Published:Updated:

`பணமதிப்பிழப்பின்போது சந்தேகப்படும்படியான டெபாசிட்!’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை

தெ.சு.கவுதமன்
`பணமதிப்பிழப்பின்போது சந்தேகப்படும்படியான டெபாசிட்!’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை
`பணமதிப்பிழப்பின்போது சந்தேகப்படும்படியான டெபாசிட்!’ 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருவாய்த் துறை

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, நாடு முழுவதும் வங்கிகளின் முன் நீண்டவரிசையில் நின்று செல்லாத நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்தனர். அப்படி வந்த டெபாசிட்டுகளில் வருமான வரித்துறையின் கணக்கில்வராத பணத்தை டெபாசிட் செய்தவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர். அவற்றின் மீதான ஆய்வுகளுக்குப்பின் அவர்களில் 10,000 பேருக்கு, பினாமி பணப்பரிவர்த்தனைகள் தடைச் சட்டப்படி, டெபாசிட் செய்த வருமானம் வந்த வழிவகை குறித்து கேள்வியெழுப்பி ஆரம்பகட்ட நோட்டீசை வருவாய்த்துறை அனுப்பியுள்ளது. 

வங்கிக்கு வந்த செல்லாத நோட்டுகளின் டெபாசிட்டுகளை, அவர்களின் முந்தைய வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் வருமான வரிசெலுத்திய விவரம் போன்றவற்றோடு ஒப்பிட்டுப்பார்த்து, சந்தேகப்படும்படியான டெபாசிட்டுகள் மட்டும் முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்துதான் முதல்கட்டமாக 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். மேலும் பலருக்கு வரும் வாரங்களில் நோட்டீஸ் அனுப்பப்படும் எனத்தெரிகிறது. இந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த யாரேனும் முயற்சித்தால் அவர்களைச் சிறையில் அடைக்கும்விதமாக இச்சட்டம் கடுமையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

வங்கிக் கணக்குகளை ஆய்வுசெய்ய, பிக் டேட்டா அனாலிடிக்ஸ் முறைப்படி தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. திரட்டப்பட்ட தகவல்களில், அவர்களது தொலைபேசி உரையாடல்கள், பான் கார்டு விவரம், வருமான வரித்தாக்கல் விவரம் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் அவர்களைப் பற்றிய தகவல்களும் அடங்கும். சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்கின் மீதான விசாரணையில், அந்த கணக்குக்கு உரியவர் மற்றும் செலுத்தப்பட்ட பணத்திற்கு உரியவர் என இருவருமே விசாரிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது. தேவைப்பட்டால், இனி வருங்காலத்தில், வருமான வரித்துறை மட்டுமல்லாமல் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களும் இவர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.