நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

இந்தியர்கள் ஏன் தலையை ஆட்டுவதில்லை?

இந்தியர்கள் ஏன் தலையை ஆட்டுவதில்லை?
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியர்கள் ஏன் தலையை ஆட்டுவதில்லை?

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: தி கல்ச்சர் மேப் (The Culture Map)

ஆசிரியர்: எரின் மெயர் (Erin Meyer)

பதிப்பாளர்: Public Affairs

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் எரின் மெயர் எழுதிய ‘‘தி கல்ச்சர் மேப்’’ எனும் புத்தகத்தை. பல்வேறு நாடுகளில் நிலவும் பல்வேறு வகையான கலாசாரங்களில் மனிதர்கள் எப்படிச் சிந்திக்கின்றனர், எந்த வகையான தலைமைக் குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றனர் மற்றும் எப்படி அந்தந்த கலாசாரங்களில் நமக்குத் தேவையான காரியங்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வது என்பதைப் பற்றி விரிவாகச் சொல்லும் புத்தகம் இது. புத்தகத்தின் ஆசிரியர், பல்வேறு கலாசாரம் குறித்து தொழில்முனைவோருக்குப் பயிற்சி தரும் நிபுணர். பாரீஸில் இருக்கும் ஒரு நிறுவனம், சீனாவில் தன்னுடைய விரிவாக்கத்தைச் செய்ய நினைத்த வேளையில் பயிற்சியளிப்பதற்கான சேவைகளை வழங்க இவரை அணுகியது. அந்த ஒப்பந்தத்தை எப்படியாவது பெற்றுவிட்டால், தொடர்ந்து பல்வேறு பணியாளர் களுக்குப் பயிற்சியளிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆவலில் ஆசிரியர் இருந்தாராம். நிறுவனத்தின் தலைவருடன் அடுத்த நாள் காலையில் சந்திப்பு என்ற நிலைமையில், இரவுத் தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்ததாம். ஒரு பல்பொருள் அங்காடியில் அவர் பொருள்களை எடுத்து கையில் உள்ள கூடையில் வைப்பது போலவும்,  வைத்துவிட்டு அடுத்த பொருளை எடுத்துவிட்டுக் கூடையில் பார்த்தால் ஏற்கெனவே வைத்த பொருள் காணாமல் போவதுபோலவும் கனவுகண்டு, தூக்கம் வராமல் எழுந்து காபி குடித்துவிட்டு, அடுத்த நாள் மீட்டிங் நடக்கும் அறைக்குச் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாராம்.   

இந்தியர்கள் ஏன் தலையை ஆட்டுவதில்லை?

கனவு எதைச் சொல்கிறது? ‘இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதையா?’ என்ற பயம் மனதைக் கவ்வ, பயந்துகொண்டே அவர் அடுத்த நாள் மீட்டிங்கை ஆரம்பித்தாராம். அந்த மீட்டிங்கில் நிறுவனத் தலைவர், அவருடைய மனைவி மற்றும்  பாரீஸில் இருக்கும் சீனாக்காரர் என நான்கு பேர் இருந்தார்களாம். எரின், கலாசாரத்தை புரிந்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேச ஆரம்பித்து ஒவ்வொன்றாக விளக்கியபின்னர், அந்த சீனாக்காரர் ஏதாவது உதாரணம் சொல்ல விரும்புகிறாரா என்பதை எதிர்நோக்கி அவரைப் பார்த்தால், அவர் சிவனே என்று எரினின் முகத்தை ஆவலாகப் பார்த்தபடியே இருந்தாராம். இப்படியே மொத்த மீட்டிங்கும் முடிந்துவிட, ‘அட, என்ன இந்த சீனாக்காரர் இப்படி சொதப்பிவிட்டாரே! நான் ஒரு விஷயத்தைச் சொல்ல, அவர் ஒரு உதாரணத்தைச் சொல்ல என இரண்டும் இரட்டை நாயனமாகப் செயல்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டே, ‘சரி, கடைசியாய் வாய் விட்டே கேட்டுவிடுவோம்’ என அந்த சீனரிடம், ‘நீங்கள் எதுவும் உதாரணம் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்டவுடன், அவர் கையில் இருக்கும் நோட்டு புத்தகத்தைத் திறந்து, ஆசிரியர் விவரித்த அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற எக்கச்சக்கமான உதாரணங்களைத் தெளிவாகச் சொன்னாராம்.

மீட்டிங் முடிந்தபின்னர், ‘ஏன் சார், நான் பேசும்போது மயான அமைதியாய் இருந்தீர்கள்? நான் ஒரு கான்செப்ட்டைச் சொல்ல நீங்கள் உதாரணத்தைச் சொல்ல என இரட்டை நாயனமாய் போயிருந்தால் சூப்பராய் இருந்தி ருக்குமே’ என்றாராம் ஆசிரியர். ‘‘மீட்டிங்கில் தலைமையேற்றவர் அந்த நிறுவனத்தின் தலைவர். நீங்கள் பேச்சாளர். நீங்க சும்மா என்னை மீண்டும், மீண்டும் பார்த்து பிரயோஜனம் இல்லை. தலைவர் என்னைப் பேசச் சொல்லிக் கேட்டால் மட்டுமே நான் பேசவேண்டும் என்பதே சீனக் கலாசாரம். நீங்கள் அமெரிக்காகாரர். அமெரிக்கர்கள் ஒரு விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்பதைவிட பேசுவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதே எங்களுடைய எண்ணம். அது உங்கள் நாட்டில் சரி. அது உங்க கலாசாரம்.

மேலும், நீங்கள் தொடர்ந்து பேசினீர்கள். என்னைப் பார்த்தீர்கள். மீண்டும் பேசினீர்கள். நான் குறுக்கிட்டுப் பேசுவதற்கு ஏற்றாற்போல் ஒரு இடைவெளி உங்கள் பேச்சின் இடையே வரவேயில்லை’’ என்றாராம் அந்த சீனாக்காரர். 

இந்தியர்கள் ஏன் தலையை ஆட்டுவதில்லை?உலகமயமாக்கலுக்குப் பின்னால் நேரிலும், வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கிலும் பல்வேறு நாட்டினரையும் சந்திக்கிறோம். உதாரணத்துக்கு, இந்தியர்கள் சரி என்பதற்குத் தலையை முழுமையாக ஆட்டுவதில்லை. சிறிதே (அரையளவு எனலாம்) தலையை ஆட்டி, ‘சரி’ எனச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், ‘தலையாட்டல்தான் அரையளவு, ஒப்புக்கொண்டுள்ளது முழு அளவு என்பது கலாசாரத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே தெரியும்’ என்கிறார் எரின். இந்த மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள் பலவும், வேலைகளை விரைவாய் முடிப்பதில் நமக்குப் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.

நார்வே நாட்டில் ஒரு முறை, ஒரு வியாபார ரீதியான சந்திப்பின்போது, மிகவும் பணிவுடன் குறுக்கிட்ட ஒரு பங்கேற்பாளர், நாங்கள் மீட்டிங்கின்போது சாப்பிட சாண்ட்விட்ச் ஆர்டர் செய்துள்ளோம் என்று சொன்னாராம்.  சற்று நேரத்தில் சாண்ட்விட்ச் கொண்டுவரப்பட, அனைவரும் சாண்ட்விட்ச் சாப்பிட ஆரம்பித்தனராம்.

இவர்களுக்கு நம் பேச்சில் சுவாரஸ்யம் இல்லை. நமக்கு இவர்கள் வியாபார வாய்ப்பைத் தரமாட்டார்கள் என நினைத்துக்கொண்டு, பேசி முடித்தபின்னர் ஒரு நார்வே நாட்டு நண்பரிடம் இதுகுறித்து சொன்னபோது, ‘இது இங்கே சகஜமான விஷயம். நேரத்தை மிகவும் மதிக்கின்ற தொழில்முனைவோரைக்கொண்ட நாடு இது. மீட்டிங்கின்போதே சாப்பிட்டுவிட்டால் நேரச் சேமிப்பு என்றே அவர்கள் நினைக்கிறார்கள். உங்களுக்கு நிச்சயம் கான்ட்ராக்ட் கிடைக்கும்’ என்றாராம். முதலில் ஆறுதலுக்குச் சொல்கிறார் என்று நினைத்தால் அவர் சொன்னது நடந்த பின்னரே  நார்வே கலாசாரம் அது என்பதை உணர்ந்துகொண்டேன் என்கிறார் ஆசிரியர்.

ஜெர்மானியர்கள் ஒரு நிகழ்வு குறித்து பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவார்களாம். மூன்று மாதங்களுக்குப் பிறகு  ஒரு கான்ஃபரன்ஸுக்கு வருகிறேன் என ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஒன்றிற்கு ஒப்புக்கொண்டேன். அவர்களோ அப்போதே, கான்ஃபரன்ஸின் இரவு உணவுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு இ-மெயில் அனுப்பிவைத்தார்கள். ஒரே ஆச்சர்யமாகப் போனது எனக்கு. மூன்று மாதங்களுக்குப் பிறகு இரவு உணவுக்கு என்ன வேண்டும் என இன்றைக்கே எப்படிச் சொல்வது என்று மெயில் அனுப்பாமல் இருந்துவிட்டீர்கள் என்றால், தொடர்ந்து அவர்கள் உங்களைத் தொடர்புகொண்டு அதுகுறித்து நினைவூட்டுவார்கள் என மேலும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார் ஆசிரியர்.

வேற்று நாட்டவருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களின் கலாசாரத்தையும் சேர்த்துப் புரிந்துகொண்டே பணியாற்ற வேண்டியுள்ளது. அப்படிப் பணியாற்றினால் மட்டுமே நம்மால் சுலபத்தில் வேலைகளை முடிக்க முடிகிறது என்கிறார் ஆசிரியர்.

உலகமயமாக்கலின் மூலமாகப் பல்வேறு நாடுகளுக்கு, பணி நிமித்தம் பலரும் செல்லவேண்டியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், பல்வேறு உதாரணங்களுடன் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம், கலாசாரங்கள் குறித்தும் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

- நாணயம் டீம்

இந்தியர்கள் ஏன் தலையை ஆட்டுவதில்லை?

அசத்தும் 13 வயது தொழில் அதிபர்!

ஹை
தராபாத்தில் நடந்த உலகத் தொழில் முனைப்பு உச்சி மாநாட்டில்,  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹமிஷ் ஃபின்லைசன் என்ற 13 வயதுச் சிறுவன் அனைவரின் கவனத்தை யும் கவர்ந்தான். இந்தச் சிறுவன், தயாரிக்கும் கேமிங் ஆப்-கள் புதுமையானவை.

இவன் கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த மாநாட்டிலும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. “எனக்கு ஏழு வயதிலிருந்தே கேமிங் ஆப்-கள் செய்வதில் ஆர்வம். சுற்றுச்சூழல் தொடர்பான கேமிங் ஆப்-கள் செய்வதில்தான் எனக்கு  அதிக விருப்பம்” என்கிறான் ஹமிஷ்.