Published:Updated:

நண்பர்களின் நிதி பழக்கம் உங்கள் நிதிச் சூழலை பாதிக்கும்... எப்படி?

நண்பர்களின் மோசமான நிதி பழக்க வழக்கங்கள் உங்களைப் பாதிக்கும் முன், அத்தகைய சூழலை எப்படிக் கையாள வேண்டும், உங்கள் பணம் அநாவசியமாகச் செலவாவதிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்... தெரிந்து கொள்வோமா?

நண்பர்களின் நிதி பழக்கம் உங்கள் நிதிச் சூழலை பாதிக்கும்... எப்படி?
நண்பர்களின் நிதி பழக்கம் உங்கள் நிதிச் சூழலை பாதிக்கும்... எப்படி?

ண்பர்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது. மிகவும் போரடித்துப் போய்விடும். உங்களுக்கு ஏராளமான, வித விதமான குணாதிசயங்களுடன் பல்வேறு வகையான நண்பர்கள் இருக்கலாம். அதே சமயம் உங்கள் நண்பர்கள் உங்களது வாழ்க்கையில் மட்டுமல்லாது உங்களது நிதியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

நீங்கள் உங்கள் நிதி நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்பவராக இருக்கலாம். ஆனால், உங்கள் நண்பர்கள் மோசமான நிதி பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தால், அது விரைவிலோ அல்லது சற்று தாமதமாகவோ உங்களிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். உங்கள் நண்பர்களில் சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிரெடிட் கார்டை சரமாரியாகத் தேய்ப்பவராக இருக்கலாம் அல்லது அவரது பணத்தேவைக்கு எப்போதுமே உங்களைத் தொந்தரவு செய்பவராக இருக்கலாம். இத்தகைய மோசமான நிதி பழக்க வழக்கங்கள், நீங்கள் தவறு ஏதும் செய்யாமலேயே உங்களைக் கடுமையான சிக்கலில் ஆழ்த்திவிடும்.

இந்த நிலையில், நண்பர்களின் இதுபோன்ற மோசமான நிதி பழக்க வழக்கங்கள் உங்களைப் பாதிக்கும் முன், அத்தகைய சூழலை எப்படிக் கையாள வேண்டும், உங்கள் பணம் அநாவசியமாகச் செலவாவதிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர்கள் சொல்லும் சில நிதி நிர்வாக ஆலோசனைகள் இங்கே...

விருந்தாளி நண்பர்கள்

இந்த வகை நண்பர்களை உங்களின் பணத்தை அட்டையாய் உறிஞ்சுபவர்கள். வழக்கமாக இவர்கள் யாருடைய செலவிலாவது இலவசமாக லஞ்ச் அல்லது டின்னர் கிடைக்குமா என்று ஆட்டையைப் போடுபவர்களாக இருப்பார்கள். அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் ஏதாவது வீக் எண்ட் பார்ட்டி நடப்பதாக அறிந்தால், அதில் யாரும் அழைக்காமலேயே தாமாகவே இணைந்துகொண்டு பைசா செலவில்லாமல் பார்ட்டி கொண்டாடும் ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை இத்தகையவர்களுடன் ஒரு காபி ஷாப்புக்கோ அல்லது ஓட்டலுக்கோ செல்ல நேரிட்டால், பில் செலுத்தும்போது தங்களது பர்ஸை எடுத்து வர மறந்துவிட்டதாகக் கூறித் தங்கள் பணத்துக்குச் சேதாரம் இல்லாமல் தப்பித்துக்கொள்பவர்கள்.

என்ன செய்ய வேண்டும்? 

துரதிருஷ்டவசமாக இவர்களிடம் `நோ' சொல்வது வேலைக்கு ஆகாது. அப்படி நேரடியாகச் சொன்னால் அன்றோடு அந்த நட்புறவுக்கு 'எண்ட் கார்டு' போட்டுவிட வேண்டியதுதான். எனவே, இவர்களை வேறு மாதிரி அவர்கள் பாணியிலேயே டீல் செய்ய வேண்டும். அதாவது நீங்கள் பணப்பற்றாக்குறையால் இருப்பது போன்றோ அல்லது ஏதோவோர் எதிர்காலத் திட்டத்துக்காக, (உதாரணமாகக் கடனை அடைப்பதற்காக என்று கூட சொல்லலாம்)  பணம் சேமித்து வருவதால் அநாவசியச் செலவுகளைக் குறைத்துக்கொண்டுள்ளதாக கூறித் தப்பிக்கலாம். இப்படிச் சொல்வதன் மூலம் அடுத்த முறை உங்களுக்குச் செலவு வைக்கவோ அல்லது உங்களிடம் பணம் வாங்கவோ அவர்கள் தயங்குவார்கள்.

