நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

சேமிப்பில் சிறந்து விளங்கிய நம் மக்களுக்கு தற்போது முதலீடுகளில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஷூரன்ஸ் போன்றவைகளை மட்டுமே முதலீடாகக் கருதி வந்த பெரும்பாலான மக்கள், தற்போது மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தைப் பக்கமும் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். நிதிச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆரோக்கியமான மாற்றத்துக்குத் தடையாக இருக்கிறது ‘மிஸ் செல்லிங்.’   

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

முதலீடுகளின் விவரங்களைத் தவறாகவோ அல்லது புரியாத வகையில் கூறியோ முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதை ‘மிஸ் செல்லிங்’ என்று சொல்லலாம். பங்குச் சந்தை முதலீட்டில், “இந்தப் பங்கை வாங்கினால் சில வாரங்களில் 100% லாபம் கிடைக்கும்” என்று சிலர் கொக்கிப் போடுவார்கள். “இந்த பாலிசி எடுத்தால் உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணத்துக்கு நீங்கள் கவலையே பட வேண்டியதில்லை” எனச் சில இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் வலை வீசுவார்கள். “அந்த மனையை வாங்கிப்போட்டால், ஐந்தே வருடங்களில் நீங்கள் இரண்டு மடங்கு லாபத்துடன் விற்கலாம்” என சில ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நம்பிக்கையை விதைப்பார்கள்.

 இதுபோன்ற மிஸ் செல்லிங் நடவடிக்கையால் முதலீட்டாளர்களின் பணம் தவறாக முதலீடு செய்யப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு முழுமையான பலன் கிடைப்பதில்லை.

இதனால், முதலீட்டின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள். இவர்கள் அடைந்த நஷ்டத்தைப் பார்த்து, பிற முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். இதனால், முதலீட்டுப் பழக்கம் நம் மக்களிடையே குறைந்துகொண்டே போகும் நிலை ஏற்படலாம். ஆனால், முதலீடுகளில் மிஸ் செல்லிங் தவறுகளைத் தவிர்க்கும் வழிகளைத் தெரிந்துகொண்டால் எளிதில் நம்மால் நம்முடைய முதலீடுகளைச் சரியாகச் செய்ய முடியும்.  எந்தெந்த முதலீடுகளில் எப்படி மிஸ் செல்லிங்கைத் தவிர்க்க முடியும் என அந்தந்தத் துறை நிபுணர்கள் சொல்கிறார்கள்...

பங்குச் சந்தை!

வ.நாகப்பன், முதலீட்டு நிபுணர்


பங்குச் சந்தையில் மிஸ் செல்லிங் தவறுகளைத் தவிர்க்க முதலில் செய்ய வேண்டியது, எந்தவொரு முதலீட்டு ஆலோசனையையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டும். இலவசமாக டிரேடிங் கால், டிரேடிங் டிப்ஸ் இப்போது எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலமாக அனுப்பப்படுகிறது. இவற்றை யார் அனுப்புகிறார்கள் என்று கூட நமக்குத் தெரியாது. அப்படியிருக்க அந்த டிரேடிங் கால்களை எப்படி நாம் நம்பிக்கையுடன் செயல்படுத்த முடியும்.

ஹெச்.டி.எஃப்.சி, ஷேர்கான் எனப் பெரிய பெரிய நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தியும் டிரேடிங் டிப்ஸ் அனுப்பப்படுகிறது. பெரிய நிறுவனம் சொன்னாலும்கூட, நாம் நம்முடைய பணத்தைப் போடுவதற்கு முன் அந்த டிரேடிங் டிப்ஸை சந்தேகத்துடன் அணுக வேண்டும்.

பலர் கட்டணத்துக்குச் செய்யும் வேலையை ஒருவர் இலவசமாக ஏன் செய்ய வேண்டும், அவரது நோக்கம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல், அந்தப் பரிந்துரையின் மதிப்பு என்ன என்பதைப் பாருங்கள்.

