பிரீமியம் ஸ்டோரி

கோவையைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 39) ரியல் எஸ்டேட் நிறுவனத்தில்  திட்ட மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மாத வருமானம் பிடித்தம் எல்லாம் போக 30,000 ரூபாய். மனைவி லட்சுமி (வயது 36) மற்றும் மகள் நவநீதாவுடன் (வயது 7) வாடகை வீட்டில் வசிக்கிறார்.  

நேற்று... இன்று... நாளை!

''சொந்த வீடு வாங்க ணும்; மகளின் கல்விக்கும், கல்யாணத்துக்கும், ஓய்வு காலத்துக்கும்  முதலீடு செய்யணும். இதுக்கெல்லாம் பணம் வேணும். ஆனா, இப்ப வரவுக்கு மேல செலவா யிட்டிருக்கு. செலவுகளைச் சுருக்கி, சேமிப்பை எப்படி பெருக்கிக்கறதுன்னு நீங்கதான் வழி காட்டணும்'' என்றவருக்கு, நிதி ஆலோசனை சொல்கிறார் மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் புவனா ஸ்ரீராம்.

நேற்று... இன்று... நாளை!

''தற்போது பணியாற்றி வரும் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளத்தைவிட, இதற்கு முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் கிடைத்த சம்பளம் அதிகம் என்பதை அவரிடம் பேசியதிலிருந்து என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. சம்பளம் அதிகமாக இருந்த போது செய்த செலவுகளை, சம்பளம் குறையும் போதும் தொடர்வதால்தான் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி. ஆனாலும், இதுவரை சேர்த்து வைத்த சேமிப்புதான் தற்போதைய நிதி பற்றாக்குறைக்கு இவரை வெளியில் கடன் வாங்க விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்த நிலைமை இப்படியே தொடர வாய்ப்பில்லை என்பதைப் புரிந்தவராகவும், சொத்து வாங்க வேண்டும் என்கிற ஆசையுடனும் பேசினார்.

திட்டமிட்டு செலவு செய்து அநாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். இதனால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை மிச்சமானால்கூட அந்த தொகை எதிர்கால வாழ்க்கைக்கான சேமிப்பிற்குப் பேருதவியாக இருக்கும்.  

வீடு கட்ட..!

'தெரிஞ்சவங்ககிட்ட எப்படியாவது  கடன உடன வாங்கி இந்த வருஷம் ஒரு இடம் வாங்கணும்’ என்கிறார் பழனிச்சாமி. தெரிந்தவர்களிடம் வாங்கினாலும் கடன்தான்; வெளியில் வட்டிக்கு வாங்கினாலும் கடன்தான். அந்த பணத்தைத் திருப்பி கொடுத்துதானே ஆகவேண்டும்? இப்போதே செலவுகளை சமாளிக்க முடியாமல் போராடும் நிலையில் புதுக் கடன் தேவைதானான்னு யோசிச்சு முடிவெடுக்கறது நல்லது.

எதிர்காலத் திட்டமிடலுக்கு முன்பாக இவர் தனக்கென்று 30 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் ஆயுள் காப்பீடும், குடும்பத்தின்பேரில் மூன்று லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடும் (ஃப்ளோட்டர் பாலிசி) எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆண்டு பிரீமியம் சுமார் 10,000 ரூபாய்.

நேற்று... இன்று... நாளை!

நமக்கே நமக்கென்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தப்பில்லைதான். ஆனால், நாம் முதலில் பார்க்க வேண்டியது குழந்தையின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு எப்படி பணத்தைச் சேர்ப்பது என்பது பற்றித்தான். இதற்கு பழனிச்சாமி என்னென்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

1. வெல்த் பிளஸ் பாலிசியைத் தவிர மற்ற எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர் செய்துவிடலாம். அப்படி செய்வதின் மூலம் 56,000 ரூபாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்தத் தொகையை வங்கிச் சேமிப்புல போட்டு வைக்க வேண்டும். இந்தத் தொகையை அவசரத் தேவைக்கு வைத்துக் கொள்ளலாம்.