குறைந்த சம்பள நண்பர்கள்

எவ்வளவு அனுபவம் இருக்கிறது, எத்தகைய திறமை உள்ளது என்பதையெல்லாம் பார்க்காமல், தனக்கு மிகவும் குறைவாகச் சம்பளம் கிடைப்பதாகச் சொல்லி புலம்பும் நபர்கள் எல்லாருடைய நட்பு வட்டாரத்திலும் குறைந்தபட்சம் ஒருவராவது இருப்பர். இத்தகைய நபர்களுக்குக் குறைந்த சம்பளம் கிடைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவர்கள் ஒரே வருடத்தில் பல வேலைகளுக்குத் தாவுபவர்களாக இருக்கலாம் அல்லது நல்ல சம்பளம் கொடுக்காத துறையில் வேலை பார்க்கக்கூடும் அல்லது வேலையில் போதுமான திறமையுடையவர்களாக இல்லாமல் இருக்கலாம். 

இத்தகைய நண்பர்கள் எப்பொழுதுமே உங்களிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள் அல்லது நீங்கள் நல்ல சம்பளத்தில் சிறந்த வேலையில் இருக்கும் காலத்தில் அவர்கள் பணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கக்கூடும். அத்தகைய சூழலில் இதுமாதிரியான ஒரு நண்பர் உங்களிடம் பண உதவி கேட்டு, அதைச் செய்ய நீங்கள் மறுத்தீர்களென்றால் அது இருவருக்குமிடையேயான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும். 

எப்படிச் சமாளிக்க வேண்டும்? 

இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, சம்பந்தப்பட்ட நண்பரிடம், அவர் ஏன் இத்தகைய நிலையில் இருக்கிறார் என்பது குறித்து அவரிடம் பேசி, அவரது பிரச்னைக்குத் தீர்வு காண்பதுதான். மேலும் அவருக்குத் தொடர்ந்து பணம் கொடுத்துக் கொண்டிருக்காமல், செலவுகளுக்கான பட்ஜெட் போடுவது, சேமிப்பது மற்றும் செலவுகளைக் குறைப்பது போன்றவை குறித்து அவருக்கு வழிகாட்ட வேண்டும். 

செலவாளி நண்பர்கள்

இந்த வகை நண்பர்கள் தங்களது வருமானம் அனைத்தையுமே  ஆடம்பரமான ஆடைகள் வாங்குவது, காலணிகள், ஷூ, அணிகலன்கள் வாங்குவது, உயர் தரமான ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுவது, வார இறுதியில் பார்ட்டிகளுக்குச் செல்வது போன்ற செலவுமிக்க பொழுதுபோக்குகளில் ஈடுபட்டே கரைத்து விடுவார்கள். 

இத்தகைய நண்பர்களுடன் நீங்கள் இருக்கும்போது, உங்களது நிதி நிலைமை நல்ல நிலையில் இருந்தால் கூட, உங்களை ஏழையாக எண்ண வைத்துவிடும். இவர்கள் தங்களது நண்பர்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யும் பழக்கம் உடையவர்கள் என்பதால், சமயங்களில் உங்களுக்கும் இலவசமாக டின்னர், மது விருந்து போன்றவை, அவ்வளவு ஏன் உங்கள் பிறந்த நாளுக்குப் பரிசு கூடக் கிடைக்கலாம். 

இது உங்களுக்கு உடனடியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், தாராளமாகச் செலவு செய்யும் பழக்கம் உடையவர்களுடன் நீண்ட நாள்கள் பழகும்போது, இத்தகைய செலவு செய்யும் பழக்கம் தவறில்லை என்ற எண்ணம் ஏற்பட்டு, கடைசியில் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு நிதி நெருக்கடியை  ஏற்படுத்தி விடும். 

என்ன செய்ய வேண்டும்? 