அதற்கு டிரேடிங் டிப்ஸில் பரிந்துரைக்கப்படும் பங்குகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு வாரம், ஒரு மாதம் மற்றும் ஒரு வருடம் ஆகிய காலகட்டங்களில் அந்தப் பங்கு எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பங்கு விலை ஏறியிருந்தால் இதை ஏற்கெனவே பலரிடம் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களிடம் இந்தப் பங்கு விற்கப்பட்டிருக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படும். இந்த நிலையில் இந்தப் பங்கில் நுழைவது சரிதானா என்று நாம் பார்க்க வேண்டும்.

பங்குகள் இவ்வாறு பொதுவெளியில் பரிந்துரைக்கப்படும் முன்பே பலருக்கு விற்கப்பட்டிருந்தால் வாங்கக் கூடாது. தற்போது ரூ. 100 விலை உள்ள ஒரு பங்கானது 200 ரூபாய் உயர வேண்டிய நிலையில் 150 ரூபாய்தான் உயர்ந்திருக்கிறது என்றால், பங்கின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதேபோல் பரிந்துரைக்கப்பட்ட பங்கு விலை, சொன்னதைவிட இறங்கியிருக்கிறது என்றாலும்  அந்தப் பங்கின் செயல்பாட்டில் எதுவும் குறையில்லை; ஏதோ எதிர்பாராத செய்தியின் தாக்கத்தால் விலை இறங்கியிருக்கிறது என்றாலும், அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் தவறில்லை.     

ஐ.பி.ஓ வெளியீடுகளில் வெளியீட்டை நிர்வகிப்பவர் எத்தனை வெளியீடுகள் இதுவரை செய்திருக்கிறார், அதில் எத்தனை பங்குகள் பிரீமியத்தில் பட்டியலாகியிருக்கின்றன, எத்தனை பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியிருக்கின்றன என்பன போன்ற விவரங்களை நம்மால் பார்க்க முடிகிறது. அதைப்போலவே ஒரு நிறுவனம், முன்பு பரிந்துரைத்த பங்குகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

பரிந்துரைக்கப்படுவதன் நோக்கம் சரியாக இருந்தால் தாராளமாக அந்த ஆலோசனையைப் பரிசீலனை செய்யலாம். அதேபோல் பரிந்துரையின் கால அளவைப் பார்க்க வேண்டும். எவ்வளவு காலத்துக்கான டார்கெட், ஸ்டாப்லாஸ் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும். 

எனவே, எந்தவொரு ஆலோசனையையும் ஒரு தீப்பொறிபோல எடுத்துக்கொண்டு, அந்தப் பங்கை வாங்குவது சரியா, தவறா என்பதை நாம்தான் பார்த்து முடிவு செய்ய வேண்டும். நம்முடைய பணம் முதலீடு செய்வதற்கான அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்ள நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட்!

ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா


மியூச்சுவல் ஃபண்டில் மிஸ் செல்லிங் தவறுகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் முதலில் மியூச்சுவல் ஃபண்ட் எப்படிச் செயல்படுகிறது, என்னென்ன வகைகள், அவற்றில் உள்ள திட்டங்கள் என்னென்ன, அந்தத் திட்டங்களுக்கான அர்த்தம் என்ன, திட்டங்களின் கால அளவு மற்றும் ரிஸ்க் எவ்வளவு, அந்தத் திட்டங்கள் எதில் முதலீடு செய்யப்படுகின்றன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும். இவற்றைப் பற்றிய அறிவு இல்லையெனில் மிஸ் செல்லிங் தவறுகளைத் தவிர்க்க முடியாது.

