Published:Updated:

வருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி!

வருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
வருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி!

வெற்றிக் கொடிகட்டு வே.கிருஷ்ணவேணி, படங்கள்: பா.காளிமுத்து

``என் கணவர் இறந்துபோனப்போ எனக்கு 27 வயசு. கையில என் மகனோட திக்குத்தெரியாம நின்னேன். இன்னிக்கு என்னோட பிசினஸ் வருமானம் வருஷத்துக்கு மூணு கோடி ரூபாய்!”

அறிமுகமாகும்போதே தன் வெற்றியை அடித்துச்சொல்கிறார் சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பர்வீன் சிக்கந்தர்... டிசைனர் ஜுவல்ஸ் பிசினஸில் கலக்கிக்கொண்டிருக்கும் பெண்.

வருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி!

``எனக்குச் சொந்த ஊர் மதுரை. என் கணவர் மலேசியாவில் வேலை பார்த்ததால, திருமணத்துக்குப் பிறகு அங்கே செட்டிலானோம். திடீர்னு ஒருநாள் என் கணவர் மாரடைப்பால இறந்துட்டார். ஏத்துக்கவே முடியாத இழப்பு அது. கைக்குழந்தையா இருந்த என் மகன் சல்மானைத் தூக்கிட்டு மதுரைக்கே வந்துட்டேன். சொந்தபந்தங்கள் உதவ முன்வந்தாலும், என் வாழ்க்கையை நானே பார்த்துக்கணும்னு முடிவெடுத்தேன். மத்தவங்க கையை எதிர்பார்த்துப் பழகிட்டா, அடுத்த கட்டத்துக்கு நம்மளால தனிச்சு இயங்க முடியாதுன்னு நினைச்சேன். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் எம்.ஏ. ஜர்னலிசம் படிச்சிருந்தாலும் அதுவரை பெற்றோர், கணவர்னு என்னைப் பொத்திப்பொத்திப் பார்த்துக்கிட்டதால, வங்கியில் ஒரு படிவத்தைக்கூட நிரப்பத் தெரியாத அறியாமையில் இருந்தேன். அதை மாத்த, ஒவ்வோர் இடத்துக்கும் தனியாகப் போகப் பழகினேன். ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்ய ஆரம்பிச்சேன்’’ என்பவர், மதுரையில் இருபது நாள்கள் தங்கிவிட்டு சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். அப்போது, ரிப்போர்ட்டராகவோ, ஆசிரியராகவோ வேலை பார்க்கலாமென முடிவெடுத்து வந்தார்.

``சென்னையில் 2001-ம் வருஷம் கையில் இருந்த சேமிப்பை வைத்து ‘தாமினி ஆர்ட்டிசன்ஸ் ஆஃப் இந்தியா’ என்கிற கைவினைப் பொருள்கள் ஷோரூமைக் கோட்டூர்புரத்தில் ஆரம்பிச்சேன். தங்க நகைகளிலிருந்து மக்களின் பார்வை டிசைனர் நகைகள் மேல் திரும்பிய காலம் அது. அதனால் வெளிநாடுகளில் இருக்கும் என் ஃப்ரெண்ட்ஸிடம் பேசி புதுப்புது டிசைன் ஜுவல்களை அனுப்பச் சொல்லி, அவற்றை எங்க ஷோரூமில் வெச்சோம். சூப்பர் வரவேற்பு. பெண்கள் சில திரைப்படங்களில் வரும் நகைகளைச் சுட்டிக்காட்டி அதுபோல வேண்டும் எனக் கேட்கும்போது, அந்த டிசைன்களையும் அவர்களுக்குத் தயாரித்துத் தந்தோம். ஸ்கை புளூ, மஞ்சள், பர்பிள் என லைட் கலர் ஸ்டோன்ஸ் ஜுவல்லஸ், கோல்ட் பிளேட்டட் ஜுவல்ஸ் என கஸ்டமர்களோட விருப்பத்துக்கு ஏற்ப பயணிச்சோம்.

