கடந்த வாரங்களில் ஏற்றுமதித் தொழில் தொடர்பான நடைமுறைகளையெல்லாம் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரத்தில், ஒரு ஏற்றுமதியாளர் தனது ஏற்றுமதித் தொழிலை வெற்றிகரமாகச் செய்வதற்கு என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

ஏற்றுமதியாளர் ஒருவர், ஒரு பொருளை வேறொரு நாட்டிலுள்ள இறக்குமதியாளர் ஒருவருக்கு அனுப்பும்முன், கவனத்தில் கொள்ள வேண்டிய நான்கு விஷயங்கள் உள்ளன. அவை: 1. நாம் செய்யப்போகும் ஏற்றுமதியில் என்னென்ன ரிஸ்க்குகள் உள்ளன, 2. எந்தெந்த விஷயங்களில் எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், 3. நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது எப்படி, 4. ஏற்றுமதி பிசினஸில் கூடுதல் லாபம் பார்ப்பது எப்படி ? இந்த நான்கு விஷயங்களிலும் ஒருவர் கவனம் செலுத்தினால், அவர் தனது தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
1. ரிஸ்க்குகளைக் குறைப்பதெப்படி?
ரிஸ்க் என்பது பணத்துக்கான உத்தரவாதம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஏற்றுமதித் தொழிலில் என்னென்ன ரிஸ்க்குகள் உள்ளன, அவற்றை நாம் எப்படிக் கவனமாகக் கையாள்வது என்பது போன்றவற்றை முன்னரே விரிவாகப் பார்த்திருக்கிறோம். இருந்தாலும், இது மிக முக்கியமானது என்பதால், சுருக்கமாக நினைவுபடுத்துகிறேன்.
ஒரு பொருளை நீங்கள் ஏற்றுமதி செய்யப் போகும் நாடு, அதை இறக்குமதி செய்யும் நபர் ஆகிய இரண்டு தரப்பிலும் ரிஸ்க்குகள் உள்ளன. இந்த இரண்டு ரிஸ்க்குகளுக்கும் இ.சி.ஜி.சி தரப்பில் ஆலோசித்து, பிரீமியம் பாலிசி எடுத்துக்கொண்டால் போதும்.
எந்தெந்த ஆவணங்களை இறக்குமதியாளரிடம் கொடுக்கக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆவணங்களை வங்கி வழியாக அனுப்புவது நல்லது என்பதை எப்போதும் மறக்க வேண்டாம். ஏற்றுமதி செய்யப்போகும் நாட்டின் இறக்குமதி நடைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். மேலும், நாம் அனுப்பும் பொருளைச் சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும். புதிதாக ஏற்றுமதித் தொழிலில் இறங்குபவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். எனவே, ஆரம்பத்தில் இவை சற்று சிரமமாகத் தெரிந்தாலும், போகப்போக ஏற்றுமதித் தொழிலில் அனுபவம் அடைந்துவிட்டால் சுலபமாகிவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
பாதுகாப்பு என்பது நம்முடைய பொருள் மற்றும் பணத்துக்கானது. நாம் அனுப்பும் பொருள் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் நாம் அனுப்பும் இலக்கைச் சென்றடைய வேண்டும். அதேபோல், நாம் அனுப்பும் பொருளுக்கான பணம் நமக்கு முறையாக வந்துசேர வேண்டும். இதற்காக இரண்டு வகை இன்ஷூரன்ஸ்களைப் பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.
