நம்மில் பலரும் சமாளிக்க முடியாமல் திணறுவது, திடீரென வந்து நம்மைத் திக்குமுக்காட வைக்கும் அவசரச் செலவுகள்தான். திடீரென உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி, சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற பலப்பல செலவுகள். இந்தச் செலவுகளைச் சமாளிக்கும் வழி நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

எமர்ஜென்சி ஃபண்ட்
எதிர்பாராத திடீர் விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பின்போது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கைகொடுக்கும் என்றாலும் அதை நம்பி மட்டுமே இருந்துவிட முடியாது. காரணம், ஒரு ஹெல்த் பாலிசியில் அனைத்து நோய் பாதிப்புகளுக்கும் அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொதுவான ஹெல்த் பாலிசிகளில் பல்களில் ஏற்படும் பாதிப்புகள், பிரசவச் செலவுகள் போன்றவற்றுக்கு கவரேஜ் இருக்காது.
அப்படியானால், இதுபோன்ற செலவுகளை எப்படிதான் ஈடுசெய்வது என்கிறீர்களா? அதற்கு உதவுவதுதான் எமர்ஜென்சி ஃபண்ட் என்கிற அவசர கால நிதி.
எதிர்பாராமல் ஏற்படக்கூடிய திடீர் செலவுகள் ஒருவரைக் கடனில் தள்ளாமல் இருக்கவும், நீண்ட நாள் முதலீட்டைப் பதம் பார்க்காமல் இருக்கவும் இது மிகவும் அவசியம். மேலும், பணிபுரியும் நிறுவனம் திடீரென மூடப்பட்டாலோ, வேலை இழப்பு ஏற்பட்டாலோ, அடுத்த வேலையில் சேரும் வரை குடும்பச் செலவு பாதிக்காமல் இருக்கவும் இந்த அவசர கால நிதி அனைவருக்கும் அவசியம்.
எப்படி உருவாக்குவது?
இதை உருவாக்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. பொதுவாக, ஒரு மாதத்துக்கான குடும்பச் செலவைப்போல, சுமார் 3 முதல் 5 மடங்கு தொகையை அவசரச் செலவு நிதியாக வைத்திருப்பது அவசியம். இதற்கும் குறைவான தொகையை வைத்திருந்தால், திடீர் செலவைச் சமாளிப் பது கஷ்டம்.
உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.30,000 என்று வைத்துக் கொண்டால் குறைந்தபட்சம் ரூ.90,000, அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தொகையை ஒரே நாளில் உருவாக்குவது என்பது கஷ்டமான காரியம். இதற்கான தொகையை இத்தனை ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப, வங்கி அல்லது தபால் அலுவலக ஆர்டி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரிஸ்க் இல்லா லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.
மாதச் சம்பளத்தில் சுமார் 25% தொகையை அவசரச் செலவு தொகுப்பு நிதிக்கு ஒதுக்கி, முதலீடு செய்து வரலாம். எதிர்பார்க்கும் தொகை வந்ததும், அவசர கால நிதி முதலீட்டை நிறுத்திவிடலாம்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
இந்த அவசர கால நிதிக்கான முதலீட்டில் முதலீடு செய்யும்போது, மூலதனத்துக்கு இழப்பு வராமல் பார்த்து, முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது அவசியம். அந்தத் தொகையை முதலீடு செய்யவோ அல்லது அவசரத் தேவைக்கு எடுக்கும்போதோ, கட்டணமில்லாமல் இருக்க வேண்டும்.
அவசர கால நிதிக்கான தொகை மொத்தமாகச் சேர்ந்தவுடன் அதில் சுமார் 20% தொகையை வங்கிச் சேமிப்புக் கணக்கு, மீதியை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது வைக்க வேண்டும். இதில் 5% முன்பின் இருக்கலாம். (விரிவான விவரத்துக்கு அட்டவணை யைப் பார்க்கவும்) அப்போதுதான் இந்த அவசர கால நிதி மூலமும் சிறிய வருமானத்தை ஈட்ட முடியும்.
அவசர கால நிதியிலிருந்து, ஏதாவது பணம் எடுத்துச் செலவு செய்தால், மீண்டும் அதை அதே அளவில் பராமரிப்பது அவசியம். உதாரணத்துக்கு, ஒருவர் அவசர காலச் செலவுக்கென சேர்த்துவைத்திருந்த 1,00,000 ரூபாயில் 25,000 ரூபாயைத் திடீரென ஏற்பட்ட மருத்துவச் செலவுக்குச் செலவிட்டிருந்தால், அடுத்துவரும் மாதங்களில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அந்த 1,00,000 ரூபாயை உருவாக்கிவிட வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஏதாவது நிதிப் பிரச்னை வந்தால் அதைச் சமாளிக்க முடியும்.
இந்த எமர்ஜென்சி ஃபண்டின் பெரும் பகுதியை லிக்விட் ஃப்ண்டில் வைத்திருக்கும்பட்சத்தில், வங்கிச் சேமிப்புக் கணக்கு (4%), ஃபிக்ஸட் டெபாசிட் (6.5%) ஆகியவற்றைவிட 3-1.5% கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் கொண்ட, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எமர்ஜென்சி ஃபண்ட் முதலீட்டை மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால் சற்றுக் கூடுதலாக இந்த எமர்ஜென்சி ஃபண்ட் வைத்திருப்பது நல்லது.
அவசர காலச் செலவுக்கான நிதியை கணவன், மனைவி இணைந்து ஜாயின்ட் கணக்கில் வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒருவருக்கு அசம்பாவிதம் ஏற்படும்போது மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்துச் செலவு செய்ய முடியும்.
முதலீட்டைப் பாதுகாப்பாக மேற்கொண்டு, செல்வம் சேர்க்க வாழ்த்துகள்.
(நிறைவு பெற்றது)