Published:Updated:

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு

சாஹா - படங்கள்: பா.காளிமுத்து

``தலைவலிச்சா பெயின் கில்லர் போடறோம். காய்ச்சல் அடிச்சா பாரசிட்டமால் விழுங்கறோம். செரிமானம் சரியில்லைனா ஆன்ட்டாசிட் சாப்பிடறோம். பீரியட்ஸ் டைம்ல வலி வந்தா என்ன செய்யறதுனு தெரியாமத் தவிக்கிறோம். தலைவலி வர நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கு. காய்ச்சலும் அப்படித்தான்.

எலும்புகள் பலவீனமா இருந்தா மாதவிலக்கு நாள்கள்ல இடுப்பும் கால்களும் வலிக்கும். இப்படி எந்தப் பிரச்னைகளுக்கும் காரணம் தெரியாமலேயே கண்மூடித்தனமா மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கறோம். வருமுன் காப்போம் முறையைப் பின்பற்றினா, வலிகளோ, நோய்களோ இல்லாம வாழ முடியும். அப்படியானதொரு வாழ்க்கைக்கு மக்களைத் தயார்ப் படுத்தறதுதான் எங்க பிசினஸோட அடிப்படை நோக்கம்’’ என்கிறார்கள் லாவண்யாவும் ரம்யாவும். தோழிகளான இவர்கள் சுக்கு காப்பி பவுடர், முருங்கைக்கீரை சூப் பவுடர், உளுந்தங்கஞ்சி பவுடர், நாட்டு மருந்து பவுடர் என ஆரோக்கியத் தயாரிப்புகளில் அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு

``நாங்க ரெண்டு பேரும் 17 வருடத் தோழிகள். ரெண்டு பேருமே பிசினஸ் பின்னணி உள்ளவங்க. பணம் சம்பாதிக்கிறதைத் தாண்டி எங்க பிசினஸ் மூலமா நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னு விரும்பினோம்.

ரம்யாவுக்கு மூணு குழந்தைங்க. அவங்களோட எல்லா பிரசவங்களின் போதும் அவங்க மாமியார் நாட்டு மருந்து கொடுத்திருக்காங்க. அதனால பலனடைஞ்சுதான் அவங்க அதை எனக்குச் சொல்லித் தந்தாங்க.

சுக்கு காபியும் உளுந்தங்கஞ்சியும் எங்க வீட்டுப் பழக்கம். குளியல் பொடியும் எங்க வீடுகள்ல வழக்கத்துல இருந்ததுதான். நாங்க யாரும் ஃபேஷியலோ, பிளீச்சிங்கோ பண்ணிக்கிறதில்லை. இந்தக் குளியல் பொடிதான் எங்களுக்கு எல்லாம்... தெரியாத ஏதோ ஒரு விஷயத்தை பிசினஸா பண்றதைவிடவும், எங்களுக்குத் தெரிஞ்ச, அறிமுகமான விஷயத்தையே பண்ணினா என்னன்னு யோசிச்சுதான் இந்தத் தயாரிப்புகள்ல இறங்கினோம்...’’ - அறிமுகம் தருகிறார் லாவண்யா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு


`` `இந்த விஷயங்களை எல்லாம் பண்ணாதீங்க'னு ஆளாளுக்குச் சொல்றாங்களே தவிர, என்ன பண்ணணும்னு யாருமே சொல்ற தில்லை.  எது சரி, எது தவறுன்னு தெரியாமலேயே பல விஷயங்களையும் செய்திட்டிருக்காங்க. ஆரோக்கிய மான வாழ்க்கைங்கிறது அன்றாடப் பழக்கங்கள்லேருந்தே வரணும்.  `காபி, டீ குடிக்காதீங்க'னு சொன்னா மட்டும் போதாது. அதுக்கு மாற்று என்னன்னு சொல்லணும்.

காபி, டீக்குப் பதிலா தினமும் ஓர் ஆரோக்கிய பானத்துக்குப் பழகறது மூலமா உங்க உடம்புல உள்ள ஒவ்வொரு பிரச்னையும் சரியாக்கப் படுது.

அன்றாடம் உணவா சாப்பிட வேண்டிய விஷயங்களைப் பிரச்னைகள் வந்தா மட்டும் சாப்பிடற மருந்தாகப் பயன்படுத்திக்கிட்டிருக்கோம். உதாரணத்துக்குத் தாங்க முடியாத தலைவலி வந்தா மட்டும் சுக்கு காபி குடிக்கிறோம். அதைத் தவிர்த்து வாரத்துல ரெண்டு நாள் சுக்கு காபி குடிச்சுப் பழகினா, செரிமானம் சீரா இருக்கும். தலைவலி வராது.

