Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: பைபேக் ஆஃபரில் பங்குகளை விற்பது லாபமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாகப்பன் பக்கங்கள்: பைபேக் ஆஃபரில் பங்குகளை விற்பது லாபமா?
நாகப்பன் பக்கங்கள்: பைபேக் ஆஃபரில் பங்குகளை விற்பது லாபமா?

நாகப்பன் பக்கங்கள்: பைபேக் ஆஃபரில் பங்குகளை விற்பது லாபமா?

பிரீமியம் ஸ்டோரி

காதேவன், சில வருடங்களுக்குமுன் பழக்கமானவர். சமீபத்தில் அவர் எனக்கு போன் செய்து, “சார், மைண்ட் ட்ரீ ஷேர் ரூ.475-க்கு மார்க்கெட்ல டிரேட் ஆகியிருக்கு. ஆனா, கம்பெனியே ரூ.625 கொடுத்து வாங்கிக்கறேன்னு சொல்றாங்களே” என்றார் ஆச்சர்யத்துடன்.

“ஆமா, உங்களுக்கு அதுல என்ன பிரச்னை” என்று கேட்டேன்.

“சார், ரூ.475-க்கு டிரேட் ஆகுற ஷேரை, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகமா விலை கொடுத்து வாங்கவேண்டிய அவசியம் என்ன? மார்க்கெட்ல டிரேட் ஆகுறதைவிட 30 சதவிகிதத்துக்கு மேல அதிகமா விலை கொடுத்து கம்பெனியே வாங்குறப்ப நான் என்ன செய்யணும்,  அதிக விலைதானேன்னு கொடுத்துடலாமா? கம்பெனியே இவ்வளவு விலை கொடுத்து வாங்கறதால, இதோட உண்மையான மதிப்பு இன்னும்கூட அதிகமா இருக்கும்னு நெனைச்சு வச்சுக்கலாமா..?’’ என்று கேட்டார்.

நாகப்பன் பக்கங்கள்: பைபேக் ஆஃபரில் பங்குகளை விற்பது லாபமா?

மகாதேவனைப்போல, நம்மில் பலருக்கும் இந்தக் கேள்வி பலமுறை எழுந்திருக்கும். ஒரு சில மாதங்களுக்குமுன்புதான் ஹெச்.சி.எல் டெக்னாலஜி  மற்றும் டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்கள் பங்குகளைத் திரும்ப வாங்கின. இப்போது மைண்ட் ட்ரீயும் பைபேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ்கூட பைபேக் செய்யலாமா என யோசித்து வருவதாகத்  தகவல். ஒரு நிறுவனம் தன் பங்குகளை ஏன் வாங்க வேண்டும்? முதலில் இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

ஒரு நிறுவனம் லாபம் ஈட்டுகிறது என்றால் என்ன செய்யும்? அந்த வருடம் ஈட்டிய லாபத்தில் ஒரு பகுதியைப் பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகையாக, அதாவது டிவிடெண்ட்டாகப் பிரித்துக் கொடுக்கும். இன்றையத் தேதியில் லாபகரமாகச் செயல்படும் ஒரு நிறுவனம் எதிர் காலத்திலும் அப்படியே செயல்படலாம் என யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை, தொழில் தேக்கம் காரணமாக ஒரு சில வருடங்கள் நஷ்டத்தில் செயல்பட வேண்டி வந்தால், அதற்காக கம்பெனியை உடனடியாக மூட முடியாதல்லவா? அது தற்காலிகமான பின்னடைவாகவும் இருக்கலாம். அப்போது மீண்டும் முதலீட்டாளர்களிடம் போய் பணம் கேட்க முடியுமா? நஷ்டத்தில் இயங்கும் ஒரு தொழிலுக்குப் பணம் தர யார் முன்வருவார்கள்?

அப்படிச் சிரமமான காலகட்டத்தில் தொடர்ந்து நிறுவனத்தை நடத்துவதற்குத் தேவையான பணத்தை, வருடா வருடம் ஈட்டும் லாபத்தில் ஒருபகுதியை எடுத்துத் தனியாக வைப்பார்கள். அதற்கு ‘ரிசர்வ்’ என்று பெயர். தொழில் சூடு பிடித்து சிறப்பாக நடக்கும் தருணத்தில் தொழிலை விருத்தி செய்யவும் இந்த  இந்த ‘ரிசர்வ்’ பயன்படும்.

நாகப்பன் பக்கங்கள்: பைபேக் ஆஃபரில் பங்குகளை விற்பது லாபமா?


சரி, மேலே சொன்ன இரண்டு சூழலும் இல்லாத நிலையில், ஒரு நிறுவனம் தொடர்ந்து நன்கு செயல்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் லாபகரமாக இயங்கி வருகிறது. பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்ததுபோக ‘ரிசர்வ்’ தொகையும் சேர்ந்துகொண்டே போகிறது. ஆனால், அதற்கான தேவை இல்லை என்கிற நிலையில், அதுவரை சேர்ந்த ‘ரிசர்வ்’ தொகையை என்ன செய்வது?

ஒன்று, ஸ்பெஷல் டிவிடெண்ட் என்கிற  பெயரில் வழக்கமாகக் கொடுக்கும் டிவிடெண்ட் தொகையைவிடக் கூடுதலாக பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்கலாம். அல்லது, பங்குதாரர் களுக்கு போனஸ் பங்குகளை வழங்கலாம். இல்லாவிட்டால், நிறுவனமே பைபேக் முறையில் பங்குகளைத் திரும்ப வாங்கலாம்.

