Published:Updated:

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்!

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்!

பிசினஸ்...ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

ந்தியா முழுக்க எந்த பிசினஸ்மேனிடம்  வேண்டு மானாலும் பேசிப் பாருங்கள்; அவர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்னைகளில் பணப் பிரச்னைதான் அவர்களைப் படாதபாடு படுத்துவதாகச் சொல்வார்கள்.

‘‘சே, இந்த நேரத்துல பணம் இருந்திருந்தா, சூப்பரா ஆர்டர் முடிச்சுக் குடுத்து நல்ல லாபம் பார்த்துருக்கலாமே!’’, ‘‘பொருள் சப்ளை செய்றவங்க பொருளைக் குடுத்துட்டாங் கன்னா, அடுத்த மாசமே புராஜெக்ட்டை முடிச்சுக் கொடுத்துடலாம். ஆனா, கடன் கிடையவே கிடையாதுன்னு சொல்றாங்களே!’’, ‘‘சார், போஸ்ட் டேட்டட் செக் தர்றோம். ஆனா, செக்கை பேங்க்ல கலெக்‌ஷனுக்குப் போட்றப்ப, எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுப் போடுங்க’’... தொழில் செய்கிறவர்கள் இப்படிப் பேசி எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம் இல்லையா?

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல தொழில் நிறுவனங்களுக்கும் இன்றைக்கு பணப் பிரச்னைதான் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதற்குக் காரணம், நம் பிசினஸ் அல்ல. பிசினஸில் நாம் கடைப் பிடிக்கும் கொள்கைகள்தான். இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. நம் மூளையைக் கொஞ்சம் அகலமாகத் திறந்துவைத்திருந்தாலே போதும், பிசினஸை நல்லபடியாக நடத்துவதற்குத் தேவையான பணம் கொட்டும். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

இன்றைக்குப் பல நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையைப் பார்த்தால், நனகு வருமானம்  சம்பாதிக்கும் நிறுவனங்களாகத்தான் இருக்கின்றன. அந்த நிறுவனங்களின் ‘பேலன்ஸ் ஷீட்’ கணக்கின்படி, நல்ல வருமானம் ஈட்டுபவை தான். ஆனாலும், பிசினஸை நடத்தத் தேவையான பணமில்லாமல் தவிக்கின்றன.

நாம் கஷ்டப்பட்டுத் தொழில் நடத்துகிறோம்; ஊழியர்களை வைத்து  எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்குகிறோம்; உற்பத்தியை எந்த அளவுக்கு அதிகமாகச் செய்ய முடியுமோ, செய் கிறோம். என்றாலும், போதிய வருமானம் நமக்குக் கிடைப்பதில்லை. இதனால், மூலப்பொருளைத் தருகிறவர்கள், ஊழியர்களின் மனக்குறைக்கு நாம் ஆளாக வேண்டியிருக்கிறது.

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்!

இன்னும் கொஞ்சம் பணத்தை பிசினஸில் போட்டால், நிலைமை சரியாகிவிடும் என்று நாம் நினைக்கிறோம். ஓட்டைப் பானையில் நாம் என்னதான் கண்ணும் கருத்துமாக  தண்ணீரை நிரப்பினாலும்,  அந்தத் தண்ணீர் வழிந்தோடத்தானே செய்யும். இந்த ஓட்டையை அடைக்க நாம் முயற்சி செய்யாமல், பானையை நிரப்பத் தேவையான  தண்ணீர் இல்லையே என்று புலம்புகிறோம்.

பிசினஸை நன்றாக நடத்துவதற்குப் போதிய பணம் இல்லை என்கிற பிரச்னையை இன்னும் அதிக பணத்தினால் தீர்த்துவிட முடியாது. சொல்லப்போனால், பிசினஸை நல்லபடியாக நடத்துவதற்குப் பணம் என்பது ஒரு தடையே இல்லை. பணம் வரும், போகும். ஆனால், உங்கள் பிசினஸ் வருமானத்தை அதாவது, பணத்தை உருவாக்கித் தருகிறதா என்று பாருங்கள். அப்படித் தரவில்லை எனில், ஏன் தரவில்லை என்று பாருங்கள். இந்தக் கேள்வியிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பதில்தான் உங்களை பணம் இல்லை என்கிற பிரச்னையிலிருந்து வெளியே கொண்டுவரும்.

பிசினஸில் பணப் பற்றாக்குறை என்கிற பிரச்னையை எதிர்கொள்ள வேண்டுமெனில், நமது மனப்பாங்கினை (Mindset) நாம் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். நமது பிசினஸ் தொடர்பாக நாம் பின்பற்றிவரும் கொள்கைகள், நடைமுறைகள் அனைத்துமே யதார்த்தத்தை நேருக்கு நேராகச் சந்திக்க நம்மைத் தடுப்பதுடன், உறுதியான முடிவினையும் எடுக்கவிடாமல் தடுக்கிறது. நமது இந்த மனப்பாங்கினை நாம் மாற்றிக்கொள்ளாவிட்டால், எவ்வளவு பணத்தை பிசினஸில் போட்டாலும், நம்மால் அந்த பிசினஸி லிருந்து எந்த வருமானத்தை யும் பார்க்க முடியாது.

பிசினஸ் தொடர்பான நமது மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்பதை இரண்டு உதாரணங்களுடன் பார்ப்போம்.

