Published:Updated:

கார்களும் வீடுகளும் போனஸ்... அள்ளிக் கொடுக்கும் சவ்ஜி தோலாக்கியா யார்?!

கார்களும் வீடுகளும் போனஸ்... அள்ளிக் கொடுக்கும் சவ்ஜி தோலாக்கியா யார்?!
கார்களும் வீடுகளும் போனஸ்... அள்ளிக் கொடுக்கும் சவ்ஜி தோலாக்கியா யார்?!

`ஏம்பா நம்ம கம்பெனில இந்த வருஷம் என்ன போனஸ்... காரா.. வீடா?'-  இப்படி ஊழியர்கள் பேசிக் கொள்ளும் நிறுவனம் ஒன்றும் இந்தியாவில் இருக்கிறது. அத்தகைய கொடுத்து வைத்த ஊழியர்கள் சூரத்தில் உள்ளனர். போனஸ் தராத அல்லது போனால் போகட்டும் எனக் கடமைக்கு போனஸ் தருகிற நிறுவனங்கள் பல நாட்டில் உண்டு. சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்தே போனஸ் பிடித்துக் கொண்டு தீபாவளி நேரத்தில் போனஸ் என்று தருவதும் வாடிக்கை. இதற்கெல்லாம் நேர் எதிரானது சூரத்தைச் சேர்ந்த  ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட் நிறுவனம். ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் தன் ஊழியர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தப் பயன்படுத்துகிறார் இந்த நிறுவனத்தின் தலைவர் சவ்ஜி தோலாக்கியா. 

குஜராத் மாநிலத்தில் உள்ள அர்மேலியில் பிறந்தவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத் மக்களிடம் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் உற்றார், உறவினர்களையும் வளர்த்து விடுவதில் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது. சகோதரர்களுடன் இணைந்து கூட்டாகத் தொழில் தொடங்குவதிலும், ஒற்றுமையாக உழைத்து வெற்றிபெறுவதிலும் அசாத்தியமானவர்கள் குஜராத்திகள்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த சவ்ஜி தோலாக்கியாவின் மாமா சூரத்தில் வைர ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். சவ்ஜிக்குச் சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறவில்லை. படிப்பைக் கைவிட்டு 13- வயதிலேயே மாமா நடத்தி வந்த வைர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். படிப்படியாக  வைர ஏற்றுமதி தொழிலைக் கரைத்துக்குடித்தார். 1984-ம் ஆண்டு தனியாக வைர ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பெயர்தான் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட். படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனத்தின் சொத்துமதிப்பு தற்போது  ரூ.6000 கோடி. சிங்கப்பூர், ஹாங்காங்,அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு வைரம் ஏற்றுமதி செய்கிறது இந்த நிறுவனம். 

சவ்ஜியைப் பொறுத்தவரை வைரத்துக்குப் பிறகு ஊழியர்கள்தாம் முக்கியம். தீபாவளி பண்டிகையையொட்டி முதலில் பணமாகத்தான் போனஸ் வழங்கிக் கொண்டிருந்தார். 2014-ம் ஆண்டுதான் முதன்முதலில் மீடியாவில் அடிபட்டார். இந்த ஆண்டில் ஹரேகிருஷ்ணா நிறுவனத்தின் மொத்த சொத்துமதிப்பு ரூ.4000 கோடியை எட்டியிருந்தது. மகிழ்ச்சியை ஊழியர்களுடன் கொண்டாட விரும்பிய சவ்ஜி, 491 கார்கள், 200 வீடுகள், 200 வைர நகைகள் ஆகியவற்றை முதன்முறையாக போனஸாகக் கொடுத்து அசத்தினார். இந்தியாவும் அசந்து போனது. 

தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கார்களும், வீடுகளையும் போனஸாக வழங்குவதை சவ்ஜி வழக்கமாகக் கொண்டுள்ளார். நடப்பாண்டில் 600 ஊழியர்களுக்கு கார்கள், நிதிசேமிப்பு பத்திரங்கள், வீடுகள் போனஸாக வழங்கப்பட்டுள்ளன. போனஸ் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஹரே கிருஷ்ணா நிறுவனத்தில் `Skill India Incentive Ceremony’ எனத் தனிப்பெயரே உண்டு. போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கையால் இந்த நிறுவனத்தின் இரு பெண் ஊழியர்கள் உட்பட 4 பேர் கார் சாவிகளைப் பெற்றனர். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட் நிறுவனம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஊக்கப்படுத்துவதில் முன் நிற்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

இந்த நிறுவனத்தில் 4000 முதல் 5,500 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். வைரத்தைப் பட்டை தீட்டுவதுதான் நிறுவனத்தின் முதல் பணி. இதில் மட்டும் 1,600 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறந்த ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு போனஸ் பெறத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். அதேபோல, ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊழியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப போனஸ் வழங்கப்படும். கார், வீடு, நிதிபத்திரங்களில் நமக்கு தேவையானதைத் தேர்வு செய்து கொள்ளலாம். 

``தன் நிறுவனத்தில் பணி புரியும் ஒவ்வோர் ஊழியருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரம் அமைத்துக் கொடுப்பதே தன் முதல் லட்சியம்'' என்று கூறும் சவ்ஜிக்கு, துருவ் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் துருவ், எளிய மக்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகக் கேரளாவில் உள்ள பேக்கரிக்கு வேலை செய்ய அனுப்பி வைத்த வித்தியாசமான தொழிலதிபர் இவர். ஊழியர்கள் யாரும் இவரை `சார்' என்று அழைப்பதில்லை. `சவ்ஜிகாகா' என்றே அழைக்கின்றனர்.