Published:Updated:

ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?
ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?

பா.பிரவீன் குமார்

பிரீமியம் ஸ்டோரி

ரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) கொண்டுவரப்படுவதால், விலைவாசி ஏறுமா, இறங்குமா என்ற விவாதங்கள் றெக்கைக்கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. தினமும் பத்திரிகை களில் பால் பொருள்கள் விலை உயரும், மருந்து விலை குறையும், கார் விலை உயரும் என்றெல்லாம்  செய்திகள் வெளிவருகின்றன. உண்மையில், ஜி எஸ்.டி நடைமுறைக்கு வருவதால், விலைவாசி உயருமா என்று வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் வைத்தீஸ்வரனிடம் கேட்டோம்.

“இப்போது மத்திய அரசு வரி, மாநில அரசு வரி என்று இரண்டுவிதமான வரிகள் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு மத்திய அரசு 12.5% கலால் வரி விதிக்கிறது. மாநில அரசோ 14.5% வாட் வரி விதிக்கிறது. இதர வரிகள் சேர்த்து மொத்தம் வரி கிட்டத்தட்ட 28% வரை வந்துவிடுகிறது. இப்போது 28 சதவிகித வரி கட்டுகிற பொருள்களுக்கு எல்லாம் ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகிதமே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, வாஷிங் மெஷின், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கும்போது, அதற்கு 28 சதவிகித அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி பெரிய அளவில் ஏறிவிடாது.

எஃப்.எம்.சி.ஜி எனப்படும் சோப்பு, ஷாம்பு நுகர்வோர் உபயோகப் பொருள்கள் சிலவற்றுக்கு 28% என்ற அளவிலும், சிலவற்றுக்கு 18% என்ற அளவிலும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 28% வரி விதிக்கப்பட்ட பொருளுக்கு இனி 18% வரி விதிக்கப்படும்போது அதன் விலை குறையும். ஏற்கெனவே கலால் வரி 12.5 சதவிகிதமும், வாட் வரி 5 சதவிகிதமும் இருக்கும் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி 18% நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தடாலடியாக விலைவாசியில் மாற்றம் வந்துவிடாது.

ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?

விலைவாசி என்பது ஒரு பொருளைப் பொறுத்தும், எங்கிருந்து வாங்குகிறார்கள், சப்ளை செயின் எப்படி இருக்கிறது என்பவற்றைப் பொறுத்தும் மாறுபடும். மார்க்கெட் ஃபேக்டர் என்ற ஒன்று இருக்கிறது. விற்பனை செய்யப்படும் ஒரு பொருளுக்கு ஜி.எஸ்.டி காரணமாக லாபம் கிடைக்கிறது என்றால், அந்தப் பலனை அவர் தன்னுடைய நுகர்வோருக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். இல்லையென்றால், அவரது போட்டியாளர் அதை அளித்து சந்தையைப் பிடித்துவிடுவார்.

ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?



பொருள்களின் விலை என்கிற அளவில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால், சேவைத் துறையில் சில பாதிப்புகள் வரும். ஹோட்டலில் சாப்பிடுகிறோம். பில்லில் 2% வாட் வரி இருக்கும். இந்த 2 சதவிகித வரிக்குப் பதிலாக புதிய ஜி.எஸ்.டி-யின்படி சாதாரண ஹோட்டல் எனில் 12%, ஏ.சி ஹோட்டல் எனில் 18%  வரி வசூலிக்கப்பட உள்ளது.

ஹோட்டல்தான் என்றில்லை, டெலிபோன், இன்டர்நெட், டி.டி.ஹெச் என நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் எல்லா விஷயங்களுக்கும் இனி கூடுதலாக வரிச் செலுத்த வேண்டும். இன்டர்நெட் பில் கட்டும்போது, நாம் இப்போது கட்டும் சேவை வரி 15%,  ஜி.எஸ்.டி-க்குப் பிறகு 18 சதவிகிதமாக மாறும்.

இது தவிர, புதிய வரி விதிப்பில் தேவையில்லாத வேறுபாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது, பிராண்டட் கோதுமை மாவு என்றால் ஒரு ரேட், பிராண்டட் இல்லை என்றால் விலக்கு அல்லது குறைந்த வரி என்று நிர்ணயித்திருக்கிறார்கள். பிராண்டட் பொருள்களின் தரத்தையே நம்ப முடியாத காலகட்டத்தில், விலை குறைவாக இருக்கிறது என்பதற் காகப் பிராண்ட் இல்லாத பொருள்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுபோல இருக்கிறது. இதனால், கலப்பட, போலி மற்றும் தரமற்ற பொருள்களின் நடமாட்டம் அதிகரிப் பதற்கான வாய்ப்பும் உள்ளது.

அடுத்த சிக்கல், ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு விதமான வரிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  இதற்கெனப் பிரத்யேகமாக இருக்கும் பில்லிங் சாஃப்ட்வேரைப் பயன்படுத்த வேண்டும். அப்படி அவர் துல்லியமாகக் கணக்கிட்டால்தான் அவர் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
மலேசியாவில் ஜி.எஸ்.டி சட்டம் கொண்டு வந்தார்கள். ஐந்து சதவிகிதம் அளவுக்குத்தான் வரி நிர்ணயிக்கப் பட்டது. அதற்கே மிகப்பெரிய குழப்பமான சூழல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியதோடு, நிறுவனங்களுக்கு பி.எஸ்.ஓ கருவி வாங்க மானியம் எல்லாம் அளித்தனர். இந்தியாவிலும் அதுபோன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற குழப்பம், பதற்றத்தைத் தவிர்க்க முடியும்.

ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?



இவ்வளவு பெரிய நாட்டில், இத்தனை மாநில அரசுகளும் மத்திய அரசும் அமர்ந்து பேசி வரி நிர்ணயம் செய்திருப்பது மிகப்பெரிய விஷயம். துணி, ஆடைகள், நகை உள்ளிட்ட சில பொருள்களுக்கு மட்டும்தான் இன்னும் வரி நிர்ணயம் செய்யப்படவில்லை. அதையும் இறுதி செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்திருக்கிறார்கள்.

 எப்படி வரி நிர்ணயம் செய்தால், தங்களுடைய வருவாய் பாதிக்காது என்று தீர ஆராய்ந்து செய்திருக்கிறார்கள். எதிலெல்லாம் கைவைத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து அதிலெல்லாம் கைவைக்கவில்லை” என்றார்.

ஜி.எஸ்.டி வரி பற்றி ஆடிட்டர் ராஜேந்திரகுமாரிடம் கருத்து கேட் டோம். அவர் விரிவாக விளக்கினார்.

“தற்போது ஒரு பொருளுக்கான வாட் வரி 5 சதவிகிதம் என்று வைத்துக்கொள்வோம்.  ஜி.எஸ்.டி-யின்படி, 12 சதவிகிதம் வரி விதிக்கப் படுவதால், விலைவாசி உயரும் என்கிறார்கள். உண்மையில், 5 சதவிகிதம் வாட் வரி, 12.5 சதவிகிதம் கலால் வரி என 17.5 சதவிகிதம் வரி செலுத்தியிருப்பார்கள். ஆனால், அது அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் விலைவாசி உயரும் என்கிறார்கள்.

ஜி.எஸ்.டி-க்குப் பிறகு ஒரு பொருளுக்கான வரிவிதிப்பு 17.5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகக் குறையப் போகிறது எனில், பொருள்களின் விலை எப்படி உயரும்? தவிர, நீங்கள்  என்ன வரியெல்லாம் செலுத்தி யிருக்கிறீர்களோ, அதையெல்லாம்   ஜி.எஸ்.டி-யில் கழித்துக்கொள்ள முடியும்.

பொதுவாகப் பார்த்தால், ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குப்பின் எல்லாப் பொருள்களின் விலையும் குறையும் என்று சொல்ல முடியாவிட்டாலும், 60 முதல் 70 சதவிகிதப் பொருள்களின் விலை குறையும்.

சேவைத் தொடர்பான வேலைகளுக்கு மட்டுமே நாம் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சேவைகளுக்கு,  தற்போது நாம் 15% வரி கட்டுகிறோம். இது 18 சதவிகிதமாக உயரும். 3% வரி  அதிகரிப்பு என்பது பெரிய விஷயம்தான். இதனால் சேவை வரி கட்டுபவர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

ஹோட்டல்களில் உணவுப் பொருள்களின் விலை உயரும் என்கிறார்கள். ஆனால், உணவு தயாரிக்கக் கொள்முதல் செய்யப்படும் மூலப்பொருள்களின் விலை குறையும் என்பதால், அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?

தவிர, சேவை நிறுவனங் களுக்குச் சில சிறப்புச் சலுகைகளும் அளிக்கப் பட்டுள்ளன. இதனால் சேவைத் துறையிலும் பெரிய பாதிப்பு எதுவும் வராது. ஜி.எஸ்.டி. வந்தபின் முதலில் சில மாதங்கள் விலைவாசி அதிகரித்தது போலத் தெரிந்தாலும், போகப்போகக் குறையும்.

ஜி.எஸ்.டி-யில் ஆன்டி ப்ராஃபிட்டரிங் (Anti Profiteering) என்று ஒரு விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது, வரியால் விலை குறையும் பொருளின் விலையைக் குறைக்காமல் விற்று அதிக லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனையாளர்களுக்கு எங்கெல்லாம் வரி குறைப்பின் மூலம் பயன் இருக்கிறதோ, அதைப் பயன்படுத்தி அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இதனால், கண்டிப்பாக விலைவாசி குறையும் என்று சொல்லலாம். ஜி.எஸ்.டி-யின் முழுப் பயனையும் ஒரு சில மாதங்களில் நாட்டு மக்கள் பெறத் தொடங்கு வார்கள். இதனால் பொருளாதாரம் மேம்படும்” என்று உறுதியாகக் கூறி முடித்தார் ஆடிட்டர் ராஜேந்திரகுமார்.

ஜி.எஸ்.டி வரியினால் உயரும் விலைவாசி, நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்காது என்று நம்புவோமாக! 

ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?

சேவைத் துறையில் ஜி.எஸ்.டி என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்?

கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

‘‘ஜிஎஸ்டி-யில் 83 சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி சேவை வரி கிடையாது. மின்சாரம், சுங்க கட்டணத்துக்கு இந்த வரி கிடையாது. ஆனால், புதிதாக 36 சேவைகளுக்கு வரி விதித்திருக்கிறார்கள்.

* தங்கும் விடுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வாடகை தரும்பட்சத்தில் ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதுவே நாள் வாடகை, ரூ.1,000 - 2,500-க்கு 12%, ரூ.2,500 - 5,000-க்கு 18%, ரூ.5,000 மற்றும் அதற்கு மேல் 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பொழுதுபோக்கு வரி 15% என தற்போது உள்ளது. படத்தின் தலைப்பினை தமிழில் வைத்தால் பொழுதுபோக்கு வரி விலக்கு உண்டு.

திரைப்படங்கள், தீம் பார்க், தண்ணீர் பூங்கா, மகிழ்ச்சி சவாரிகள், ஐபிஎல் விளையாட்டு நிகழ்வுகள், சூதாட்டம், பந்தய கிளப் போன்றவற்றுக்கு 28% வரி விதிக்கப்படும். இதனால் பொழுதுபோக்கு அம்சங்கள், திரைப்பட டிக்கெட்டுகள், தீம் பார்க் நுழைவுக் கட்டணங்கள் அதிகரிக்கும். அதே நேரத்தில், சில திறமை காட்டும் நிகழ்ச்சிகளுக்கு    ஜி.எஸ்.டி-யில் வரி விலக்கு தரப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி... விலைவாசி உயருமா?