நம்முடைய தொழிலில் உற்பத்தித் திறனை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது முதல் உதாரணம். நம்மில் பலரும் செய்யக்கூடிய தவறு இது. கஷ்டப்பட்டு உழைப்ப தற்கும், புத்திசாலித்தனமாக உழைப்பதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் நமக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், நிறைய உற்பத்தி செய்வதுதான் வெற்றிக்கான ஒரே வழி என்று நினைக்கிறோம். விற்றுப் பணமாகாத சரக்கினை உற்பத்தி செய்வதைவிட, உற்பத்தி எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ‘ஃபிக்ஸட் காஸ்ட்’ என்று சொல்லப்படுகிற வாடகை, சம்பளம் மற்றும் இதர செலவுகளை நாம் செய்துதான் ஆக வேண்டும். ஆனால், தவறான ஆர்டரை கஷ்டப் பட்டு நிறைவேற்றுவதன்மூலம் பொருள்கள் தேங்கி நிற்குமே தவிர, அவை பணமாக மாறாது. மூலப்பொருள்கள் முழுவதுமாகச் செய்து முடிக்கப்பட்ட பொருள்களாக மாறி எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவை வாடிக்கையாளர் களால் வாங்கப்பட்டு, பணம் கைக்கு வந்துசேர்ந்தால்தான், பொருளை உற்பத்தி செய்ததற்கான அர்த்தம் கிடைக்கும். இதைப் புரிந்துகொள்ளா மல் பிசினஸை நடத்த அதிகமான பணத்தை வாங்குவது புதைகுழியில் சிக்கிக்கொள்கிற மாதிரிதான்.

இன்னும் அதிகமான ஆர்டர் களை வாங்கினால், அதிகமான பணம் வரும். அப்போது பணப்  பற்றாக்குறை என்கிற பேச்சே இருக்காது என நம்மில் பலரும் நினைப்பது இரண்டாவது உதாரணம். அதிகமான ஆர்டர்களை வாங்கி நிலைமையைச் சமாளிக்க நினைப்பது நம்மை இன்னும் பல சிக்கல்களுக்குக் கொண்டு செல்லும். அதாவது, அதிக ஆர்டர்களைக் குறைந்த விலைக்கு வாங்குவோம். அப்போது குறைந்த அளவே லாபமும் கிடைக்கும். இதனால் நமக்கு வந்து சேரும் பணம் குறையுமே தவிர, அதிகரிக்காது.

இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வினைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. நமது காமன்சென்ஸைப் பயன்படுத்தி, கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தாலே போதும். நமது பிசினஸில் பணம் கொண்டுவரும் விஷயத்தைத் தவிர, வேறு எந்த விஷயத்தையும் நாம் செய்யக்கூடாது. உற்பத்தி செய்த பொருளை உடனே விற்றுப் பணமாக்க முடியாது எனில், அந்த ஆர்டரை நாம் எடுக்கவே கூடாது. இப்படிச் செய்வதினால் நமக்கு பணம் மிச்சமாகுமே தவிர, நஷ்டம் வராது. தவறான ஆர்டர்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மறுப்பு சொல்வதன்மூலம் சரியான, புதிய ஆர்டர்களைக் கண்டுபிடிக்க நம்மால் முடியும். இதே மாதிரியான சிந்தனையை நமது பிசினஸின் பல்வேறு விஷயங் களிலும் செய்தால், நம்மால் புதுப்புது தீர்வுகளை நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்.

பணம் என்பது ஆறு மாதிரி. அது எங்கும் தடைபட்டு நிற்கக்கூடாது. அப்படித் தடைபட்டு நிற்கிறதென்றால், அந்தத் தடைகளை நீக்கத் தேவையான மாற்றங்களைக் கண்டறியும்படி நமது மனப்பாங்கினை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிசினஸில் பணப் பற்றாக்குறை என்கிற பிரச்னைக்கு நான் சொன்ன தீர்வு மிக எளிதாக இருக்கிறதா? அப்படியானால், உங்கள் தொழிலில் இதனை உடனே நடைமுறைப்படுத்திப் பாருங்கள். உங்கள் அனுபவத்தை என்னுடன் உடனடியாகப் பகிருங்கள்!

(தீர்வு கிடைக்கும்)

உங்கள் பிரச்னைக்கான தீர்வு!

என்னிடம் புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் சில மாதங்களிலேயே வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

மதுசூதனன், சேலம்.

பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு! - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்!

“வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே ஊழியர்கள் வேலையை விட்டுப் போகிறார்கள் எனில், அதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஆள்களை வேலைக்கு எடுக்கும் நமது நடைமுறை பலவீனமானதாக இருக்கலாம். இதனால் சரியான நபர்கள் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.  இரண்டாவது, நமது எதிர்பார்ப்புகள் தெளிவாக இல்லாததால்,  ஊழியரின் வேலை என்ன என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லாமல் இருப்பதாக இருக்கலாம். மூன்றாவதாக, புதிதாக வரும் ஊழியர்கள் புதிய அலுவலகத்தில் செட்டில்-ஆக குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசமாவது தரப்பட வேண்டும். வந்து சேர்ந்த ஒரே வார காலத்திலேயே  ஓர் ஊழியர் நன்றாக வேலை செய்யத் தொடங்கிவிடுவார் என்று எதிர்பார்ப்பது தவறு. புதிதாகச் சேரும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், சூழலையும் நாம் ஏற்படுத்தித்தர தவறக்கூடாது. அப்படி ஏற்படுத்தித் தரும்பட்சத்தில், அவர்கள் நன்றாக உழைப்பதுடன், நம் அலுவலகத்தை விட்டுச் செல்லவும் மாட்டார்கள்.”

பிசினஸில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை navdesk@vikatan.com என்கிற மின்னஞ்சலுக்கு சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்! உங்கள் கேள்விகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.