Published:Updated:

கிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா!

கிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா!
பிரீமியம் ஸ்டோரி
கிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

கிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன்

Published:Updated:
கிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா!
பிரீமியம் ஸ்டோரி
கிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா!

பிறந்ததே பிசினஸ் குடும்பத்தில்தான் என்றாலும்  குடும்ப பிசினஸில் வளர்ச்சிக்கான வாய்ப்பு களுக்கோ, சுதந்திரமான செயல்பாடுகளுக்கோ இடமில்லாத காரணத்தினால் அதிலிருந்து வெளியேறியவர் கிஷோர் பியானி. தனது சொந்த முயற்சிகளால் மட்டுமே மிகப் பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய  பியானி,  இந்தியாவின் சாம் வால்டன்; இந்திய ரீடெய்ல் பிசினஸின் கிங் எனப் புகழப்படுகிறவர். 

ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பியானியின் குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்த பின்,  அவரது தாத்தா டெக்ஸ்டைல் பிசினஸைத் தொடங்கினார். தாத்தாவுக்குப் பின் கிஷோர் பியானியின் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பிசினஸை செய்துவந்தனர். அதனால் பிசினஸ் ரத்தம்  பியானியின் ரத்தத்தில் கலந்திருந்தது.

கிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா!

1961 ஆகஸ்ட் மாதம் பிறந்தார் பியானி. பள்ளிப் படிப்பை முடித்து வணிகவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அவருக்குப் படிப்பில் கவனம் செல்லவில்லை. படிப்பு, கல்லூரி இவையெல்லாம் மேனேஜர்களுக்குத்தான் சரியாக இருக்கும். பிசினஸ் செய்ய விரும்பும் தொழில்முனைவோர் களுக்கல்ல என உறுதியாக நம்பினார் பியானி.  அதனாலேயே கல்லூரிக் காலத்தில் குடும்ப பிசினஸிலும், நண்பர்களோடு ஊர் சுற்றுவதிலும்  அதிக ஆர்வம் காட்டினார். புது இடங்களுக்குச் செல்வது, புது விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவருடைய முக்கியமான ஆர்வங்களாக இருந்தன. இந்த ஆர்வம்தான் அவருக்கு இந்திய ரீடெய்ல் சந்தையின் நுணுக்கங்களையும் கற்றுத் தந்தது.  கல்லூரியில் படித்து முடித்ததும்,  குடும்ப பிசினஸில் ஈடுபட ஆரம்பித்தார்.

ஆனால், குடும்ப பிசினஸில் அவர்களின் அணுகுமுறை, தொழில் அனைத்துமே சரியான பாதையில் செல்லவில்லை என்று அவர் உணர்ந்தார். அதனாலேயே அங்கு சென்ற சில மணி நேரத்திலேயே இடத்தைக் காலி செய்துவிட்டுக் கிளம்பிவிடுவாராம். எவ்வளவு நாள் இப்படி இருப்பது என்று நினைத்தவர், தன்னுடைய வழியில் தனக்காக ஒரு களத்தை அமைக்க முடிவெடுத்தார். அப்போது அவருக்குத்  திருமணம்கூட ஆகவில்லை.

1980-களில் இளைஞர்களிடம் இருந்த டிரெண்டைப் பார்த்தார். அவர்களுடைய ஆடை விருப்பங்களைப் பார்த்ததும் உடனடியாக அதில் இறங்க முடிவெடுத்தார். அதுபோன்ற துணி வகைகளை, மில்களில் இருந்து வாங்கி ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்க ஆரம்பித்தார். நல்ல லாபம் கிடைத்தது. லாபத்தை ருசி பார்த்துவிட்ட கிஷோருக்கு உள்ளுக்குள் தொழில் ஆர்வம் மேலும் கொழுந்துவிட்டு எரிந்தது. தனக்கான பிசினஸை எப்படி ஆரம்பிப்பது, எப்படி மற்றவர்களைவிட வித்தியாசமாகத் தொழில் செய்வது என்று யோசித்தார். சில காலம் இவரைப் போலவே சொந்தமாகத் தொழில் செய்ய விரும்பிய உறவினர்கள் சிலருடன் சேர்ந்தும் தொழில் செய்தார். ஆனால், அவருக்கான இடமாக அந்த முயற்சிகள் இல்லை.

இந்தியா முழுக்க உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும்; அப்படியொரு பிசினஸைத் தொடங்க வேண்டும் என்பதே பியானியின் பெருங்கனவாக இருந்தது. பின்பு டபுள்யுபிபி என்கிற பிராண்ட் பெயரில் ட்ரவுசர்களை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்திலேயே அவருடைய பிசினஸ் நன்றாக வளர்ச்சி அடைந்தது.