உதாரணமாக, பொழுதுபோக்கு அம்ச நிகழ்வுகளான சர்க்கஸ், நடனம், நாடகம், விருது விழா, கச்சேரி, அலங்கார அணிவகுப்பு, இசை நிகழ்ச்சிகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் (நுழைவுக் கட்டணம் ரூ.250-க்கு மேல் இருக்கக்கூடாது) போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. விமானக் கட்டணத்தில் எக்னாமிக் கிளாஸ் 5%, பிசினஸ் கிளாஸ் 12%, மோட்டார் கேப்-க்கு 5% வரி உண்டு.

லாரி வாடகைக்கு 5% ஜி.எஸ்.டி வரி இருக்கிறது. அதே நேரத்தில், விவசாய உற்பத்திப் பொருள்கள், பால், உப்பு, தானியங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லும்போது லாரி வாடகைக்கு ஜி.எஸ்.டி கிடையாது.

மது சேவை இல்லாத மற்றும் குளிரூட்டப்படாத உணவகங்களுக்கு 12% வரி, வெளிப்புற கேட்டரிங், குளிரூட்டப்பட்ட உணவகங்கள், மதுபானம் சேவை செய்ய உரிமம் உள்ள இடங்கள் 18%, 5 நட்சத்திர உணவகங்களுக்கு 28% வரி இருக்கிறது.

மாநாட்டு மையம், சங்கங்கள், ஹோட்டல்களில் உணவுடன் இடத்தையும் வாடகைக்கு விட்டால் வரி 18% உண்டு. இப்போது சேவை வரி 15 சதவிகிதத்தில் இருந்து 18% மற்றும் 28 சதவிகிதத்துக்கு அதிகரிக்கும்போது கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

ஜி.எஸ்.டி-யில் கட்டுமானத் தொழிலுக்கு வரி இருக்கிறது. கட்டுமான வேலைக்கு 12%, வேலை ஒப்பந்தமாக இருந்தால், அதாவது, கட்டுமானம், புனைதல், எழுப்புதல், நிறுவல், செம்மை ஆக்குதல், பழுது பார்த்தல், சீரமைத்தல் ஆகியவற்றுக்கு 18% ஜி.எஸ்.டி வரி உண்டு. தற்போது சேவை வரி 4.5 சதவிகிதமாக இருக்கிறது. சேவை வரி விதிப்பால், ரியல் எஸ்டேட் விலை அதிகரிக்கக்கூடும்.

தனிநபர் வீட்டு கூலி ஒப்பந்த வேலையாக (Labour Contract) இருந்தால், ஜி.எஸ்.டி-யில் விலக்கு உண்டு.

ஜி.எஸ்.டி-யில் தலைகீழ் கட்டணம் (Reverse Charge) என்கிற பிரிவு இருக்கிறது. உதாரணமாக, லாரி வாடகையை எடுத்துக்கொண்டால், சேவை வழங்குபவர் ஜி.எஸ்.டி வசூலிக்க வேண்டாம். சேவை வாங்குவோர் ஜி.எஸ்.டி வரியை தலைகீழ் முறையில் பிடித்து அரசுக்குக் கட்டுவார். வக்கீல்கள், கம்பெனி டைரக்டர்கள், காப்பீட்டு முகவர்கள், பதிப்புரிமை உள்ள இலக்கியம், இசை, நாடகம், மற்றும் கலை வேலைகள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்தத் தலைகீழ் கட்டண முறையில் 18% உண்டு.

 எதற்கு எல்லாம் வரி கிடையாது என்பதைப் பார்ப்போம். ‘‘கல்வி, மருத்துவத்துக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது. அருங்காட்சியகம், தேசியப் பூங்கா, வனச் சரணாலயம், மிருகக்காட்சி சாலை நுழைவுக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது. குளிர்ச்சியூட்டல், சில்லறை பேக்கேஜிங் சேவைக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது. சரியாக கணக்கு புத்தகங்கள் பராமரிக்கப்பட்டால், ஆவணங்கள் சரியாக இருக்குமானால், ஜி.எஸ்.டி-யில் நன்மை உண்டு. அப்படிச் செய்வதால், உள்ளீட்டு வரி (Input Tax) மொத்த ஜி.எஸ்.டி வரிச் சுமையைக் குறைக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு