Published:Updated:

பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா... ஒரு நிமிஷம் இதையெல்லாம் யோசிங்க!

நாம் வாங்கும் கடன் மூலமாக நமக்கு ஒரு வருமானம் இருக்கிறது, ஆதாயம் இருக்கிறது என்றால் கடன் வாங்கலாம். அந்தக் கடனைப் பயன்படுத்தி சொத்து வாங்கலாம், அதன்மூலம் நம்முடைய சொத்து மதிப்பு அதிகரிக்கலாம். கடன் மூலம் வீடு வாங்கலாம். அதிலிருந்து நமக்கு வாடகை வரக்கூடும். இம்மாதிரியான காரணங்களுக்குக் கடன் வாங்கினால் தவறில்லை.

பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா... ஒரு நிமிஷம் இதையெல்லாம் யோசிங்க!
பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா... ஒரு நிமிஷம் இதையெல்லாம் யோசிங்க!

``சார், xxxxxx பேங்க்லருந்து பேசறேன். உங்களுக்கு 2 லட்ச ரூபாய்க்கு பெர்சனல் லோன் ஆஃபர் வந்திருக்கு. வாங்கிக்கறீங்களா சார்?"

தினமும் நமக்கு வரும் விளம்பர அழைப்புகளில் குறைந்தது ஓர் அழைப்பாவது இதுபோல ஒரு வங்கியிலிருந்து பெர்சனல் லோனுக்கான அழைப்பாக இருக்கும். வட்டிக்கு விடும் பணக்காரர்களிடம் கடன் பெறுவதற்காக நம்முடைய அப்பா, தாத்தா பட்ட கஷ்டங்களையெல்லாம் கேட்டிருப்போம். இன்றைய காலகட்டத்தில் நம்மை அலைபேசியால் அழைத்து கடன்கொடுக்குமளவுக்குத் தொழில்நுட்பமும், நிதி நிறுவனங்களும் மாற்றமடைந்துள்ளன. 

``பெர்சனல் லோன் வாங்கினால் வட்டி அதிகம், மாட்டிக்காத!" என்று நம் நண்பர்கள், உறவினர்கள் எச்சரிப்பார்கள். நாமும் அதே முன்னெச்சரிக்கை உணர்வோடுதான் இருப்போம். ஆனால், நமக்கென்று ஒரு கட்டாயச் சூழல் வரும்போது அதை வாங்கிப்பார்ப்போமே என நினைப்பு வரும். வாங்கியதும் உடனே கட்டிவிடலாம் என்று நம் மனதுக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொள்வோம். அத்தருணத்தில் இதுபோன்ற அழைப்பு வந்தால் உடனே ஓகே சொல்லிவிடுவோம். கடன் வாங்கியபின் திருப்பிச் செலுத்தும்போதுதான் அதிலிருக்கும் கஷ்டம் புரியும். மாதச்சம்பளத்தில் இதற்கென நிதி ஒதுக்க முடியாமல் இந்தக் கடன்தொகை உயர்ந்து நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். முதன்முறை சரியாக அடைத்துவிட்டு, கிரெடிட் ஸ்கோர் தைரியத்தில் அடுத்தடுத்து கடன் வாங்கி இறுதியில் கட்ட முடியாமல் பெருத்த கடனாளியாகிப்போனவர்களும் பலருண்டு. 

பெர்சனல் லோன் அவசியமா, எப்போது பெர்சனல் லோன் வாங்கலாம், அதனை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ``என்னைப் பொறுத்தவரை கடன் வங்குவது தப்பென்று சொல்ல மாட்டேன். கடன் வாங்குவது தப்பென்றால் வங்கிகள் எப்படி லாபம் பார்க்க முடியும். ஆனால் எந்தக் கடன் நல்ல கடன் என்ற தெளிவு நமக்கு வேண்டும். உதாரணத்துக்கு, நாம் வாங்கும் கடன் மூலமாக நமக்கு ஒரு வருமானம் இருக்கிறது, ஆதாயம் இருக்கிறது என்றால் கடன் வாங்கலாம். அந்தக் கடனைப் பயன்படுத்தி சொத்து வாங்கலாம், அதன்மூலம் நம்முடைய சொத்து மதிப்பு அதிகரிக்கலாம். கடன் மூலம் வீடு வாங்கலாம். அதிலிருந்து நமக்கு வாடகை வரக்கூடும். இம்மாதிரியான காரணங்களுக்குக் கடன் வாங்கினால் தவறில்லை. ஆனால் தினசரி வீட்டுச்செலவுக்காகவும், ஆடம்பரச் செலவுக்காகவும் கடன் வாங்குவது தவறு. 

அடுத்ததாக, கடன் வாங்கும்போது அவர்கள் சொல்லும் வட்டி விகிதம் 9%, 10% என்பதாக இருக்கும். அது ஃப்ளாட் ரேட்டாக இருக்கும். அதை நம்பி வாங்கிவிடக் கூடாது. உண்மையிலேயே கணக்குபோட்டுப் பார்த்தால் 18% முதல் 24% வரை இருக்கும். அவ்வளவு வட்டிவிகிதத்துக்கு வாங்கும்போது, 4 ஆண்டுகளில் அந்தக் கடன்தொகையை இரண்டு மடங்காகத் திருப்பிச்செலுத்த வேண்டியிருக்கும். எனவே அந்த அளவுக்கு நமக்கு அத்தியாவசியத் தேவை தானா, அல்லது இந்தத் தேவையைத் தள்ளிப்போடலாமா என்பதையெல்லாம் யோசித்து அதன்பின்பே கடன் வாங்கும் முடிவுக்கு வரவேண்டும். அதேபோல கடன் வாங்கும்போதே அவர்கள் சொல்லும் வட்டியைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் நம்மிடம் கூறும் வட்டிவிகிதமே இறுதியானது கிடையாது.

``இவ்வளவு வட்டிக்கெல்லாம் வேண்டாம்" என மறுத்தோமானால் வட்டிவிகிதத்தைக் குறைப்பதற்கு இறங்கி வருவார்கள். நம்முடைய சிபில் ஸ்கோர் போன்றவற்றையும் பார்த்துக் குறைப்பதுண்டு. எனவே, இதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இறுதியாக, பெர்சனல் லோனைப் பொறுத்தவரை குறுகியகாலக் கடனாக வைத்துக்கொள்வது நல்லது.  கால அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதிக வட்டி செலுத்தவேண்டியிருக்கும்." என்றார்.

எனவே பெர்சனல் லோன் வாங்குமுன் இங்கே கூறப்பட்டவற்றை மனதில்கொண்டு கட்டாயத் தேவையெனில் வாங்கவும். வாங்கிய தொகையை வீட்டுக்கடன் போல நீண்ட காலமாக அடைக்காமல் விரைவாகச் செலுத்தி முடிப்பது நல்லது.