முதலாவது, நம்முடைய ஊர் அல்லது தொழிற் சாலை இருக்கும் இடத்திலிருந்து துறைமுகம் வரையிலான சாலைப் போக்குவரத்து இன்ஷூரன்ஸ் (Road Insurance). இரண்டாவது, நம்முடைய துறைமுகத்திலிருந்து இறக்குமதி யாளரின் துறைமுகம் வரையிலான கப்பல் போக்குவரத்து இன்ஷூரன்ஸ் (Marine Insurance). இந்த இரண்டு இன்ஷூரன்ஸ் மூலம் நம்முடைய பொருள்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
நம்முடைய பணத்துக்கான ரிஸ்க்கினை ‘எக்ஸ்சேஞ்ச் ரேட் ரிஸ்க்’ மூலம் அறியலாம். இதில் எக்ஸ்சேஞ்ச் ரேட் ரிஸ்க்கை வங்கியில் ‘ஹெட்ஜிங்’ (Hedging) முறையில் பாதுகாத்துக் கொள்ளலாம். அதாவது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கக் கூடியதென்பதால், இந்த ஹெட்ஜிங் முறையில் நிலையானதொரு மதிப்பை நாம் நிர்ணயித்துக் கொள்ளலாம். அதாவது, நாம் ஏற்றுமதி செய்யும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 65 எனில், நமக்குப் பணம் வரும்போது 64 ரூபாயாகக் குறைந்தால் நமக்குக் கிடைக்கும் தொகை குறைவாக இருக்கும். இதற்கு ஏற்றுமதி செய்த நாளிலிருந்து 30 நாள்களுக்கு Forward Purchase Contract வாங்கிக்கொண்டால், அந்த 30 நாள்களுக்குள் பணத்தின் மதிப்பு மாறினாலும், நிலையானதொரு மதிப்பில் நம்முடைய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
3. நஷ்டத்தை எப்படியெல்லாம் தவிர்ப்பது?
நஷ்டம் என்பது பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகளால் ஏற்படுபவை. ஏற்றுமதித் தொழிலுக்கான நடைமுறைகளைத் தெளிவாகக் கையாண்டால் தவறுகள் நடக்காமல் தவிர்க்கலாம். எந்தெந்த இடத்தில் தவறுகள் நடக்க வாய்ப்புண்டு?
* இறக்குமதியாளரிடம் பேமென்ட் முறை களைப் பற்றி பேசும்போது தவறு ஏற்படலாம். அவர் போக்குக்குச் செல்லாமல் எல்சி (LC-Letter of Credit), அட்வான்ஸ் இரண்டில் ஒன்றைச் செயல்படுத்தும்படி நாம்தான் பேச வேண்டும்.

* விலை நிர்ணயம் செய்வதில் எப்போதும் கவனம் வேண்டும். விலையை எப்படி நிர்ணயம் செய்வது என்பதை முன்பே விரிவாகச் சொல்லி யிருக்கிறேன். பொருளின் தரத்துக்கான விலை இருக்க வேண்டும். லாபம் எவ்வளவு என்பதில் தெளிவு வேண்டும்.
* பொருள்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற விளக்கம் கொண்ட ஸ்டிக்கர் (Handle with Care) ஒட்டப்பட வேண்டும். பொருள்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. கூடுதல் லாபம் பார்ப்பது எப்படி?
* பொருளை எவ்வளவுக்கு வாங்கி, எவ்வளவுக்கு விற்கிறோம் என்பதில்தான் பிரதான லாபமானது கிடைக்கும். பொருளைக் கொள்முதல் செய்வதில் புத்திசாலித்தனம் வேண்டும். அதற்குப் பொருள்கள் பற்றியும், உற்பத்தியாகும் இடங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
* டி.ஜி.எஃப்.டி அலுவலகத்திடம் நீங்கள் செய்யும் ஏற்றுமதிக்கு MEIS, SEIS திட்டங்களின் மூலம் ஊக்கத் தொகையைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
* கஸ்டம்ஸ் அலுவலகம் செயல்படுத்தும் வரி திரும்பப் பெறல் (Duty Drawback) வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு கட்டிய வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
* ஜி.எஸ்.டி-யை முறையாகச் செயல்படுத்துவதன் மூலம் நாம் செலுத்தும் ஐ.ஜி.எஸ்.டி (IGST) வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்!
(ஜெயிப்போம்)