உதாரணத்துக்கு 2 வருடங்களுக்கான முதலீட்டுக்கு மிட் கேப் ஃபண்ட் பரிந்துரைக்கப்பட்டால் அது சரியல்ல. அந்த ஃபண்ட் நன்றாகச் செயலாற்றினால் கூட இந்தப் பரிந்துரைத் தவறானது. இதை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் பல அடிப்படையான விஷயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ்

எஸ்.ஸ்ரீதரன், வெல்த்லேடர்


மிஸ் செல்லிங் என்பது இன்ஷூரன்ஸ் துறையில் அதிகம் நடக்கும் ஒன்றாகிவிட்டது. இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முக்கியமான தகவல்களை விட்டுவிட்டு மேலோட்டமாக, ‘குறைவான பிரீமியம், அதிக கவரேஜ்’, ‘ஒரே பாலிசி, பல நோய்களுக்கான காப்பீடு‘ என்று விளம்பரப்படுத்துவதன் மூலமும், தொடர்ந்து நச்சரித்து ஏதோ ஒரு பாலிசியை வற்புறுத்தி எடுக்க வைப்பது போன்றவை அதிகம் நடக்கின்றன.

இன்ஷூரன்ஸில் மிஸ் செல்லிங் தவறுகளைத் தவிர்க்க இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பற்றி ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் குறித்த புரிதல் இல்லாமல் அறியாமையுடன் இருப்பதால்தான் மிஸ் செல்லிங் தவறுகள் நடக்கின்றன.

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் என்னென்ன நோய்களுக்கான பாலிசி, க்ளெய்ம் நடைமுறைகள் என்னென்ன, எதற்கெல்லாம் க்ளெய்ம் மறுக்கப்படலாம் என்பது போன்ற விவரங்களை ஏஜென்ட்டுகளிடம் தெளிவாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை அது உங்களுடைய முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். உங்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.  

ரியல் எஸ்டேட்

மணிசங்கர், சாய் பில்டர்ஸ்


ரியல் எஸ்டேட்டில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதன் மூலமே மிஸ் செல்லிங் நடக்கிறது. அதில் முதலாவதாக இருப்பது கால தாமதம். 2018-ல் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால், சொன்ன தேதியில் வீட்டைக் கட்டிக் கொடுக்காமல் ஆறு மாதம், ஒரு வருடம் என்று இழுத்தடித்துவிடுகிறார்கள். இதைத் தவிர்க்க  ஒப்பந்தப் படிவத்தில் வீட்டினுடைய வாடகை இவ்வளவு என்று குறிப்பிட்டு, சொன்ன தேதியில் வீடு வழங்கப்படாவிட்டால் அந்த வாடகையை மாதாமாதம் வீட்டை வாங்குபவர்களுக்குக் கொடுக்கும்படி எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக கார் பார்க்கிங். கார் பார்க்கிங் இருக்கிறது என்று சொல்லி, கூடுதலாக ஒரு லட்சம், இரண்டு லட்சம் வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அது பொது இடமாக இருக்கும். பொதுப் பயன்பாட்டுக்கான இடத்தில் இவர்களே கோடு போட்டு விற்றுவிடுகிறார்கள். ஓப்பன் கார் பார்க்கிங்க்குப் பணம் வாங்கக்கூடாது. எனவே, கார் பார்க்கிங் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் தெளிவாகப் பிளானில் பார்த்துவிடவும்.

நீங்கள் வீடு வாங்கும் இடத்திலோ, பக்கத்திலோ நீர்நிலைகள் இருந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு வாங்க வேண்டும். பில்டர் சொல்வார் என்று எதிர்பார்க்காமல் அந்த விவரத்தைத் தெரிந்துகொண்டு வாங்க வேண்டும். அடுத்தது கூடுதல் வசதிகள். நீச்சல் குளம், க்ளப் ஹவுஸ், டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட வசதிகள். இதில் எது இலவசம், எதற்குப் பணம் கட்ட வேண்டும் என்பதெல்லாம் சொல்லாமல் எல்லாம் தருகிறோம் என்பதுபோல் சொல்லி விற்கிறார்கள். இதிலும் கவனமாக இருப்பது அவசியம். எந்தவொரு வசதியாக இருந்தாலும், அதன் முழு விவரங்களையும் கேட்க வேண்டும்.

