Published:Updated:

சிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்!

சிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்!

ஒரு ஐடியா உங்களை மாற்றிடுமே!ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

`ஒரு வருஷத்துக்கு முன்னால நாங்க தோழிகள். இப்போ ஃப்ரெண்ட்ஸ் கம் பிசினஸ் பார்ட்னர்ஸ்!” என்று உற்சாகப் புன்னகை பூக்கிறார்கள், பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெண்கள் ஸ்ரீலதா மற்றும் செல்வ லட்சுமி. தங்களின் தோழமை இன்று தொழிலாகப் பரிணமித்திருக்கும் கதையை, ஸ்ரீலதா ஆரம்பித்தார்...

‘`நான் சென்னைப் பெண். சி.ஏ. முடித்துக் கணவரின் பணி காரணமா பெங்களூரில் ஓர் அப்பார்ட்மென்ட்டில் குடியேறினோம். இதே அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் செல்வலட்சுமியும் நானும் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். கார் ரேஸ், மாரத்தான் போட்டிகளில் கலந்துக்கிறதுனு ஜாலியா இருந்தோம்.

நாங்க ரெண்டு பேரும் குழந்தை பிறந்த பின் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கான்செப்ட்டில் வேலை பார்த்துட்டிருந்தோம். ஒருமுறை ஒரு திருமணத்துக்காக செல்வலட்சுமியின் சொந்த ஊரான, சேலம் மாவட்டம் மோகனூருக்குப் போனப்போ, அங்கே சத்தான சிறுதானியங்கள் மலிவாகக் கிடைப்பதைப் பார்த்தேன். அப்போதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பிசினஸ் ஐடியாவை யோசிச்சோம். சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி, பெங்களூரில் விற்க முடிவெடுத்தோம்’’ என்ற ஸ்ரீலதாவைத் தொடர்ந்து, தொழில் வளர்ந்த கதை சொன்னார் செல்வலட்சுமி...

சிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்!

``விவசாயியான எங்கப்பா மணிவண்ணன் மூலமா சிறுதானியங் களை வாங்கி, முதல் கட்டமா எங்க அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறவங்க, குடும்ப நண்பர்கள், உறவினர்கள்னு விற்பனை செய்தோம். ஆனா, சிறுதானியங்களை எப்படி சமைக்கிறதுனு தெரியல... இட்லி, தோசைக்கான மாவா கிடைச்சா நல்லாயிருக்குமேனு இளம் அம்மாக்களும், பணிபுரியும் பெண்களும் கேட்க, வீட்டில் இருந்த கிரைண்டரில் நாங்களே தானியங்களை மாவா அரைத்து விற்க ஆரம்பித்தோம். விறுவிறுன்னு போச்சு. அவங்ககிட்ட கருத்து கேட்டுக்கேட்டு மாவை மெருகேற்றி, வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப விற்பனை செய்யும் வித்தையைக் கற்றோம். சில மாதங்களிலேயே மாவு அரைக்கத் தனி யூனிட் தொடங்கி, பெரிய கிரைண்டர்களை வாங்கித் தொழிலை விரிவுபடுத்தினோம். ஆரம்ப நாள்களில் வேலையாட்கள் சரியா அமையாத சூழலில், மாவு அரைச்சு, பொங்கிப் புளிக்கவெச்சு, பாக்கெட்டுகளில் நிரப்பி, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்வது வரை பார்த்துக்கிட்டோம் ’’ என்றார் செல்வலட்சுமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்!

‘`இப்போ தினமும் 300 லிட்டர் மாவு விற்கும் அளவுக்கு எங்கள் தொழில் வளர்ந்திருக்கு. எங்களோட இணையதளம்... `Daily Ninja’ மொபைல் ஆப் மூலமாகவும் மாவுகளைப் பெறலாம். இப்போ பெங்களூரூ நகரில் உள்ள பிரபலமான ஆர்கானிக் கடைகள், பெரிய கேட்டரிங் நிறுவனங்கள்னு பலரும் எங்ககிட்ட மாவு வகைகள் வாங்குறாங்க. அடுத்ததா, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி, தமிழகத்திலும் களம் இறங்கவிருக்கோம்’’ எனும்போது, புன்னகை பெரிதாக விரிகிறது தோழிகளுக்கு.

பிசினஸ் பார்ட்னர்ஸ் என்பதையும் தாண்டி நட்பால் வெற்றிகாண்கிறார்கள் இந்தத் தோழிகள்!