Published:Updated:

வருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி!

புதிதாக வரித்தாக்கல் செய்தவர்களில் பலர், வரி செலுத்தும் வரம்புக்குக் குறைவாக வருமானமீட்டுபவர்களாகவும், ஐந்து லட்ச ரூபாய் என்ற வரம்புக்குள் இருப்பவர்களாகவுமே இருப்பதால், வரி செலுத்தியதால் பெறப்படும் வருமானம் குறைவாகவே உள்ளது.

வருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி!
வருமான வரித்தாக்கல் அதிகம், ஆனால்... வசூல் கம்மி!

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் வருமான வரித்தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 70% வரை அதிகரித்து 5.4 கோடியாக உள்ளது. அதேவேளை, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் 34% அளவுக்கு குறைந்துள்ள செய்தி ஆச்சர்யம் அளிக்கிறது. வருமான வரி செலுத்துபவர்கள் அதிகரிக்கும்போது அதனால் கிடைக்கும் வரி வருமானமும் அதிகரிப்பதுதான் சரியான வளர்ச்சியாக இருக்க முடியும். ஏன் இந்த முரண்பாடு?

நடப்பு ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் சராசரி வருமானம் 32% குறைந்து ரூ.27,083 ஆக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் வருமான வரித்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, முறையே 24% மற்றும் 39% என அதிகரித்திருக்கிறது. அவர்களின் சராசரி வருமானம் முறையே ரூ.44,000, ரூ.40,200 என உள்ளது. இதிலிருந்து, குறைந்த வருவாய்ப்பிரிவில் இருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் வருமான வரி செலுத்தியிருப்பது தெரிய வருகிறது. இதுகுறித்து ஆடிட்டர் சத்யநாராயணாவிடம் கேட்டபோது, ``இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானமீட்டுபவர்களுக்கு முன்பு பத்து சதவிகிதம் வரிவிதித்திருந்தார்கள். தற்போது அதை ஐந்து சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். எனவே, இந்த வருமான வரி வரம்பில் இருப்பவர்கள் வருமான வரி செலுத்தினாலும்கூட அந்தத் தொகை முன்பைவிடக் குறைவாகவே இருக்கும். வரிசெலுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த ஐந்து லட்ச ரூபாய் வரையிலான வரம்பில்தான் இருக்கிறார்கள்.

நடப்பு நிதியாண்டில் அதிக அளவில் வருமானவரித்தாக்கல் செய்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பொதுவாக, ரெகுலராக வரிசெலுத்துபவர்கள், செலுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். தற்போது வருமான வரித்தாக்கல் குறித்து நிறைய விழிப்பு உணர்வு விளம்பரங்கள், வரித்தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அச்சத்தினாலும் அதிக எண்ணிக்கையில் வரித்தாக்கல் செய்துள்ளார்கள். ஆனால், புதிதாக வரித்தாக்கல் செய்தவர்களில் பலர், வரி செலுத்தும் வரம்புக்குக் குறைவாக வருமானமீட்டுபவர்களாகவும், ஐந்து லட்ச ரூபாய் என்ற வரம்புக்குள் இருப்பவர்களாகவுமே இருப்பதால், வரி செலுத்தியதால் பெறப்படும் வருமானம் குறைவாகவே உள்ளது.
அடுத்த ஆண்டில் வரி வருமானம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாதச்சம்பளக்காரர்களுக்கு நேரடியாக 40,000 ரூபாய் வரிக்கழிவு உண்டு என்ற விதிமுறை வந்துள்ளது. எனவே மேலும் வரி வருமானம் குறையக்கூடும். அதற்குப்பதிலாகத்தான் தற்போது ஜி.எஸ்.டி.யில் கூடுதல் வருமானம் வருகிறதே" என்றார்.

அதிகமான வரி விதிப்பதைவிட, அதிக மக்களை வரிகட்டுபவர்களாக மாற்றுவதே அரசுக்கு முக்கியம். எனவே, வருமான வரி வருமானம் குறைவதைவிட வரி கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நாம் நேர்மறை மாற்றமாகக் கருத வேண்டும்.