2. வெல்த் பிளஸ் பாலிசிக்கு ஆண்டு பிரீமியம் கட்ட 20,000 ரூபாய் தேவை.  தற்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவரும் 5,000 ரூபாயை நான்கு மாதத்திற்கு வங்கிச் சேமிப்புக் கணக்கில் சேமிக்க வேண்டும். இந்த பணத்தை எடுத்து வெல்த் பிளஸ் பாலிசிக்காக கட்ட வேண்டிய பிரீமியத்திற்குப் பயன்படுத்திக்கலாம்.

நேற்று... இன்று... நாளை!

3. தன்னுடைய தம்பியின் கல்யாணச் செலவுகளுக்காக மாதம் 4,000 ரூபாய் வீதம் சீட்டில் போட்டு வருகிறார் பழனிச்சாமி. தம்பியின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதால், சீட்டு முடிந்த பிறகு 4,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

நேற்று... இன்று... நாளை!

4. ஏற்கெனவே மனைவி பெயரிலும், மகள் பெயரிலும் மாதம் தலா 500 ரூபாயை ஆர்.டி. மூலம் சேமித்து வருகிறார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நிறுத்துவதன் மூலம் வெல்த் பிளஸ் பாலிசி பிரீமியத்துக்கான சேமிப்புக்குப் பின்னர் 5,000 ரூபாயைச் சேர்த்து 6,000 ரூபாயாக ஆர்.டி-யில் சேமித்து வரவேண்டும். இந்தத் தொகை மூன்று ஆண்டுகள் கழித்து (2015-ல்) 2.5 லட்சம் ரூபாயாக முதிர்வடையும்.

இந்தப் பணத்தை வீடு வாங்க முன்பணமாக வைத்துக் கொண்டு, மீதித் தொகைக்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு வாங்கிக் கொள்ளலாம். இதற்காக இ.எம்.ஐ. 14,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். ஆர்.டி. போட்டு வந்த 6,000 மற்றும் சீட்டு முடிந்த பின்னர் கிடைக்கக்கூடிய 4,000 ரூபாயையும் இ.எம்.ஐ-காக பயன்படுத்திக்கலாம். தற்போது இ.எம்.ஐ. கட்ட குறைவான தொகைதான் இருப்பதால் இ.எம்.ஐ. கட்டும் கால அளவு அதிகமாக இருக்கும்.

5. வண்டி வாங்குவதற்காக வட்டி இல்லா கடன் வாங்கியிருக்கிறார். இதற்காக மாதம் 5,000 ரூபாய் கட்டி வருகிறார். இந்தக் கடன் ஜூலை 2012-ல் முடிந்துவிடும். அதன் பிறகு அந்த பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் போட ஆரம்பிக்கலாம். இந்த முதலீடு 12% வருமானம் கிடைக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டில்

நேற்று... இன்று... நாளை!

10 ஆண்டுகள் தொடர்ந்தால் கிடைக்கும் தொகை சுமார் 14 லட்சம். இதிலிருந்து மகளின் கல்லூரி படிப்பு செலவுக்கு ஐந்து லட்சத்தை எடுத்து பயன்படுத்திக் கொண்டு, கூடுதலாக பணம் தேவைப்பட்டால் கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடனை மகளுக்கு வேலை கிடைத்த பிறகு அடைத்துக் கொள்ளலாம்.  

மியூச்சுவல் ஃபண்டில் மீதியுள்ள பணத்துடன்  முதலீட்டைத் தொடர்ந்தால் 2026-ல் கிடைக்கும் வருமானம் 17 லட்சம் ரூபாய். இதிலிருந்து கல்யாணத்துக்குத் தேவையான 15 லட்சம் ரூபாயை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பிறகு அந்த முதலீடு ஓய்வு காலத்திற்காக தொடர வேண்டும். அப்படி தொடரும் பட்சத்தில் பழனிச்சாமியின் 60-வது வயதில் அவருக்கு கிடைக்கும் தொகை 10 லட்சம் ரூபாய். இது குறைவுதான் என்றாலும், இடையிடையே வருமானம் உயரும்போது ஓய்வு காலத்துக்கான முதலீட்டை பெருக்கிக் கொள்வது அவசியம்.

இனி வரும் காலங்களில் வருமானம் அதிகரித்தால் வரவுக்குள் செலவைச் சமாளித்து, அதிகம் இருக்கும் தொகையை மேலே சொன்ன குறிக்கோள்களை நோக்கி முதலீடு செய்வது அவசியம்!

- செ.கார்த்திகேயன்
படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு