காலம் எவ்வளவோ மாறிவிட்டது. அதற்கேற்ப நம் முதலீட்டுத் திட்டங்களை மாற்றிக்கொள்ளாமல், பழைய ஸ்டைலிலேயே முதலீடு செய்துவருகிறோம். நந்தகுமாரும் அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர். நந்தகுமாருக்கு வயது 38. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை. நந்தகுமாரின் மனைவி பிரியா, தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை. இருவருக்கும் சேர்த்து மாத வருமானம் ரூ.1.5 லட்சம். நந்தகுமாருக்கு இரு பெண் குழந்தைகள். மூத்தவள் பூஜாவுக்கு மூன்று வயது. இளையவள், தாராவுக்கு இரண்டு வயது.
நந்தகுமாரின் அப்பா ராஜசேகரனும், அம்மா லட்சுமியும் அவருடனே வசிக்கிறார்கள். ராஜசேகரனுக்கு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக பணியாற்றிய அனுபவம் இருந்ததால் அவரிடம் தனது முதலீடுகளைக் கவனித்துக்கொள்ளச் சொல்லியிருந்தார் நந்தகுமார்.

மாதமொன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை குடும்பச் செலவு ஆவதாகச் சொல்கிறார் நந்தகுமார். வீட்டுக் கடன் வாங்கி, புறநகரில் வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அதற்கு இ.எம்.ஐ தொகையாக மாதம் ரூ.25,000 செலுத்திவருகிறார்.
திருச்சி அருகில் ஐந்து கிரவுண்ட் பிளாட் ஒன்றினை வாங்கினார் நந்தகுமாரின் அப்பா. அதன் தற்போதைய மதிப்பு ரூ.10 லட்சம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.டி-யில் மாதம் ரூ.15,000, சிட் ஃபண்டில் மாதம் ரூ. 15,000, இன்ஷூரன்ஸ் திட்டங்களில் மாதம் ரூ.10,000 என நந்தகுமாருக்காக முதலீடு செய்துவந்தார் ராஜசேகரன். வேலை பரபரப்பில் தன் முதலீடுகளைக் கவனிக்காமல் இருந்துவந்த நந்தகுமார், தன் எதிர்காலத் தேவைகளுக்கும், தன் முதலீடுகளுக்கும் பெரிய இடைவெளி இருப்பதை திடீரென உணர்ந்து, நம்மைத் தொடர்பு கொண்டார்.
“சம்பாதித்தோம், சாப்பிட்டோம் என்றிருந்த எனக்கு எதிர்காலத்தின் தேவையை எடுத்துச்சொல்லி உணர வைத்தது நாணயம் விகடன்தான். ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தான் அந்த நிலத்தை வாங்கி இருக்கிறேன். ஆர்.டி, சிட் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் மட்டும்தான் முதலீடுகளாக உள்ளன. பி.எஃப்-ல் ரூ.4 லட்சம் உள்ளது. இந்த முதலீடுகள் போதுமானதாக இருக்காது. வீட்டுக் கடன் ரூ.18 லட்சம் வாங்கியுள்ளேன். அதற்காக ரூ.25,000 இ.எம்.ஐ செலுத்தி வருகிறேன்.

என் மகள் பூஜாவின் மேற்படிப்புக்கு ரூ.20 லட்சமும், திருமணத்துக்கு ரூ.80 லட்சமும் சேர்க்க வேண்டும். இளையவள் தாராவின் மேற்படிப்புக்கு ரூ.22 லட்சமும், திருமணத்துக்கு ரூ.85 லட்சமும் சேர்த்தாக வேண்டும். பி.எஃப் தொகை அல்லாமல் என் ஓய்வுக்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும். நான் என் முதலீடுகளை புதிய முதலீட்டு முறைக்கேற்ப எப்படி மாற்றிக்கொள்வது’’ என்று கேட்டவர், அவருடைய வரவு செலவு விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார். அவர் தந்த விவரங்களை நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதியிடம் தந்தோம். நந்தகுமாருக்கான நிதித் திட்டமிடலை தெளிவாக அமைத்துத் தந்தார் அவர்.
“நந்தகுமார், நீங்கள் வேலையில் பிஸியாக இருப்பது புரிகிறது. அதற்காக உங்கள் முதலீடுகளைக் கவனிக்காமல் இருக்கலாமா? முதலீடு குறித்த விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தாத காரணத்தினால்தான், கடன்வாங்கி திருச்சியில் ஐந்து கிரவுண்ட் நிலத்தை உங்கள் அப்பா வாங்கியுள்ளார். ஏற்கெனவே வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ ரூ.25,000 செலுத்திவரும் நிலையில், மேலும் கடனை வாங்கி மனை வாங்கியிருக்கத் தேவையில்லை. மனைக்காகச் செலுத்திவரும் இஎம்ஐ தொகை ரூ.22,000 நல்ல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், உங்கள் இலக்குகளுக்குத் தேவைப்படும் பணத்தை முன்கூட்டியே சேர்க்க உதவியாக இருந்திருக்கும்.

சரி, போனது போகட்டும். உங்களது எல்லா ‘கமிட்மென்டுகள்’ போக, மீதம் ரூ.27,000 ஆயிரம் உள்ளது. இதனை உங்கள் இலக்கு களுக்காகப் பிரித்து முதலீடு செய்யுங்கள் (பார்க்க: முதலீட்டுத் திட்டங்கள் அட்டவணை). மொத்தம் ரூ.30,300 தேவையாக இருக்கும். சிட் ஃபண்ட் முதிர்வு அடைந்தவுடன் முதலீட்டுக்கான பற்றாக்குறை சரியாகிவிடும்.
சிட் ஃபண்ட் முதிர்வடைந்தவுடன் திருச்சி மனைக்காக வாங்கிய கடனின் ஒரு பகுதியை அடைத்துவிடலாம். வருமான வரிச் சலுகை எதுவும் இல்லாத நிலையில் கடனாவது குறையும். விரைவில் மனைக் கடனை அடைத்துவிட்டால், மீதமாகும் தொகையை உங்கள் முதலீட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது செய்துவரும் ஆர்.டி முதலீடு, பூஜாவை எல்கேஜி-யில் சேர்க்க உதவும். அடுத்து ஆர்.டி முதலீட்டைத் தொடர்ந்துசெய்து, அவசரகால நிதியை உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஓய்வுபெறும்போது உங்களுக்கு மாதம் ரூ.77,400 தேவை. அப்படியானால் உங்கள் கார்பஸ் தொகையாக ரூ.2.18 கோடி இருக்க வேண்டும். உங்கள் ஓய்வுக்காலத்துக்கு பி.எஃப் தொகை மூலம் 51,30,000 ரூபாயும், நீங்கள் முதலீடு செய்து வருவதன் மூலம் ரூ.1 கோடியும் கிடைக்கும். திருச்சியில் உள்ள மனையை விற்பதன் மூலமும், சம்பளம் உயரும்போது முதலீட்டை அதிகரிப்பதன் மூலமும் பற்றாக்குறையைச் சுலபமாகச் சரிசெய்துவிடலாம். இனி ஃபண்ட் பரிந்துரைகள்...
பங்கு சார்ந்த ஃபண்டுகள் : டிஎஸ்பிபி.ஆர் ஃபோகஸ் 25 - ரூ.4,000, எஸ்பிஐ புளூசிப் - ரூ.4,000, ஃப்ராங்க்ளின் ஹை குரோத் கம்பெனீஸ் - ரூ.4,500, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் - ரூ.4,000.

கோல்டு ஃபண்டு : ஐடிபிஐ கோல்டு ஃபண்ட் - ரூ.3,300,
கடன் சார்ந்த ஃபண்டுகள் : ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூல் ஃபண்ட் - ரூ.2,500, ஹெச்டிஎஃப்சி கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - ரூ.2,200, ஐசிஐசிஐ புரூ. லாங் டேர்ம் ஃபண்ட் - ரூ.2,500”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம்.
Suresh Parthasarathy is SEBI Registered Investment advisor - Reg. no - INA200000878
படம்: மீ.நிவேதன்