Published:Updated:

7 நாட்களில் 7.80 லட்சம் லஞ்சம்... வியக்க வைத்த சப்ரிஜிஸ்டர்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத ரூ.7.80 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளராக வீரக்குமார் (31) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த அலுவலகத்தில் பத்திர பதிவுக்கு லஞ்சம் பெறுவதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

##~~##
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணையின் அடிப்படையில் சார்பதிவாளர் வீரக்குமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது, ஆயிரம் ரூபாய் கட்டுகளாக ரூ.7 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
குரூப் 2 தேர்வு எழுதி சார்பதிவாளராக பணிபுரிந்து வரும் வீரக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவிநாசியில் அறை எடுத்து தங்கி வருகிறார். வாரம்தோறும் இவர் சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார். இந்த சூழலில் இவரிடம் இருந்து ரூ.7.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாரம் ஒருமுறை ஊருக்கு சென்று வருவதால், கடந்த ஒருவாரத்தில் பெறப்பட்ட லஞ்சப்பணமாக இது இருக்கும் என கூறிய லஞ்ச ஒழிப்பு போலீசார், சிறிய வயதில் இவ்வளவு லஞ்சமா என வியந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் அடிப்படையில் வீரக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.