் பெருகியிருக்கும்.
 
இனி செய்ய வேண்டியது...

கடந்த மூன்றாண்டு ஆட்சிக் காலத்தில் மைனஸ்களைவிட ப்ளஸ்களே அதிகமாக இருக்கின்றன. என்றாலும், அடுத்த இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் இந்த அரசாங்கம் எடுக்கப் போகும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கும். ஜிஎஸ்டி சட்டத்தைக் கொண்டுவந்தபிறகு, திவால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்ல முற்படும். பினாமி சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கறுப்புப் பணம் புழங்குவதை இன்னும் பெரிய அளவில் குறைக்க முடியும்.

அடுத்து வரும் இரண்டு ஆண்டுகள் இந்த ஆட்சிக்கு மிக முக்கியமானவை. இந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக உயர்த்தி, மக்களிடம் நல்ல பெயர் வாங்கினால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்பதைப் பிரதமர் மோடியும் எல்லா அமைச்சர்களும் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம்!