எப்போதும் புதுப்புது முயற்சிகளைச் செய்து பார்ப்பது அவரது வழக்கம். 1987-ல் அவர் நினைத்த மாதிரி ஒரு பிசினஸ் அவருக்கு அமைந்தது. ‘மென்ஸ் வியர் பிரைவேட் லிமிடெட்’ என்கிற ஆடை தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.  பேண்டலூன் என்ற பிராண்ட் பெயரின் கீழ் தன் தயாரிப்புகளைச் சந்தைப் படுத்தினார்.

ஆனால், இதன் ஆரம்பக்கால வளர்ச்சி அவ்வளவு எளிதாக இல்லை. எதிர்பார்த்ததுபோலச் சுமுகமாகச் செல்லவில்லை. அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் எல்லாம் இந்த பிசினஸ் நிலைத்து நிற்காது என்றே நினைத்தார்கள். அவருக்குத் தோள் கொடுக்கவும் யாருமில்லை.  குடும்பத்திலிருந்து வெளியேறியபிறகு, தொழில் ரீதியான உதவிகளுக்கு அவருக்கென்று அவர் மட்டுமே இருந்தார். அவரது தயாரிப்புகளை அவருடைய சொந்தக்காரர்களே வாங்கி விற்கவில்லை. இந்த நிலையில், நிதி நெருக்கடிகளின் போது வங்கிகளும் கடன் தர மறுத்தன.

இவற்றையெல்லாம் ‘சவால்கள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு’ போலவே அவர் பார்த்தார். இந்தச் சிக்கல்களையெல்லாம் மீறி சில துணிக்கடைகளுக்குத் தன்னுடைய தயாரிப்புகளைத் தொடர்ந்து சப்ளை செய்தார் பியானி. கொஞ்சம் கொஞ்சமாக அவரது பிராண்டுகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனாலும், அவருக்கு அது போதுமானதாக இல்லை. அவர் எதையுமே பெரிதாக ஆசைப்படுபவர்.

1991-ல் அதற்கான நேரம் வந்தது. பேண்டலூன் என்ற தன்னுடைய பிராண்டின் பெயரிலேயே ரீடெய்ல் ஷாப் ஒன்றை முதலில் கோவாவில் ஆரம்பித்தார். 1992-ல் பங்குச் சந்தைக்குள் அவரது நிறுவனம் நுழைந்தது. இதுதான் அவருடைய பிசினஸில் திருப்பத்தை உண்டாக்கியது. தனது நிறுவனத்தின் 60 சதவிகிதப் பங்குகளைப் பங்குச் சந்தையில் விற்பனை செய்து நிதி திரட்டினார். தாகத்தில் இருந்தவனுக்கு அமிர்தம் கிடைத்தது போல அவருக்கு அந்த நிதி இருந்தது. தன் பிசினஸை எவரும் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு விரிவுபடுத்தினார்.

இந்தியா முழுவதும் தனது ரீடெய்ல் கடைகளைத் திறந்த அதே சமயம், கணிசமான பணத்தை மார்க்கெட்டிங் செய் வதற்காகச் செலவழித்தார். அவருடைய முயற்சி,  நான்கே ஆண்டுகளில் மிகவும் பிரபலமான பிராண்டாக பேண்டலூனை மாற்றியது.

ஆனால், அவர் செய்த ஒரே தவறு, லாஜிஸ்டிக்ஸில் கோட்டைவிட்டதுதான். மேலும், ரீடெய்ல் கடைகள் ஒவ்வொன்றையும் ஒரே ஒரு மேலாண்மை நிர்வாகி ஒருவரால் கண்காணிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் கடைகளில் பிசினஸ் எப்படி நடக்கிறது, என்ன குறைகள் இருக்கின்றன, அங்கு வரும் வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் தொடர்ந்து தெரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் கணிசமான பின்னடைவையும் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்காக, பிசினஸில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பிய பியானிக்குப் புது யோசனை ஒன்று உதித்தது. கொல்கத்தாவில் 10,000 சதுர அடியில் மிகப் பெரிய ரீடெய்ல் கடை ஒன்றை நிறுவினார். அதுவரை சின்னச் சின்னக்  கடைகளாக மட்டுமே ரீடெய்ல் கடைகள் இருந்தன. பெரிய கடைகள் என்று சொல்லப்பட்டவைகூட 4,000 சதுர அடிக்கு மேல் இல்லை. முதன்முறையாக 10,000 சதுர அடியில் மிகப் பெரிய ரீடெய்ல் கடை என்கிற யோசனை செயல்படுத்தப்பட்டதும், மக்களின் கவனம் அதன் மீது குவிந்தது.

அடுத்ததாக, மக்கள் நுகரும் அத்தனை பொருள்களும் கிடைக்கும் வகையிலான ஒரு புராஜெக்ட்டைத் திட்டமிட்டார். அந்தத் திட்டத்தில் தொடங்கப்பட்டதுதான் பிக்பஜார். சூப்பர் மார்க்கெட் கலாசாரம் இப்போதுதான் தெருவுக்குத் தெரு இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் அவர் 2001-லேயே செயல்படுத்திவிட்டார். கொல்கத்தாவில் முதல் பிக்பஜார் ஸ்டோரைத் திறந்தார். இந்தியா முழுவதுக்கும் மெள்ள மெள்ள அதை விரிவுபடுத்தினார்.

