ஏற்றுமதித் தொழில் செய்பவர்கள், வெளிநாடுகளில் இருக்கும் இறக்குமதியாளரை அடையாளம் கண்டு ஆர்டர் எடுப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

1. இணையதளங்கள் மூலமாக
நீங்கள் ஏற்றுமதி செய்யப் போகும் நாட்டையும், என்ன பொருள் என்பதையும் கூகுள் தேடுதல் பொறியில் குறிப்பிட்டு, வாங்குபவரின் விலாசங்களை எடுத்து விடலாம். உதாரணத்துக்கு, சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்யவேண்டுமெனில், yellowpages/singapore/rice இவ்வாறு குறிப்பிட்டுத் தேடினால் அரிசி வணிகம் செய்யும் நபர்களின் தொடர்பு விவரங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
ஏற்றுமதி செய்பவர்களுக்குப் பயன்படும் மற்றொரு இணையதளம், www.indiatradeportal.in. இந்த இணையதளத்தை ஏற்றுமதி கூட்டமைப்பு ஆணையமான ஃபியோ, வர்த்தக விவகாரத் துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்தத் தளத்தில் நீங்கள் ஏற்றுமதி செய்யப்போவது எந்தப் பொருள், எந்த நாடு என்பதைத் தேர்வு செய்து விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருளுக்கு எம்.இ.ஐ.எஸ் திட்டம் இருக்கிறதா, இல்லையா என்பதையும், Duty Draw Back இருக்கிறதா என்பதையும்கூடத் தெரிந்துகொள்ளலாம். மேலும், எந்த நாட்டுக்கு என்னென்ன பொருள்கள் தேவை என்பதையும் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் அரிசியை ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் எனில், அரிசி/ வகை/ நாடு என்று தேடும்போது, அதன் ஹெச்.எஸ் கோட்/ எஸ்.பி.எஸ் - சானிட்டரி பைதோ சானிட்டரி மதிப்பீடுகள் (Sanitary and Phyto-Sanitary Measures) போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயந்திரங்களை நீங்கள் ஏற்றுமதி செய்வதாக இருந்தால், அதற்கு ‘டெக்னிக்கல் பேரியர் டு ட்ரேட்’ என்ற சான்றிதழ் அவசியம் என்பதையும் இந்த இணையதளம் தெரிவிக்கும்.
இந்த இணையதளங்கள் தவிர, கூகுளில் நேரடியாகவே நீங்கள் இறக்குமதியாளர்களைக் கண்டுபிடிக்கலாம். அதற்கு இவ்வாறு கூகுளில் தேட வேண்டும். இந்தியன் (பொருளின் பெயர்) இம்போர்ட்டர்ஸ் இன்(நாடு). சில நாடுகளில் இம்போர்ட்டர்ஸ் என்ற பெயரில் இல்லாமல் டிஸ்ட்ரிப்யூட்டர் அல்லது சேல்ஸ் ஏஜென்ட் என்ற பெயரில் இருப்பார்கள். இம்போர்ட்டர்ஸ் என்ற இடத்தில் டிஸ்ட்ரிப்யூட்டர் அல்லது சேல்ஸ் ஏஜென்ட் என்று குறிப்பிட்டுத் தேட வேண்டும். இவ்வாறு தேடி எடுக்கப்படும் இறக்குமதியாளரிடம் நீங்கள் மெயிலிலோ, போனிலோ பேசி உங்களுடைய பொருளைப் பற்றி சொல்லி ஆர்டர் கேட்கலாம்.
வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களைக் கண்டறிய companylist.org/country/keyword/fmcg எனக் குறிப்பிட்டு, தேடி எடுக்கலாம்.
2. எக்ஸ்போர்ட் புரமோஷன் ஆர்கனைசேஷன்
எக்ஸ்போர்ட் புரமோஷன் ஆர்கனைசேஷன் அமைப்புகளிடம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி யாளர்கள் விவரங்கள் இருக்கும். நீங்கள் அதன் இணையதளத்திலிருந்து இறக்குமதியாளர்களின் தகவல்களை எடுக்க முடியும். உதாரணத்துக்கு, ஏற்றுமதிக் கூட்டமைப்பு ஆணையமான ஃபியோ விடம் பல்வேறுவிதமான பொருள்களின் இறக்குமதியாளர்களின் விவரங்களைக் கண்டடையலாம். FIEO.org/buyers/country.doc என கூகுளில் குறிப்பிட்டுத் தேடினால், இறக்குமதி யாளர்கள் விவரங்களைப் பெறலாம்.
பிரத்யேகமாக வேளாண் பொருள்களுக்கான இறக்குமதியாளர்களின் விவரங்களைப் பெற www.agriexchange.apeda.gov.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம். மேலும், நறுமணப் பொருள்கள் எனில், www.indianspices.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
3. இந்தியத் தூதரகம்
ஒவ்வொரு நாட்டுக்கும் தூதரக (High Commision) அமைப்புகள் உள்ளன. அவற்றின் இணையதளங்களிலிருந்தும் இறக்குமதி யாளர்களை அடையாளம் காண முடியும். www.indiahighcommission.gov.au என்பது இந்திய ஹைகமிஷன் அமைப்பின் இணையதளம். நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த நாட்டின் ஹைகமிஷன் அமைப்பை இணையத்தில் தேடி, அதன் இணைய பக்கத்தைக் கண்டுபிடிக்கலாம்.
4. நண்பர்கள், உறவினர்கள்
வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக நம்முடைய ஏற்றுமதி பிசினஸை எப்படியெல்லாம் வளர்க்க முடியும் என்றும் பார்க்கலாம். அவர்கள் இருக்கும் பகுதியில் உங்களிடம் இருக்கும் பொருள் தேவை யாக உள்ளதா என்பதை அவர்களிடம் கேட்டு, அவற்றை நீங்கள் ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.அங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலமாகக்கூட உங்கள் பொருள்களை அந்த நாட்டில் விற்பனை செய்யலாம். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமும் இறக்குமதியாளர்களைப் பிடித்து அவர்களுக்கு உங்களுடைய பொருள்களை அனுப்ப ஏற்பாடு செய்யலாம். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அல்லது இணையதளத்தில் ‘wholesale supply store in dubai, wholesale Al Aweer market’ என்று தேடினால் அவர்களுடைய விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
5 நேரடி சந்திப்பு
ஐந்தாவது வழி நேரடி சந்திப்பு. இறக்குமதியாளரை நேரடியாகச் சந்தித்து உங்களிடம் இருக்கும் பொருளைப் பற்றி அவர்களிடம் எடுத்துகூறி ஆர்டர் எடுப்பது. ஒரு இறக்குமதியாளரை நேரடியாகச் சந்தித்து அவரிடம் வெற்றிகரமாக ஆர்டர் எடுக்க முடியும். அப்படி எடுத்து அந்த இறக்குமதியாளரை உங்களுடைய பொருளால் நீங்கள் திருப்தி செய்தீர்கள் என்றால், அவர் உங்களுடைய நிரந்தர வாடிக்கையாளராகக்கூட ஆகிவிடுவார். மற்ற வழிகளைவிட நேரடியாகச் சந்தித்து பேசுவதன் மூலம் எளிதில் ஆர்டர் எடுக்கலாம்.
(ஜெயிப்போம்)