வாரத்துல ரெண்டு நாள் உளுந்தங்கஞ்சி குடிக்கலாம். அடுத்த ரெண்டு நாள் நாட்டு மருந்து சாப்பிடலாம். நாட்டு மருந்துப் பொடியைக் கருப்பட்டியோடு சேர்த்துக் குட்டிக்குட்டி லட்டு மாதிரி உருட்டி வெச்சுக்கிட்டு மழையோ, குளிரோ ஆரம்பிக்கும்போதே வீட்டுல உள்ள எல்லாரும் சாப்பிட்டா தும்மல், சளி, இருமல்னு எதுவும் வராது. தேவையில்லாத மருந்துகளை எடுத்துக்க வேண்டாம்.

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு

வயசுக்கு வந்த பிள்ளைங்களுக்கு உளுந்தங் கஞ்சி கொடுக்கிற பழக்கமெல்லாம் இந்தத் தலைமுறையில யாருக்கும் இல்லை. உளுந்தங்கஞ்சியைப் பால் சேர்த்துக் குடிக்கக் கூடாது. தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துச் சாப்பிடலாம். சுக்கு போட்டுத்தான் கஞ்சிப் பவுடர் தயாரிக்கணும். சுக்கு போடலைன்னா செரிமானம் சரியா இருக்காது. சுக்குச் சேர்க்காம சாப்பிட்டா உளுந்துல உள்ள அதிகபட்ச புரதம் வயிற்றுவலியை ஏற்படுத்தும். அது தெரியாம உளுந்தங்கஞ்சி சாப்பிட்டா வயிற்றுவலி வருதுன்னு தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அதைத் தவிர்க்கிறவங்க பலர். வயதுக்கு வராத பெண்களும், மெனோபாஸ வந்தவங்களும் இதை ரொம்பக் கம்மியாதான் சாப்பிடணும். மாதவிலக்கின்போது ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டாங்கன்னா இடுப்பு வலி வராது. கருப்பட்டியோடுதான் சாப்பிடணும். வெள்ளைச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டா பலன் இருக்காது.

இன்னிக்கு எல்லாருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருக்கு. அதனால எலும்புகள் பலவீனமாகி, மூட்டுவலி, முழங்கால் வலியால அவதிப்படறாங்க. உளுந்தங்கஞ்சியை 48 நாள்கள் தொடர்ந்து குடிச்சுட்டு, அப்புறம் வாரத்துல ஒருநாள் குடிக்கிறதைப் பழக்கப் படுத்திக்கலாம்.

குழந்தை பிறந்தவங்களுக்குப் பத்திய மருந்துகள் கொடுக்கிற பழக்கமும் இன்னிக்கு இல்லை. அவங்களுக்கானதுதான் நாட்டு மருந்து. இந்த நாட்டு மருந்து உருண்டையைச் சாப்பிட்டாங்கன்னா பிரசவமான பிறகு வயித்துக்குள்ள தங்கியிருக்கிற கசடுகள் வெளியேறிடும். புண்களைச் சீக்கிரம் ஆற்றும். இழந்த எனர்ஜியைத் திரும்பப் பெறுவாங்க. இப்படி எல்லாமே நாங்க ரெண்டு பேரும் எங்க வீடுகள்ல உள்ளவங்களுக்குக் கொடுத்து டெஸ்ட் செய்து பலன் இருக்கிறதைப் பார்த்து திருப்தியடைஞ்சிருக்கோம். எங்க தயாரிப்புகளை வாங்க வைக்கிறது நோக்கமில்லை. குறைஞ்சபட்சம் அதைப் பத்தின அடிப்படை விஷயங்களையாவது மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துட்டா போதும்...’’ என்கிற ரம்யா எத்தனை பேரிடமும் இந்தத் தகவல்களைத் திரும்பச் சொல்வதில் அலுத்துக் கொள்வதில்லை.

``இவை எல்லாத்தையும் எல்லாருமே அவங்கவங்க வீடுகள்ல தாமா தயாரிச்சிட முடியும். ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. இதனால குடும்பத்துக்கான ஆரோக்கியமும் மேம்படும். அடுத்தகட்டமா அதையே பிசினஸாகவும் கொண்டு போகலாம்...’’ - அக்கறையாகச் சொல்கிற தோழிகள் அரை நாள் பயிற்சியில் 500 ரூபாய் கட்டணத்தில் தாம் பெற்ற ஆரோக்கியத்தை அடுத்தவருக்கும் கற்றுத்தரக் காத்திருக்கிறார்கள்.