லிஃப்ட், மோட்டார் போன்றவற்றின் பராமரிப்புகள் யாருடைய பொறுப்பு என்பதைத் தெளிவாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். கூடவே, அவற்றின் தரம் எப்படி இருக்கிறது, பயன்பாட்டுக்குப் போதுமான ஆற்றலுடன் அவை இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், பிறகு மோட்டார் போய்விட்டது என்று வீட்டு உரிமையாளர்களிடம்தான் பணம் கேட்பார்கள்.

வீடு வாங்கும்முன் அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையான விவரங்களுடன் கேட்டு, பின்னர் முடிவு செய்வது நல்லது. அந்த விவரங்கள் முழுவதும் பணி ஒப்பந்தத்தில்  இருக்க வேண்டும். சமீபத்தில், கொண்டு வரப்பட்டுள்ள ரெரா சட்டம் இதுபோன்ற பல மிஸ் செல்லிங் தவறுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் உள்ளது.

ஜெ.சரவணன்


படம் : ப.சரவணக்குமார்

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

செயல்பாட்டைப் பார்க்க வேண்டியது முக்கியம்!

ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா

“உ
ங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட் டங்களை விற்பவர் பற்றி யும் தெரிந்திருக்க வேண் டும்.  அவரிடம் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைச் செயல் படுத்திவரும் உங்கள் நண்பர்களிடம் கேட்டறிய வேண்டும்.நிதி ஆலோசனை சொல்பவர் கள் நன்றாகப் பேசு கிறார்களா, பழகுகிறார்களா என்று பார்க்காமல் அவரின் ஆலோசனையில் செய்யப்பட்டுள்ள முதலீடு களின் செயல்பாடு எப்படி யிருக்கிறது என்பதைப் பொறுத்தே அவருடைய ஆலோசனைகளை எடுத்துக்கொள்ள
வேண்டும்.”

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

முழுமையாகப் படித்த பின்னரே பாலிசியை வாங்க வேண்டும்!

எஸ். ஸ்ரீதரன், வெல்த்லேடர்

“ஏ
ஜென்ட்டுகள் தெளிவாக அனைத்தையும் சொல்ல வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், நுகர்வோரும், தான் எடுக்கும் பாலிசி குறித்து முழுமையாகத் தெரிந்து கொண்டு எடுக்க வேண்டும்.என்ன வகையான பாலிசி, இதில் எதெற்கெல்லாம் காப்பீடு, முதலீட்டுத் திட்டமாக இருந்தால் எவ்வளவு காலம், எவ்வளவு வருமானம், நீங்கள் எடுக்கும் பாலிசி சந்தையுடன் தொடர்பு டையதா என்பது போன்ற விவரங்கள் அனைத் தையும் படித்த பின்னரே அந்தப் பாலிசியை வாங்க வேண்டும்.”

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

மோசடித் திட்டங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்

“மோசடி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் பலர் இருக்கிறார்கள். ஆனாலும், இன்னமும் அதுபோன்ற திட்டங்களில் போய் விழுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மோசடித் திட்டங்களைக் கண்டுபிடிக்க முதலில் அந்தத் திட்டங்களின் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். விளம்பரங்கள் வரைமுறைக்குட்பட்டு இல்லாமல் கவர்ச்சிகரமாக இருந்தாலே, அதன்மீது சந்தேகம் வந்தே ஆக வேண்டும். ஒரு நல்ல நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டத்தின் விளம்பரத்தில் கவர்ச்சி வார்த்தைகள் இருக்காது. என்ன முதலீடு, எவ்வளவு வருமானம் என்பது மட்டுமே இருக்கும். ஆனால், மோசடித் திட்டங்களில், ‘வாழ்க்கையில் அடி மேல் அடி விழுகிறதா, கவலை வேண்டாம், மாதம் ஆயிரம் ரூபாய்  முதலீடு செய்தால் போதும், நீங்களும் பணக்காரர் ஆகலாம்’ என்கிற தொனியில் விளம்பரங்கள் இருக்கும்.

