அறிவுடை நம்பி, தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறார். ஆனாலும், அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற ஆசையில் பகுதி நேரமாகக் கட்சிப் பணிகளில் பம்பரமாகச் சுழன்று வந்தார். தான் சார்ந்த அரசியல் கட்சி தன்னுடைய ஏரியாவில் ஏதாவது விழா நடத்துகிறது என்றால், தன் சொந்தப் பணத்தில் போஸ்டர், பேனர் என அந்தப் பகுதியையே கலக்கிவிடுவார் நம்பி.
இந்த முறை கவுன்சிலர் சீட்டு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே கடந்த 15 வருடங்களாகக் காத்துக்கிடக்கும் நம்பியை, பலரும் சீட்டு வாங்கித் தருகிறேன் எனக் காசு பறித்தார்களே தவிர, அதனால் எந்தப் பலனும் அவருக்கு ஏற்படவில்லை.
தன் சம்பளப் பணத்தில் பெரும்பகுதியை தான் சார்ந்த அரசியல் கட்சிக்கு பேனர் வைப்பதைப் பெருமையாக நம்பி நினைத்தாலும், நம்பியின் மனைவி பார்வதி அதை விரும்பவில்லை. அவ்வப்போது கணவனுக்குப் புத்தி சொன்னாலும், நம்பி அதை பொருட்டாக மதிப்பதில்லை. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வருவதுண்டு. கட்சிப் பிரமுகர்களுடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி சென்னைக்குப் போய் வருவதிலும் எக்கச்சக்கமாகச் செலவழித்தார். நயா பைசா சேமிக்கவில்லை என்கிற உண்மை நம்பிக்கும் தெரியும். ஆனாலும் அலட்சியமாகவே இருந்தார்.

ஒருசமயம் தன் மைத்துனர் ஜானகிராமனின் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றார் நம்பி. அங்கே தன் மகளின் திருமணத்துக்காகக் கடன் வாங்கியதையும், பல லட்சங்கள் செலவானதையும் அவர் நம்பியிடம் மனம்விட்டுச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். நிறைய சொத்துகள் வைத்துள்ள ஜானகிராமனே இப்படி புலம்புகிறார் என்றால், பெரிதாக எந்தச் சொத்தும் இல்லாத தன் நிலை என்னவாகுமா என்று நினைத்துப் பயப்பட ஆரம்பித்தார் அறிவுடை நம்பி.
எதிர்காலம் கண்முன் இருண்டு காணப்படவே, என்ன செய்வதென்று குழம்பிப்போனார் அவர். தனக்கு முன்னின்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் செலவுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தார். நம்பியின் மகன் சுரேஷ், இன்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன். சுரேஷ், கல்லூரிப் படிப்பை முடிக்க இன்னும் சில லட்சங்களாவது தேவையாக இருக்கும்; மிகத் தாமதமாகப் பிறந்த மகள் புவனா, இப்போதுதான் நான்காம் வகுப்பு படிக்கிறாள். புவனாவின் படிப்பு, திருமணத்துக்குப் பல லட்சங்கள் தேவையாக இருக்கும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார். தனக்கு 48 வயது ஆகிவிட்டதை உணர்ந்த நம்பி, இனி குழந்தைகளின் எதிர்காலத்துக் காக எப்படிச் சேமிக்கப் போகிறேனோ எனப் பதறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்காலம் பற்றிய பதற்றம் தொற்றிக்கொண்ட போதுதான் நம்பி என்னைத்தேடி வந்தார். அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்காக அவரைப் பற்றிய முழுவிவரங்களையும் கேட்டேன்.
நம்பியிடம் எந்தவிதமான சேமிப்போ, முதலீடோ இல்லை. சில வருடங்களுக்குமுன் நம்பியின் அப்பா கார் விபத்து ஒன்றில் இறந்துபோனார். அப்போது கிடைத்த செட்டில்மென்ட் தொகையுடன், தன் பி.எஃப் பணத்தையும் போட்டுச் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டியிருந்தார் நம்பி. அந்த வீடு மட்டும்தான் அவருக்கு இருக்கும் உருப்படியான சொத்து எனச் சொல்லலாம்.
நம்பி செய்த தவறுகளில் முதலாவது, ஆழம் தெரியாமல் அரசியலில் காலை வைத்ததுதான். அரசியல் என்பது, பணத்தை முதலீடு செய்யும் தொழில் அல்ல என்பதை நம்பி புரிந்துகொள்ளாமல், கண்டபடி செலவு செய்ததால்தான் அவரால் ஒரு பைசாக்கூட சேர்க்க முடியாமல் போனது.
அடுத்ததாக, அவரது மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்கூட காது கொடுத்துக் கேட்காமல் அலட்சியமாக இருந்ததும் தவறுதான். நம் மீது அக்கறை செலுத்துபவர்களின் பேச்சைக் கேட்காமல் போனால் நாம்தான் நஷ்டப்பட வேண்டும் என்கிற உண்மையை நம்பி உணராத காரணத்தால்தான் 48 வயதைக் கடந்தும் நம்பிக்கு எந்தச் சேமிப்பும் இல்லை.
பி.எஃப் தொகையை எடுத்து வீடு கட்டியதால், அவரது பி.எஃப் கணக்கில் வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே இருந்தது. மகளின் படிப்புக்கும், திருமணத்துக்கும் பணம் சேர்க்க வேண்டும்; இதுவரை விட்டேத்தியாக இருந்துவிட்டதால், இனி இருக்கும் காலங்களில் தேவையான பணத்தைச் சேர்த்துவிட முடியுமா என என்னைச் சந்தித்த உடனே பயத்துடன் கேட்டார்.

வீட்டுக் கடன் இல்லாததால், அவருக்கு மாதக் குடும்பச் செலவு ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை ஆனது. ரூ.40 ஆயிரம் வரை சேர்க்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தது. தற்பெருமைக்காகக் கட்சிக்குச் செலவு செய்வதையும் போஸ்டர், பேனர் அடிப்பதையும் முதலில் குறைத்துக் கொள்ளும்படி சொன்னேன்.
மாதம் ரூ.12 ஆயிரம் சேர்த்தால் 10 வருடங்களில் ரூ.27 லட்சம் கிடைக்கும். இதை மகளின் திருமணத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னேன். 23,000 ரூபாயை ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்யச் சொன்னேன். இதன்மூலம் ஓய்வுக் காலத்தில் ரூ.53 லட்சம் கிடைக்கும்.
பி.எஃப் மூலம் ரூ.25 லட்சம் கிடைக்கும். மொத்தம் ரூ.88 லட்சத்தை வைத்து ஓய்வுக் காலத்தைச் சமாளித்துக்கொள்ள முடியும் எனச் சொன்னேன். மீதியுள்ள 5,000 ரூபாயை மகனின் படிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன்.
அறிவுடை நம்பியைப் போல பலரும் ஏதாவது ஒரு தெளிவில்லாத இலக்கை வைத்துக்கொண்டு, சம்பாதிக்கும் பணத்தை அதற்குச் செலவு செய்து கொண்டிருப்பார்கள். இதனால் அவசியமான இலக்குகளுக்கு முதலீடு செய்ய முடியாமல் தவிர்த்து வருவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் காலம் கடந்தபிறகு கஷ்டங்களைக் கண்டிப்பாகச் சந்தித்தே தீர வேண்டும். எதிர்காலத் தேவைகளுக்காகச் சரியான நேரத்தில், சரியான முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டால், எந்தக் காலத்திலும் அறிவுடை நம்பியைப் போல கஷ்டப்பட வேண்டியதில்லை.
(நிறைவுற்றது)