 100 ஸ்டோர்களில் வாரத்துக்கு 2 மில்லியன் வாடிக்கையாளர்கள் வந்துசென்றனர். இந்திய நடுத்தரக் குடும்பங்களை மொத்தமாகக் கவர்ந்திழுத்தது பிக்பஜார். ஒரே இடத்தில் அனைத்தும், அதுவும் சற்றுக் குறைவான விலையில்; அவ்வப்போது ஆஃபர்களும் கிடைத்ததால், மக்கள் விரும்பி வந்தனர். 

கிஷோர் பியானியின் வெற்றிக்குக் காரணம் சரியான பிசினஸை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் செய்ததுதான். அவர் எந்த அளவுக்கு வெற்றியை ருசித்தாரோ, அதே அளவு தோல்விகளையும் சந்தித்தார். அவர் தயாரித்த, ‘Na Tum Jaano Na Hum’ (2002) மற்றும் ‘Chura Liya Hai Tumne’ (2003) ஆகிய இரண்டு பாலிவுட் படங்களும் மிகப் பெரிய தோல்வி கண்டன. இதற்கிடையே,  பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டபோது, அவரது பிசினஸ் பெருமளவுக்குப் பாதிப்படைந்தது. 

இன்னொரு பக்கம், நிறுவனத்துக்குக் கடன் சேர்ந்துபோனது. இதனால்  மேலும் 30  பேண்டலூன் கடைகளைத் திறக்கவிருந்தது தடைபட்டது. சில இடங்களில் கடைகளை மூடவேண்டியிருந்தது.  பிக்பஜாரின் பிசினஸும் அடி வாங்கியது. பேண்டலூன் பிசினஸில் 50.1 சதவிகிதத்தை ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது ஃப்யூச்சர் குழுமம் என்ற பெயரின் கீழ்தான் அவருடைய அனைத்து பிராண்டுகளும் செயல்பட்டு வருகின்றன. அவை, பிக்பஜார், ஃபுட்பஜார், எஃப்பிபி, ஹோம் டவுன், இ-சோன், ஃபுட் ஹால், ஃப்யூச்சர்பஜார்.காம், சென்ட்ரல், பிராண்ட் ஃபேக்டரி, பிளானட் ஸ்போர்ட்ஸ், பிக் ஆப்பிள், ஆதார், இண்டிகோ நேஷன், ஜான் மில்லர்ஸ், லம்பார்ட், மான்செஸ்டர் யுனைடெட் எனப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

எவ்வளவோ பிசினஸ்களை முயற்சிசெய்து பார்த்திருந்தாலும், அவருக்குக் கடைசிவரை  கைகொடுத்தது ரீடெய்ல் பிசினஸ்தான். இன்று 90 நகரங்களில், 60 சிறிய நகரங்களில் 70 மில்லியன் சதுர அடி இடங்களில் சில்லறை வர்த்தகத்தைச் செயல்படுத்தி வருகிறார்.  டெக்ஸ்டைல், உணவு மற்றும் பிற நுகர்வோர் பொருள்கள் என அனைத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார். பேண்டலூன் ரீடெய்ல் ஸ்டோர்கள் ஒரு வருடத்துக்கு 300 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சந்திக்கின்றன.

தன் சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் மட்டுமே படிப்படியாக சிகரம் தொட்டவர் பியானி என்றால் ஆச்சர்யமில்லை. 

சக்சஸ் மந்திரம்!

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டுவரும் வழிகளை யோசிப்பவர்கள்தான் பெரிய வெற்றியை எட்டிப்பிடிக்கிறார்கள். கிஷோர் பியானியும் அப்படித்தான் சில சறுக்கல்களைச் சந்தித்தபோது, அவற்றைச் சாதனைகளாக மாற்றும் வழிகளை யோசித்தார். மீண்டும் பழையபடி பிசினஸில் முன்னேற்றத்தை அடைய லாபத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்தார். பிற நிறுவனங்களை வாங்குவது முதல், பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது வரை அனைத்து முயற்சிகளிலும் இறங்கினார். மெள்ள மெள்ளத் தோல்விகளிலிருந்து மீண்டு வந்தார். இப்போது வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது  அவரது பிசினஸ். ரீடெய்ல் பிசினஸில் ஈடுபடும் எவரும் அவருடைய முயற்சிகளையும், தவறுகளையும் பார்த்துக்கொண்டுதான் ரீடெய்ல் பிசினஸில் இறங்க வேண்டும் என்ற அளவுக்கு ரீடெய்ல் பிசினஸின் முன்னோடியாகத் திகழ்வதுதான் கிஷோரின் வெற்றி எனலாம்.