இந்த மூன்றில் எது நல்லது? பொதுவாக, ஒரு நிறுவனம் தனது தொழிலில் ஒரு பிரிவை அல்லது பகுதியை விற்றாலோ அல்லது நீண்டகாலச் சொத்து ஒன்றை விற்றாலோ அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபத்தை, முதலாவது ஆப்ஷனான ஸ்பெஷல் டிவிடெண்ட் மூலமாகக் கொடுக்கும். ஏனெனில், அது ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய லாபம். அடுத்த ஆண்டு அதேபோல வராது.

எதிர்காலத்தில் தொழிலைப் பெருக்கி அபிவிருத்தி செய்ய வேண்டும் என நினைக்கும் நிறுவனம், ரிசர்வில் இருந்து பங்குதாரர்களுக்கு மேலும் போனஸ் பங்குகளை வழங்கும். இதில் உள்ள ஒரே சிக்கல், போனஸ் பங்குகள் வழங்கிய பின் நிறுவனத்தின் மூலதனம் மற்றும் பங்குகள் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்பதால், லாபம் அதே அளவில் இருக்கும்பட்சத்தில் அல்லது பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கேற்ப லாபமும் அதிகரிக்காதபட்சத்தில், கடந்த

ஆண்டுகளில் தந்ததைப்போல அடுத்து வரும் ஆண்டுகளிலும் டிவிடெண்ட் கொடுப்பது சிரமமாகலாம். எனவே, நிறுவனங்களைப் பொறுத்தவரை, போனஸ் பங்குகள் வழங்குவதற்குப் பொதுவாகவே தயக்கம் காட்டுகின்றன. வரும் ஆண்டுகளிலும் தொழில் வளர்ச்சி நன்கு இருக்கும், லாபமும் அதிகரிக்கும் என ஓரளவுக்காவது உறுதியாக நம்பினால்தான் போனஸ் பங்குகளை வழங்கும். 

இனி, பைபேக் ஆப்ஷனைப் பார்க்கலாம். ஒரு நிறுவனம் இதுவரையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தபோதிலும், எதிர்காலத்தில் பெரிய விரிவாக்கத்தையோ, அதிவேக வளர்ச்சியையோ எதிர்பார்க்கவில்லை எனில், கையில் இருக்கும் அதிகப்படியான ‘ரிசர்வ்’ தொகையை என்ன செய்வார்கள்?
அது பங்குதாரர்களுக்குச் சேரவேண்டிய பணம். போனஸ் பங்குகள் வழங்கினால், அடுத்த ஆண்டும் இதே டிவிடெண்ட் கொடுக்க முடியாது. தொகை பெரியது என்பதால், ஒரே ஆண்டில் முழுமையாக டிவிடெண்டாகவே கொடுப்பதும் சிரமம். எனவே, அந்தத் தொகையைப் பயன்படுத்தி, பங்குகளை நல்ல விலை கொடுத்து பங்குதாரர் களிடமிருந்து வாங்குவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல, பல மாங்காய்கள் அடிக்கலாம். என்ன அவை?

ஒன்றாவது, மார்க்கெட் விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்குவதால், பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி. அவர்களிடமிருந்து நல்ல பெயர் வாங்கலாம். அடுத்தது, பைபேக்குக்குப் பின்னர் பங்குகளின் எண்ணிக்கை குறையும் என்பதால், அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகப் பங்குகளுக்கு டிவிடெண்ட் தர வேண்டியதில்லை. குறைவான எண்ணிக்கையிலான பங்குகளுக்குக் கொடுத்தாலே போதுமானது. எனவே, லாபம் தொடர்ந்து அதே அளவில் இருந்தாலோ, இல்லை அதிகரித்தாலோ கூட, மீதமிருக்கும் குறைவான என்ணிக்கையிலான பங்குதாரர்களுக்கு அதிக டிவிடெண்ட் கிடைக்கலாம். இதை ஆங்கிலத்தில்  ‘வின் வின் சிச்சுவேஷன் என்பார்கள். 

எல்லாம் சரி, மகாதேவனின் கேள்விக்கு என்ன பதில் என்றுதானே கேட்கிறீர்கள்?

சந்தை வணிக விலைக்கும், பைபேக் விலைக்கும் உள்ள வித்தியாசம் கணிசமாக இருக்குமெனில், கொடுப்பதே நல்லது. உதாரணமாக, மைண்ட் ட்ரீ. சமீபகாலமாக முடிந்த பைபேக் ஆஃபர்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். பைபேக் அறிவிக்கப்பட்டவுடன் பங்குகளின் விலை அதிகரித்திருந்தாலும், பைபேக் ஆஃபர் காலம் முடிந்தபின்னர் பங்குகளின் விலை மீண்டும் இறங்கி கிட்டத்தட்ட பழைய அளவுக்கே வந்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த ஆண்டு பைபேக் ஆஃபர் தந்திருக்கும் பல நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பத் துறையைச் சார்ந்தவையாகவே இருப்பது ஏன்? கட்டுரையிலேயே இதற்கான காரணம் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்! 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு