நாடெங்கிலும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளின் வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் மூத்த குடிமக்களும் கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்களும்தான். இதற்கு ஏதேனும் மாற்று உள்ளதா என உங்களில் பலரும் நினைத்திருப்பீர்கள். 3 மற்றும் 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு நிகரான முதலீடுதான் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள். இந்த வகையில் நன்றாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் ஒன்றுதான் ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்.

இது ஒரு கலப்பின வகை ஃபண்டாகும். இவ்வகை ஃபண்டுகள் வரித் தாக்கலுக்குப் பங்கு சார்ந்த திட்டங்களாகக் கருதப்படும். ஆனால், இதன் வருமானம், ரிஸ்க் போன்றவை நமது எம்.ஐ.பி (MIP – Monthly Income Plans) திட்டங்களைப் போன்று இருக்கும். இத்திட்டங்கள் கிட்டதட்ட மூன்றில் ஒரு பகுதியைப் பங்கு சார்ந்த முதலீட்டிலும், மற்றொரு பகுதியைக் கடன் சார்ந்த முதலீட்டிலும், மூன்றாவது பகுதியை ஆர்பிட்ரேஜ் (arbitrage) சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்கின்றன. கடன் மற்றும் ஆர்பிட்ரேஜ் முதலீடுகளிலும் ஆண்டுக்கு சுமார் 7 – 8% வருமானம் கிடைக்கும். பங்கு சார்ந்த முதலீடுகளில் ஆண்டுக்கு சுமார் 12% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் சுமாராக ஆண்டுக்கு 9% வருமானத்தை இதுபோன்ற ஃபண்டுகளிலிருந்து எதிர்பார்க்கலாம். மூன்றில் இரண்டு பங்கு வருமானம் கன்சர்வேட்டிவ்வாகவும், எஞ்சியது பங்குச் சந்தை ரிஸ்க்குடனும் கிடைக்கும். ஆகவே, இந்த முதலீட்டை நீங்கள் எஃப்.டி ப்ளஸ் முதலீடாக நோக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் கிட்டதட்ட 30% முதலீட்டைப் பங்கு சார்ந்ததாகவும், 37%-ஐ ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளிலும், எஞ்சியதைக் கடன் சந்தையிலும் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபண்ட் தற்போது ரூ.4,800 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் வினய் குல்கர்னி, அனில் பம்போலி மற்றும் கிருஷ்ண குமார் டாகா ஆவார்கள்.
இவ்விதமான ஃபண்டுகளுக்கு நீண்ட நெடிய வரலாறு இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவ்விதமான ஃபண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஃபண்ட், இதற்கு முன்பு ஹெச்.டி.எஃப்.சி மல்டிபிள் யீல்டு ஃபண்ட் என அழைக்கப்பட்டது. நவம்பர் 2015-ல் ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டதுடன், இதன் முதலீட்டுக் கலவையும் மாற்றப்பட்டது.

இதன் பங்கு சார்ந்த முதலீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ போன்ற பங்குகளும், கடன் சார்ந்த முதலீட்டில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற வங்கிகளின் பாண்டுகளும், ஃபெடரல் பேங்க், கோட்டக் மஹிந்த்ரா பேங்க் போன்ற வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டு களும் உள்ளன. இந்த ஃபண்டின் பீட்டா 0.48, ஆல்ஃபா 4.44 என்ற அளவில் உள்ளன.

ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன்கள் உள்ளன. டிவிடெண்ட் ஆப்ஷனில் காலாண்டிற்கு ஒரு முறை டிவிடெண்ட் தரப் படுகிறது. கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி ஏதும் கிடையாது. அதுபோல் ஒரு வருடத்திற்குப் பிறகு ஃபண்டை விட்டு வெளியேறும்போது கிடைக்கும் லாபத்திற்கு எந்தவிதமான வருமான வரியும் கட்ட வேண்டாம்.
முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் 15% வரை உள்ள யூனிட்டுகளை எந்தவிதமான வெளியேற்றுக் கட்டணமும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு வெளியேறுகையில் எவ்விதமான வெளியேற்றுக் கட்டணமும் இல்லை.

மாதாமாதாம் வருமானத்தை உறுதியாக எதிர்பார்ப்பவர்கள் இதில் முதலீடு செய்ய வேண்டாம். அதேசமயத்தில் 3 – 5 ஆண்டுகள் குமுலேட்டிவ் டெபாசிட்டிற்குப் பதிலாக இதில் முதலீடு செய்யலாம். கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், சீனியர் சிட்டிஸன்கள் போன்ற அனைவரும் இவ்விதமான ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது?
நீண்ட நாள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், நீண்ட நாள்களில் பணவீக்கத்தைத் தாண்டி சில சதவிகிதம் அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், குறைந்த ரிஸ்க் முதலீட்டில் வரும் வருமானத்திற்கு வரி கட்ட விரும்பாதவர்கள், மூன்றாண்டு களுக்கு மேலான முதலீட்டை நாடுபவர்கள் போன்ற அனைவருக்கும் உகந்தது.
யார் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்?
அதிக வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுப்பவர்கள், நீண்ட காலத்தில் பணம் தேவைப்படுபவர்களுக்கு இது ஏற்றது அல்ல.