இரண்டாவது, முதலீட்டுத் திட்டத்தில் கொடுக்கப்படும் வருமானம், அதே மாதிரியான முதலீடுகளில் மற்றவர்கள் கொடுக்கும் வருமானத்தைவிட ஒரு சதவிகிதம் அல்லது ஒன்றரை சதவிகிதம்தான் வித்தியாசம் என்றால் பரவாயில்லை. ஆனால், இரண்டு சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் உஷாராக வேண்டும்.

மோசடி முதலீட்டுத் திட்டங்கள் செய்பவர்கள் முதல் நூறு பேருக்குச் சொன்னபடி வருமானத்தைக் கொடுத்து நிரூபித்து வசப்படுத்தி விடுவார்கள். பின்னர் அவர்கள் வாயாலேயே ‘நான் இதில் முதலீடு செய்தேன், இப்போது லட்சாதிபதி ஆகிவிட்டேன்’ என்று பேச வைத்து, ஆளுக்குப் பத்துப் பேரைச் சேர்க்கும்படி செய்துவிடுவார்கள். நூறு பின்னர் ஆயிரமாகும், ஆயிரம் பத்தாயிரமாகும். கடைசியில் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எனவே, அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டு முதலீடு செய்வதை ஒருபோதும் செய்யாதீர்கள். ஏனெனில், பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஒழுங்காகச் செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் ஒன்று மக்களிடம் நேராகச் சென்று முதலீடு செய்யச் சொன்னால் செய்யாதவர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவரோ, நண்பரோ அல்லது யாரோ ஒருவரோ அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன், இவ்வளவு லாபம் கிடைத்தது என்று சொன்ன உடனே முதலீடு செய்ய கிளம்பி விடுகிறார்கள். இந்தப் போக்கு மாற வேண்டும்.

எந்த முதலீட்டிலும் முதலீடு செய்யும் முன், நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, நீங்கள் முதலீடு செய்யப்போகும் முதலீட்டுத் திட்டம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும். பங்கு முதலீடு என்றால், செபியில் பதிவாகியிருக்க வேண்டும். சிட் ஃபண்ட் என்றால் தமிழ்நாடு சிட் ஃபண்ட் சட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும், இன்ஷூரன்ஸ் என்றால் ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யில் பதிவு செய்திருக்க வேண்டும். வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்றால் ஆர்.பி.ஐ-யில் பதிவு செய்திருக்க வேண்டும்.”

ஏமாறாதே... ஏமாறாதே...! - முதலீட்டில் மிஸ் செல்லிங்... தவிர்க்கும் வழிகள்!

கட்டடத்தின் நிலைத்தன்மை குறித்து அறிவது முக்கியம்!

மணிசங்கர், சாய் பில்டர்ஸ்


“நீங்கள் வாங்கும் கட்டடத்தின் நிலைத் தன்மை குறித்து அறிவது மிக முக்கியம். கட்டடம் இடிந்து விழுந்தால் வீட்டின் உரிமையாளரான நீங்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவீர்கள்.உங்களுக்கு வீடோ பணமோ திரும்பக் கிடைப்பது  அவ்வளவு எளிதில் நடப்ப தில்லை.ஒவ்வொரு தளத்திலும் டம்மி லோடு வைத்துச் சோதித்த பிறகே அடுத்த தளத்தை எழுப்ப வேண்டும். கட்டடத்துக் கான நிலைத்தன்மை சான்றிதழ் (Stability Certificate) வாங்கியிருக்க வேண்டும். அடிப்படையான இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.”