சில நூறுகளில் இருந்து பல ஆயிரங்கள் வரை விலையுள்ள டிசைனர் ஜுவல்ஸில் பெண்களின் ஷாப்பிங் ஆர்வத்தைக் கண்கூடாப் பார்த்தப்போ, அவங்களுக்கான பிற பொருள்கள் விற்பனையிலும் துணிஞ்சு இறங்கலாம்னு தோணுச்சு. கேரளா, சிதம்பரம் போன்ற இடங்களில் சிறு தொழிலா பெண்கள் தயாரிக்கும் கைவினை எம்ப்ராய்டரி பைகளை வாங்கி ஷோரூமில் வைக்க, அதுவும் செம சேல். தொழில் தந்த லாபத்தில், அடுத்ததா வீட்டுக்குத் தேவையான ஃபர்னிச்சர் பொருள்களையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். கடையை விரிவுபடுத்த வேண்டிய அளவுக்குத் தொழில் சீக்கிரமே வளர்ந்தது’’ என்பவரின் கிளைகள் இப்போது சென்னையில் அடையாறு, திருவான்மியூர், கோவை, பெங்களூரு, கொச்சி என வெளி மாநிலங்களிலும் விரிவடைந்துள்ளன. நியூஸிலாந்துக்கு ஆர்டரின் பெயரில் பாசிமணி ஜுவல்லரிகளை எக்ஸ்போர்ட்டும் செய்கிறார் பர்வீன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி!

`` ‘மெர்ஸி’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு, கடந்த மூன்று மாதங்களாக, சென்னை, வடபழனி ஃபோரம் மாலில் நாங்கள் வைத்திருக்கும் கடையின் ஒரு பகுதியைக் கொடுத்திருக்கோம். இதில் பெண்கள் தாங்கள் செய்த டிசைனர் ஜுவல்லரிகள், ஹேண்ட் பேக்குகள், ஜூட் பேக்குகள் போன்றவற்றை விற்பனைக்காக வைக்கலாம். கட்டணம் செலுத்தத் தேவையில்லை, அவங்களோட வருமானத்தில் எங்களுக்கு 15% கொடுத்தால் போதுமானது. வாரத்தின் ஏழு நாள்களும் கூட்டம் இருக்கும் இந்த மாலில், அவர்கள் நல்ல வருமானம் பார்க்கிறாங்க. லாபத்துடன் கூடவே இப்போ அந்தப் பெண்கள்கிட்ட பெருகியிருக்கிற தன்னம்பிக்கையைப் பார்க்க, தொழிலைத் தாண்டிய நிறைவு கிடைக்குது.

பல வருஷங்களுக்கு முன்னால, நானும் அப்படி ஒரு வெற்றிக்காகக் காத்திருந்த பெண்தான். இன்னிக்கு என் பிசினஸில் வருட வருமானம் 3 கோடி ரூபாய். 28 பேர் வேலைப்பார்க்கிறாங்க. பையன் கல்லூரியில் படிக்கிறான். அவன் பெருமைப்படும் அம்மாவா நான் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி’’ என்று கம்பீரமாகச் சொல்லும் பர்வீன், கல்லூரிகளில் தொழில்முனைவோருக்கான வகுப்புகள் எடுப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என பிசினஸ் தாண்டியும் பிஸியாக இருக்கிறார்.

``எல்லா தொழில்களும் ஒருகட்டத்தில் நஷ்டத்தைத் தந்துதான் ஆகும். அதைச் சமாளிச்சு மீண்டும் லாப வழியை அடையுற மன உறுதி முக்கியம். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளப்பெருக்கினால் எனக்கு லட்சக்காணக்கில் நஷ்டமாச்சு. தொடர்ந்த நாள்களில் அதை ஈடுகட்டும் உழைப்பைக் கொடுத்து அந்த இக்கட்டில் இருந்து மீண்டேன். காலையில அஞ்சு நியூஸ் பேப்பர் படிப்பேன். அதிலிருந்து ஏதாவது ஒரு விஷயம் அன்றைய நாள் தொழிலுக்கு உதவுறதா இருக்கும். இப்படித்தான் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கணும். வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ‘எல்லாம் போச்சு’னு என்ற புலம்பலை மட்டுமே வெச்சுட்டு அதே இடத்தில் நிற்காம, தைரியமா `அடுத்து என்ன’ன்னு யோசிச்சு அடியெடுத்து வைக்கணும். வருங்காலம் வளமாகும்...”

தன்னம்பிக்கையோடு உழைத்தால் தாராளமாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கு பர்வீன் ஓர் உதாரணம்!