இ.டி.எஃப் எனக் குறிப்பிடப்படும் ‘எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்’, சமீப காலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களிடம் பிரபலமடைந்து வருகிறது. இ.டி.எஃப் ஃபண்டுகள் என்பது முதலீட்டாளர் களிடமிருந்து பணத்தைத் திரட்டி, அந்தத் தொகையைக் குறிப்பிட்டக் குறியீட்டைச் (Index) சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்வதாகும். அந்தக் குறியீடுகள் எந்த அளவுக்கு வளர்ச்சி காண்கிறதோ (அல்லது குறைகிறதோ), அந்த அளவுக்கு அவற்றில் செய்யப்பட்டிருக்கும் முதலீடும் லாபம்/நஷ்டம் தரும்.

சந்தையில் தற்போது பலவிதமான இ.டி.எஃப் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் சில, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுப் பரிவர்த்தனை ஆகின்றன. இவற்றை யூனிட்களாக சந்தையின் அப்போதைய விலையில் வாங்கலாம், விற்கலாம்.
மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே சில ஆண்டுகளுக்குமுன், சி.பி.எஸ்.இ – இ.டி.எஃப் ஃபண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. எரிசக்தித் துறையை மையமாகக்கொண்ட 10 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த இந்த இ.டி.எஃப் திட்டத்தின் மூலம், மூன்று கட்டங்களாக 11,500 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இந்த வரிசையில் ‘பாரத் 22’ இ.டி.எஃப் திட்டமும் அறிமுகம் செய்யப்படும் எனச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இ.டி.எஃப் திட்டமான ‘பாரத் 22’ , முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படைப் பொருள்கள், எரிசக்தி, நிதி, நுகர்வோர் பொருள்கள், தொழிற்சாலைகள் மற்றும் பயன்பாடுகள் துறை என ஆறு துறைகளைச் சேர்ந்த 22 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து அவற்றின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த இ.டி.எஃப் அமையும். இதனை ஐசிஐசிஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகம் செய்யப்போகிறது.
அரசு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் என இது அமைந்துள்ளது. அரசின் தேவைக்கேற்ப இவை ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. பிறகு, பங்குச் சந்தையில் பாரத் 22 இ.டி.எஃப் பட்டியலிடப்பட்டு, பரிவர்த்தனை செய்யப்படும். மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நிதி அமைகிறது. சில ஆண்டுகளுக்குமுன் மத்திய அரசு வெளியிட்ட, சி.பி.எஸ்.இ – இ.டி.எஃப் நிதி, நல்ல செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரத் 22 இ.டி.எஃப் நிதி குறித்து, முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.பிரபாகரிடம் பேசினோம்.
``பாரத் 22 இ.டி.எஃப்-ல் இருக்கும் பங்குகள் அனைத்தும் நல்ல தரமான பங்குகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் அளிக்கக் கூடியதாக இருக்கும். இந்தத் திட்டத்தில் கவலை கொள்ளும் வகையில் எதுவுமில்லை. எனவே, தாராளமாக இதில் முதலீடு செய்யலாம்.
இது ஓர் அருமையான இடிஎஃப். பாரத் 22 இ.டி.எஃப்-ல் பொதுத்துறை நிறுவனங்களே உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில்கூட சிறப்பாகச் செயல்படக்கூடிய அரசு நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மேற்கொள்பவர்கள்கூட இதிலும் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பதுபோல, இ.டி.எஃப்-ஐ வாங்கி விற்கலாம். ஆனால், பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை நம்பி வாங்குவதை விட, இந்த பாரத் 22 இ.டி.எஃப்-யைத் தாராளமாக நம்பி முதலீடு செய்யலாம். ஏனெனில், குறிப்பிட்ட துறை மட்டுமல்லாமல், பல துறைகளின் நல்ல நிறுவனப் பங்குகளில் பரவலாக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் நல்ல லாபம் தரக்கூடிய பங்குகள் மட்டுமின்றி, தொடர்ச்சியாக டிவிடெண்ட் வழங்கக்கூடிய நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இதில் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுவது தெரிந்ததே. இதுமட்டுமின்றி, ஆர்.இ.சி-ன் டிவிடெண்ட் யீல்ட் ஆறு சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. கோல் இந்தியா நிறுவனத்தின் டிவிடென்ட் யீல்ட் 9% என 22 நிறுவனப் பங்குகளுமே அருமையான பங்குகள்.

பவர் கிரீட், என்.டி.பி.சி மற்றும் கோல் இந்தியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய செயல்திறனை அதிகப்படுத்தியுள்ளன. இது, இந்த இ.டி.எஃப்-க்கு மேலும் வலுசேர்க்கக்கூடியது. அதேபோல, பங்குகளின் அளவைப் (weightage) பார்த்தால்கூட, துறைக்கு ஏற்றதுபோல சரியான அளவில் உள்ளது. அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் ஏற்றது. பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், பாரத் 22 இ.டி.எஃப்-ம் சிறப்பாகச் செயல்பட்டு அதிக வருமானத்தைக் கொடுக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் நேரடியாக ஈக்விட்டியில் முதலீடு செய்வதைப்போல, இந்த இ.டி.எஃப்-ல் முதலீடுகளை மேற்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட்போல, இந்த இ.டி.எஃப்-ல் ரிஸ்க்கைக் குறைத்து ஆறு துறைகளில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒருசில துறைகள் வளர்ச்சியடையவில்லை என்றால்கூட பிரச்னையில்லை. மற்ற துறைகளின் வளர்ச்சியால் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
முக்கியமாக எல் அண்ட் டி நிறுவனத்தைத் தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை உள் நாட்டிலிருந்தே பெறுகின்றன. ஆகையால், உள்ளூர் பொருளாதாரத்தை நம்பியே இருப்பதால், இந்தியா வளர்ச்சியடையும்பட்சத்தில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் நன்றாக வளர்ச்சியைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது” என்றார் அவர்.
இந்தத் திட்டத்தின் என்.எஃப்.ஓ. வரும்போது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் ஒருபகுதியை இதற்கு ஒதுக்கலாம்!
- சோ.கார்த்திகேயன்