அதிகமாகச் செலவு செய்யும் பழக்கம் உடையவர்களுக்குப் புதுப் புது இடங்களுக்குச் செல்வது, விதவிதமான உணவுகளை உண்பது போன்றவை ஒரு விளையாட்டாகவே இருக்கும். எனவே, இவர்களுடன் இதுபோன்ற இடங்களுக்குச் செல்வதால், நாளடைவில் நீங்களும் அதுபோன்ற செலவுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். அப்படிச் செயல்பட்டால் உங்கள் பணம் எந்த அளவுக்குச் செலவாகும் அல்லது உங்கள் கிரெடிட் கார்டு பில் எந்த அளவுக்கு ஏறி இருக்கும் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

எனவே, இத்தகைய நண்பர்களுடன் வெளியில் செல்லும் பழக்கத்தை, அதிகபட்சம் மாதம் ஒருமுறை என ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்வதோடு, அப்படிச் செல்ல நேரிடும்போது நீங்களும் செலவு செய்வதாக இருந்தால் அது உங்களால் சமாளிக்கக்கூடியதாக இருந்தால் மட்டும் செல்லுங்கள். இல்லையெனில் குறைவாகச் செலவாகும் வகையில் அருகிலுள்ள காபி ஷாப்புக்கோ அல்லது ரெஸ்டாரன்ட்டுக்கோ போகலாம் எனக் கூறி அங்கே அழைத்துச் செல்லுங்கள். 

கஞ்சப் பிரபுக்கள்

அதிகமாகச் செலவு செய்யும் பழக்கம் உடைய நண்பர்களால் உங்கள் பணத்துக்கு எப்படித் தீங்கு ஏற்படுகிறதோ, அப்படியேதான் கஞ்சப் பிரபு நண்பர்களாலும் உங்கள் பணத்துக்குப் பாதிப்பு ஏற்படும். எப்படி என்றால், அவர்கள் எப்போதுமே மலிவான அல்லது பாதுகாப்பான முறையையே தேர்ந்தெடுக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பதோடு, எந்த ஒரு செலவோ அல்லது முதலீடோ செய்யாமல் கிடைக்கும் வருவாயை அப்படியே சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் இவர்கள் என்பதால், உங்களது பணம் எதிலும் முதலீடு செய்யப்படாமல் அப்படியே தேக்கமடைந்து மேலும் பெருகுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும். உங்கள் வருவாயில், தேவைகள் போக எஞ்சியிருக்கும் அல்லது சேமிக்கும் பணத்தை ஏதாவது  ஒன்றில் முதலீடு செய்தால்தான் அது பல்கிப் பெருகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

என்ன செய்ய வேண்டும்? 

இத்தகைய நண்பர்களால் மலிவான அல்லது தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்குவது, பணத்தை எப்படிச் சிக்கனமாகச் செலவழிப்பது போன்ற சில சாதகமான பழக்கவழக்கங்கள் தெரியவரும் என்றாலும், இந்த அம்சங்களுடன் சேர்த்து முதலீடு செய்வதையும் சேர்த்துக்கொண்டால், நிதி விவகாரத்தை நீங்கள் சிறப்பாகக் கையாள தெரிந்தவர்கள் ஆகிவிடுவீர்கள். 

பெருமை பீற்றுபவர்கள் 

உங்கள் நட்பு வட்டாரத்தில் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக்கொள்ளும் நண்பர்களும் இருப்பதை நீங்கள் தவிர்க்க முடியாது. இத்தகைய நபர்கள் எப்போதுமே தாங்கள் ஈட்டும் அதிக வருவாய் குறித்தும், தங்களிடம் இருக்கும் அதிக பணம் குறித்தும் பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதே சமயம் இப்படிப் பெருமை பேசும்போதெல்லாம் உங்களைச் சிறுமைப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் அல்லது அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள். இத்தகைய நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள் நாளடைவில் அவர்களும் அதிகமாகச் செலவு செய்து தாங்களும் பணக்காரராக இருப்பது போன்று காட்ட முயற்சி செய்வார்கள். இதனால் பணம்தான் விரயமாகும். 

என்ன செய்ய வேண்டும்? 

இத்தகைய நண்பர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் பெருமை பேசுபவர்களாகவும் இருந்தாலும் கூட, சேமிப்பு மற்றும் முதலீட்டு விஷயங்களில் அவர்கள் பின்பற்றும் அணுகுமுறைகளைக் கற்றுக் கொள்ளலாம். 

முடிவாக ஒன்று... 

இன்றைய காலகட்டத்தில் நமது நண்பர்கள் அல்லது சக அலுவலகக் கூட்டாளிகளின் பழக்க வழக்கங்கள் நம்மிடையேயும் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும், பணத்தைச் செலவழிக்கும் விஷயங்களில் ஒருவித ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். அதே சமயம் `கஞ்சன், அடுத்தவர் செலவில் காரியத்தை நிறைவேற்றிக்கொள்பவர்' என்ற பெயரும் வராதவாறு நண்பர்களுடன் நியாயமான செலவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சேமிப்பை நல்ல ஆலோசனை பெற்று முதலீடு செய்யவும் மறக்காதீர்கள்.